Friday 5 June 2015

ஆளும் வளரணும் அறிவும் வளரணும்

 மதிய உணவுக்குப் பிறகு  சூழல் வாய்க்கும் போதெல்லாம் இருபது நிமிடம் தூங்குவதுண்டு. இன்றைக்கும் அப்படிதான் தூங்கலாம் என்று யோசித்தேன்.
பல்கலைகழகத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த என் மகள் அருணா “அப்பா, எங்க யுனிவர்சிட்டி லைப்ரரியை பார்க்க வாங்களேன்” என்று அழைத்தாள். கரும்பு தின்னக் கூலியா? உடனே புறப்பட்டேன்.    போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை எடுத்துக்கொள்ளச் சொன்னாள். எதற்கும் இருக்கட்டும் என்று எனது PAN கார்டை இந்தியாவிலிருந்து வரும்போது எடுத்து வந்தது நல்லதாயிற்று.

    நூலகத்திற்குள் நுழைவதற்காக வாயிலருகில் சென்ற எங்களுக்கு  நெடுங்கதவுகள் தாமாக விலகி வழிவிட்டன். என் மகளுக்கு நூலக அனுமதி அட்டை இருந்ததால் தொடர்ந்து உள்ளே செல்ல தடையில்லை. என்னுடைய பான் அட்டையைக் கொடுத்தேன். வாங்கி பார்த்துவிட்டு யோசித்தார் அந்த அதிகாரி. “இது இந்திய அரசு எனக்கு வழங்கியுள்ள மிக முக்கியமான அடையாள அட்டை” என்று ஆங்கிலத்தில் சொன்னேன். உடனே அதை ஸ்கேன் செய்துகொண்டு அனுமதி தந்தார். அடையாள அட்டையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்றோம். மின்தூக்கி மூலமாக இரண்டாம் தளத்தை அடைந்தோம். அங்கே ஓர் இருக்கையில் அமர்ந்து தன் மடிக்கணினியில் மூழ்கினாள் என் மகள்.



    அந்த நூலகம் முழுவதையும் பார்ப்பது என்னும் முடிவோடு கையில் காமிராவுடன் நடந்தேன். எனக்கு நூலகங்கள் மிகவும் பிடிக்கும். நான் நான்காம் வகுப்பு படித்தபோது எங்கள் ஊர் பஞ்சாயத்து நூலகம் சென்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் எழுதிய மலைக்கள்ளன் நாவலைப் படித்தது இன்னும் நினைவில் உள்ளது. அந்தச் சிறு வயதில் தொடங்கிய நூலக ஆர்வம் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்து நூலக அறிவியலில் ஒரு பட்டம்(B.L.I.S)  பெறவும் அடித்தளமாக அமைந்தது.



    ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி என்னும் பட்டுக்கோட்டையார் பாடல்வரியை அமெரிக்கர்களுக்கு  யார் மொழிபெயர்த்துச் சொன்னார்களோ தெரியவில்லை. அறிவை வளர்த்துக்கொள்ள வசதியாக அருங்காட்சியகம் மற்றும் நூலகக் கட்டமைப்பை பெரிய அளவில் உருவாக்கியுள்ளார்கள்

 ஆறு தளங்களைக் கொண்ட மிகப்பெரிய நூலகத்தைப் பார்க்க . மின்தூக்கிகள் பெரிதும் உதவின.   பெரிய உயரமான அலமாரிகளில் நூல்கள் அழகாக அடுக்கப்பட்டிருந்தன. செவி நுகர் நூல்கள்(Audio books)  ஆயிரக் கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இரண்டு அலமாரிகளுக்கான  இடைவெளியை நாமே அதிகரித்துக் கொள்ளலாம். அலமாரியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு திருகியைச் சுழற்றினால் ஒட்டுமொத்த புத்தக அலமாரி நகர்கிறது. பிறகு வசதியாக நின்று புத்தகத்தை எடுக்கலாம். இதன் காரணமாக தரையைக் கூட்டிப் பெருக்குவதும் எளிதாகிறது.


    இருக்கைகள் எல்லாம் படு சொகுசாகவும், தூய்மையாகவும் உள்ளன. இப்போது விடுமுறை என்பதால் ஆராய்ச்சியாளர் சிலர் மட்டும் கருமமே கண்ணாக இருந்தனர்.

   கொண்டு வரும் உணவைச் சூடாக உண்பதற்கு வசதியாக ஆங்காங்கே மின் சூடாக்கி (Electric oven) இருக்கிறது. ஒன்றும் கொண்டுவரவில்லை என்றால் அங்குள்ள ஓர் இயந்திரத்தில் (Vending machine) காசு போட்டு நொறுக்குத் தீனியைப் பெற்றுக் கொள்ளலாம். தண்ணீர்த் தாகமா? அதற்கும் ஓர் இயந்திரம். ஒரு பொத்தானை அழுத்திக் கொண்டு குனிந்து, வளைந்த சிறுகுழாயில் வரும் நீரை வாய் வைத்துக் குடிக்க வேண்டியதுதான். இயந்திரங்கள் செய்திடுவீரே என்று பாரதி சொன்னதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். எங்கும் இயந்திர மயம். எனக்கு இந்தக் குடிநீர் வழங்கும் இயந்திரம் ஒத்துவரவில்லை. என்றாலும் நம்மூரில் தம்ளரை சங்கிலியில் கோர்த்து வைத்திருக்கிறோமே. அதைவிட இது எவ்வளவோ மேல்.

