Saturday 3 July 2021

ஐயா எனக்கோர் ஐயம்

 

ஐயா, வணக்கம். எனக்கோர் ஐயம்

   உங்கள் மாணவன் மரு.பூர்ண சந்திரகுமார்.

   எனக்கு வந்த வாட்ஸ்அப் பதிவு ஒன்றில் "கிராமத்தில் விவசாயம் செய்ய நிறைய புதுப்புது கருவிகள் வந்துவிட்டன!. ஆள் தேவையில்லை. கிராமத்தில் இருக்கும் படித்த  இளைஞர்களே, கிராமத்தை விட்டு வெளியேறி நகரம் நோக்கிச் செல்லுங்கள். அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்பிற்கேற்ற வேலை தேடிக்கொள்ளுங்கள். நிறைய சம்பாதியுங்கள். மகிழ்ச்சியாய் வாழுங்கள்!" என்று கூறப்பட்டிருந்தது.

"உழந்தும் உழவே தலை", "சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்", "உழுவார் உலகிற்கே அச்சாணி" என்கிறது வள்ளுவம். "இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது" என்றார் காந்தி. மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு!.(ஓகிகள் விதிவிலக்கு). –என்றெல்லாம் நான் நீள நினைத்தபோது சில ஐயங்கள் ஏற்பட்டன என்ற முன்னுரையோடு தொடங்கிச் சில கேள்விகளைக் கேட்டார்.

 தொடர்வது அவரது கேள்விகளும் எனது விடைகளும்.   

மேற்கூறிய வாட்ஸ்அப் கூற்று விவசாயத்தை நலிவுபடுத்துவது போல் ஆகாதா?

  “நிச்சயமாக நலிவை ஏற்படுத்தும். போகிற போக்கில் எதையாவது புலனத்தில் தூவிவிட்டுப் போவது இன்று பலரது வாடிக்கை அல்லது வேடிக்கை. என்னிடம் வினாவைக் கேட்குமுன் நீயே விடையும் சொல்லிவிட்டாய். உலகத் தேரின் அச்சாணியாய் விளங்கும் உழவன் கை மடங்கினால் அதன் விளைவு ஆயிரம் கொரோனாவுக்குச் சமமாக இருக்கும்.”

 “படித்த இளைஞர்கள் எல்லாம் நகரப் பணி மட்டுமே குறிக்கோள் என்றால் விவசாயம் என்னாவது?

    “விவசாயம் பாழாகும். இன்றைக்குப் பட்டம் பெற்ற இளைஞர் பலர் நகருக்குச் சென்று நாயைப் பராமரிக்கும் வேலையைக்கூட நன்றாகச் செய்வார்கள். ஆனால் அப்பாவுடன் சென்று அரை நேரம் வயலில் ஏர் உழுவதை இழிவாய் நினைப்பார்கள். எனக்குத் தெரிந்த பல விவசாயக் குடும்பத்து இளைஞர்கள் இப்படி நகரை நோக்கி நகர்ந்த காரணத்தால் அவர்களுடைய விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாகி, எல்லைக்கல் முளைத்து எங்கும் காணப்படுகின்றன! அல்லது கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கின்றன. எப்போது நம் நாட்டு இளைஞர்கள் மேனாட்டுப் பண்பாட்டை ஏற்றார்களோ அப்போதே எளிமையாய்  விவசாயம் செய்யும் பெற்றோரிடமிருந்து விலகிப் போய்விட்டார்கள் என்று பொருள். பிறகு ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள், கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்ய முயன்றவன் கதையாக.”

விவசாயம் மெல்ல மெல்ல தன் சிறப்பை இழந்து வருகிறதா?

“அப்படிச் சொல்ல இயலாது. நான் மேலே சொன்ன இளைஞர் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும் படித்த இளைஞர் பலரும் அரசு வேலையைக்கூட உதறித்தள்ளிவிட்டு விவசாயத்திற்குத் திரும்பி வந்து தலை நிமிர்ந்து நடக்கிறார்கள்.”

  “மக்கள் தொகை பெருகுவதற்கு ஏற்ப, விவசாய நிலங்கள் குறைய, குறைய அல்லது விவசாயம் செய்ய ஆள் இன்மையால் மனிதன் பசியை வெல்லும் ஓக வாழ்விற்கு இயற்கையால் தள்ளப்படுகிறானா?

   “அப்படி நான் எண்ணவில்லை. விவசாயம் நலிந்தால் மனிதன் பட்டினி கிடந்து சாவான். பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். அவற்றுள் நீ குறிப்பிடும் ஓக வாழ்வும் அடங்கும். பசியை வெல்லும் ஓக வாழ்வு என்பது ஓர் உயர்ந்த தவநிலை. விவசாயம் நலிவதால் அது மனிதருக்கு வாய்க்காது.  

