இரண்டு மகள்கள் இரண்டு நாடுகளில் வாழ்வதால் எனக்கும் என் மனைவிக்கும் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வானில் பறப்பது வாடிக்கை ஆகிவிட்டது. என்னை Frequent flier என்று சொல்லி என் மாப்பிள்ளை கிண்டல் செய்வதும் உண்டு. இதுவரை நான் வானில் பறந்த அனுபவங்களை என் வலைப்பூவில் அவ்வப்போது மிக விரிவாக எழுதியுள்ளேன். அவற்றையும் அவற்றிற்கு வாசகர்கள் தந்த பின்னூட்டங்களையும் தொகுத்தால் ஒரு தனி நூலாகவே வெளியிடலாம்.
சரி, சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.
2.11.2024 சனிக்கிழமை காலை பத்துமணிக்கு, கனடாவில் வாழும் இளைய மகளிடம் விடைபெற்று
அமெரிக்காவில் வாழும் பெரிய மகளைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டோம். ஒட்டாவா நகரிலிருந்து 350 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள மாண்ட்ரியல்
நகருக்குச் சென்று வானூர்தி ஏற வேண்டும் என்பது பயணத்திட்டம். மாப்பிள்ளை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் மகிழுந்தை ஓட்டினார். சாலையின் இரு மருங்கும் இருந்த மரங்கள் இலைகளை
முற்றிலும் உதிர்த்துவிட்டு வரப்போகும் பனிப்பொழிவை எதிர்கொள்ளத் தயாராக நின்றன. அவற்றைப் பார்த்ததும் எப்போதோ நான் எழுதிய
ஒரு ஐக்கூ கவிதை நினைவுக்கு வந்தது.
அம்மணமாய் நின்றாலும்
அழகுதான்
இலையுதிர்த்த மரங்கள்!
போகும் வழியில் இருந்த டிம்ஹாட்டன் என்னும் சாலையோர உணவு விடுதியில்
வண்டியை நிறுத்தி,
மகள் செய்து கொடுத்த
புளிச்சோற்றை உண்டோம்.
புளிச்சோறும் அங்கே
மாப்பிள்ளை சுடசுட வாங்கித் தந்த உருளைக்கிழங்கு வறுவலும் சுவையான கூட்டணியாய் அமைந்தது!
மதியம் ஒரு
மணியளவில் வண்டியை உரிய நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, மான்ட்ரியல் பன்னாட்டு வானூர்தி நிலையத்துள்
நுழைந்தோம். ஒரு கட்டத்திற்குமேல் வழியனுப்ப
வருவோர்க்கு அனுமதி இல்லை என்பதால், மாப்பிள்ளைக்கு
அப்போதைக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு நானும் என் மனைவியும் ஆளுக்கொரு பெட்டியை
இழுத்துக்கொண்டு நடந்தோம்.
பாதுகாப்புச் சோதனைக்காக
வரிசையில் நின்றோம்.
எங்கள் முறை வந்ததும்
அங்கிருந்த பெரிய தட்டுகளில் நாங்கள் கொண்டு சென்ற பெட்டி, கைப்பை, மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றை எடுத்து வைத்தோம். அங்கிருந்த ஊழியர் நான் இடுப்பில் அணிந்திருந்த
பெல்ட், காலில் அணிந்திருந்த ஷூ ஆகியவற்றையும்
கழற்றி வைக்கச் சொன்னார்;
அப்படியே செய்தேன். அனைத்தும் ஒரு வருடியின்(Scanner) உள்ளே புகுந்து வெளியில் வந்தன. அதற்குள் என்னை ஓர் ஆண் ஊழியரும், என் மனைவியை ஒரு பெண் ஊழியரும் தனித்தனியே
சோதனை செய்தனர்.
இந்தமுறை என் மடிக்கணினி
கூடுதல் சோதனைக்கு உட்பட்டது.
அதில் என்ன சோதனை செய்தார்களோ? என் மடிக்கணினியில் நூற்றுக் கணக்கில் கவிதைகளும்
கட்டுரைகளும், நான் எடுத்த படங்களுந்தான் இருக்கும்! இதைப் பார்த்த என் மனைவி சற்றே பதறினாள். நான் மிக இயல்பாக எதிர்கொண்டேன். ஒரு முறை நம் நாட்டு அப்துல்கலாம் அவர்களுக்கே
இந்தக் கெடுபிடி இருந்தது.
பிறகு நான் எம்மாத்திரம்
என எண்ணி அவர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரு விழுக்காடு கூட பொய் கலவாது விடை சொன்னேன். சோதனை முடிந்து ஒரே நிமிடத்தில் என் மடிக்கணினியை
என்னிடம் தந்தார்கள்.
