Friday, 1 May 2015

முட்டாள் பெட்டியும் முட்டாள்களும்


       எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பார் நம் இலக்கணத் தாத்தாவாகிய தொல்காப்பியர். அதாவது சிந்தித்துப் பார்த்தால் தமிழ்ச்சொல் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் தொடர்பு இருக்கும். மடைப்பள்ளி என்றால் சமையலறை என்று பொருள். மடையன் என்றால் சமையற்காரன் என்று பொருள்.
அவனுக்கு உதவியாக பாத்திரம் விளக்கும் காய்கறி நறுக்கும் வேலைகளைச் செய்தவள் பெண்டாட்டி எனப்பட்டாள். பெண்டாட்டி என்னும் சொல்லுக்கு வேலைக்காரி என்பது பொருள். காலப்போக்கில் மனைவியைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது! இவையெல்லாம் கல்வெட்டுகள் கூறும் செய்திகள்.

   இப்படியெல்லாம் ஆங்கில மொழியில் ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா என்று எனக்குத் தெரிந்த ஆங்கிலப் பேராசிரியரிடம் கேட்டேன். சற்றே தடுமாறினார். தொலைக்காட்சிப் பெட்டியை ஆங்கிலத்தில் idiot box  என்று குறிப்பிடுவது ஏன் எனக் கேட்டேன். அவருக்கு அது குறித்து அவ்வளவாகத் தெரியவில்லை.

     இன்று உழைப்பாளர் தினம் அரசு விடுமுறை. எனவே காலை ஆறு மணிமுதல் ஏழரை  மணிவரை நடந்தேன். ஓர் இடத்தில் இரண்டு குடிசைகள் புதிதாக முளைத்திருந்தன. அவ்வீட்டு வாண்டுகள் குடிசைக்கு வெளியே சின்ன கற்களைக் கொண்டு அடுப்புக்கூட்டி அதன்மேல் ஒரு கொட்டங்குச்சியை அதாவது தேங்காய்த் தொட்டியை வைத்து சோறு ஆக்கி விளையாடிக்கொண்டிருந்தார்கள். மாலை நடைப்பயிற்சியின்போது அக் குழந்தைகள் மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

    அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நான் இப்படி விளையாடி மகிழ்ந்த காலம் நினைவில் வந்தது. தெரு மணலில் விளையாடியபடியே கிடப்பேனாம். அஞ்சாங்காய், சில்லு, கோலிக்குண்டு, பம்பரம், பல்லாங்குழி போன்ற அத்தனையும் குழு விளையாட்டுகள். இதனால் நட்பு வட்டம் பெருகியது. எந்தக் குழந்தை வந்து அழைத்தாலும் அவர்களோடு விளையாடுவேநாம். விளையாட்டுத் தம்பு என்று ஊரார் என்னை அழைப்பார்களாம். ஆறு வயதில்தான் பள்ளிக்கூடம் பக்கம்  அனுப்பினார்கள். 22 ஆண்டுகள் தலைமையாசிரியராக, முதல்வராக நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு வெற்றிகரமாகப் பணியாற்ற இன்றும் எனக்கு உதவியாக இருப்பது அன்று கற்றுக்கொண்ட குழு மனப்பாங்கு தான்.

    “தாத்தா சோறு, குழம்பு ரெடி., வாங்க சாப்பிடலாம்” என்று அவர்கள் அழைத்தபோதுதான் நிகழ்காலத்திற்குத் திரும்பினேன். அடுத்தவாரம்  அதே குழந்தைகள் இப்படி விளையாடும் காட்சியைக் காணமுடியாது. அதற்குள் கேபிள் இணைப்பு வந்துவிடும். இந்தக் குழந்தைகள் டி.வி. பெட்டிமுன் தரையில் ஒட்டிக்கிடப்பார்கள்.

  அழைப்பிதழ் கொடுப்பதற்காக நண்பர் வீட்டுக்குச் சென்றேன். ஓடிக்கொண்டிருந்த டி.வி ஓடிக்கொண்டே இருந்தது. கையில் இருந்த செல்பேசியில் குறுஞ்செய்தி அனுப்பியபடி என்னை வரவேற்றார். டி.வி, செல்பேசி இரண்டையும் கவனித்தபடி நான் பேசியதையும் ஒப்புக்குக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி வாங்க என்று சொல்லிவிட்டு டி.வி சீரியலில் ஒன்றிவிட்டார். எனக்கு ஏன் சென்றோம் என்று ஆகிவிட்டது.

