Thursday, 11 June 2015

தண்ணீர் விளையும் தோட்டம்

     பரபரப்பான பெருநகரின் நடுவில் இப்படி ஒரு கண்ணைக் கவரும், கருத்தைக் கவரும் இடமா என்று வியப்பில் உறைந்து போனேன்.
நீரின்றி அமையாது உலகு என்பதை வருங்காலத் தலைமுறைக்கு உணர்த்தும் உன்னத நோக்குடன் அமைக்கப்பட்ட கருத்துப் பூங்கா(Theme Park) இது.    இதுபோன்ற அட்டகாசமான இடங்களுக்கு அழைத்துச் சென்று அசத்துவதில் வல்லவர் என் மாப்பிள்ளை சிவ கணேஷ்.

   ஃபோர்ட் வொர்த், காமர்ஸ் சாலையில், தண்ணீர் தோட்டம்(The Water Gardens)என்னும் பெயருடைய இவ் அருங்காட்சியகத்தை வடிவமைத்தவர்கள் இருவர். நியூயார்க்கைச் சேர்ந்த ஃப்லிப் ஜான்சன் மற்றும் ஜான்பர்கி என்ற கலைஞர்களின் கைவண்ணத்தில் 1974 ஆம் ஆண்டு உருவானது. 4.3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கலைக்கூடத்தைப் பார்க்கலாம் வாருங்கள். நுழைவுக்கட்டணம் அதிகமாக இருக்குமோ என்னும் கவலையா? நுழைவுக் கட்டணமே இல்லை!

    நான்கு பகுதிகளைக் கொண்ட இத் தோட்டத்தின் முதல் பகுதியாக விளங்குவது காற்றால் இயங்கும் நடனக் குளம்(The Aerating Pool). வரிசையில் அமைந்துள்ள நீர்த் தாரைகள் வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் காட்சியை வார்த்தைகளில் வருணிக்க இயலாது. அதன் அருகில் நிற்கும்போது பனித் திவலைகளில் மூழ்கி பரவசம் அடைகிறோம். அதே சமயம் நனைந்து விடவும் மாட்டோம்.

    ஆரவாரம் செய்யும் அந்த குளத்திற்கு நேர்மாறானது அடுத்து அமைந்துள்ள அமைதிக் குளம்(The Quiet Pool). நீள்  சதுர வடிவில் பளிங்கு போன்ற தூய்மையான நீர் நிரம்பிய அழகுக் குளம். அதிக ஆழமில்லாத அந்தக் குளத்தில் குழந்தைகள் நீந்தி மகிழ்கிறார்கள். அந்தக் குளத்தைச் சுற்றிலும் செழிப்பாய் வளர்ந்து நிற்கும் சைப்ரஸ் மரங்கள் கூடுதல் அழகைச் சேர்க்கின்றன. அந்த சைப்ரஸ் மரத்தின் அடிப்பகுதியில் முண்டு முடிச்சுகளாக வளர்ந்து நிற்கும் வேர்கள் குட்டி நாய்கள் கூடி நிற்பதுபோல் இருக்கின்றன.
     அடுத்து நாம் பார்க்கப் போவதும் ஒரு குளம்தான். ஓவியத்தில் மாடர்ன் ஆர்ட் என்று ஒருவகை இருப்பது போல, இதுவும் ஒரு மாடர்ன் குளம்தான். குளத்தின் விளிம்புப் பகுதியிலிருந்து அருவியாய் நீர் வழிகிறது. குளத்தின் நடுப் பகுதிக்குச் செல்ல நம்மூர் திருக்குளம் மாதிரி படிக்கட்டுகள் இல்லை. மாறாக, பல்வேறு வடிவங்களிலான கற்பலகைகள் ஒழுங்கற்ற முறையில், அதே சமயம் ஒப்பற்ற முறையில் அமைக்கப் பட்டுள்ளன. அவற்றின் மீது வழிந்து விழும் நீர் எழுப்பும் ஓசை நம் செவிகளில் இசையாய் பாய்கிறது. ஆனால் ஒன்று- மிகக் கவனமாய் அடிவைத்து இறங்க வேண்டும். கல்லில் நின்று கீழே பார்க்கும்போது கொஞ்சம் பயமாக இருக்கும். நான் இறங்கவில்லை. என் மக்கள் இருவரும் சமர்த்தாக இறங்கி ஏறினார்கள். பாசம் பிடித்து வழுக்குமோ என நினைக்காதீர்கள். நீர் நின்று கிடந்தால்தான் வழுக்கும்.

    நிறைவாக, மலை ஏறப் போகிறோம். மலைத்து விடாதீர்கள். இது எண்பது டிகிரி சாய்வில் அமைந்த வித்தியாசமான மலை. மலை அல்ல., நான்கு தென்னைமரம் உயரமுள்ள பெரும் சுவர். இதிலும் கவனமாக ஏற வேண்டும். படிகளின் அமைப்பு அப்படி! காதலியுடன் வரும் இளைஞர்கள், காதலியர் மலைத்து நிற்க, கண் இமைக்கும் நேரத்தில் இம் மலையில் ஏறிவிடுவார்கள்.

 “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்
  மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்”
என்பார் பாரதிதாசன்.

    மனைவியுடன் வருவோர் இந்த மலையோடு மல்லுக்கு நிற்கமாட்டார்கள்- என்னைப் போல. அப்படியும் என் மனைவி என்னை ஏறச் சொன்னாள். வாழ்க்கையில் முதல் முறையாக அவள் பேச்சுக்கு மறுப்புத் தெரிவித்தேன்.

  பரந்து கிடக்கும் தரைகளில், புல்வெளிகளில் நிறுவப்பட்டிருந்த சிலைகளும் நாம் வழக்கமாகப் பார்க்கும் சிலைகளிலிருந்து வேறுபட்டு இருந்தன. அவை சொல்லும் செய்தி எதுவும் புரியவில்லை.   ஆணும் பெண்ணும் கட்டித்தழுவும் சிலையில் உள்ள பெண்ணுக்குச் சிறகுகள் முளைத்துள்ளன.
    இன்னொரு சிலையில் ஆணின் கைகள் உடைந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. மற்றும் ஒரு ஆண் சிலை- அவன் இடுப்பில் ஒரு கையகல துணிகூட இல்லை., அவனுடைய  முகத்தில் இயல்பான மூக்கு இருக்க வேண்டிய இடத்தில், ஒரு பறவையின் அலகு இருக்கிறது!

   பார்ப்பவர்கள் அவரவர்க்குத் தோன்றியதைச் சொல்கிறார்கள்- திருக்குறளுக்கு ஆளுக்கு ஆள் தோன்றியபடி உரை எழுதுவதைப்  போல.

   எது எப்படியோ இது பார்க்க வேண்டிய இடம் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.


   
  

   

4 comments:

 1. அருமை... அனுபவங்கள் புதுமை... நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. Really I enjoyed it sir. Very interesting as usual. No words to express. Keep on posting.

  ReplyDelete
 3. தண்ணீர் பூங்காவின் அமைப்பும், அதன் வகைகள், ஒலி, ஒளியுடன் கூடிய தொகுப்புக்காட்சியும் அருமை.

  ReplyDelete
 4. தண்ணீர் பூங்காவின் அமைப்பும், அதன் வகைகள், ஒலி, ஒளியுடன் கூடிய தொகுப்புக்காட்சியும் அருமை.

  ReplyDelete