“மண்ணோடு மனிதனுக்கு உள்ள உறவு கருவியால் வருமா? கருவிகள் கொண்டு செய்யப்படும் விவசாயத்தால் பூரண ஆரோக்கிய வாழ்வு கிட்டுமா?

   “நீ குறிப்பிடும் கருவி டிராக்டர் போன்ற இயந்திரங்களைக் குறிக்கும் என நினைக்கிறேன். எந்தத் துறையிலும் நூறு விழுக்காடு இயந்திர மயமாவது நல்லது அன்று. ஒன்றைத் தெரிந்துகொள். இயந்திரங்கள் மனிதனை முழுச்சோம்பேறியாக்கி வருகின்றன. வருங்காலத்தில் இயந்திரத்தின் உதவி இல்லாமல் வீட்டிற்குள்ளேயும் நடக்கமாட்டான்.  இன்னும் பத்தாண்டுகளில் மனிதனை இயந்திரங்கள் அடிமைப் படுத்தி ஆட்டிப்படைக்கப் போகின்றன. அடிமையான மனிதன் அவற்றின் பேச்சைக் கேட்காதபோது இயந்திரங்கள் இரண்டு அடி கொடுக்கும் காலம் வரும்! இவனுக்கு அழிவு இவன் கண்டுபிடித்த கருவிகளால் மட்டுமே.

    அடுத்து நீ குறிப்பிடும் பூரண ஆரோக்கிய வாழ்வை இயந்திரங்கள் ஒருபோதும் தர இயலாது. பூரண ஆரோக்கிய வாழ்வுக்கு அன்புதான் அடிப்படை. அதை அன்பு நிறைந்த மனிதர்களால் மட்டுமே தரமுடியும். இன்று பார்க்கிறோமே, அன்புநிறை ஆசிரியர்களின் முகம் காணாமல், அவர்களுடைய இனிய சொல்லைக் கேட்காமல் இணையவழியில் கற்கும் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமையை.

  சரி. உன் கேள்விக்கு வருகிறேன். வேளாண் துறையில் இயந்திரம் என்பது உணவில் ஊறுகாயைப் போல அளவாய் இருத்தல் வேண்டும். மீண்டும் கலப்பைகள் வேண்டும். கலப்பையால்  உழுவதற்கு மாடுகள் வேண்டும். மாடுகளின் கழிவுகள் பயிருக்கு எருவாக வேண்டும். அதனால் யாவர்க்கும் நஞ்சில்லா உணவு கிடைக்க வேண்டும்.

  உடலுழைப்பும் பெருமையுடையது என உணர்த்தும் வகையில் ஏர் உழுவோர்க்கும் நாற்று நடுவோர்க்கும் அரசு சீருடை நல்க வேண்டும். உரிய ஊதியம் வழங்கிட ஆணை பிறப்பிக்க  வேண்டும். அவர்கள் அறுபது வயதை எட்டும்போது அரசு ஓய்வூதியம் வழங்க.வேண்டும்.

    இவை நடைமுறைக்கு வந்தால் நகரத்தில் பிறந்து வளரும் இளைஞர்கள் கூட கிராமத்திற்குச் சென்று இரண்டு ஏக்கர் நிலம் வாங்கி அதில் 10% பரப்பில் குளம் அமைத்து, 30% பரப்பில் அடர்வனம் அமைத்து, எஞ்சியுள்ள 60% பரப்பில் இயற்கை விவசாயம் செய்து, பல்லுயிர் ஓம்பி, தம்இல் இருந்து தமது பாத்துண்டு, அறவழியில் ஆனந்தமாய் வாழ்வார்கள்.”

 நீ கோபி வைரவிழா மேனிலைப் பள்ளியில் எனது வகுப்பறையில் மாணவனாய் இருந்தபோதும் நிறைய கேள்விகள் கேட்டாய். இப்போது நீ புகழ்மிக்க அரசு சித்த மருத்துவர் என்ற போதிலும், அதே தேடலுடன் கேள்விகள் கேட்டாய். நான் சிந்திப்பதற்கும், எழுதுவதற்கும் ஒரு வாய்ப்பளித்தாய்.

