Saturday 19 December 2015

அலைமோதும் அரும்புகள்

   நான் முதல்வராகப் பணியாற்றும் பள்ளியில் வாராந்திர விடுமுறைக்குப்பின் அன்றும் வழக்கம்போல் மழலையர் வகுப்புகள் தொடங்கின. குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்க, யெஸ் மிஸ் யெஸ் மிஸ் என்று குழந்தைகள் சொல்ல ஆசிரியை வருகைப் பதிவு எடுத்து முடித்தார். அப்போது ஒரு குழந்தை எழுந்துமிஸ் எங்கம்மா செத்துப் போயிட்டாங்கஎன்று சொல்ல ஆசிரியைக்குத் தூக்கி வாரிப் போட்டது.


    உடனே அந்தக் குழந்தையை அழைத்துக்கொண்டு எனது அறைக்கு வந்தார். மெதுவாக அச் சிறுமியிடம் பேசிப் பார்த்தேன். என்னிடமும் அப்படியேதான் சொன்னாள். ஆசிரியையிடம் சிறுமியின் அப்பாவைத் தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு பேசச் சொன்னேன். இதற்கிடையில் அக் குழந்தையிடம் பேசியபோது அதிர்ச்சித் தகவல் ஒன்றைச் சொன்னாள்.    பேச்சின் இடையே அளுடைய அப்பா கொத்தனார் வேலை செய்வதாகச் சொன்னாள்.

   மீண்டும் உள்ளே வந்த ஆசிரியை கண்ணீர் மல்க ஏதோ சொல்ல விரும்பினார். ஒரு   பலூனைக் கையில் கொடுத்து ஊதி விளையாடுமாறு அக் குழந்தையை வெளியே அனுப்பினேன். ஹாய் ப்ளூ பலூன் என்றபடி வெளியில் சென்றாள். அக் குழந்தை சொல்வது உண்மைதான் என்றும் நேற்றுதான் காரியம் எல்லாம் முடிந்தது என்றும் அச் சிறுமியின் அப்பா சொன்னதாக என்னிடம் தெரிவித்தார். அச் சிறுமியைக் கவனமாகக் கண்காணிக்குமாறு ஆசிரியையிடம் சொல்லி அனுப்பினேன். என்றாலும் என் மனம் என்னவோ இதையே நாள் முழுவதும் அசைப் போட்டுக் கொண்டிருந்தது. அச் சிறுமியின் தளிர் விரலைப் பிடித்தபடி அடிக்கடி பள்ளிக்கு வரும்  இந்த இளம்தாய் என் மனத் திரையில் தோன்றி மறைந்தாள்.

    கணவன் மனைவி வாய்ச் சண்டை முற்றி அடிதடியில் முடிந்தது. அவள் சமையல் கட்டுக்குள் ஓடி மண்ணெண்ணையை மேலே ஊற்றிக்கொண்டு பற்ற வைத்துக்  கொண்டாள். அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவள் நான்கு நாள்களுக்குப் பின் உயிரை விட்டாள். கடைசி நேரத்தில் கணவன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதால் ஸ்டவ் வெடித்து ஆடையில் தீப்பற்றிக் கொண்டதாக மரண வாக்குமூலம் கொடுத்தாள்.  பிரச்சனை அதோடு முடிந்தது.

    இந்தப் பிரச்சனையில் அதிகப் பாதிப்பு அந்தப் பச்சிளம் குழந்தைக்குதான். அந்தக் கோரக்காட்சி நேரில் பார்த்த குழந்தையின் ஆழ் மனதில் பதிவாகி இருக்கும்.  வளர்ந்து பெரியவளாகும்போது தன் அப்பாவை ஒரு கொலைகாரனாகப் பார்ப்பாள்.

  அது மட்டுமா?  தான் செய்யாத தவறுக்குக் அக் குழந்தை வாழ்நாள் முழுதும் தாய்ப் பாசத்துக்கு ஏங்கித் தவிப்பது எந்த விதத்தில் நியாயமாகும்? ஒவ்வொரு அம்மாவுக்கும் ஒரு வாசனை உண்டு. அதை அவளுடைய குழந்தை மட்டுமே முகர்ந்து உணர முடியும். அந்த வாசனையையும், தாயின் மடி சுகத்தையும் மேலே குறிப்பிட்டக் குழந்தைக்கு வேறு எவராலும் தர முடியாது.

