Saturday 17 July 2021

யானையை விழுங்கிய மலைப்பாம்பு

    இன்று(ஜூலை 16) காலையில் எழுந்ததும் பாம்பு முகத்தில் விழித்தேன். புலனத்தில் அன்றாடம் ஆங்கிலத்தில் பதிவிடும் என் நண்பர் வலைப்பூவர் என்.வி.சுப்பராமன் அவர்கள் இன்று உலகப் பாம்புகள் தினம் எனக் குறிப்பிட்டு பல அரிய தகவல்களைத் தந்திருந்தார். தொடர்ந்து பாம்பு குறித்த சிந்தனையாகவே இருந்தேன்.

   திருவள்ளுவர் பாம்பு குறித்து ஏதேனும் சொல்லியுள்ளாரா என நூலைப் புரட்டினேன்.    திருக்குறளில் மூன்று இடங்களில் பாம்பு ஊர்கிறது. பொருட்பாலில் ஒரு குறட்பாவிலும் இன்பத்துப்பாலில் இரு குறட்பாக்களிலும் பாம்பு காணப்படுகிறது.

  வயல்வெளிகளில் வாழும் எலிகள் கூட்டமாகக் கூடி ஒலி எழுப்பினாலும் ஒரு நாகப் பாம்பு மூச்சு விட்டால் போதும் அவற்றின் ஆட்டம் அடங்கிவிடும். ஓர் அரசன் தன் வலிமை குறைவு என உணரும்போது எதிரியிடமிருந்து ஒதுங்கிக்கொள்வதுதான் சிறப்பு என்கிறது இக்குறள். பிறிது மொழிதல் அணி குறித்த தேர்வு வினாவிற்கு நீங்கள் இந்தக் குறளை எடுத்துக்காட்டாகத் தந்திருப்பீர்களே.

 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை                               நாகம் உயிர்ப்பக் கெடும். (குறள் 763 படைமாட்சி) 

  மனப்பொருத்தம் இல்லாத அரசரும் அமைச்சரும் சேர்ந்திருப்பது, ஒருவர் ஒரு குடிசையில் பாம்புடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒப்பாகும் என்கிறது இந்தக் குறள்.

 உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்                       பாம்போ(டு) உடன்உறைந் தற்று   (890 உட்பகை) 

   அவள் தன் காதலனைக் கண்டது ஒரு நாள் மட்டுமே. ஆனால் அதற்குள் அதுபற்றிய அலர் என்னும் வம்புப்பேச்சு, நிலவைப் பாம்பு விழுங்கிய செய்திபோல் ஊரெங்கும் பரவிவிட்டதாம்!

 கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்                       திங்களைப் பாம்பு கொண் டற்று   (1146 அலரறிவுறுத்தல்) 






 சங்கப் புலவர் சேந்தம் பூதனார் தரும் செய்திதான் நம்மை நடுங்க வைக்கிறது.

   நெடிது உயர்ந்த குன்று; அது அடர்ந்த மரங்களை உடையது. நடு இரவில் ஒரு மரத்தடியில் உறங்கிக்கொண்டிருந்த ஓர் இளம் யானையை ஒரு பெரிய சினங்கொண்ட மலைப்பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது. மாசுணம் என்பது பாம்பைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.

                          .....யாமத்துக்

களிறு அகப்படுத்த பெருஞ்சின மாசுணம்

வெளிறு இல் காழ்மரம் பிணித்து நனிமிளிர்க்கும்...

       (நற்றிணை 261)  

  பாம்பு குறித்து இயற்கை வேளாண்மை முன்னோடி நம்மாழ்வார் என்ன சொல்கிறார்?

   “அதுங்க இல்லன்னா வெளையற நெல்லு எல்லாத்தையும் எலி சாப்டுட்டு பூடும். அப்பறம் நாம பட்னி கெடக்கணு. பாம்புகள கண்டிங்கன்னா  அடிச்சிக் கொல்லாதிங்க. அது விவசாயோட நண்பன். நம்ப வள்ளுவரு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்னு சொல்றார்ல?” 

நம்மாழ்வார் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. 

