அமெரிக்காவில் நாங்கள் வசிக்கும் டெல்லாஸ் நகரில் ஏராளமான அசைவ உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில் சைவ உணவு வகைகளும் கிடைக்கும். நாம் தக்காளிச் சோற்றை உண்ணும்போது பக்கத்தில் உள்ளவர் தந்தூரிக் கோழியை உண்பார். நிறைய சகிப்புத்தன்மை உள்ள சைவ உண்ணிகள் இங்கே சாப்பிடலாம். இத்தகைய உணவகங்களில் என்னால் உண்ண முடியும். ஆனால் என் துணைவியாருக்கு ஒத்து வராது. சுத்த சைவம்.
இங்கே நூறு
விழுக்காடு சைவ உணவு விடுதிகள் அரிதாகவே இருக்கும். என் மாப்பிள்ளை இணையத் தளத்தில் நுழைந்து
ஒரு சைவ உணவகத்தைத் தேடிக் கண்டுபிடித்தார். நாங்கள் குடியிருக்கும் காலிவில் பகுதியிலிருந்து
ஐம்பது கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பிளேனோ என்னும் பகுதியில் அந்த சைவ உணவு விடுதி
இயங்கி வருகிறது.
மாப்பிள்ளையின்
‘டெஸ்லா’ மின்சார மகிழுந்தில் புறப்பட்டோம். அது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட
வாகனம். அவர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து
முன்னால் உள்ள கணினித் திரையைத் தொட்டு, மகிழுந்து
தானே இயங்கும் வகையில் அமைத்தார்.
மகிழுந்து தானே சென்றதைப்
பார்த்தபோது வியப்பில் உறைந்தேன்!
சிக்னல்களில் தானே
நின்றது; சென்றது; பின்னால் வந்த அதிவேக வாகனங்களுக்கு ஒதுங்கி
வழிவிட்டது. சமர்த்தாகச் சென்று அந்த சைவ உணவகத்தின்
நிறுத்தகத்தில் நின்றது.
கைதேர்ந்த, கால் தேர்ந்த ஓட்டுநர்களால் கூட அப்படி ஓட்ட
முடியாது என்பது என் கருத்து.
அந்த உணவு விடுதியின்
வெளிப்புற, உட்புற அமைப்பு அசத்தலாக இருந்தது. மேசைகளும் இருக்கைகளும் மிக நேர்த்தியாகவும், தூய்மையாகவும் இருந்தன. நாங்கள் சென்று அமர்ந்ததும் விடுதி ஊழியர்
வந்து மலர்ந்த முகத்துடன் வரவேற்று வழங்கப்படும் உணவு குறித்து அழகான ஆங்கிலத்தில்
விளக்கிச் சொன்னார்.
ஆனால் எனக்கு முழுதும்
விளங்கவில்லை. ஒன்றுமட்டும் புரிந்தது. நாங்கள் சென்ற நண்பகல் நேரத்தில் சாப்பாடு
மட்டுமே கிடைக்கும் அதையும் அளவில்லாமல் உண்ணலாம் என்றார்.
சாப்பாடு வரும்வரையில்
உணவகத்தை ஒரு நோட்டம் விட்டேன்.
அது நம் நாட்டு குஜராத்தியர்
நடத்தும் உணவகம்.
கண்ணாடிச் சுவர்கள்
என்பதால் சாலையில் சென்ற வாகனங்கள் எல்லாம் துல்லியமாகத் தெரிந்தன. பெரிய திரைகளில் நம் நாட்டின் கோவில் சிற்பங்கள்
குறித்த காணொளி ஓடிக்கொண்டிருந்தது. ஒருபக்கம்
வண்ண வண்ண குஜராத்தி தலைப்பாகைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. விற்பனைக்கு என நினைத்தேன்; வாடிக்கையாளர்கள் தம் தலையில் அணிந்து படம்
எடுத்துக் கொள்வதற்காக என்றார் என் மாப்பிள்ளை.
உணவுத் தட்டு
மேசைக்கு வந்ததும் என் உள்ளம் முழுதும் உணவில் சென்றது. அந்தத் தட்டின் அமைப்பே அழகாய் இருந்தது. அரைவட்டத்தில் அணிவகுத்த பல்வேறு பதார்த்தங்களைப்
பார்த்ததும் நாவில் ஊறிய எச்சிலுக்கு அளவே இல்லை. தட்டில் இருந்தவற்றைத் தவிர பூரி, சப்பாத்தியும் அவ்வப்போது வந்து தட்டில்
விழுந்தன. இரண்டு நாள் பட்டினி கிடந்தவன் மட்டுமே
தட்டில் உள்ள அனைத்தையும் உண்ண முடியும்.
சாம்பார், ரசம், தயிர் இல்லை. பருப்பு உருண்டைக் குழம்பு இருந்தது. அதுவும் பாசுமதி அரிசிச் சோறும் நல்ல கூட்டணி; மிகவும் சுவையாய் இருந்தது. சுரைக்காய் கூட்டு, வெண்டைக்காய் பொரியல், கொண்டைக் கடலைக் கூட்டு, பாலக்பனீர் இன்னும் நமக்குப் பெயர் தெரியாத
அமெரிக்க நாட்டுக் காய்கறியில் செய்த பொரியல் கூட்டு வகைகள், குஜராத்திக் கிச்சடி, தயிர்வடை, டோக்ளா ஆகியவற்றைப்
போதும் என்று சொல்லும்வரைப் போட்டுக் கொண்டே இருந்தனர். நிதானமாக உண்டேன். நிறைவாக குலோப் ஜாமூன், பால் பாயாசம், பீடா. இது சுவையாய் இல்லை என்று தட்டை மட்டுந்தான்
மீதி வைக்க முடிந்தது.
அப்பப்பா வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி உண்ண வேண்டும் என்ற என் கனவு இன்று நிறைவேறியது. சரியான சாப்பாட்டு ராமன் என நினைக்கிறீர்கள்; அதுவும் சரிதான்.
ஒரு சாப்பாட்டின்
விலை இருபத்தேழு அமெரிக்கன் டாலர். அந்த
வரி, இந்த வரி என்று மூன்று டாலர் கூடுதல். இந்திய பணமதிப்பில் சொல்வதென்றால் ரூ.2250 மட்டுமே! அமெரிக்காவில் மாதம் ஐந்து லட்சம் சம்பாதிப்பவர்களுக்கு
இது சாதாரணம்!
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
ஆஹா !
ReplyDeleteமனதும் வயிறும் நிரம்பியது.
அருமையான அமெரிக்க உணவு குறித்த தகவல் மிகவும் சிறப்பு .ஊண் அடிசில் நிறைந்த இடத்தில் மரக்கறி உணவு கிடைப்பது என்பது அரிது . ஆகவே , 50 கிலோமீட்டர் பயணித்து அருமையான சைவ உணவை உண்டு மகிழ்ந்துள்ளீர்கள் என்னதான் இந்தியக் காய்கறிகளை உண்டு மகிழ்ந்தாலும் அந்நிய மண்ணில் விளைந்த காய்கறிகளை உண்பதிலும் மகிழ்ச்சி இருக்கவே செய்யும். உணவு உண்ணச் சென்றாலும் தாங்கள் பயணித்த செயற்கை நுண்ணறிவு உணர்வுக் கருவி பொருத்தப்பட்ட டெஸ்லா கார் சென்ற விதத்தையும் அழகாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மனித மனஎண்ணத்தை விட செயற்கை நுண்ணறிவு கவனமாகவும் சிறப்பாகவும் மேற்கத்திய நாடுகளில் செயல்படுவது தனி சிறப்பு தான். மகிழ்ச்சி.
ReplyDeleteமுனைவர் ரா.லட்சுமணசிங்
கரூர்
மாமிச உணவு இருக்கும் இடத்தில் மரக்கறி உண்பது கடினமான ஒன்றுதான்.எனக்கும் அந்த அனுபவம் கிடைத்திருக்கிறது ஐயா. தாங்கள் உண்ட உணவின் சுவையையும் மிஞ்சியது அதை சொன்ன விதம்.
ReplyDeleteமகிழ்வுந்து பயணம் உணவுகளின் வகைகள் அழகான உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அருமை ஐயா 👍
ReplyDeleteஎதை கொடுத்தாலும் மகிழ்ந்து சாப்பிடுவீர்கள் போல . நீங்கள் சொன்ன உணவகத்தின் ரேட்டிங் மிக குறைவு . குஜராத்தி உணவை மதராசிகள் விரும்ப மாட்டார்கள் . இங்கே அருமையான ஆந்திரா உணவங்கள் இருக்கின்றன
ReplyDeleteநான் பிளானோவில்தான் இருக்கிறேன்
தடுக்கி விழுந்தால் இந்தியா சைவ உணவகம்தான்
டல்லாஸில் நூற்றுக்கணக்கான இந்தியா உணவகங்கள் இருக்கின்றன . நடந்தே உணவகங்களை அடையலாம். காரே தேவை இல்லை