Tuesday, 7 April 2015

இமாலய சாதனை


 திருக்குறள் பெ.ராமையா என்னும் தமிழறிஞரை உங்களுக்குத் தெரியுமா? அவருக்கு இரு கண்களும் தெரியாது. ஆனால் உலக மகா நினைவாற்றல் உடையவர். ஒரே சமயத்தில் பத்துச் செய்திகளை, செயல்பாடுகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் உடையவர். அவருடைய நிகழ்ச்சி இரண்டு மணி நேரம் நடக்கும்.

     ஒரு மாணவன் டண் டண் என்று அவன் நினைத்த நேரத்தில் மணி அடித்துக்கொண்டிருப்பான். எத்தனை முறைகள் அடித்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்வார். அதே நேரத்தில் இன்னொரு மாணவன் ஒரு ரோஜா பூவால் அவர் முதுகில் அவ்வப்போது வைத்து வைத்து எடுப்பான். கணித ஆசிரியர் நான்கு இலக்க எண்கள் இரண்டைச் சொல்லி பெருக்கச் சொல்வார். தமிழாசிரியர் சும்மா இருப்பாரா? அவர் ஒரு வெண்பாவின் ஈற்றடியைச் சொல்லி மீதி மூன்று வரிகளை இயற்றச் சொல்வார். ராமையா அவ்வப்போது வெண்பாவுக்குரிய சீர்களைச் சொல்வார். இதற்கு நடுவே குறள் எண்ணைச் சொன்னால் குறளைச்  சொல்வார்., குறளைச் சொன்னால் அதன் எண்ணைச் சொல்வார். உதடுகள் ஒட்டாத குறள்களைக் கேட்டால்  சொல்வார்., கொம்பும் காலும் இல்லாத குறளைச் சொல்வார். 1330 குறள்பாக்களும் விரல் நுனியில் இருக்கும். இல்லை இல்லை நா நுனியில் இருக்கும்.

    நிகழ்ச்சி முடிவில் எத்தனை முறைகள் மணி ஒலித்தது என்பதைச் சரியாகச் சொல்வார். கொடுத்த பெருக்கல் கணக்கின் விடையைத் துல்லியமாகச் சொல்வார். எத்தனை தடவைகள் மலரால் தொடப்பட்டது என்பதைச் சொல்வார். வெண்பாவையும் நிறைவு செய்து சொல்வார். இப்படி பத்துச் செயல்பாடுகளை ஒரே சமயத்தில் கவனித்து நினைவில் வைத்துக் கொள்வார்
.
  தசாவதானியாக இருந்த ராமையா கடைசி காலத்தில் பதினாறு கவனகராக மாறியிருந்தார். அவருடைய குறள் ஆற்றல் கண்டு வியந்து குறள்பாக்களில் ஆர்வம் காட்டினேன். 300 குறள்பாக்களை மனப்பாடம் செய்ய முடிந்தது. அவ்வளவுதான். ஆனால் ஒன்பதாம் வகுப்பில் படிக்கும் என் மாணவி சு.ர.திவ்யங்கா 1330 குறள்பாக்களையும் தொண்ணூறு நிமிடங்களில் சொல்லி முடித்தாள்.

     இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் அவள் முப்பது குறள்களைச் சொன்னபோது, “ நீ 1330 குறள்பாக்களையும் சொன்னால் குறளுக்குப் பத்து ரூபாய் வீதம் பரிசு தருவேன்” என்று சொல்லியிருந்தேன். அடுத்த ஆண்டே முந்நூறு குறள்பாக்களைச் சொன்னாள். சில மாதங்களுக்கு முன் 1330 குறள்பாக்களயும் மனப்பாடம் செய்துவிட்டதாகச் சொன்னாள். நான் விட்டேனா? ராமையா போல திருக்குறளில் எங்கு எதைக்கேட்டாலும் சொல்ல முயற்சி செய் என்று சொல்லியனுப்பினேன்.

