Monday, 28 December 2015

மதுரை மாநகரில் மாபெரும் விழா


  பேராசிரியர் மோகனின் இலக்கிய அமுதம், பேராசிரியர் நிர்மலா மோகனின் மோகனம், கவிஞர் இரா.ரவியின் ஹைக்கூ முதற்றே உலகு, அடியேனின்  அன்புள்ள அமெரிக்கா ஆகிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா 27.12.15 அன்று மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.


   மாலை ஆறு மணியளவில் விழா தொடங்கும் என அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது. அவ்வாறே சரியாக ஆறு மணிக்கு விழா தொடங்கியது கண்டு வியந்து போனேன். இந்தக் காலம் கருதும் கலாச்சாரத்தை எல்லா ஊர்க்காரர்களும் பின்பற்ற வேண்டும்.

    நூல் மதிப்புரை வழங்கிய பேராசிரியர் இ.கி.இராமசாமி, மூதறிஞர் கு.வெ.பாலசுப்ரமணியம், கவிஞர் தங்கம் மூர்த்தி ஆகியோர்  செவி நுகர் கனிகளை வாரி வழங்கினர். எழுத்து வேந்தர் நாவலாசிரியர் இந்திரா செளந்திரராஜன் ஆற்றிய உரை அரங்கைக் கட்டிப்போட்டது. எழுத்தாளர்களை இனங்கண்டு ஊக்குவிக்கும் இன்னொரு உ.வே.சா என்று பேராசிரியர் மோகனுக்குப் புகழாரம் சூட்டினார். நிறைவாக அன்புள்ள அமெரிக்கா என்னும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினார் பேராசிரியர் மோகன். அவ்வுரையை தேனில் தோய்த்த  பலாச்சுளை என அனைவரும் சுவைத்து மகிழ்ந்தனர்.

     விழாவின் நிறைவாக, நூலாசிரியர்கள் சார்பாக ஏற்புரை வழங்கும் வாய்ப்பு எனக்கு மட்டுமே கிடைத்தது.  என்னைப் போன்ற எளியவர்கள் ஆசை காரணமாக நூல் என்னும்  கருவைச் சுமக்கிறோம். அக் கருவைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணித்துப் பிரசவம் பார்க்கும் தாயுமானவர்தான் மோகன் என்று கரவொலி இடையே குறிப்பிட்டேன். உண்மையை உரக்கச் சொன்னேன். அவ்வளவுதான்.

   எனது அழைப்பினை ஏற்று கருவூரிலிருந்து வந்து விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த கரூர் அரசு கலைக்கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் முனைவர் இரா. இலட்சுமணசிங் அவர்களை நன்றியுடன் நினைந்து மகிழ்கிறேன். என்னுடைய மேனாள் மாணவர் மா.சிவக்குமார் வந்து விழாவில் பங்கேற்றதோடு ஒளிப்படங்களையும் எடுத்து உதவியமையை எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

      எனது பயணக்கட்டுரை நூல் புகழ் பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வருவதைப் பெருமையாகக் கருதுகிறேன். அந் நூலின் முதற்படியைப் பெற்றுப் பெருமை சேர்த்த மாமனிதர் செட்டிநாடு சிமெண்ட்சின் மேனாள் உதவித் தலைவரும் புகழ் பெற்ற பட்டயக் கணக்கருமான திரு.இரா.சரவணப் பெருமாள் அவர்கள். அவர்களோடு அவருடைய துணைவியார் பேராசிரியர் முனைவர் காந்திமதி வருகை தந்தது கூடுதல் சிறப்பாகும். இவ்விருவரும் எங்கள் அன்புக்குரிய சம்பந்தியர் என்பது கூகூகூடுதல் சிறப்பாகும்.

    விழா நிறைவில் வந்திருந்த அனைவருக்கும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

  இது  போன்ற விழா என்றால் யாருக்குதான் நூல் எழுதும் ஆசை வராது?  அடுத்த நூலை எழுதத் தொடங்கிவிட்டேன்.
   
4 comments:

 1. மதுரை விழா நிகழ்வுகளைக் கண்டோம். நூல் வெளியீட்டு விழாப் பகிர்வு மனதிற்கு நிறைவைத் தந்தது. வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகளைக் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
  தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி

  ReplyDelete
 3. உங்கள் எழுத்துப்பணி என்றும் தொடருட்டும் அதற்க்கு உங்களை படைத்த இறைவன் அருளட்டும். என்றும் உங்கள் நலம் நாடி மாணிக்கம், முனைவர் வெங்கடாசலம் அத்தாணி.

  ReplyDelete
 4. Yet another feather on your cap. Best wishes sir. Though you are getting aged your write ups remain young and energetic always in all ways. May God shower his blessings on you to make you live long in the world to contribute good morals and ethics to this ruining society. I feel proud to be your disciple for ever.

  ReplyDelete