Wednesday, 18 March 2015

கொடைக்கானலும் நானும்


      பள்ளிக்குழந்தைகளோடு சுற்றுலா செல்வது தனி மகிழ்ச்சிதான். ஆட்டம் பாட்டத்திற்கு அளவே இருக்காது. இந்த முறை என்னால் தப்பிக்க முடியவில்லை. வற்புறுத்தி என்னையும் ஆடவைத்து விட்டார்கள்!

   கொடைக்கானலுக்குச் சென்றது என்னைப் பொறுத்தவரை முப்பதாவது முறையாக இருக்கும். ஈரோட்டுப் பேராசிரியர் கந்தசாமியுடன் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கரையில் முகாமிட்டு, ஏறாத மலையில்லை சுற்றாத காடுகள் இல்லை என்ற அளவுக்குத் திரிந்திருப்பேன். 

    அண்ணா பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் டாக்டர் வி பி இராமமூர்த்தி அவர்களின் விருந்தினராக நானும் என் மனைவியும் கொடைக்கானலில் தங்கி மகிழ்ந்து குலாவிய நாட்கள் இப்போதும் மனத்தில் திரைப்படம்போல் விரிகிறது.

   கொடைக்கானல் எஃப்.எம் வானொலி நிலையத்திற்கு முற்பிறவியில் கடன்பட்டிருப்பேனோ என்னவோ, வருடத்திற்கு நான்கு முறையாவது அழைப்பார்கள். முதல்நாளே சென்று அறை எடுத்துத் தங்கிவிடுவேன். காலை ஆறுமணிக்கு எழுந்து அந்த அழகான ஏரிக்கரையைச் சுற்றி நடப்பேன். அப்போது கொடைக்கானல் நகரமே தூங்கிக் கொண்டிருக்கும்.

    கொடைக்கானலில் செண்பகனூரில் உள்ள ANGLADE INSTITUTE OF NATURAL HISTORY  என்னும் நிறுவனத்தில் பலமுறை சென்று தங்கி பயிற்சி பெற்றதை அசை போட்டேன்.

    எண்பதுகளில் நான் கோபி வைரவிழாப் பள்ளியில் பணியாற்றிய காலம். நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை அழைத்துச்சென்று அங்கே முகாமிட்டு, கொடைக்கானல் மலைப்பகுதியில் பைன் மரக் கன்றுகளை, கொட்டும் மழையில் நட்டதெல்லாம் நினைவுத்திரையில் தோன்றியது. ஒவ்வொரு நாள் முன்னிரவிலும் மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள். சி எஸ்  என் ராஜா என்ற மாணவன் மேடைக்கு வந்து,

  சோதனைமேல் சோதனை
  போதுமடா சாமி
  பிசிக்ஸ் ஒரு கால் விலங்கு
  கெமிஸ்ட்ரி ஒரு கைவிலங்கு

என்று பாடச்சுமை குறித்துப் பாடிய  பாடல் இன்றும் என் மனத்தில் பசுமையாக உள்ளது. அவன் ஒரு கேமரா வைத்துக்கொண்டு திரிவான். அவன் முதன் முதலாக எடுத்த சில படங்களை என்னிடம் காட்டி, நல்லா இருக்குதுங்களா சார் என்று கேட்டான். அவை எல்லாம் OUT OF FOCUS  ஆகி நன்றாக இல்லை. சூப்பர் இப்படியான படத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை என்று கூறி பாராட்டினேன். இதைக்கேட்டதும் உற்சாகம் ஊற்றெடுத்து காமிராவும் கையுமாகத் தொடர்ந்து திரிந்தான். சில ஆண்டுகளில் படம் எடுப்பதில் நிபுணனாக மாறினான். ராஜ் கலர் லேப் என்ற பெயரில் ஈரோட்டில் லேப் அமைத்துக் கொடிகட்டிப் பறந்தான். பின்னர் வங்கி அதிகாரியாகப் பணியில் சேர்ந்துவிட்டான். இப்போது சென்னையில் ஷிவ் கெராவுக்கு நிகராக மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராக வலம் வருகிறார்.

    அதே சமயத்தில் மேடையில் தோன்றி ஒரு பாடலைப் பாடினான் பவானி சுகனேஸ்வரன் என்ற மாணவன். அவனும் எப்படி சார் என் பாட்டு என்று கேட்டான். உண்மையில் அது சுமாராகத்தான் இருந்தது.. எனினும், “சூப்பர் நீ ஒரு டி எம் எஸ் தான்” என்றேன். இப்போது சென்னையில் இளையராஜாவோடு சேர்ந்து மேடையில் பாடுகிறார்.

