Wednesday 3 June 2015

எங்கெங்கு காணினும் வெள்ளமடா


  சில நாள்களாக பெய்த பேய்மழையால் ஊரே வெள்ளக்காடாகி விட்டது. அடடே! எங்கே என்று சொல்லவில்லயே
. நான் தற்போது அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலம் டெல்லாஸ் நகரில் என் மகள் இல்லத்தில் தங்கியுள்ளேன். வந்த ஓரிரு நாள்களில் இரவெல்லாம் பெய்த இடிமழையை நினைத்தால் இப்பொழுதும் கதி கலங்குகிறது. அவ்வப்போது வந்த புயல்காற்று குறித்த அறிவிப்பு வயிற்றில் புளியைக் கரைத்தது. நாடு விட்டு நாடு வந்து நன்றாக சிக்கிக் கொண்டோம் என்று நினைத்தேன்., ஆனால் யாரிடமும் சொல்லவில்லை.

   ஒரு பெரிய குளம் நிரம்பி நிற்பதையும், மின் மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றுவதையும் டி.வி யில் விலாவாரியாகக் காட்டினார்கள். ஒரு கவுண்ட்டியில், அதாவது ஒரு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துச் சூழலுக்குச் சுருதி சேர்த்தார்கள்.

   பாரதியார் புதுச்சேரியில் வசித்தபோது ஓர் இரவில் பெய்த மழையை இப்படி ஒரு கவிதையாய்ப் பொழிந்தார்.

திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத்
தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட
பக்க மலைகள் உடைந்து-வெள்ளம்
பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட
தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம்
சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு
தக்கை யடிக்குது காற்று-தக்கத்
தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட
வெட்டி யடிக்குது மின்னல்,-கடல்
வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது;
கொட்டி யிடிக்குது மேகம்;-கூ
கூவென்று விண்ணைக் குடையுது காற்று;
சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று
தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்;
எட்டுத் திசையும் இடிய-மழை
எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா!

   இப்படிதான் இடியும், மின்னலும், காற்றும், மழையும் கூட்டணி அமைத்துக்கொண்டு கூத்தாடியது. ஒரு வழியாக மழை ஓய்ந்தது. வீட்டில் அடைந்து கிடந்த எங்களை, மாப்பிள்ளை. வெளியில் அழைத்துச் சென்றார். ஓர் ஆற்றங்கரைக்கு அருகில் காரை உரிய இடத்தில் நிறுத்தினார்.


    இந்த ஆற்றின் பெயர் டிரினிட்டி ஆறு என்பதாகும்.  அகன்ற ஆறு., 1140 கிலோ மீட்டர் நீளம் உடையது. 17 மாவட்டங்களின் வழியாக காடும் மலையும் கடந்து வருகிறது. அதன் நடுவில் ஒரு சிற்றாறு., அந்தச் சிற்றாறுக்கு இரு பக்கமும் கரைகள்., அந்தக் கரைகள் மீது வரிசையாக வளர்ந்து நிற்கும் மரங்கள். காலம் காலமாக அச் சிறிய ஆற்றுக்குள் ஓடிய ஆற்று நீர் இப்போது பெருக்கெடுத்துப் பேராறாக ஓடுகிறது. அச் சிற்றாறுக்கு இருபுறமும் உள்ள நிலத்தை யாரும் ஆக்கிரமிக்காத காரணத்தால் வெள்ளம் பெருக்கெடுத்த நிலையிலும் கட்டுக்குள் இருக்கிறது. உயிர்ச் சேதமோ பொருள் சேதமோ இல்லை.


     இதற்கு முன்னர் 1908 மே 26 ஆம் தேதி இவ் வாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். Trinity River Authority என்ற அமைப்பு கண்கொத்திப் பாம்பாக இருந்து ஆற்றைப் பாதுகாக்கிறது. இந்த ஆற்றிலிருந்து யாரும் ஒரு பிடி மண்ணைக் கூட அள்ளமுடியாது., மாசு படுத்தவும் முடியாது. நமது ஊர் ஆறுகளும் ஏரிகளும் ஆக்கிரமிப்பிற்கு உள்ளானதால் அடிக்கடி ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடுகிறது.

     இந்த ஆற்றின் குறுக்கே ஒரு புதிய தொங்கும் பாலத்தைக் கண்ணைக் கவரும் வகையில் கட்டியுள்ளார்கள். பழைய பாலத்தை இடித்துத் தள்ளாமல் மாலை நேரத்தில் குழந்தைகள் விளையாட, பெரியவர்கள் காற்றாட அமர்ந்திருக்க ஏற்ற வகையில் மாற்றியமைத்துள்ளனர்.







   


2 comments:

  1. மழை வெள்ளம் பற்றி பாரதியார் கவிதையில் தெரிவித்தார். ஆனால் தாங்களோ கண் முன் காட்சிப் படுத்தி விட்டீர்கள். நிழல் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது.

    ReplyDelete
  2. மழை வெள்ளம் பற்றி பாரதியார் கவிதையில் தெரிவித்தார். ஆனால் தாங்களோ கண் முன் காட்சிப் படுத்தி விட்டீர்கள். நிழல் படங்கள் மிகவும் அருமையாக உள்ளது.

    ReplyDelete