Wednesday, 19 November 2014

மனித குலத்தின் பொது எதிரி


   மனித குலத்தின் ஒரே பொது எதிரி நெகிழிதான். அதை பிளாஸ்டிக் என்று சென்னால்தான் புரியும்.
   
         ஒருநாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பற்றி விரிவாகப் பேசிவிட்டு, அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சொன்னேன். அது எப்படி முடியும் என்று எதிர் கேள்வி கேட்டான் ஒரு மாணவன். பிளாஸ்டிக் குழாய் இல்லாவிட்டால் குளியலறையில் தண்ணீர் வராது என்றான். அவன் சொல்வது உண்மைதான்.

   இன்று இயந்திரங்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் தவிர்க்க இயலாதவை. மருத்துவம் சார்ந்த கருவிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க முடியாதது. ஆனால் எடுத்ததற்கெல்லாம் பிளாஸ்டிக் வேண்டுமா?

சென்ற வாரம் ஒரு திருமண விருந்திற்குப் போயிருந்தேன். வாழை இலை போட்டு உணவைப் பரிமாறினார்கள். கூர்ந்து பார்த்தபோது தெரிந்தது. அது ஒரு பிளாஸ்டிக் வாழை இலை! அசப்பில் வாழை இலையைப் போலவே இருந்தது. சாம்பார் சாதத்தோடு எழுந்து வந்துவிட்டேன். அங்கு பந்தலில் தொங்கிய மாவிலைத் தோரணங்களைப் பார்த்தேன். மாவிலைகள் அனைத்தும் பிளாஸ்டிக்! அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருந்த தொட்டிகள், தொட்டியில் இருந்த செடிகள் அனைத்தும் பிளாஸ்டிக்!  வரவேற்பு மேசைமீதிருந்த தாம்பாளத்தில் இருந்த பழங்கள் எல்லாம் பிளாஸ்டிக்! அவர்கள் கொடுத்தது பாலித்தின் தாம்பூலப்பை! அந்தப் பையைத் திறந்து பார்த்தால் அதில் இருந்தது ஒரு பிளாஸ்டிக் டிஃபின் பாக்ஸ். நல்ல வேளை அதில் இருந்த பாக்கும் வெற்றிலையும் பிளாஸ்டிக்கால் ஆனவை அல்ல!
இது என்ன கொடுமை!

  செருப்பு பயன் உடையதுதான். அதற்காக பூஜை அறையிலும் காலில் போட்டுக்கொள்ள வேண்டுமா என்ன? சற்றே சிந்திக்க வேண்டாமா?

தன்னையே அழிக்கும் வல்லமையுடையன என்பதை அறியாமல் பல பொருள்களை மனிதன் கண்டுபிடித்துவிட்டான். அவற்றுள் ஒன்று இந்த பிளாஸ்டிக்.  PVC என்றும் polythene என்றும் செல்லப் பெயரிட்டு அழைத்தான். (PVC-Poly Vinyl Chloride) அது அவனைக் கொல்ல வந்த யமன் என்பதை எப்போது உணரப் போகிறானோ?

பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்யும் போதும், பழைய பிளாஸ்டிக் பொருள்களை எரிக்கும் போதும் டயாக்சின் (dioxin) என்னும் உயிர்க்கொல்லி வாயு வெளியாகிறது. இந்த நச்சு வாயுவை சுவாசிக்கும் மனிதனுக்கு வரும் நோய்கள் எண்ணற்றவை. அவற்றுள் சில : புற்றுநோய், சர்க்கரை நோய், தோல் நோய், கல்லீரல் அழுகல் நோய் மற்றும் மலட்டுத் தன்மை உருவாதல்.

1997 ஆம் ஆண்டு நம் நாட்டில் சராசரியாக ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு ஆண்டிற்கு 1.7 கிலோ என்று இருந்தது. ஆனால் தற்போது ஒரு மனிதனின் பிளாஸ்டிக் நுகர்வு 10.5 கிலோ என உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் 1,70.000 டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விளைவாக வளி மண்டலத்தில் டயாக்சின் வாயுவின் அளவு அதிகமாகிக் கொண்டே உள்ளது.

ஒரு மனிதன் இந்த டயாக்சின் வாயுவை  குண்டூசி தலையின் எடைக்குமேல் முகர்ந்தால் இறக்க நேரிடும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைப்பற்றி   யார்  கவலைப்படுகிறார்கள்?  வரும் முன் காக்கும் மனப்பாங்கு நம்மிடத்தில் மிகவும் குறைவு.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
என்று வள்ளுவர் கூறுவது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் உள்ளது.

மண்ணில் மக்குவதற்கு பிளாஸ்டிக் பொருள்கள் எடுத்துக் கொள்ளும் காலம் 500 முதல் 1000 ஆண்டுகள் எனக் கணக்கிட்டுள்ளனர். இதை எளிதில் மக்கச் செய்யும் மகத்துவத்தை யாரேனும் கண்டு பிடித்தால் அவருக்கு இரண்டு நோபல் பரிசுகளை ஒரே சமயத்தில் கொடுக்கலாம்.
அதுவரை நாம் என்ன செய்யலாம்?

01.          பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தைத் தவிர்ப்போம் அல்லது குறைப்போம்
.
02.          பிளாஸ்டிக் பொருள்களை உபயோகித்தபின் கண்ட இடங்களில் போடாமல், சேர்த்து வைத்து மறு சுழற்சிக்கு அனுப்புவோம்.

03.          பாலித்தின் பைகளில் பொருள்கள் வாங்குவதைத் தவிர்ப்போம். பழைய காலம் மாதிரியே மீண்டும் காகிதப் பைகளில், துணிப்பைகளில் பொருள்களை வாங்குவோம். (மஞ்சள் துணிப்பை கலாச்சாரம் நம் கொங்கு மண்ணுக்கே உரியதுதானே?)

04.          பிளாஸ்டிக் பொருள்களின் தீமைகளை உணர்வோம், உணர்த்துவோம்.


     ஒரு வீட்டிற்கு விருந்தினராகச் செல்லும் போது அந்த வீட்டை அலங்கோலப் படுத்தலாமா?  சிறிது காலம் இந்த மண்ணில் விருந்தினராகத் தங்கியுள்ள நாம் இம் மண்ணை மாசுபடுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை. சிந்திப்போமா?

3 comments:

 1. அருமை யான கட்டுரை ஐயா.
  மஞ்சள்பை கூடை பாத்திரம் வாழையிலை பயன்படுத்தி சூழல் காப்போம்.

  ReplyDelete
  Replies
  1. உன்னுடைய பின்னூட்டம் எனது வலைப்பூச் செடிக்கு உரம்
   வாழ்க வளர்க

   Delete