   தீபாவளி,  பொங்கல் போன்ற பண்டிகை நாள்களில் வீட்டுக்கு வரும் நண்பர்களை உறவினர்களை வரவேற்று மகிழ்ந்தது அந்தக்காலம். இது போன்ற நாள்களில் டி.வி பெட்டிமுன் பழியாய்க் கிடப்பதால் யாரும் வந்துவிடக்கூடாது என எண்ணுவது இந்தக்காலம். உறவுப் பாலத்தை உருக்குலைக்கச் செய்வது இந்த முட்டாள் பெட்டிதான்
.
    மாலையில் அலுவலகம் முடிந்து  திரும்பிவரும் கணவர் டி.வி யில் மூழ்கிவிடுகிறார். வீட்டில் வசிக்கும் வயதான அம்மா அப்பாவிடம் ஒருவார்த்தை பேசுவதற்குக்கூட அவருக்கு நேரமிருக்காது. அம்மா சாப்பிட்டியா, மதியம் போடவேண்டிய மாத்திரையைப் போட்டாயா என கேட்க  மாட்டானா என்று ஏங்கித்தவிக்கும் தாய் உள்ளம். அவள் செய்து கொடுக்கும் மாலைச் சிற்றுண்டியைக்கூட டி.வி யைப் பார்த்தபடிதான் தின்பார்., குடித்தது தேநீரா காப்பியா என்பதுகூட தெரியாமல் டி.வி யில் தொலைந்திருப்பார். மனைவியிடம் சிரித்துப்பேசுவதில்லை., குழந்தையிடம் கொஞ்சி மகிழ்வதில்லை., இரவில் டி.வி பார்த்தபடியே தூங்கிவிடுகிறார். இந்த அளவுக்கு அந்த முட்டாள்பெட்டி இவரை முட்டாள் ஆக்கிவிட்டது.

  அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் கூடி விளையாடுவதில்லை. நான்கு வயது ஆனாலும் குழந்தை பேசவில்லை என்பது தாயின் கவலை. எப்படி பேசும்? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குழந்தையிடம் பேச நேரமில்லை. அவர்களுக்கு டி.வி தான் முக்கியம். குழந்தையும் டி.வி யே கதி என்று கிடக்கிறது.

    ஒரு கொடுமையான நோய் நம் நாட்டில் வேகமாய் பரவி வருகிறது. குழந்தை பருமன் நோய்(child obesity). டி.வி பார்த்தவாறு சாப்பிடும் குழந்தைகள் இந்நோய்க்கு ஆளாகின்றனர். எனது பள்ளியில் 20% குழந்தைகள் வயதுக்கு மீறிய எடை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

  எட்டாவது படிக்கும் பையனுக்கு நான்கு வரிகள் நன்றாகப் படிக்கத் தெரியவில்லை. அழகாக எழுதத் தெரியவில்லை. முட்டாள் பெட்டிக்கு முன்னால் தவம் கிடந்ததால் வாசிக்கும் பழக்கம் வழக்கொழிந்து போயிற்று. மேலும் சிறிய வயதுமுதல் டி.வி யில் பார்க்கும் பாலியல் காட்சிகளால் பதின்பருவத்தில் எதிர்பாலினக் கவர்ச்சியில் சிக்கித் திசைமாறிப்  போவதை அண்மைக்காலத்தில் அதிகமாகப் பார்க்கிறேன்.

 இவற்றை உணராத முட்டாள் பெற்றோர்களைத் திருத்துவது எப்படி? தொடர்ந்து டி.வி பார்த்தால் முதுமைப் பருவத்தில் Alzheimer's disease என்னும் மறதி நோய் தாக்கும் என்பதையும் இந்தப் படித்த முட்டாள்கள் உணர்ந்தபாடில்லை.


    டி.வி பெட்டிக்கு idiot box என்று பெயர் சூட்டியவரைப் பாராட்டத்தான் வேண்டும்.

  
    
   
   

2 comments:

  1. நன்றாக இன்றைய நாட்டு நடப்பை பற்றி எழுதியிருக்கிறீர்கள்.T.V பெட்டிகள் மக்களின் நேரத்தை கொள்ளையடிக்கும் கொள்ளையர்களாகி விட்டன.நல்ல நிகழ்சிகள் குறைவு. அந்த நிகழ்சிகளை பார்க்கின்றவர்களும் குறைவு.Vulgar Dance and Meaningless film songs are dominating the telecast. When will these change?

    ReplyDelete