     இது முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட நூலகம்(Digital library with cloud computing) என்பதால் அதிக எண்ணிக்கையில் கணினிகளப் பயன்படுத்துகிறார்கள். அவை  ப்ரிண்ட்டர் மற்றும் ஸ்கேனர்களோடு கூடியவை. ஓர் இயந்திரத்தில் ஒரு டாலரை விட்டால் ஒரு பிரிண்ட் கார்டு வரும். பிறகு அதைப் பயன்படுத்தி தேவையானவற்றை அச்சிட்டுக் கொள்ளலாம்.

   ஆறாம் தளத்தில் எல்.சி.டி ஒளிப்படக் கருவி, ஒலிபெருக்கி வசதியோடு கூடிய அரங்குகள் உள்ளன. மெல்லக் கற்போருக்குப் பயன்படும் தனிப்பயிற்சிக்கூடம் (Tutorial section) இருக்கிறது. ஆசிரியரும் மாணவரும் கலந்துரையாடி கசடற கற்கும் களமாக இது விளங்குகிறது.

    இனியும் சுற்றிச் சுற்றி வந்தால் ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள் என நினைத்து,  இருக்கையில் அமர்ந்து எதையாவது படிக்கலாம் என்று முடிவு செய்தேன். ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான புவியியல் பாடநூலைக் கையில் எடுத்தேன். பொருளடக்கப் பகுதியை நோட்டமிட்டேன். நமது பட்ட வகுப்புப் பாடத் திட்டத்தைப்போல் இருந்தது. இந்தியாவைப் பற்றிய பக்கங்களைப் புரட்டினேன். இந்தியாவில் 17(!) மாநிலங்கள் இருப்பதாகவும், மாநிலத்திற்கு ஒரு மொழி பேசப்படுவதாகவும், தாய்மொழி தவிர பிறமொழி தெரியாததன் காரணமாக யாரும் வெளிமாநிலத்திற்குச் செல்வதில்லை எனவும் எழுதப்பட்டிருந்தது. நம் கிராமத்து ஆண்கள் கோவணமும், இடுப்பில் ஒரு துண்டும் அணிவதாகப் பதிவாகியுள்ளது. நான் படித்த அந்த நூல் 2002இல் அச்சிடப்பட்டிருந்தது. இப்போது பன்மடங்கு முன்னேறி இருக்கிறோம் என்பதைச் சொல்லவேண்டும் என்று துடித்தேன். யாரிடம் சொல்வது? சொல்ல நினைத்ததை எழுதி அங்கு வைக்கப் பட்டிருந்த பின்னூட்டப் பெட்டியில்(Feedback box) போட்டுவிட்டுத் திரும்பியபோது அந்தச் சுவரொட்டி கண்ணில் பட்டது.


”எங்களால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்”

ஆம். இப்படிப்பட்ட நூலகங்களை நம்மாலும் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையோடு வெளியில் வந்து மகளின் ஆய்வகத்தை நோக்கி நடந்தேன்
                     / bookbookbookookbookbookbookbookbookbookbookbookbook /


பின் குறிப்பு: இந்த வலைப்பதிவை என் நண்பர் கரூர் மாவட்ட மைய நூலகர் எஸ்.எஸ். சிவக்குமார் அவர்களுக்கும், என் தலை மாணாக்கர் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் முதன்மை நூலகர் முனைவர் ஏ.எம். வெங்கடாசலம் அவர்களுக்கும் அன்புறை ஆக்குகிறேன்.
  .
   


5 comments:

  1. Lion in his den. Our man in his abode of books. Renganathan of India paved way for arrangement of books in library. DR.A
    Govindaraj u paved way for indians to realise the value of books

    ReplyDelete
  2. அமெரிக்க நூலகத்தின் அமைப்பையும் இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள தவறானப் பதிவை இந்தியன் என்ற முறையில் சுட்டிககாட்டியுள்ளீர்கள்.. நன்றி.

    ReplyDelete
  3. அமொிக்க நூலகங்களுக்கு இணையான / மேலான நூலகங்களை உருவாக்குவதே நமது கடமையாகும். இந் நூலகங்கள் வருங்கால சந்ததியினருக்கு நாம் விட்டுச்செல்லும் பொக்கிஷங்கள். "எங்களால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்". மேற்படி தங்களது பதிவுகள் மிகமிக அருமை. எங்கும் நூலகம் எதிலும் நூலகம். மிக்க நன்றி.

    ReplyDelete