அங்கிருந்து
அடுத்த கட்டமாக மேலும் ஒரு சோதனைக்குத் தயாரானோம். கடவுச்சீட்டு(Passport), ஆளறி அட்டை(ID Card), வானூர்தி நுழைவுச் சீட்டு(Boarding pass) என அனைத்தையும் தயாராக வைத்தேன். ஓர் இரும்புக் கூண்டுக்குள் ஒரு அமெரிக்க
அலுவலர்(Emigration
Officer) அமர்ந்திருந்தார். வணக்கம் சொல்லி இருவரது கடவுச்சீட்டுகளையும்
கொடுத்தேன். அடுத்த நொடியில் எங்கள் வரலாறு முழுதும்
அவரது கணினித்திரையில் தெரிந்தது.
சிறிய நெல்லிக்காய்
அளவுள்ள கேமிராவால் எங்கள் இருவரது முகங்களையும் படமெடுத்தார். கடவுச்சீட்டில் உள்ளவரும் இப்போது படம் எடுக்கப்பட்ட
ஆளும் ஒருவரே என அவரது கணினி சொல்லவே, வழக்கமாக
கேட்கப்படும் கேள்விகளான,
எதற்காக அமெரிக்கா
செல்கிறீர், எவ்வளவு நாள் தங்குவீர், எவ்வளவு அமெரிக்க பணத்தாள் எடுத்துச் செல்கிறீர்
என்று கேட்டார்.
என் மறுமொழியைக் கேட்டு
நிறைவடைந்ததும் வாழ்த்துகள் சொல்லி கடவுச்சீட்டுகளைத் திருப்பித் தந்தார்.
அப்பாடா என்று
ஒரு பெருமூச்சு விட்டேன்.
பிறகு வானூர்தி நுழைவுச்
சீட்டில் குறிப்பிட்டிருந்த
81ஆம் வாயிலுக்கு மெல்ல
நடந்து சென்றோம்.
அங்கே இருக்கையில்
அமர்ந்து என் கைப்பேசியை எடுத்து வானூர்தி நிலையம் தந்த கட்டணமில்லா இணையத் தொடர்பைப்
பெற்றேன். வெளியில் மகிழ்வுந்தில் காத்திருந்த
என் மாப்பிள்ளையைத் தொடர்பு கொண்டு உரிய வாயிலை அடைந்த செய்தியைக் கூறி விடை கொடுத்தேன்.
அடுத்த சில
நிமிடங்களில் அங்கிருந்த ஒலிபெருக்கியில் ஓர் அறிவிப்பு கேட்டது. கூர்ந்து கேட்டபோது, அந்த வாயிலில் காத்திருப்போர் உடனடியாக 79ஆம் எண்ணுள்ள வாயிலுக்குச் செல்ல வேண்டும்
என்பதை அறிந்து,
இருவரும் அந்தக் குறிப்பிட்ட
வாயிலைத் தேடி அடைந்தோம்.
எலி வளை மாதிரி வளைந்து
வளைந்து சென்றது வழி.
எனினும் ஆங்காங்கே
கைகாட்டிகள்(sign boards) இருந்ததால் சிக்கல் ஏதும் எழவில்லை.
ஒரு மணி நேரக்
காத்திருப்புக்குப் பிறகு,
வானூர்திக்குள் நுழைய
அனுமதித்தார்கள்.
வானூர்தியின் வாயிற்படியின்
அருகே நின்ற வானூர்தி ஊழியர் முகம் மலர வரவேற்றார். முன்னரே ஒதுக்கப்பட்டிருந்த எங்களுக்கான
இருக்கைகளைத் தேடி அமர்ந்தோம்.
அது ஓர் சிறிய
வானவூர்தி. 180
பேர்கள் மட்டும் அமரமுடியும்.அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது. பெரிய விமானமாக இருந்தால் முன்னால் உள்ள
இருக்கையின் பின்புறத்தில் இருக்கும் கணினித் திரையில் திரைப்படங்களைப் பார்க்கலாம். இங்கே ஒரு மாற்று ஏற்பாடு இருந்தது. நம் கைப்பேசியில் அல்லது மடிக்கணினியில்
கட்டணமில்லாமல் வழங்கப்படும்
(அல்லது பயணக்கட்டணத்தில்
வழங்கப்படும்) இணைய சேவையைப் பயன்படுத்தித் திரைப்படங்களைப்
பார்க்கலாம். ஆனால் நான் இந்தப் பயணத்தில் கைப்பேசிக்கு
முழு ஓய்வு கொடுத்துவிட்டேன்.