நன்றி. வாழ்க நலமுடன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

 

 

 

 

16 comments:

  1. அருமையான கேள்வி பதில்கள் ஐயா. நானும் உங்கள் மாணவன் தான். நான் எனது 12ம் வகுப்பை முடித்தவுடன் விவசாயம் செய்யப்போகிறேன் மேற்கொண்டு படிக்கவிருப்பம் இல்லை என்றேன். எனது தந்தை ஆசிரியர் என்பதால் நான் விவசாயம் செய்வது அவருக்கு மரியாதை குறைவு வந்துவிடும் என்று எங்கள் தோட்டத்தில் பாதியை விற்றுவிட்டார். நானும் அவரது கடும்கோபத்திற்கு பயந்து படித்து ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளது தாங்கள் அறிந்ததே. நான் விவசாயம் செய்யக்கூடாது என அவர் விற்ற நிலத்தின் அன்றைய விலை 2லட்சம் இன்றைய விலை 1.5கோடி. மேலும் இன்றுவரை நான் எங்கள் தோட்டத்தில் கால்பதிக்கக்கூடாது என்பதில் எனது தந்தை தெளிவாக உள்ளார். சினிமா படங்கள் செய்த மிகப் பெரும் சதியே இன்றைய நிலைக்கு காரணம். ஏனெனில் 1960கள் தொட்டு ஒவ்வொரு படங்களிலும் இனி நீயாவது நல்லவேலைக்கு போ இந்த வயல் வரப்பெல்லாம் வேண்டாம் என்று சொல்லி சொல்லி மக்கள் மனதைக் குழப்பி விவசாயத்தை ஒழித்துவிட்டனர். தோல் தொழிற்சாலைகளால் மாசாவதை கண்டுகொள்ளாமல் செம்பு தயாரிக்கும் தொழிற்சாலை மட்டுமே மாசாக்குகிறது எனது ஒரு பொய்யான பிம்பம். இப்படி எல்லாமே சதி. இன்றைய இளைஞர்கள் பலரும் விவசாயம் என்ன என்றே தெரியாமல் வெறும் YouTube தகவல்கள் எல்லாம் உண்மை என்று நம்பி தங்கள் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் குதிப்பதும் ஒருவித முட்டாள்த்தனமே. சொந்த நிலம் இருந்து பொருளாதாரம் கையில் திடமாக இருப்பவர் தான் வேளாண்மையில் வெற்றிபெறுவர். தங்கள் கட்டுரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. தி.முருகையன்.3 July 2021 at 12:18

    அருமையான கேள்விகளுக்கு சிறப்பான பதில் அளித்திருந்தீர்கள் ஐயா.
    மிக்க மகிழ்ச்சி.
    ஆசிரியராகப் பணியாற்றிய நானும் தற்போது விவசாயப் பணியை செய்து வருகிறேன் எங்கள் நிலத்தில் விவசாயம் செய்து அது சார்ந்த சிறு தொழிலாகிய விசைத்தறி தொழிலையும் செய்து வருகிறேன் என்பது தாங்கள் அறிந்ததே. சோறு போட்ட விளைநிலத்தில் கூறுபோட்டு அவற்றிற்கு மத்தியில் கற்களை நடுகின்றான். அவன் நடுகின்ற கற்கள் நிலத்தைப் பிரிக்கும் கற்கள் அல்ல எதிர்கால தலைமுறைக்கு இப்போதே இவன் நடுகின்ற நடுகற்கள் என்று எப்போது மனிதன் உணர்கிறானோ அப்போதுதான் விவசாயம் தழைக்கும்.

    ReplyDelete
  3. ஆசான் அவர்களுக்கும், அணுக்கத் தோழன் பூர்ணசந்திரனுக்கும், அன்பான வணக்கங்கள் . என் கருத்துகளைப் பகிரவும் விழைகிறேன்.

    நம் நாட்டில் 10 ஏக்கர் நிலம் வைத்து வேளாண்மை செய்வதைக் காட்டிலும், தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா வேலை செய்வது கூட லாபகரமானது. பாதுகாப்பானது. வேறு வழியில்லாதவர்கள் மட்டுமே செய்யக் கூடிய தொழிலாக ஆகிவிட்டதால் விவசாயத் தொழிலில் முனைப்பு குறைந்து போகிறது. ( நிலம் வாங்குவதும்,
    இயற்கைவேளாண்மை என்பதும், பணக்காரர்களுக்கு கேளிக்கை , வரி விலக்கு , இரட்டிப்பாகும் முதலிடு் அவ்வளவுதான்.
    சில லட்சியவாதிகளுக்கு அது பிடிவாதம் மட்டுமே. அது நடைமுறையில் மாற்று விவசாயமுறை அல்ல)

    உணவுப் பொருட்கள் எல்லாமும் எல்லோருக்கும் மலிவாகக் கிடைக்க வேண்டும், ஆனால் விவசாயம் லாபகரமான தொழிலாகவும் இருக்க வேண்டும் என்ற நம் இரட்டை நிலைப்பாடு சாத்தியமானதில்லை.