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

---------------------------------------------------------------------------------------------------

பி.கு: பாம்புதான் படமெடுக்கும். நான் அதைப் படம் எடுப்பதில்லை. இங்கே நீங்கள் பார்த்த படங்கள் இணையத்திலிருந்து சுடப்பட்டவை.

 

11 comments:

  1. அருமை ஐயா... நம்மாழ்வார் சொல்வதே சரி...

    ReplyDelete
  2. நல்ல தகவல் ஐயா ...
    அருமையான பின்குறிப்பு

    ReplyDelete
  3. பாம்புக் குறள் விளக்கம் மற்றும் பாம்புக் கதை மிகவும் அருமை ஐயா

    ReplyDelete
  4. தி.முருகையன்.17 July 2021 at 11:27

    பாம்பு கதை மிகவும் அருமை ஐயா. மனிதர்களை தீண்டாதவரை பாம்பு மனிதனுக்கு நண்பனே. மனிதனைத் தீண்டும் பொழுதுதான் அது மனிதனுக்கு பகைவனாகிறது.

    ReplyDelete
  5. அருமை ஐயா
    தங்கள் பதிவுகளை வாசிப்பதனால் பலவற்றைக் கற்றுக் கொள்கிறேன்
    தொடர்ந்து பதிவேற்றுங்கள் நன்றிகள் பல


    ReplyDelete
  6. நம்மாழ்வார் சொல்வது சரி

    ReplyDelete
  7. சித்த மருத்துவர் பூர்ண சந்திரகுமார் அவர்கள் என் மாணவர். அவர் புலனத்தில் அனுப்பிய பின்னூட்டம்.

    வணக்கம் ஐயா. செய்திகள் அனைத்தும் அருமை!.
    சித்த மருத்துவத்தில் பாம்பைக் "குண்டலினி சக்தி" க்கு உவமையாகக் கூறுவார்கள். முறையான ஓகப்பயிற்சியில் முதுகுத் தண்டின் அடிப்பகுதியிலிருந்து மேல் நோக்கி உயிர்ச்சக்தி பாம்பு போல் மேல் நோக்கி ஊர்ந்து பிரமரந்திரம் (பீனியல் சுரப்பி) என்னும் உச்சியை அடைந்து பிரபஞ்சத்தோடு கலந்து ஐக்கியமாகி இறவா நிலையை அடைவதாக யோக மருத்துவம் கூறும்.
    பாம்பு பசியை அடக்கும் வல்லமை கொண்டது என்பர். தனது இரட்டை நாக்கில் ஒன்றை மேல் அண்ணத்தில் ஒட்டவைத்துக் காற்றை மட்டுமே சுவாசித்து ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை உணவில்லாமல் வாழும். இதையே யோக மருத்துவத்தில் "லம்பிகா யோகம்" என்று கூறுவர். நாவை மேலண்ணத்தில் ஒட்டவைத்துப் பயிற்சி செய்ய பசி தாகம் அடங்கும் என யோக சாத்திர நூல்கள் கூறும். அவ்வாறு பயிற்சி செய்யும்போது உச்சியிலிருந்து உள்நாக்கு வழியாக அமிர்தம் போன்ற ஒரு திரவம் சுரக்கும். இதனைச் "சிவக்குடிலை நீர்" அல்லது "மதியமுது" (secretion of pineal gland) உண்ணல் என்று யோக சாத்திரங்கள் கூறும். இதை உண்டால் நரை, திரை, மூப்பு, பிணி, சாக்காடு வாரா என்று சித்தர் பெருமக்கள் கூறுவர்.
    எனக்குத் தெரிந்த சில செய்திகளை தங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ஐயா.
    பதிவிற்கு மிக்க நன்றி ஐயா 🙏