  அடுத்த சில மாதங்களில் கரூர் திருக்குறள் பேரவை தந்த மேடையில் அதைச் சாதித்துக் காட்டினாள்.

   நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் வகையில் இன்று ஒரு விழாவுக்கு ஏற்பாடு செய்து அவளுடைய பெற்றோர் முன்னிலையில் ரூபாய் 13300 வழங்கினேன்.

    திருக்குறள் அறிஞர்கள்  திரு மேலை பழனியப்பன், புலவர் எழில்வாணன், திருக்குறள் சி.கைலாசம் ஆகியோர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பாகப் பேசினார்கள். முந்திரிப் பருப்பு நிறையப்போட்ட பாயாசம் போல குறள் கருத்துகள் நிறைந்த பேச்சாக அமைந்து விழாவுக்குச் சுவை கூட்டியது.   பாராட்டைப் பெற்ற திவ்யங்கா மேடையில் இருந்த அனைவரையும் பணிந்து வணங்கி எழுந்தபோது மனம் மகிழ்ந்தேன்., நெகிழ்ந்தேன்.

   குறள்பாக்களை வெறுமனே மனப்பாடம் செய்யவில்லை அவள். எல்லார்க்கும் நன்றாம் பணிதல் என்னும் குறள்கருத்தின்படி நடக்கவும் துணிந்துவிட்டாளே!

   தன்னுடைய ஏற்புரையில் எதிர்காலத்தில் திருக்குறளில் ஆராய்ச்சிச் செய்யப்போவதாகவும் குறிப்பிட்டாள். எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

   திவ்யங்காவைப் பாராட்டி ஒரு பாட்டு எழுதினேன். அதற்கு ரீஷ்மா, சேன்ட்ரா என்னும் மாணவியர் இசையமைத்து விழா மேடையில் மிகச் சிறப்பாகப் பாடினார்கள். நீங்களும் இப்போது கேளுங்கள்.

முப்பால் அமைந்த குறட்பாக்கள்
முழுவதும் தெரியும் அவளுக்கு- அதில்
இப்பால் அப்பால் கேட்டாலும்
தப்பில் லாமல் சொல்லிடுவாள்! 

நல்லவள் எங்கள் திவ்யங்கா
வல்லவள் ஆனாள் திருக்குறளில்- அவள்
செல்லும் திசையில் எல்லாமும்
வெல்லும் நிலையே உருவாகும்.  

பேரும் புகழும்  குறளாலே
பெருமை பள்ளிக்கு அவளாலே- இந்த
அருமைப் பெண்ணாம் திவ்யங்கா
இருப்பாள் எங்கள் இதயத்தில்  


வானமும் கூட கைக்கெட்டும்
வான்புகழ் வந்து வசமாகும்- குறள்
ஞானம் மிகுந்த பெண்ணென்று
ஞாலம் வணங்கும்., நிசமாகும்.


6 comments:

 1. திவ்யங்கா பாராட்டுதலுக்கு உரியவர்
  பாராட்டுவோம்

  ReplyDelete
 2. அருமையான முயற்சி. சரியான மாணவர்களை அடையாளங்கண்டு அவர்களை ஊக்குவித்தால் , சாதனைகள் சாத்தியமே . நல்லாசிரியர் விருது பெற்ற கோவிந்தராஜு அவர்கள் அந்த விருதுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்படுகிறார்.
  மாணவி திவ்யங்காவுக்கும், கோவிந்தராஜு அவர்களுக்கும் எங்களது பாராட்டுதல்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி

   Delete
 3. குறள் கூறும் திவ்யங்கா பாராட்டுக்குரியவர்.
  குறை கூறும் மாந்தரிடையே மாணாக்கர்
  நிறை கண்டு போற்றும் ஆசிரியராம்
  நீவிர் அதனினும் பாராட்டுக்குரியவர் ஐயா.

  ReplyDelete