    விவசாயத்தில் மானுட உழைப்பு குறைவது நவீன அறிவியல், பொருளியல் வளர்ச்சியின் ஆதாரமான நிகழ்வு. இன்னும் இனிமேலும் விரிவாக நிகழும். இயந்திரங்கள் வழியாக விவசாயம் நிகழ்வதும், நிலம் தொகுக்கப்பட்டு பெருந்தொழிலாக
    மேலை நாடுகள் மாதிரி ஆவதுமே இனி விவசாயத்தைக் காப்பாற்றும் வழிகள். இப்போது விவசாயம் நஷ்டமாக ஆகி நிலங்கள் கைவிடப்படுவதும் விலை நிலங்களாவதும் தவிர்க்க இயலாத சூழல்.வரும்காலத்தில் அவை தொழில்மயமாக ஆகும். பழைய விவசாயமுறைகள் ஒழியும்.
    அது நல்லதே. உழைப்பாளிகள் நிலத்தில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். சொல்லப்போனால் பழைய சமூக அமைப்பு, சாதிமேலாண்மை ஆகியவை அழிந்து முற்போக்கான ஒரு மாற்றமே அதன் விளைவாக நிகழும்.சந்தையும், தேவையுமே எந்தத் தொழிலையும் தீர்மானிக்கும். (விவசாயத்தையும்).

    இந்தியாவில் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் உருவான பெரும் உணவுப்பஞ்சங்களில் இந்திய மக்கள்தொகையில் கால்வாசிப்பேர் செத்துப்போனார்கள் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.( Famine in india Wikipedia )
    அந்தப்பஞ்சங்களுக்குக் காரணம் இந்தியாவில் இருந்த வேளாண்முறையின் பின்தங்கிய நிலையே. அந்தப் பஞ்சங்களில் இருந்து இந்தியாவை கரையேற்றியது பசுமைப்புரட்சியே. இயந்திர மயமாக்கப்பட்டதால் தானே.
    முப்பது கோடி முகமுடையாள் பஞ்சத்தால் பலரை இழந்தாள் அன்று.
    நூற்று முப்பது கோடி முகத்திலும் பசிப்பிணி இல்லாத நிலையை அடைந்துள்ளோம் இன்று.


    விவசாயம் காப்பாற்ற பட வேண்டும் என்று நினைப்பவர்கள், கருவிகள் இல்லாத பூரண ஆரோக்யமாக விளைவிக்க விரும்புவோர், பகுதி நேரமாக அவரவர் குடும்பத்துக்குத் தேவையான அளவு அவர்களே விவசாயம் செய்து விளைவித்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளை ஓய்வு நாட்களில் விவசாய வேலைகளில் ஈடுபாடு கொள்ளச் செய்ய வேண்டும். படிப்பறிவு மட்டும் போதாது, சமூக அறிவு, விவசாயம், சமையல் ,பொது நலன் சார்ந்த அனைத்து திறன்களும் மிக்கவர்கள் ஆக பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் சிறப்பு.

