Sunday, 22 March 2015

சுவர்கள் இல்லாத வகுப்பறைகள்


      களப்பார்வை என்ற வகையில் என் பள்ளி மாணாக்கச் செல்வங்களை அடிக்கடி வெளியில் செல்ல ஏற்பாடு செய்வதுண்டு. 220 நாட்களுக்கு மேலாக வகுப்பறைச் சுவர்களுக்குள் முடக்கிப் போடப்பட்ட குழந்தைகளை ஓரிரு நாட்களுக்கு வெளி உலகத்தைக் காண அழைத்துச் செல்லும்போது அவர்களுடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே! அப்பப்பா என்ன மகிழ்ச்சி! ஆனால் பெற்றோர்களில் சிலர் தம் குழந்தைகளை இப்படி வெளியில் அனுப்ப அனுமதிப்பதில்லை.
ஒரு நாளில் வகுப்பறைக்கு வெளியே குழந்தைகள் பெறக்கூடிய அனுபவம் ஓராண்டு வகுப்பறைக் கல்வியை விட கூடுதல் நன்மை தரக்கூடியது என்பதை அவர்கள் அறியார்.

 . ஆனால் ஒன்று. களப்பயணங்களுக்கான ஆசிரியர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.   ஆசிரியர்களில் இரு வகையினர். DEMOCRATIC TEACHERS, AUTHORITATIVE TEACHERS என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதுண்டு. முதல் வகை ஆசிரியர்களை அழைத்துச் செல்ல வேண்டும். முதலில் குழந்தைகளை வளவளவென்று பேச அனுமதிக்க வேண்டும்.

     மூன்றிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரைப் படிக்கும் 150 குழந்தைகளை கரூர் மாவட்டம் கடவூருக்கு அருகில் உள்ள சேவாப்பூருக்கு அழைத்துச் சென்றோம். தொண்டுள்ளம் கொண்ட .பெல்ஜியம் நாட்டுப்பெண்மணி லியா பிரவோ அவர்களால் உருவாக்கப்பட்ட மரபினத் தோட்டம்(genetic garden) ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. அன்னை மரபியல் தோட்டம் என்று பெயர். 251 மூலிகை மரங்களும் செடிகளும் கொடிகளும் வளர்க்கப்படுகின்றன. மூலிகையின் பெயர் முதலியன எழுதிவைக்கப் பட்டுள்ளன. அவற்றப்பற்றி  விளக்கிச்சொல்ல பயிற்சி பெற்ற களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். குழந்தைகள் ஓடிச்சென்று செடிகளைத் தொட்டார்கள். ஒரு செடி தொட்டமாத்திரத்தில் தன் சிறிய இலைகளைச் சுருக்கிக் கொண்டது. ஹாய் தொடாற்சிணுங்கி செடி என்று கூவினார்கள். இந்த அனுபவம் வகுப்பறைச் சுவர்களுக்குள் கிடைக்குமா? இத்தகைய களப்பயணங்களுக்கு அனுமதி தராத பெற்றோர்களால் இந்த அனுபவத்தைத் தரமுடியுமா? மரங்களைத் தொட்டார்கள். கேள்விகள் கேட்டார்கள். விடைகளைப் பெற்றார்கள்.

   வகுப்பறையில் ஒரு குழந்தை ஆசிரியரிடம் கேள்வி கேட்க முடியுமா? அடக்குமுறை ஆசிரியர்கள் கேள்வி கேட்க அனுமதிப்பார்களா? என் அருமை நண்பர் பணிநிறைவு பெற்ற தலைமையாசிரியர் திரு மோகனசுந்தரம்  “எட்டுப் பாடவேளைகள், பொருந்தாத பாடத்திட்டம், தேர்வுகள் என்பன குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறைகள்” என்பார். உண்மைதானே?

   “என் கற்றலுக்கு இடயூறான பள்ளிக்கல்வியை நான் அனுமதித்ததில்லை” என்று மார்க் ட்வெய்ன் கூறுகிறார். “என் சிற்றப்பாவிடம் எழுதப் படிக்கக் கற்றேனே தவிர பள்ளிக்கூடம் பக்கம் மழைக்குக் கூட ஒதுங்கியதில்லை” என்று கூறுகிறார் புகழ் பெற்ற நாவலாசிரியை வை மு கோதைநாயகி.

கணிதம் பன்னிரண்டாண்டு பயில்வர், பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்,
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்,

வணிகமும் பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுள் போகுநர்

செலவு தந்தைக்கோர் ஆயிரஞ் சென்றது;
தீது எனக்குப் பல்லாயிரம் சேர்ந்தன
நலமோர் எள்துணையும் கண்டிலேன் இதை
நாற்பதாயிரம் கோயிலில் சொல்லுவேன்!

என்று தன் காலத்துப் பள்ளிப்படிப்பை விமர்சனம் செய்வார் பாரதியார். அது இன்றும் பொருந்துகிறதே!

   சரி சரி வாருங்கள் மீண்டும் சேவாப்பூருக்குச் செல்வோம். மூலிகைத் தோட்டத்தையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு வந்த குழந்தைகளை  இன்ப சேவா சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் நண்பர் தங்க பாண்டியன் வளைத்துக் கொண்டார். நிறைய கேள்விகள் கேட்டார். கேள்வி கேட்பது ஒரு கலை; ஒரு நுட்பம். எங்கள் குழந்தைகளா இப்படி விடை சொல்கிறார்கள் என அசந்துவிட்டோம். வானொலிப் பெட்டியை ட்யூன் செய்வதுபோல தொடர்புடைய சிலவற்றைச் சொல்லி குழந்தைகளின் மனங்களை ட்யூன் செய்தார். பிறகு “இன்றைய நாள் என்ன முக்கியத்துவம் வாய்ந்தது?” என்று கேட்டார். ஒரு சிறுவன் “இன்று உலக வன நாள்” என விடை சொல்லி அவரது பாராட்டைப் பெற்றான்.

    நான்கு ஐந்து சீப்புகளைக் காட்டி ஒரு விளையாட்டு விளையாடினார். இரண்டு வீடியோ காட்சிகளைக் காட்டி, அவை குறித்துக் குழந்தைகளைப் பேசவைத்தார். நீரின் சிக்கனம்,  இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தல், பெற்றோர்களின் அறிவுரையைக் கேட்டல் என்று கொண்டு வந்த சரக்குகளை எல்லாம் முழுமையாக விற்றுவிட்டார்.

    “கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று சலித்துக்கொள்ளும் ஆசிரியர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர் தங்கபாண்டியன். ஆசிரியர்களான நாங்களும் அவரிடம் கற்றுக்கொண்டோம்.

   அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இயற்கை வேளாண்மையின் தந்தை கோ நம்மாழ்வாரின் வானகம் என்னும் பயிற்சிப் பட்டறைக்குச் சென்றோம். அது குறித்து அடுத்த வலைப் பதிவில் பேசுவேன்.


    


1 comment:

  1. எனக்கும் நல்ல அனுபவம்

    ReplyDelete