Monday 18 May 2015

தற்காத்தல் என்னும் தகைசால் ஒழுக்கம்


  புகழ் பெற்ற நாவல்களைப் படிக்கும்போதுகூட என் மனம் இப்படி சிந்தனை வயப்படுவதில்லை. மாறாக, ஒரு நாளேட்டுச் செய்தி என்னுள் உரத்த சிந்தனையை உசுப்பிவிடும்.
இன்று தினமணியில் என் கண்ணில்பட்ட செய்தி அப்படிப்பட்டதே.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் வழக்கமான முதல்வரின் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.  பன்னிரண்டாம் வகுப்பில் படிக்கும் பதினேழு வயது சிறுமி ஒருத்தி எழுந்து, “ ஐயா. எனக்கு என் பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்து விட்டனர். இதனால் என் படிப்பு தடைபடும். அப்துல்கலாம் மாதிரி அறிவியல் மேதையாக ஆக விரும்புகிறேன். இத் திருமணம் எனக்கு வேண்டாம். என்ன சொல்லியும் என் பெற்றோர் கேட்கவில்லை. இத் திருமணத்தைத் தடுத்த நிறுத்த உதவுங்கள்” என்று வேண்டினாள். அந்த மாநில முதல்வர் ரகுவர் தாஸ் பெற்றோரை அழைத்துப் பேசி, உரிய முறையில் உணர்த்தி நடக்கவிருந்த  திருமணத்தை நிறுத்தினார். அவள் தொடர்ந்து படிக்க அரசு உதவியையும் அளித்தார்.

   எனது மாணவி ஒருத்தி ஒரு நாள் காலை தன் கணவனோடு வந்து அறிமுகப்படுத்தினாள். அவனுடைய பெயரைச் சொன்னபோது சற்றே குழம்பிப்போனேன். அவளுடைய திருமணத்திற்குச் சென்று வாழ்த்தியவன் நான். அது காதல் திருமணம். பெயரும் வேறாக இருந்தது. ஆளும் அவனில்லை. “உங்கள் வேலையை முடித்துவிட்டு மதியம் வந்து அழைத்துச் செல்லுங்கள்” என்று கூறி அவனை அனுப்பிவைத்துவிட்டு என்னிடம் மனம் திறந்து  பேசினாள்.

    காதல் கனிந்து கல்யாணத்தில் முடிந்த வெற்றியை முதல் இரவன்றே கொண்டாடி இருக்கிறான். குடித்துவிட்டு வந்த அவனை அவள் தொடவும் அனுமதிக்கவில்லை. அவன் ஒரு குடிகாரப்ப்பயல் என்பது அவளுக்குத் தெரிய வந்தது. குடிப்பதை நிறுத்தினால் அன்றி படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டாள். அதில் உறுதியாகவும் இருந்தாள். கள் ஆனாலும் கணவன் ஃபுல் ஆனாலும் புருஷன் என்று அவனோடு வாழ விரும்பாமல் கன்னி கழியாமல் ஒரே மாதத்தில்  தாய்வீடு வந்து சேர்ந்தாள். நீதி மன்றம் மூலம் மணவிலக்கும் பெற்றாள். பின்னர் பெற்றோர் பார்த்த உறவுப் பையனை மணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள்.

     பெண்பார்க்க ஒரு பையன் டிப்டாப்பாக வந்தான். இருவருக்கும் பிடித்துப்போக திருமணம் நிச்சயம் ஆனது. படித்த மாப்பிள்ளை என்பதால் பெண் வீட்டாருக்குப் பெருமை பிடிபடவில்லை.

   மறு நாள் திருமணம். முதல் நாள் மாலை மண்டபம் களைகட்டியது. மாப்பிள்ளை அறைக்குள் திடீரென்று  நுழைந்தாள் மணப்பெண். பத்து, இருபது, ஐம்பது, நூறு, ஐந்நூறு என பணத்தாள்களைக் கொடுத்து எண்ணிக்கூட்டச் சொன்னாள். அவனுக்கு அவற்றை எண்ணவும் தெரியவில்லை., கூட்டவும் தெரியவில்லை. பிறகு விசாரித்தபோது தெரிந்தது அவன் ஒரு கைநாட்டுப் பேர்வழி என்று. படிக்காத மாப்பிள்ளை வேண்டாம் என்று உறுதிபடக் கூறிவிட்டாள். திருமணம் நின்று போனது. இதுவும் ஒரு நாளேட்டுச் செய்திதான்.

     இம் மூன்று பெண்களிடத்தும் ஓர்  ஒற்றுமை காணப்படுகிறது. அதுதான் தன்னைக் காத்துக்கொள்ளும் துணிச்சல்.
   தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
   சொற்காத்துச் சோர்விலாள் பெண்
என்று  பெண்ணின்  இலக்கணத்தைச் சொல்வார் திருவள்ளுவர். தற்காத்து என்பதற்குத் தன் கற்பைக் காத்தல் என்று பலரும் பொருள் எழுதுவர். ஆனால்,  வரப்போகும் துன்பத்திலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளல் என்பதே சரியான பொருளாகும்
.
    தற்காத்தல் என்பது ஒரு வாழ்வியல் திறனாகும்.

No comments:

Post a Comment