Tuesday 6 July 2021

யாதும் ஊரே யாவரும் கேளிர்

 

அமெரிக்க சுதந்திர தினத்தை அருமையாய்க் கொண்டாடினார்கள் நம் தமிழர்கள்.

   டெக்ஸாஸ் மாநிலத்தில் லிட்டில் எல்ம் நகரின் அழகிய லூவிஸ்வில் ஏரி. அந்த ஏரிக்கரையில் மரங்கள் சூழ்ந்த  வீடுகளின் அணி வரிசை. அவற்றில் இரு வீடுகளுக்கு மட்டும் வாசகர்களை அழைத்துச் செல்கிறேன்.

காட்சி ஒன்று

    ஒரு வீடு நம்மவர் வசிப்பது; பக்கத்து வீடு அமெரிக்கர் வசிப்பது. ஜூலை நான்கு அமெரிக்காவின் சுதந்திர தினம். சுற்றமும் நட்பும் சூழ காலையிலிருந்தே  இரு வீடுகளும் களை கட்டத் தொடங்கின.

சரியான போட்டி!

 மசாலா தடவப்பெற்று நான்கு மணி நேரம் ஊறிய இளங்கோழித் தொடைகளை இரும்பு வலையடுப்பில் வைத்து, ஆண்கள் பக்குவாய்ச் சுட்டெடுக்கும் வைபவத்துடன் இரு வீடுகளிலும் சுதந்திரதின விழா தொடங்கியது. அதைச் சுடும்போதும் ஆட்டம்; வாயில் இடும்போதும் ஆட்டம். அந்த வீட்டில் சிலர் ட்ரம் வாசிக்க அதன் தாளகதிக்கு ஏற்ப ஆட்டம் போட்டனர். இங்கே குதியாட்டப் பாடலுக்கேற்ற ஆட்டம். அவ்வளவுதான் வேறுபாடு.

  நம் நண்பர்  வீட்டில் குழந்தைகள் போட்ட கும்மாளம் கொஞ்சமா நஞ்சமா? வீட்டின் புழக்கடையில் அமைந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் குதித்து நீந்தி மகிழ்ந்த காட்சி என்னுள் ஓர் ஏக்கத்தை ஏற்படுத்தியது. எனக்கு நீச்சல் தெரியாது. “உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பார்த்தானாம்; உதட்டாலே சப்புக்கொட்டி ஓந்திபோல நின்னானாம்” என்ற கதையாய் என்னால் பார்க்க மட்டுமே முடிந்தது.

    இங்கே அமெரிக்க சுதந்திரக்கொடியை மக்கள் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சட்டையாய் மட்டுமன்று உள்ளாடையாகக் கூட தைத்து அணியலாம். அதனால் பலரும் அமெரிக்க கொடியின் வண்ணத்தில் ஆடை அணிந்திருந்தார்கள். சின்னக் குழந்தைகளும் அப்படியே. நம் ஊரில் நமது கொடியை இப்படிக் கால்சட்டையாய் அணிந்து வெளியில் திரிந்தால் சிறையில் கம்பி எண்ண வேண்டியிருக்கும்!

      மாலையில் எல்லோரும் ஏரிக்கரையின் எழில்மிகுந்த பரந்துபட்ட புல்வெளியில் பந்து விளையாடி மகிழ்ந்தனர். 

   முன்னிரவில் பாலா என்னும்  பைந்தமிழ் அன்பர் பக்குவமாய் சுட்டுக் கொடுத்த முறுகல் ரவா தோசை சுவையோ சுவை! அவருக்கு ஒரு நல்ல தொழில் திறன் கைவசம் உள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

   இரவு உணவுக்குப் பிறகு முன்னிரவில் அந்த ஏரிக்கரையில் நடந்த கண்கவர் வாண வேடிக்கையுடன் விழா முடிவுக்கு வந்தது.








காட்சி இரண்டு

   ஆகஸ்ட் பதினைந்து.  வீடெங்கும் மூவண்ணக் கொடித் தோரணம். நாங்கள் சென்றதும்  பெண் குழந்தைகள் சந்தனம் கொடுத்து வாயார வணக்கம் எனச் சொல்லி வரவேற்றனர். அவர்கள் பட்டுப் பாவாடை சட்டையில் அத்தனை அழகாக இருந்தனர். பத்துக் குடும்பத்தினரும் தமிழரின் பாரம்பரிய உடையில் வலம் வந்ததைக் கண்டபோது அமெரிக்காவில்தான் இருக்கிறோமா என்னும் ஐயம் ஏற்பட்டது. நல்ல வேளை நானும் வேட்டி சட்டையில் போயிருந்தேன்.

    நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி காலை ஒன்பது மணிக்கு வீட்டின் பின்புறத்துப் புல்வெளியில் கொடியேற்று விழா சிறப்பாக நடந்தது. குழந்தைகள் ‘தாயின் மணிக்கொடிப் பாரீர்’ பாடலை என்ன அழகாய் கிட்டார் இசைக்கருவியில் வாசித்தார்கள்!

   அதனைத் தொடர்ந்து, அங்கே போடப்பட்டிருந்த துகில் பந்தலின் கீழ் அமைந்த மேடையில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின. தாய்மார்களில் சிலர் முன்வந்து நிகச்சிகளைத் தொகுத்தளித்தனர். 5BEATSz என்னும் பதின்பருவ மகளிர்  இசைக்குழுவினர் ‘சாரே ஜஹான் சே அச்சா’ பாடலைப் பாடி அசத்தினார்கள்.    பாரதியார் பாடலுக்குப் பரதநாட்டியம் ஆடிய சிறுமியரின் திறமை இன்னதென்று சில சொற்களில் சொல்லிவிட முடியாது. பாரதியார் வேடமிட்ட சிறுவன், “ஜய பேரிகை கொட்டடா” என்னும் பாட்டுக்கு நன்றாக அபிநயம் பிடித்தான். ஒரு பையன் கட்டபொம்மன் வேடமிட்டுப் பேசிய வீர வசனம் அருமையிலும் அருமை!