  உலகிலேயே அதிகமான குடும்பச் சண்டை நம் நாட்டில் நிகழ்வதாகவும், நம் நாட்டில் மட்டும் பார்த்தால் தமிழ் நாட்டில்தான் அதிகம் எனவும் ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது. இது நமக்குச் சிறுமையே தவிர பெருமை அன்று.

    குடும்ப உறுப்பினர்கள் கடுங்கோபம், வெறுப்பு, பொறாமை, அவமதிப்பு, பேராசை, கடுங்காமம், தான் என்ற தன்முனைப்புப் போன்ற எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால்தான் குடும்பச் சண்டைகள் உருவாகின்றன. இந்த எதிர்மறை எண்ணங்கள் செயல் வடிவம் பெறும்போது சிக்கல் பெரிதாகிறது. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி அல்லது இடித்துச் சொல்லி சமாதானப் படுத்துவார்கள். கூட்டுக்குடும்ப அமைப்பு இப்போது சிதைந்து விட்டதால் குடும்பச் சண்டையைத் தடுத்து நிறுத்துவாரில்லை.
photo courtesy: The Hindu

   ஒரு கணவன் மனைவியை அடிப்பது(physical abuse), கெட்ட வார்த்தைகளால் திட்டுவது(verbal abuse), அவளுடைய சுய கெளரவத்திற்குப் பங்கம் ஏற்படுத்துதல்(emotional abuse), அவளுடைய விருப்பத்திற்கு மாறான அல்லது இயற்கைக்கு  மாறான பாலியல் நுகர்வு(sexual abuse), அவளுடைய பெற்றோரிடம் பணம் வாங்கி வரச்சொல்லுதல் அல்லது சம்பளப் பணத்தைப் பிடுங்கிக்கொண்டு பூ பொட்டு வாங்குவதற்குக் கூட காசு தராமல் இருப்பது(Economic abuse) மற்றும் குடி, பரத்தமை போன்ற பல காரணங்களால் குடும்பச் சண்டைகள் தோன்றுகின்றன. சண்டை எல்லை மீறும்போது கண நேரத்தில் கொலையிலோ தற்கொலையிலோ முடிந்து விடுகின்றன. அதன் பிறகு அக் குடும்பம் புயலில் சிக்கிய கப்பல் போல தடுமாறுகிறது; சில சமயம் தடம் மாறுகிறது. இத்தகைய குடும்பங்களில் வாழும் சின்னஞ் சிறிய அரும்புகள் அன்புக்காக ஏங்கி அலை மோதுகின்றன.

   கணவனும் மனைவியும் பொழுதுக்கும் சண்டையிடும் குடும்பங்களில் தற்கொலை, கொலை, மணமுறிவு முதலியவை ஏற்பட்டு, வளரும் குழந்தைகளின் மனநிலை வெகுவாகப் பாதிக்கப்படும்; படிப்பில் பின்தங்கும். இது குடும்பப் பரம்பரை நோயாகத் தொடரும்.

குடும்பச் சண்டையைத் தவிர்ப்பது எப்படி?

   குடும்பத்தில் உள்ள அனைவரும் சகிப்புத் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அற வழியில் பொருளீட்டி, செலவைக் குறைத்துச் சேமிக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவர்க்கொருவர் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். தவப் பயிற்சி மேற்கொண்டால் மனத் தெளிவு உண்டாகும்; பிறழ உணர்தல் தவிர்க்கப்படும்.

      தொலைக்காட்சியிலும் செல்பேசியிலும் இணையத்திலும்  மூழ்கிக் கிடக்காமல், ஒன்றாக அமர்ந்து ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினாலே பாதிச் சிக்கல் தீர்ந்து விடும். ஆணாதிக்கப் போக்கை அறவே விட்டொழிக்க வேண்டும். மனைவிதான் வீட்டைப் பெருக்க வேண்டும் என்பதில்லை; கணவரும் பெருக்கலாம்.

    செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி வாதம் செய்வதை நிறுத்தி, மன்னிக்கும் மனப் பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
  தீயினால் சுட்ட புண்ணின் வடு மறைந்துவிடும்; ஆனால் நாவினால் சுடும்போது ஏற்படும் வடு மறையவே மறையாது என்று வள்ளுவர் சொல்லுவதை கணவன் மனைவி இருவரும் உணர வேண்டும்.

  சண்டை முற்றும்போலத் தெரிந்தால் உடனே கணவன் வீட்டை விட்டு வெளியே சென்று கோபம் தணிந்ததும் திரும்ப வேண்டும். இல்லையேல் ஒரு நாவலை எடுத்துச் சென்று அறையினுள் உட்கார்ந்து படிக்க வேண்டும்.

   திருக்குறள் இன்பத்துப்பாலில் கணவன் மனைவி உறவை நட்பு எனக் குறிப்பிடுவார் திருவள்ளுவர்.  எனவே பெற்றோர் நண்பர்களாக வாழத் தொடங்கினால் மட்டுமே குடும்பச் சண்டைகள் ஒழிந்து இல்லந்தோறும் மகிழ்ச்சிப் பொங்கும். அங்கே குழந்தைகள் மன வளத்துடன் வளரும்.

  இது சாத்தியமா? சாத்தியம்; சத்தியம்.


  
  

   

10 comments:

  1. கோபம் வரும் நேரத்தில் சற்று நிதானத்தைக் கடைபிடித்து சிறிது நேரம் ஒதுங்கினால் அனைத்தையும் சரி செய்துவிடலாம். அல்லது அனைத்தும் சரியாகிவிடும். அனைத்தும் நாம் உண்டாக்கிக்கொள்வதே.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே சரியாகச் சொன்னீர்கள்

      Delete
  2. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை என்பார்கள்
    அந்தக் குழந்தையை நினைத்தால் மனம் கனக்கிறது

    ReplyDelete
  3. ஆத்திரம் அறீவுக்குச் சத்துரு . கணவன் மனைவி என்ற புனிதமான உறவை அனுபவைத்து வாழவேண்டும். பிறப்பெடுக்கும் அனைத்து உயிர்களும் ஒரு காலத்தில் மண்ணுக்குள் மறையும். மனிதன் மட்டும் விதிவிலக்கல்ல. ஆயினும் சிந்திக்கத் தெரிந்தவன். தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதைப் போல விட்டு கொடுத்தோ, வீட்டை விட்டுச் சற்று நேரம் வெளியேறியோ கோபத்தைத் தணித்துத் திரும்பினால் சரியாகிவிடும். தான் பெற்ற குழந்தையினை மாற்றாரின் பராமரிப்பில் விட்டுச்செல்வது வேதனையே தவிற வேறில்லை. அக்குழந்தையை ஆண்டவன் காப்பற்றட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கணவன் மனைவி உறவு புனிதமானது. அதை அனுபவித்து வாழ வேண்டும் என்று நீங்கள் கூறுவதை அப்படியே வழிமொழிகிறேன்.

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. மனம் வெதும்பும் செயலென்றால் எவர் மறுப்பார்? ஆறுவது சினம் என்ற அவ்வையின் வாக்கு மறந்துப் போவதனால் இந்த வினை நிகழ்ந்துவிட்டது. அந்தப் பெண்ணாவது தன் குழந்தையை இறுதி முடிவிற்கு முன் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். அவசரக் கோபமே அகால முடிவு. சமதாயம் சிந்திக்க வேண்டும் பொறுமையையும் கடை பிடிக்க வேண்டும்.தங்களின் வேண்டுதல் போல் அந்தக் குழந்தைக்கு தெய்வம் துணை புரியட்டும். - நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
    Replies
    1. அவசரக் கோலமே அகால முடிவு என்னும் உங்களுடைய கூற்று நூற்றுக்கு நூறு உண்மை

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete