Wednesday, 17 April 2019

எழுத்துத் திருட்டு என்றும் வேண்டா


   அண்மைக் காலத்தில் தமிழ் நாட்டுப் பல்கலைக்கழகங்கள் தமிழ்ப்புலத்தில் வழங்கும் எம்.ஃபில், பிஎச்.டி பட்டங்கள் நம்பகத் தன்மையை இழந்துவிட்டன. ஒரு காலத்தில் அறிவு மேம்பாட்டுக்காக செய்யப்பட்ட ஆய்வுகள், பின்னர் வேலை வாய்ப்புக்காகவும், ஊக்க ஊதியத்திற்காகவும், பதவி உயர்வுக்காகவும் செய்யப்பட்டன. இதனால் ஆர்வமில்லாதவர்கள், ஆற்றல் இல்லாதவர்கள் கூட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தனர். இத்தகையோரின் இயலாமையைக் காசாக்கும் வகையில் சிலர் பணம் வாங்கிக்கொண்டு ஆய்வுக்கட்டுரைகளை எழுத முன்வந்தனர். இவர்களை ghost writers என ஆங்கிலத்தில் சொல்கிறோம்.

     தொண்ணூறுகளில் – நான் பிஎச்.டி ஆய்வு செய்த காலத்தில் – நடைபெற்ற வாய்மொழித் தேர்வுகளில் புறத் தேர்வாளர் ஆய்வேட்டிலிருந்து தோண்டித் துருவி வினாக்கணைகளைத் தொடுப்பார். அது பொதுத்தேர்வு என்பதால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்பார்கள். ஆய்வாளர் அவற்றுக்குச் சரியான விளக்கம் அளித்தால்தான் பட்டம் கிடைக்கும். ஆனால் இப்போது பல இடங்களில் வாய்மொழித் தேர்வு என்பது ஒரு சடங்காக மாறிவிட்டது.

   இந்த விரும்பத்தகாத போக்கின் காரணமாக, ஆய்வின் தரம் குறைந்து விட்டது என்பதோடு, படைப்பாற்றல் வெகுவாகக் குறைந்து விட்டது என மூத்தப் பேராசிரியர்கள் சொல்கின்றனர்.

    இவர்கள் சொல்வது உண்மைதான். கோவையில் இயங்கும் ஒரு கல்லூரியின் இளம் வயது தமிழ்த்துறைத் தலைவர் ஒருவர் மின்னிதழுக்காக எழுதிய ஆய்வுக் கட்டுரை மேலாய்வுக்காக என் பார்வைக்கு வந்தது. தரவுகளுக்கான அடிக்குறிப்பு எதையும் அவர் தரவில்லை. ‘தமிழின் செம்மொழித் தகுதிகள்’ என்பது அக் கட்டுரையின் தலைப்பு. கட்டுரையைப் படித்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டுரையின் சில பகுதிகளைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது நினைவுக்கு வந்தது. இந்தத் தலைப்பைத் தட்டச்சு செய்து கூகுளில் தேடினேன். எனக்கு ஏற்பட்ட ஐயம் உறுதியானது. வேறு ஒருவருடைய வலைப்பூவிலிருந்து பல பகுதிகளை வெட்டி ஒட்டி தனது கட்டுரையை அந்தப் பேராசிரியர் உருவாக்கித் தன் பெயரில்  மின்னிதழுக்கு அனுப்பியுள்ளார் என்பது தெரிய வந்தது. இந்தப் பேராசிரியரிடத்தில் படிக்கும் மாணவர்களின் நிலை எப்படியிருக்கும்!

       இத்தகைய எழுத்துத் திருட்டை plagiarism என ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம். இது திருட்டுகளிலேயே மோசமானத் திருட்டாகும்.

    எனது வலைப்பூவில் என் சொந்தச் சிந்தனையில் உருவான முந்நூறுக்கும் மேற்பட்ட கட்டுரை, கவிதைகளைப் பதிவேற்றியுள்ளேன். அவை திருடப்படுமோ என்னும் அச்சம் இப்போது என் மனத்தில் தலைதூக்கி உள்ளது.

   எழுத்துத் திருட்டைக் கண்டுபிடிப்பதற்கு வெளிநாட்டில் சில மென்பொருள்கள் பயன்படுகின்றன. நம் நாட்டில் எப்போது நடைமுறைக்கு வருமோ தெரியவில்லை.

   பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் விழித்தெழ வேண்டிய நேரம் இது. பணத்துக்காக ஆய்வுக்கட்டுரை எழுதும் பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுப்பதை நிறுத்த வேண்டும். அவர்களுக்கு அளிக்கப்பட்ட ‘வழிகாட்டிப் பேராசிரியர்’ என்னும் தகுதியை நீக்கி ஆணையிட வேண்டும். அவர்கள் பணிநிறைவு பெற்றிருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் ஆய்வு மாணவர்களை பட்டப்பேற்றுக்குத் தகுதியற்றவர்கள் என அறிவிக்க வேண்டும்.

     இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதில் தொடர்புடையோர் சுணக்கம் காட்டினால் வருங்காலத்தில் தமிழில் எழுதப்படும் ஆய்வுக் கட்டுரைகளுக்கு உலக அரங்கில் உரிய ஏற்பு எதுவும் கிடைக்காது.

   இதனால் ஏற்படும் இழப்பு தமிழனுக்கு அன்று; தமிழுக்கு என்பதை உணர வேண்டியவர்கள் உணர்வார்களா?.

6 comments:

 1. இழப்பு தமிழுக்குத்தான்
  வேதனை ஐயா

  ReplyDelete
 2. கண்டுபிடுப்பது மிகவும் எளிது ஐயா... ஆனால் தடுப்பது சிரமம்...

  திருடராய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதே உண்மை...

  ReplyDelete
 3. நல்ல பதிவு ஐயா. உண்மையிலேயே நம் ஆய்வுகளின் தரம் குறைந்து போய் உள்ளது.

  துளசிதரன்

  ஐயா, இது தமிழ்த்துறையில் மட்டுமில்லை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. என் மிக மிக நெருங்கிய உறவினர் கல்வித்துறையில் தான் இருக்கிறார். அவரும் டாக்டரேட் ஐஐடி யிலிருந்து. பொறியியல் துறை. அவர் சில பல்கலைக்கழகங்களில் ஆய்வாளருக்கு வழிகாட்டவும் செய்திருக்கிறார். அவருக்கு மிகவும் கோபம் என்னவென்றால் பலரும் சொந்தமாக ஆய்வு செய்வதில்லை. அத்தனையும் ப்ளக்கேரிசம் தான். ப்ளக்கெரிசம் கண்டுபிடிக்கும் மென்பொருள் இருக்கிறது இங்கும். ஆனால் அதைப் பல வழிகாட்டிகளும் பயன்படுத்துவதில்லை. என் உறவினருக்கு வெளிநாட்டிலிருந்து ஒரு பெண்மணி அழைத்து தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக வேண்டும் என்றும் உறவினரை கைடாக இருக்க முடியுமா என்றும் கேட்டார். உறவினரும் சரி என்று டாப்பிக் பற்றி எல்லாம் கலந்தாய்வு செய்தால், அப்பெண்மணி, 4 லட்சம் தருவாதாகச் சொல்லி இவரையே ஆய்வுக்கட்டுரையும் தயார்ப்படுத்தச் சொன்னார். இவர் மிக மிக நேர்மையாளர். முடியாது என்று சொல்லவும் அவரோ 4 போதாது போல 6 தருகிறேன் என்றதும் இவர் கோபத்தில் அப்புறம் முடியவே முடியாது வேறு ஆளைப் பார்த்துக் கொள். நீ ஆய்வு செய்வதாக இருந்தால் மட்டுமே நான் கைடாக இருப்பேன் என்று சொல்லிவிட்டார். இதுதான் நம் நாட்டின் நிலைமை. நம் நாட்டின் ஆய்வுக்கட்டுரைகள் எதுவுமே தரமாக இல்லை என்பது மிக மிக வேதனைக்குறியது.