    மணிகண்டன் என்று ஒரு மாணவன் கவிதை ஒன்றை எழுதி மேடையில் படித்துவிட்டு, இறங்கி நேரே என்னிடம் வந்து எப்படி சார் கவிதை என்றான். அது கவிதைப் போல இருந்தது. வெகுவாகப் பாராட்டி, வரிகளைக் கொஞ்சம் சரி செய்து அனுப்பினேன். அன்று பற்றிய எழுத்தார்வத் தீ தொடர்ந்து அவனுள் கொழுந்து விட்டு எரிந்தது. இன்று பெங்களூரில் புகழ் பெற்ற எழுத்தாளராக விளங்குகிறார். நான்கைந்து நூல்களுக்குச் சொந்தக்காரர். ஒரு நூல் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பாடத் திட்டத்தில் உள்ளது. குருவை மிஞ்சிய சிஷ்யன் என்பதில் எனக்குப் பெருமைதான். அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட மசால் தோசை முப்பத்தெட்டு ரூபாய் என்னும் நூலை எனக்குச் சமர்ப்பணம் செய்து நன்றியுணர்வை வெளிப்படுத்தியபோது மிகவும் நெகிழ்ந்து போனேன்.

   ஒரு ஆசிரியர் பாராட்டினால்,  தோளில் தட்டிக்கொடுத்தால் மாணவர்கள் இமயம் அளவுக்கு உயர்வார்கள்., தலையில் குட்டிக் கெடுத்தால் அதள பாதாளத்தில் விழுந்துவிடுவார்கள்.

     “சார்  கொடைக்கானலுக்கு வந்து விட்டோம்., இறங்கலாம்”  என்று ஒரு மாணவி சொன்னபோதுதான் நிகழ்காலத்திற்குத் திரும்பினேன்.

      கொண்டு வந்திருந்த காலை உணவை சியோன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் உண்டுமுடித்தோம். முதலில் பாறைத்தூண் (PILLAR ROCK) பகுதிக்குச் செல்வதெனப் புறப்பட்டோம். மலப்பாதையில் பேருந்து வளைந்து நெளிந்து தட்டுத் தடுமாறி சென்றது. மலைச்சரிவில் பைன் மரக்கூட்டத்தைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தச்சொன்னேன். மாணவ மாணவியரை அக்காட்டினுள் கொஞ்ச தூரம் நடக்கச்செய்தேன். அவர்களிடத்தில் கொடைக்கானல் சிறப்புகள் குறித்துப் பேசினேன். கொடைக்கானல் என்றால் காடுகளின் கொடை என்று ஒரு பொருள் இருப்பதைக் கூறினேன். நலமான காடுகள்தாம் வளமான சமவெளிக்குக் காரணம் (HEALTH OF THE HILLS IS THE WEALTH OF THE PLAINS) என்பதை விளக்கினேன். A CLASS BEYOND THE CLASS ROOM  என்பதால் ஆர்வமாகக் கேட்டார்கள்.

    அந்த இடத்தைவிட்டு அகல மனமில்லை. அந்த இடம் நாங்கள் 1980 ஆம் வருடத்தில் மரக்கன்றுகள் நட்ட இடம். அன்று நாங்கள் நட்ட பைன் மரக்கன்றுகள் இன்று வானைத் தொட்டுக்கொண்டு நிற்கின்றன. அந்தக்காலத் தலைமுறை மாணவர்கள் நட்ட மரங்களுக்கிடையில் எனது இந்தக் காலத் தலைமுறை மாணவர்கள் ஓடியாடி மகிழ்ந்ததை ஒரு ராஜா படம் எடுத்தான். அந்தப்படம் உண்மையாகவே சூப்பர்.


3 comments:

 1. மலரும் நினைவுகள் சிறப்பு.
  வளமான சமவெளிகள் காடுகளின் கொடை.... அருமை.
  ஆசிரியரை மாணவர்கள் சிலாகிப்பதும் நினைவுகூர்வதும் இயல்பு.
  மாணவர்களை ஆசிரியர் நினைவில் வைப்பது எங்கள் பெறும் பேறு ஐயா.

  ReplyDelete
 2. You are an ideal teacher. Role model for many. You touched the hearts of Many Boys and Girls by your words of Encouragement.
  You motivated many students to come out with their best. I happened to meet Manikandan and Sigavaneswaran.
  All the best.

  ReplyDelete
 3. You're a good shepherd of today's young pupils!!

  ReplyDelete