   குதியாட்டப் பாடல்களுக்கான குழு நடனங்களைத் தொடர்ந்து பாரதவிலாஸ் திரைப்படம் திரையிடப்பட்டது.

   ஆண்மக்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சமையல் கட்டில் நுழைந்தனர். படம் முடியவும் மதிய உணவைத் தயாரித்து முடிக்கவும் சரியாக இருந்தது. எங்களுக்கு வைத்த முள்ளங்கி சாம்பாரும் அவர்களுக்கு வைத்த மீன் குழம்பும் ஒரே வண்ணத்தில் காட்சியளித்தன. ஆனாலும் மீன் குழம்பின் வாசனை சற்றே தூக்கலாக இருந்ததால் நான் சற்றே அசைவமாக மாறிவிட்டேன்!

தலை வாழை இலைபோட்டு மதிய விருந்து தடபுடலாக நடந்தது.

மாலை முழுவதும் விளையாட்டு; நடு நடுவே உண்டாட்டு!

      மாலை சரியாக ஆறுமணிக்கு ராம் அவர்கள் மூவண்ணக் கொடியை மெல்ல  இறக்கி, மடித்து ஒரு வேலைப்பாடு மிகுந்த அழகிய  மரப்பெட்டியில் வைத்து, அடுத்த ஆண்டுக்குப் பத்திரப்படுத்தினார். பின்னர் நாங்கள் பிரியா விடைபெற்று அவரவர் இல்லம் திரும்பினோம்.

 இப் பதிவின் முதல் காட்சி நடந்த ஒன்று. இரண்டாம் காட்சி நடக்க வேண்டும் என நான் நினைத்தது. நினைக்க மட்டுமே முடியும்.  நினைத்தபடி இங்கே நம் வீடுகளில் நம் நாட்டுக் கொடியை ஏற்றிவிட முடியாது. இது குறித்து வாசகர்கள் தங்கள் கருத்தை விரிவான பின்னூட்டமாகத் தருவார்கள் என நம்புகிறேன்.    

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

   

5 comments:

  1. இரண்டாம் காட்சி நினைவலைகளா ?

    நான் சற்றே குழம்பி, நம்பி, ஏமாந்து விட்டேன்.

    ReplyDelete
  2. தி.முருகையன்.6 July 2021 at 14:41

    ஐயா வணக்கம். அருமையான பதிவு. அத்துடன் தாங்கள் இணைத்துள்ள புகைப்படங்கள் மிக மிக அருமையாக உள்ளன.
    தங்களின் பதிவில் இந்திய தேசிய கொடியை தனிமனிதர் பயன்படுத்துவதற்கு தடை என்பதை போல குறிப்பிட்ட இருந்ததை பார்த்து கூகுளில் தேடினேன். அதில் தேடும்பொழுது ஒரு முகநூல் முகவரியில் தனி மனிதன் தேசியக்கொடியை உரிய மரியாதையுடன் பயன்படுத்த தடையில்லை என்பதை போல பார்த்தேன். அந்த முகநூல் முகவரியை தங்களுக்கும் அனுப்பியுள்ளேன் அதன் உண்மைத் தன்மை என்ன என்பதை தாங்கள் சற்று ஆராய்ந்து கூறினீர்களானால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பது என்னுடைய வேண்டுகோள்.

    ReplyDelete
  3. கணியன் பூங்குன்றன் வரிகளைத் தலைப்பிட்டு அமெரிக்க விடுதலை நாளைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளீர்கள். எந்த நாடாக இருப்பினும் அதுவும் நம் உலகத்தில் ஒன்றே. அந்த நாடும் வளம் பெறவேண்டும். நாடகம் போல காட்சி ஒன்றில் அமெரிக்காவும், காட்சி இரண்டில் இந்தியாவையும் குறிப்பிட்டுள்ளீர்கள். நாட்டுக்கு நாடு பொதுவிழாக்களின் செயல்பாடுகள், ஒரு சில விதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதையே நாம் பின்பற்றுகிறோம். நமது நாட்டில் விடுதலைநாள் விழாவில் “தாயின் மணிக்கொடி” பாடலை இசைக்கும் போதே புது வேகல்ம் உள்ளத்தில் துளிர்விடுமே! அதேபோல் ஒவ்வொரு நிகழ்வும் சிறப்பாக இருக்கும். என்ன நீங்கள் வேட்டி சட்டை என நம் பாரம்பரியத்தைச் சுட்டியுள்ளீர்கள். ஆனால் ஒரு சில இடங்களில் எப்போதோ தைத்து ஒருமுறை பயன்படுத்திவிட்டு பத்திரமாக பாதுகாக்கப்பட்ட கோட் சூட் அணிந்து மேலைநாட்டுக் கலாச்சாரத்துடன் இங்கு கொடியேற்றப்படுகிறது. எல்லாம் நாம் பின்பற்றுவதுதானே. உடையில் தான் நாகரிகம் இருக்கிறது என நம்மவர்கள் இன்னும் எண்ணிக்கொண்டுள்ளனர். உரிய நாளில் உரிய மரியாதையுடன் தேசியக்கொடியைப் போற்றவேண்டும் என்பது எனது விருப்பம். நன்றி.

    ReplyDelete