    ReplyDelete
  8. ஒரு கூடுதல் செய்தி: தஞ்சாவூர் பெரிய கோயிலில் மூன்றிடங்களில் துவாரபாலகரின் காலடியில் கிடக்கும் பாம்பொன்று யானையை விழுங்குவதாக சிற்பங்கள் வடிக்கப்பெற்றள்ளன......துவாரபாலகர்கள் தம் கைகளில் தர்ஜனி முத்திரையும், அபயமும விஸ்மயமும் காட்டி நிற்கின்றனர். காவலர் தர்ஜனி முத்திரையால எச்சரிக்கை செய்துவிட்டு, விஸ்மய முத்திரை என்னும் மேலுயர்த்தியகையால் உள்ளே இருக்கும் ஈசனார் மிகப்பெரியவர் என்பதைக் காட்டுகிறார். காலடியில் ஒரு பாம்பு யானையை விழுங்குகிறது. ஒரு யானையை முழுமையாக விழுங்குவதற்கு அந்தப் பாம்பு எத்தனை பெரியதாகவும் வலிமை மிக்கதாகவும் இருக்கவேண்டும் .....திருஞானசம்பந்தப்பெருமானார திருக்கயிலாயப் பதிகத்தில் புரிகொள்சடையார்அடியார்ககு எளியார்...என்று பாடி யானையைப் பாம்பு விழுங்கும் காட்சியைக் காட்டுகிறார். முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதியுள்ள இராஜராஜேச்சரம் (ப.67) என்ற நூலிலிருந்து இவ்விவரம் எடுக்கப்பட்டது. நேரில் இச்சிற்பத்தைக் காணும்போது வியப்பு மேலிடும்.

    ReplyDelete
  9. பாம்பின் கால் பாம்பறியும்.
    கால் இல்லாத பாம்பு இதைக் கேட்டு நகைக்குமோ.

    கிரேக்க மருத்துவக் கடவுள் அப்போலோவின் தூதரான ஹெர்மிஸின் கையிலுள்ள கட்டியக்கோல்.
    மன்னனின் செங்கோல் போல.
    இந்த மந்திரக்கோலும் அதைச் சுற்றிய பாம்புகளும் தான் அலோபதி மருத்துவத்துறையின் உலகளாவிய குறியீடு.
    பாம்பு சட்டையை நீக்கி புத்தாக்கம் பெறுவது போல , மருத்துவர்கள் பிணி நீக்கி, மீட்டுருவாக்கித் தருகின்றனர் என்பதே அக் குறியீட்டின் பொருள்.
    மருத்துவர் கைகளுக்கு அந்த மந்திரக்கோலை கடவுள் தந்திருப்பதால் தான் கடவுளின் தூதரென , கடவுளே நீவிரென
    பாராட்டு
    குணமடைந்த குணவான்களிடமிருந்து அவர்கட்குக் கிடைக்கிறது.


    நம் நாடு பாம்புகளின் தேசம் தான். சுரண்டல் ஆங்கிலேயர்களால் பாம்பாட்டிகளின் தேசம் என்றும் இகழப்பட்டது தான்.
    நம் கடவுள்களும் பாம்பின் மீது படுத்தும், பாம்பை கழுத்தில் அணிந்தும், விஷம் தின்ற நீலகண்டன்களாகி,நம் அச்சம் நீக்கிக்,காக்கின்றனர்.


    பாம்பு கடித்தால் பதட்டப்படாமல் உடனடியாக மருத்துவ மனைக்குச் செல்லுதல் வேண்டும். கடித்த இடத்தில் கயிற்றைக் கொண்டு கட்டுதல் கூடாது. அவ்வாறு கட்டுவதால் அந்த உறுப்பை வெட்டி எடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம். பிளேடு, கத்தியால் வெட்டி இரத்தத்தை எடுப்பதும், வாயை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் தவறான வழிமுறை. பதட்டமும் தேவையில்லை.
    பதட்டப்பட்டால் ரத்த ஓட்டம் அதிகமாகி விஷம் வேகமாக பரவும்.
    பாம்புகளில் எது கடித்தாலும் மருத்துவமனைகளில் ஒரே விஷ முறிவு மருந்துதான் கொடுக்கப்படுகிறது. இதை 'பாலிவெனம்' என்போம். எனவே கடித்த பாம்பைத் தேடி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.பாம்பு கடித்தவுடன் அதை அடித்து மருத்துவ மனைக்கு எடுத்து வந்தால் தான் சரியாக முறிவு மருந்து கிடைக்கும் என்பதும் தவறே.

    தங்கள் பாம்பு தின அருமையான கட்டுரைக்கு மகிழ்ச்சியாக என் பின்னூட்டம்.

    கண்ணன்.

    ReplyDelete
  10. கட்டுரையும் அருமை; கருத்துகளும் அருமை

    ReplyDelete