    உடலுழைப்பு கீழானதல்ல என்று காட்ட, மேல்நிலையில் உள்ளோரும், மூளை உழைப்பு செய்வோரும், பிறர்க்கு முன்மாதிரியாக ,
    தினமும் ஒருமணிநேரம், இயன்ற,
    உடல் சார் பணிகளும் செய்ய வேண்டும் என்ற காந்திய வழிகாட்டலைப் பின்பற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  4. சார் வணக்கம். இன்று விவசாயம் தெரடர்பான வினா விடைத் தொடராகப் பதிவிட்டுள்ளீர்கள்.நான் விவசாயத்தை மேலைநாட்டுடன் ஒப்பிடவிரும்புகிறேன். மேலை நாடுகளில் விவசாயம் மிகச்சிறந்த பணிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. யாருக்கு எந்த விவசாயப் பணி பிடிக்குமமோ அந்தப் பணியை மேற்கொள்கின்றனர். உதாரணத்திற்கு பால் உற்பத்தியில் முதலிடம் வகிப்பது டென்மார்க். இந்த நாட்டில் எங்களுக்கு எந்த அறிவியல் முன்னேற்றமும் தேவையில்லை எங்களுக்குப் பசுமாடு போதும் என்று மக்கள் கூறுகின்றனர். ஆனால் இங்கு உள்ள விவசாயிகள் மாடுகளைப் பராமரிக்கப் போதுமான விளைநிலங்கள் இல்லாமலும் தீவனங்கள் இல்லாமலும் இருக்கும் நிலை உள்ளது. அடுத்து மேலை நாடுகள் தங்கள் நாட்டில் சுற்றுச்சூழலை மாசு படுத்தும் எந்த ஒரு பணியையும் மேற்கொள்வதில்லை. உதாரணத்திற்குச் சாயப்பட்டறை போன்ற மண்ணை மாசுபடுத்தும், நீரை மாசுபடுத்தும் எந்தப் பணியையும் அவர்கள் மேற்கொள்வதில்லை. ஆனால் நம் நாட்டில் மேற்சொன்ன பணிகள் எல்லாம் அமோகமாக நடக்கிறது. விவசாயப் பணிகளை மேற்கொள்ள முதலில் நீர் மேலாண்மை அவசியம் நீரின்றி அமையாது உலகு. நம் மாநிலத்தில் உள்ள ஆற்றுப்படுகைகளில் பல நிறங்களில் ஊற்றுநீரைக் காணலாம். இங்கு நீருக்கும் நிறமுண்டு.நீரைப் பாதுகாக்க வேண்டும் நிலத்தை பாதுகாக்க வேண்டும். குறிப்பாக பொன் விளையும் பூமி என்று கிராமத்தில் சொல்லுவார்கள். இதில் பொன் என்பது தானியங்கள். அடுத்து பண்ணைக் கருவிகள் பற்றி நண்பர் கேட்டிருக்கிறார். இன்றைய காலத்தில் விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை காரணம் விவசாய வேலைகளைக் காட்டிலும் பிற பணிகளில் அதிக வருவாய் ஈட்ட முடிகிறது. ஆகவேதான் பிற பணிகளை நாடுகின்றனர். இயந்திரங்கள் பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவாக உள்ளது அதனால் மனிதர்களுக்கு வேலைவாய்ப்பு இழப்பு என்பது இல்லை. ஆகவே தாராளமாக இயந்திர பணியை மேற்கொள்ளலாம். இன்றும் உயர்பணியில் உள்ள பலரும் விவசாயம் செய்கின்றனர். அதேசமயம் நெல் மரத்தில் காய்க்கிறது என எம்.சி.ஏ, படித்தவரும் என்னிடம் கூறியிருக்கிறார். இந்த நிலை மாற நீர் மேலாண்மை அவசியம். விலை நிலங்களைக் கண்டறிந்து பயிர் மேலாண்மை செய்யலாம். பஞ்சம் பற்றியும் இதில் பேசப்பட்டுள்ளது. தற்போது வெளிநாடுகள் வெளிமாநிலப் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் தற்போதும் அதே நிலைதான். உள்ளூர் பொருட்கள் உள்நாட்டுப்பொருட்கள் என்ற நிலையைக் கடந்து பல ஆண்டுகளாகிவிட்டது. பழக்கடைகளில் வெளிநாட்டுப்பழங்கள் காய்கறிகள் அதிக அளவில் விற்கப்படுவதைக் காணலாம். இன்னும் நிறைய செய்திகள் உண்டு. சிறிய அளவில் மட்டுமே பதியமுடிந்தது. நன்றி.
    முனைவர் ரா.லட்சுமணசிங்
    கரூர்

    ReplyDelete
  5. ஒவ்வொரு பதில்களும் அருமை ஐயா...

    ReplyDelete
  6. Feedback from Dr.Poorna Chandra Kumar
    through Whatsapp
    வணக்கம் ஐயா. இந்த எளியோனின் பதிவிற்கு தங்களின் அயராத தமிழ்ப் பணியிலும் தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி மிகச் சிரத்தையுடன் அருமையான, அறிவியல்பூர்வமான, ஆக்கபூர்வமான பதில்களை வலைதளத்தில் பதிவிட்டதற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா. எத்துணை வயதானாலும் ஆசிரியர் ஆசிரியரே!. மாணவன் மாணவனே!. மாணாக்கர்களாகிய எங்களின் அறியாமை இருளை நீக்கி (ரு) அறிவு விளக்கேற்றும் (கு)- குருவாக தங்களைப் பெற்றது எங்கள் பாக்கியம்.🙇‍♂️
    தங்களுக்கும் வலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்ட நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.👌🤝👏💅🙏.

    ஐயா, ஒரு சிற்றுரையோடு முடித்து கொள்கிறேன்.
    பசியால் மனிதன் இறப்பதும், நவீன மயமாக்களால் விளை நிலங்கள் மெல்ல மெல்ல குறைந்து வருவதும், இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வதும் இயற்கை சில விஷயங்களை "லட்சுமணன் கோடாக" கண்ணுக்குத் தெரியாமல் விளக்கி வருவதாக நான் நீண்ட காலம் உணர்ந்து வருகிறேன் ஐயா!.
    அது என்ன லட்சுமணன் கோடு?!.
    1. வாழ்வதற்கான போராட்டத்தில் ( struggle for existence) மனிதன் பசியை வென்றே (குறள்: 261) ஆக வேண்டும்.
    2. இயற்கை தேர்வில் ( natural selection) அத்தன்மை அடுத்த தலைமுறைக்கு அப்பண்பு (generic inheritance) கடத்தப்படும். ( திருமந்திரம்: 575)
    3. அவ்வாறு கடத்தப்பட்ட உயிரினமே (அதிமன ஆற்றல் மனிதன்-super speciality human) பூமியிலோ, மற்ற கிரகங்களிலோ வாழும். ( Survival of the Fittest ).(குறள்: 1040). மற்றவை காலப் போக்கில் மெல்ல மெல்ல மறைந்து விடும்.
    மிக்க நன்றி ஐயா 🙏

    ReplyDelete
  7. சின்னஞ்சிறு கிராமங்களில் கூட அரிசி, பயறுகள், வெண்ணை, பால், காய்கறிகள், சர்க்கரை, இனிப்பு பொருட்கள் தாராளமான அளவில் பெற முடியும்
    - 17ம் நூற்றாண்டில் வந்த பிரான்சு நாட்டு பயணியும் வணிகருமான ஜான் பேப்டிஸ்ட் டேவர்வனியர்.
    -----
    இந்திய வேளாண்மையை பிற்போக்கானது, பின் தங்கியுள்ள ஒன்று என்ற கருத்துடன் நான் ஒத்துப் போகவில்லை. இந்திய வேளாண்மையில் (மேம்படுத்துவதற்கு) செய்வதற்கு ஏதுமில்லை என்றே நம்புகிறேன் இந்திய வேளாண்மையை மேம்படுத்துவதற்கு ஆலோசனைகள் சொல்வதற்கு பதிலாக இங்கிலாந்தின் விவசாயத்தை மேம்படுத்த ஆலோசனைகள் கூறுவது மிக எளிதானது என்று உரக்கக் கூறுவேன். இந்திய விவசாயி இங்கிலாந்தின் விவசாயியை விட பல விசயங்களில் சிறந்தவராக இருக்கிறார்.
    ------முனைவர். ஜான் அகஸ்டஸ் வோல்கெர், ( Dr.Johm Augustus Volecker) ராயல் வேளாண்மைக் கழகத்தின் வேதியியல் ஆலோசகர், 1889-91 ல் இந்திய வேளாண்மையை மேம்படுத்துவதற்காக அழைக்கப்பட்டவர்.
    ------
    கிராம சமூகங்கள் சிறு குடியரசுகள் போல் இருக்கின்றன. ஏறத்தாழ தங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொண்டிருக்கின்றன. எந்த வெளி உதவிகளும் தேவைப்படாத சுதந்திரமானவைகளாக இருக்கின்றன. அவைகள் எந்தவென்றும் நிகழாதது போல் அப்படியே நிலைத்து இருக்கின்றன. சாம்ராஜ்யங்கள் மாறி சாம்ராஜ்யங்கள் சரிந்தன, ஒரு புரட்சி போய் மற்றொறு ப்புரட்சி வந்தது. ஆனால் கிராமங்கள் ஏதும் நடக்காதது போல் அப்படியே இருந்தன.
    --- 1835-36 ல் இருந்த இந்தியாவின் கவர்னர் ஜெனரல் சார்லஸ் மெட்காஃப் (Charles Metcalfe)
    -----
    நாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் நெல் சாகுபடியில் எந்த வகையான மேம்பாட்டையும் காண இயலாது. (அ-து- வளர வேண்டிய உச்சத்தை அடைந்து விட்டது. இனி வளர ஏதுமில்லை)
    கொல்கத்தாவில் உள்ள ராயல் தாவரவியல் பூங்காவின் கண்காணிப்பாளராக இருந்த டாக்டர். நதானியேல் வாலிச் 1832 ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கூறியது.
    ------
    1886ல் செங்கல்பட்டு ஆட்சியரின் உத்திரவின் பேரில் 2200 கிராமங்களில் நடந்த சர்வேயில் கண்டறிந்தது, “ஒரு 5 பேர் கொண்ட குடும்பத்தவர்கள் ஓராண்டு உட்கொண்ட உணவின் அளவு 5000 கிலோ”.
    ---
    இவைகள் இந்திய விவசாயம் பற்றி மேற்கத்தியர் கூறியது. ஆகவே இங்கு விவசாயம் ஒன்றும் இழி நிலையில் இருந்திருக்கவில்லை. இந்திய விவசாயம் சிதைந்தது ஆங்கிலேயர்கள் தங்களது வணிகத்திற்காக இந்திய விவசாயத்தை மாற்றியதில் இருந்து தொடங்குகிறது. கருத்துகள் சொன்ன பெருந்தகைகள் சம்ரான் சத்யாகிரகம் (அவுரிப் போராட்டம்) பற்றி விரிவாகப் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  8. டிபிகல் மத்தியதர வர்க்க சிந்தனையில் விவசாயத்தைப் பார்க்கிறார்கள். பிரச்சனையை மேலோட்டமாகப் பார்த்துப் பேசுவது மத்திய தர வர்க்கத்திற்கு வழக்கமான ஒன்று.
    அடுத்து அமெரிக்கா, ஐரோப்பிய விவசாயத்துடன் ஒப்பிடுவது. எத்தனை வேறுபாடுகள் உள்ளது இந்திய சூழலுக்கும் மேற்கத்திய நாடுகளின் சூழலுக்கும். 80% விவசாயிகள் 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ளவர்கள். 135 கோடி மக்களுக்கான உணவில் 52 சதம் மானாவாரியில் இருந்து வருகிறது. வளமான, நீர் வசதி உள்ள நிலத்தில் உணவு விளையவில்லை. அதிக வருவாய் கனவில் உணவல்லாத வேறு பயிர்கள்.
    உணவு விளைவிப்போருக்கு உண்மையில் வருவாய் குறைவு. மக்களுக்கு உணவுப் பண்டங்களின் விலை குறைவாகவும் இருக்க வேண்டும்.
    மறுபக்கம் இந்திய விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியே செல்வது நல்லது என்று நினைக்கிறார்கள். இப்படி நினைப்பவர்கள் இந்திய நிலையைப பற்றி கவலைப்படாத பட்டண்ணத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்லது கிராம்பஃ புற பின்புலத்தில் இருந்து வெளியேறி வேறு வழியில் நல்ல வருவாய் பார்ப்பவர்கள்.
    இந்திய விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்தால் என்ன ஆகும் என்பது பற்றி சிறிதும் யோசிக்கவில்லை.
    ஜோஸ் போவ் என்கிற பிரஞ்சு விவசாயத் தலைவர் கேட்டார், ’130 கோடி மக்களுக்கு எந்த நாடு விளைவித்துக் கொடுக்கும்?

    எந்த நாடு விளைவித்துக் கொடுக்கும்?

    மன் மோகனின் ஒன்றிய அரசு ஆதரவு விலையில் 1.00 ரூ சேர்த்துக் கொடுக்க மறுத்தது. அதே சமயம் வெளியார் நேரடியாக கோதுமையை வாங்கிடவும் அனுமதித்தது. தனியார் பெரு நிறுவனங்கள் வாங்கிக் குவித்தன. இந்தியா 2 இலட்சம் டன் கையிருப்பிற்காக வாங்க வேண்டிய நிலை. சர்வ தேச டெண்டர் விட்டது. 3.00 முதல் 4.00 வரை அதிகம் கொடுத்து வாங்கியது. விவசாயிகள் எண்ணிக்கை குறைந்து விட்டால் அல்லது உணவல்லாத பயிர்களுக்குச் சென்று விட்டால்!!!!!!!
    இப்படியான சூழலில் உலக சந்தை எப்படி இயங்கும் என்பதை யோசிப்பது நல்லது.

    மிகவும் பாதுகாப்பாக, நல்ல வருவாய் இருப்பதால் தங்களின் உணவிற்கு பாதிப்பில்லை என்ற மன நிலை இந்திய மத்திய தரத்தினரிடம் உள்ளது. இந்த நிலை சிதைந்து வருகிறது.

    அமெரிக்க அரசு உணவின் விலை மலிவாக இருக்க அளிக்கும் மானியம் மிக அதிகம். அது கொடுக்கும் மானியத்தின் அளவில் 10% கூட நம்மவர்களுக்கு இல்லை. பால் கறக்காத மாடு வைத்திருந்தாலும் அதற்கு தினமும் 3 டாலர் மானியம். எல்லோரும் விவசாயம் செய்தால் விலை வீழ்ச்சி அடையும் என்பதால் சுழற்சி முறையில் ஒரு பகுதி விவசாயிகளை விவசாயம் செய்ய வேண்டாம் என்கிறது.விவசாயம் செய்தால் என்ன வருவாய் வருமோ அதை அரசு அளிக்கிறது.

    ஆனால் இந்தியாவில்??????

    பால் உற்பத்தி செலவு சராசரியாக ரூ.40-42. ஆனால் அரசு நிர்ணயித்த விலை 20-25 க்குள். 40 என நிர்ணயித்தால் வாங்குவோருக்கு அது 55-60 ஆக இருக்கும். மக்கள் கொதித்தெழுவர். ஆகவே விலை குறைத்தே வைக்கப்படுகிறது. உலகெங்கும் இது தான் நிலை. குறைத்தது தான் வைக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அது விவசாயிகளின் இரத்ததை உறிஞ்சுவதாக இருக்கக் கூடாது.

    ReplyDelete
  9. ஒரு பக்கம் விதை முதல் விளைச்சல் வரை எல்லாவற்றையும் பெரு வணிகம் தன் கையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது. அதற்கேற்ப அரசு கொள்கைகள் மாறுகிறது. சில நாடுகளில் அரசே மாறுகிறது. மறுபக்கம் விவசாயத்தை முழுதாகக் கட்டுப்படுத்த விவசாயிகள் எண்ணிக்கையை குறைக்க முயல்கிறது.

