Wednesday 3 June 2015

மரங்கள் வெட்டி மனை செய்குவீரே


   மண்ணெடுத்துக் குடங்கள் செய்வீரே
   மரங்கள் வெட்டி மனை செய்குவீரே

என்ற பாரதியாரின் பாடல் வரிகளில் முதல் வரியை நாம் எடுத்துக்கொண்டோம்.,
இரண்டாவது வரியை அமெரிக்கர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

    அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையான வீடுகள் மரத்தால் ஆனவை. காரணம் மிகவும் குறைந்த விலையில் மரங்கள் கிடைக்கின்றன. இங்கே வீட்டின்  சுவர்கள், தரை, குளியல் அறையின்  தரை உட்பட மரப் பலகைதான். இடையிடையே இரும்பு, அலுமினியத்தைப் பயன்படுத்தி சுவர் எழுப்புகிறார்கள். மாடிப்படிகளும் மரமே. இப்படி மூன்று, நான்கு மாடிகளைக் கொண்ட வீடுகளைக் கட்டுகிறார்கள். ஆனால் ஒன்று. நம் வீட்டில் குழந்தை குட்டிகள் குதியாட்டம் போட்டால் கீழ் வீடு அதிரும்., சண்டைக்கு வந்துவிடுவார்கள்! அதனால்தான் என்னவோ, வீடு முழுவதும் மெத்து மெத்தென்று தரை விரிப்பை விரித்திருக்கிறார்கள்.

     ஒரு வீட்டை மூன்று மாதங்களில் கட்டிவிடுகிறார்கள். நம் விருப்பப்படி வீடு கட்டமுடியாது. வீடு கட்டும் கம்பெனியின் விருப்பப்படிதான் கட்டமுடியும். புரியவில்லயா?

     அரசால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து வீட்டு வரைபடங்களைக் காட்டுவார்கள். அவற்றில் ஒன்றை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு அரை அடிகூட கூட்டியோ குறைத்தோ கட்ட முடியாது. முகப்பில் மட்டும் அழகுக்காக மரச்சுவரை ஒட்டி ஒருகல் செங்கல் சுவரை அமைக்கிறார்கள். அதற்கும் சிமென்ட் பூச்சு இல்லை. ஆனாலும் வெகு அழகாக இருக்கிறது.

   மர வீடு என்பதால் கூரையில் விழும் மழை நீர் அப்படியே வழிய விடிவதில்லை. அப்படி வழிந்தால் சுவர்கள் பாழாகிவிடும். மிகக் கவனமாக அதை குழாய்கள் மூலம் வடியச் செய்கிறார்கள்.

   குளியல் அறையும் மரத்தால் ஆனது., நம்மூரில் குளிப்பதுபோல்  குழாயைத் திறந்துவிட்டுக் குளித்தால் மரப்பலகையால் ஆன தரை மக்கி, பொத்துக் கொண்டு கீழ்வீட்டுக் குளியல் அறையில் விழ நேரலாம். நான் மகள் வீட்டுக்கு வந்ததும் முதலில் குளியல் அறையை எப்படிப் பயன்படுத்துவது என ஒரு பயிற்சியைக் கொடுத்தாள். குளியல் அறையில் உள்ள குளியல் தொட்டியில் மட்டுமே குளிக்க வேண்டும்., ஒரு சொட்டுக் கூட வெளியே தெறிக்காமல் குளிக்கவேண்டும். டூ பாத் ரூம் போனால்கூட டிஷ்யூ பேப்பரால் துடைத்துக்கொள்ள வேண்டுமே தவிர தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது! எனக்கு இது ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. வெளிநாட்டுக்குப் போனால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று திருவள்ளுவரிடம் பயிற்சி பெற்று வந்தவன் அல்லவா நான்!

 ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையார்
 செத்தாருள் வைக்கப் படும்
என்னும் குறளை மனத்தில் ஏற்றியபின்தான் விமானம் ஏறினேன்.

    சரி சரி மரத்தாலான வீட்டை மீண்டும் பார்ப்போம். மரவீடு என்பதால் தீப்பிடிக்க ஏதுவாகும். எப்பொழுதும் தீயணப்பு வண்டிகள் தயார் நிலையில் உள்ளன. சமையல் அறையில் தாளிக்கும்போது வடை அப்பளம் சுடும்போது புகை எழாமல் கவனமாக இருக்க வேண்டும். ஆங்காங்கே புகையைக் உணர்ந்தறியும் சென்சார்கள் உண்டு. அடுத்த நிமிடமே தீயணைப்பு வண்டியோடு வந்து வீட்டுக் கதவை தட்டுவார்கள்.வீட்டினுள் சூடம், ஊதுபத்தி, சாம்பிராணியைப் பயன்படுத்தத் தடை உள்ளது. வீட்டின் வெளியிலும் காதுகுத்து, கட்டுச்சோறு என்று அடுப்பைப் பற்றவைக்க முடியாது. ஆர்வக் கோளாறில் அப்படி ஏதேனும் செய்தால் 2000 டாலர் தண்டக் கட்டணம் உறுதி.

   ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் என்று சொன்ன வள்ளுவரின் வாயில் சர்க்கரையைப் போடவேண்டும்.

   சூறாவளி சுழல்காற்று தாக்கும்போது இந்த வீடுகள் தாக்குப் பிடிக்காது. சுழல்காற்று பற்றிய அறிவிப்பு வெளியானால் வீட்டைவிட்டு வெளியில் வந்துவிட வேண்டுமாம். அல்லது ஜன்னல் எதுவும் இல்லாத குளியல் அறையில் கதவைச் சாத்திக்கொண்டு படுத்துக் கொள்ளவேண்டுமாம். என்ன வம்பு இது!

   இப்படி நாடு முழுவதும் உள்ள வீடுகளைக் கட்ட எவ்வளவு மரங்களை வெட்ட வேண்டியிருக்கும் என என் மாப்பிள்ளையிடம் வியந்து கூறினேன். அவர் சொன்னார்:

    அமெரிக்கர்கள் மிகவும் விவரமானவர்கள். தங்கள் நாட்டில் உள்ள மரங்களை வெட்டமாட்டார்களாம். அப்படியே வெட்டினாலும் 30% மரங்களை மட்டுமே வெட்டுவார்களாம். ஒரு மரத்தை வெட்டினால் இரண்டு மரத்தை நடுவார்களாம். வீடு கட்டத்  தேவையான மரங்களை மெக்சிகோ போன்ற பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்வார்களாம்.

இது எப்படி இருக்கிறது!

3 comments:

  1. மர வீட்டின் அமைப்பையும் பயன்பாட்டையும் கண் முன் கொண்டு வந்து காட்டியுள்ளீர்கள். இருப்பினும் நமது நாட்டு இயற்கையமைப்புக்கும் மேலை நாட்டின் இயற்கையமைப்புக்கும் வேறுபாடு உள்ளது என்பதால் வீடுகளின் அமைப்பும் மாறுபட்டுள்ளது

    ReplyDelete
  2. மர வீட்டின் அமைப்பையும் பயன்பாட்டையும் கண் முன் கொண்டு வந்து காட்டியுள்ளீர்கள். இருப்பினும் நமது நாட்டு இயற்கையமைப்புக்கும் மேலை நாட்டின் இயற்கையமைப்புக்கும் வேறுபாடு உள்ளது என்பதால் வீடுகளின் அமைப்பும் மாறுபட்டுள்ளது

    ReplyDelete
  3. Mannum maramum onnu
    Marathukku maan thangi
    Mannukku maram thangi
    Manaikku mannum maramum thangi

    ReplyDelete