  என் மகனும் ஒரு உதாரணம் சொன்னான். அவன் கால்நடை மருத்துவன். ஆனால் அதைப் பற்றி இங்கு விரிவாகச் சொல்ல இயலவில்லை. நம்மூர் ஜெர்னலில் வந்த கட்டுரை. புதியதாக ஒரு முறையில் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு என்று. ஆனால் அது உண்மையல்ல.

  சென்ற வருடமோ அல்லது அதற்கு முன்போ நினைவில்லை. மிகச் சிற்ந்த பலகலை கழகம் என்று பெயர் பெற்றிருக்கும் பல்கலையில் இருக்கும் பல கல்லூரிகள் மாணவர்கள் அரியர்ஸ் பேப்பர்ஸ் மற்றும் சில பேப்பர்களை பணம் கொடுத்து பாஸாகியதும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் ஊழல் எல்லாம் வெளிவந்தது. அது அப்படியே அமுங்கிவிட்டது.

  இதுதான் நம் ஊரின் கல்வித்தரம் ஐயா. என் உறவினர் சொல்லுவதைக் கேட்டால் மிகவும் வேதனையாக இருக்கும்

  கீதா

  ReplyDelete
 4. எழுத்துத் திருட்டு என்பதை விட இலக்கியத் திருட்டு எனலாம். பழைய கவிஞர்கள் தங்களது திரைப்பாடல்களில் சங்க இலக்கிய வரிகளைக் கையாண்டனர். அதனைச் சற்று விளக்கி வேறுபடுத்தி உருவாக்கினர். தங்களது கட்டுரையில் ஆய்வுக்களங்கள் களங்கப்படுவதைச் சுட்டியிள்ளீர்கள். இது பல ஆண்டுகளாகத் தலை தூக்கியுள்ளது. எல்லாம் வியாபாரம் என்ற சூழல் நிலவுகிறது. இது ஒரு வகையான கல்வி விபச்சாரமே. plagiarism பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். தற்போது சில பல்கலைக்கழகங்கள் இதனைப் பின்பற்றுகிறது. 20 சதவீதம் பிற படைப்புகளில் இருந்து கருத்துகளை மட்டுமே கையாளலாம். வரிகளை மாற்றியமைத்தாலோ, பத்திகளை மாற்றியமைத்தாலோ அல்லது தலைப்புகளை மாற்றியமைத்து உருவாக்கினாலோ மென்பொருள் காட்டிக்கொடுத்து ஆய்வேடு நிராகரிக்கப்படும். இப்படி சில கல்லூரி ஆய்வுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. JOTH GANGA என்ற ஆய்வு இணயதளத்திற்குச் சென்றால் இந்தியப் பல்கலைக்கழகங்களின் முனைவர் பட்ட ஆய்வுகளைக் காணலாம். ஆய்வேடு புறத்தேர்வாளருக்குச் செல்வதற்கு முன் சி.டி வாயிலாகச் சோதனை செய்யப்பட்டு சரியான ஆய்வு என்றால் மட்டுமே புறத்தேர்வாளரின் மதிப்பிட்டிற்குச் செல்கிறது. ஆகவே இலக்கியத் திருட்டைத் தவிர்க்க வேண்டும். உண்மையான கருத்துக்களுக்கு எப்போதும் மதிப்பு உண்டு. அறிவைச் சுயமாகச் சிந்தித்துப் பெறவெண்டும். பிறரின் அறிவு தன் அறிவாகாது.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்

  ReplyDelete