என் மடிக்கணினியும்
உறக்கநிலையில் இருந்தது.
சிறிது நேரத்தில்
ஊழியர் இருவர் அவசரக் காலத்தில் பயணிகள் எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்து விளக்கினர். ஆனால் பயணிகள் யாரும் அதைக் கவனித்ததாகத்
தெரியவில்லை. பின்னர் ஒலிபெருக்கி மூலம் வானூர்தியின் சாரதி நல்வரவு கூறினார்.
இருக்கைப் பட்டையை இழுத்துப் பொருத்திக் கொண்டேன்.அதற்குப் பிறகு வானூர்தியின் பொறி மிகுந்த ஓசையுடன் இயங்கியது. பிறகு மெல்ல நகர்ந்தது. அப்போது மாலை மணி நான்கு. 15 நிமிடம் தாமதமாக வானூர்தி புறப்பட்டது.. பத்து நிமிட நகர்வுக்குப்பின், அதற்கு உரிய ஓடு தளத்தில் சென்றது. ஐந்து நிமிடம் நகர்ந்து ஒரு கணம் நின்று, அடுத்த கணம் அசுர வேகத்தில் ஓடத் தொடங்கியது. நான் அறுபது எண்ணும்போது 45 டிகிரியில் வானூர்தி விண்ணில் பாய்ந்தது. அடுத்த முப்பது நொடிகளில் முப்பதாயிரம் அடி உயரத்தில் சம நிலையில் பறந்தது. பிறகு இருக்கைப் பட்டையை விடுவித்து இயல்பாக அமர்ந்தேன். சாளரம் வழியே எட்டிப் பார்த்தேன். வானூர்தி மேகங்களுக்கு மேலே பறந்ததால் கதிரவனின் வெண்ணிற ஒளியில் மேகங்கள் பளபளத்தன. இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தபோது கதிரவனின் பொன்னிற ஒளிபட்டு மேகங்கள் எல்லாம் தங்கக் கட்டிகளோ என வியக்கும்படி ஒளிர்ந்தன.
இதற்கிடையில்
எங்களுக்கு வழங்கப்பெற்ற நொறுக்குணவை உண்டு மகிழ்ந்தோம். பின் சிறிது கண்ணயர்ந்தோம். வானூர்தி நாங்கள் இறங்க வேண்டிய டெல்லாஸ்
நகரை நெருங்குகிறது என்னும் அறிவிப்பைக் கேட்டு விழித்துக்கொண்டோம். இருக்கைப் பட்டையை இழுத்துப் பொருத்தினோம்.
அடுத்த சில நொடிகளில் எங்கள் செவிகள் அடைத்தன. வானூர்தி விரைவாகக் கீழிறங்கும்போது இப்படி செவிகள் அடைத்துக் கொள்வது இயல்பே. சாளரத்தின் வழியே எட்டிப் பார்த்தபோது பெரிய கட்டடங்கள் எல்லாம் சிறிய தீப்பெட்டிகளைப் போலத் தெரிந்தன.
அடுத்த சில நொடிகளில் வானூர்தி பாதுகாப்பாகத்
தரையிரங்கி, ஓடு தளத்தில் ஓடத் தொடங்கியது. ஐந்து நிமிடம் ஓடிக்கொண்டே இருந்தது. பிறகு உரிய இடத்தில் நின்றது. குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்தது! இருக்கைப் பட்டையை விடுவித்தோம். வானூர்தியின் சாரதி ஒலிபெருக்கி
வழியே பயணிகளுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்த ஐந்து நிமிடங்களில் வாயிற்கதவுகள் திறந்தன. உடைமைகளை எடுத்துக்கொண்டு நேரே வெளி வாயிலை
நோக்கி நடந்தோம்.
எங்கள் பெண்ணும் மாப்பிள்ளையும்
அகம், முகம் மலர வரவேற்றுத் தம் மகிழுந்தில்
இல்லம் நோக்கி அழைத்துச் சென்றனர். கைக் கடியாரத்தைப் பார்த்தேன். மணி மாலை 7.30 மணி. அது அமெரிக்க நேரம்.
இன்னும் ஆறு
மாதங்கள் அவர்களின் அன்புப் பிடியில் இருப்போம்.
முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.
மிக அருமை.... அதிலும் அந்த ஹைக்கூ........ ரொம்ப அருமை
ReplyDeleteமிகச் சிறப்பு!
ReplyDeleteசூப்பர் 👍👍👍
ReplyDeleteஅருமை ஐயா.
ReplyDeleteதங்களது அமெரிக்கா பற்றிய பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
மிக்க நன்று ஐயா
ReplyDelete