    ஒரு கற்பனைசெய்து பாருங்கள். அமெரிக்க மாதிரியான விவசாயம் இங்கு இருப்பதாக கற்பனை செய்திடுங்கள். குறைவான விவசாயிகள் இருப்பதாக இருந்தால், இந்த கொரானா ஊரடங்கில் உணவிற்கு என்ன நிலை ஏற்பட்டிருக்கும்?
    இன்றும் இந்த ஊரடங்கிலும் உணவுப் பண்டங்களுக்காக அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டணத்துக்காரர்கள் தானே.
    ஒரு முறை சுந்தர்லால் பகுகுணா இரண்டு படங்கள் காட்டி கூறினார். ஒரு படம் விறகு சுமையுடன் கிராமச் சாலையில் நடக்கும் மூதாட்டி. இன்னொன்று மூட்டைகளுடன் வண்டி இழுக்கும் பட்டணத்து தொழிலாளி படம். இந்த இரு படங்களையும் காட்டி இதோ இந்த மூதாட்டிக்கு என்றுமே உணவில்லை என்ற நிலை வருவதில்லை. உணவாகக் கூடிய தாவரங்கள் ஏதேனும் சிலது எப்போதும் கிடைக்கிறது. ஆனால் இந்த பட்டணத்து தொழிலாளிக்கு பணம் சம்பாதித்து அதன் மூலம் உணவிற்கானவைகளை வாங்கினால் மட்டுமே பசியற்று இருக்கும் அவரது குடும்பத்தவர்கள்.

    மக்களை நகரத்திற்குத் தள்ளி விடாத வரைக்கும் தான் அரசுகளுக்கு சிரமங்கள் குறைவாக இருக்கும்.

    இன்று காலை ஒரு தம்பி கைபேசியில் தெரிவித்தார், “அண்ணா, பட்டணங்களும் பட்டணத்தவர்களும் அடுத்த 10-15 ஆண்டுகளுக்குள் வாழ்விழப்பர். பருவநிலை மாற்றம் அதை நடத்திடும். 10-15 ஆண்டுகளுக்குள் 1.5 மீட்டர் அளவிற்கு கடல் மட்டும் உயரும். அப்போது தெரியும் இந்த வளர்ச்சிக்கு நாம் கொடுத்துள்ள விலை”.

    “அது வரைக்கும் விவசாயம் அவர்களுக்கு கேவலமானதாகவும், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற வேண்டும் என்றும் கூறிக் கொண்டு தான் இருப்பார்கள்,” என்று.

    நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பன்முகமானவை. அவைகளில் பலவற்றுக்குத் தீர்வு வளமான விவசாயமே. வளமான விவசாயம் என்பது நுகர்வோர் விவசாயிகளின் இரத்தம் குடிப்பவர்களாக இல்லாமல் இருப்பதிலும் இருக்கிறது.



    மக்களுக்கு உணவு மலிவாக இருக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத நிலையை அரசுகள் உருவாக்கியுள்ளதே அதை கேள்வி கேட்க வேண்டும். அவர்களது இரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக இருக்கிறோமே என்ற புரிதல் தேவை.

    செல்வம், அறச்சலூர்.

    ReplyDelete
  10. செல்வம், உங்கள் வருகைக்கு முதலில் நன்றி. செய்திகளை ஆதாரங்களுடன் தந்து அசத்திவிட்டீர்கள்.பாராட்டுகள்.

    ReplyDelete
  11. அறுமையான கேள்வி பதில்களும் ஆதாரம் நிறைந்த பின்னூட்டங்களும் பதிவை சுவாரசியமாக்கியுள்ளது ஐய்யா.
    விவசாயம் நிறுவனமயமாவதும் தொழில்மயமாவதும் தவிர்க்கமுடியாதவை என கருதுகிறேன்.
    படிக்காதவர் செய்வதே விவசாயம் என்ற கருத்து இனி மாறக்கூடும் என அணுமானிக்கிறேன்.
    அறிவியல் மற்றும் வேளாண் பொறியியல் படிப்போர் மற்றும் அத்துறையின் வல்லுனர்கள், தங்கள் துறைகளின் முன்னேற்றங்கள் குறித்து இங்கே பகிர்வது நம் புரிதலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும்.
    குறைந்த நிலத்தில் அதிக பொருட்களை விளைவித்தல், கப்பல், கடல், மொட்டைமாடி என பல இடங்களில் புதுமையான விவசாயம் என உலகம் மாறுவதோடு நில்லாமல், செவ்வாய் கிரகத்திலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்து, தாவரங்களை உருவாக்கும் முயர்ச்சியில் அறிவியல் ஈடுபட்டுள்ளது.
    இதன் எதிர்காலம் குறித்து வல்லுனர்கள் கருத்துகளை பகிர்வது பயனளிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது சிறப்பு. வருகைக்கு நன்றி.

      Delete