Wednesday, 30 December 2015

குடி என்னும் குன்றா விளக்கம்

அமிழ்தினும் இனிய அருமை மகள் அருணாவுக்கு,

   வாழ்க வளமுடன். இன்று உன் பிறந்த நாள். நானும் உன் அம்மாவும் பிறந்ததும் இந் நாளில்தானே? குழப்பமாக உள்ளதா? அப்பா என்றும் அம்மா என்றும் புதிய அவதாரம் எடுத்தது அன்றுதானே? அதனால்தான் அப்படிச் சொன்னேன்.


    இந்த நாளில் உன்னுடைய குடிப்பெருமை எத்தகையது என்பதைச் சற்றே தெரிந்து கொள்ள வேண்டும்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

என்பது குறள். ஒருவருடைய பண்பு நலனுக்கு முக்கிய காரணம் நல்ல குடும்பத்தில் பிறத்தல் என்பது இக் குறளால் பெறப்படும் செய்தியாகும். நீ நற்குடியில் பிறந்த நங்கை. நம் குடும்பத்திற்குப் பேரூரான் குடும்பம் என்று ஒரு பெயருண்டு பல தலைமுறைக்கு முன்னால் பேரூர் என்ற ஊரிலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்களாக இருக்க வேண்டும்.

   .உன் தந்தை வழி தாத்தா அருணாசலம் உழைப்பால் உயர்ந்த உத்தமர்; தன்னலம் கருதாத தகைமையாளர்; மருந்தாகித் தப்பா மரம் போன்று ஊருக்கெல்லாம் உதவியவர்.

  நாளெலாம் வினை செய் என்பான் பாரதி தனது புதிய ஆத்திசூடியில். உன் தாத்தாவும் அப்படித்தான், நாளெல்லாம் ஏற்றம் இறைப்பார்; ஏர் உழுவார். எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். ஓரிரு சட்டைகளே வைத்திருப்பார். எங்காவது வெளியூர் சென்றால் போட்டுக்கொள்வார்.  மற்ற நாள்களில் வெய்யிலோ குளிரோ ஒரு துண்டுதான் தும்பைப்பூ நிறத்தில் தோளில் கிடக்கும்.
தேசம்மாள்- அருணாசலம்


    மகளுக்குக் கல்யாணம், மாடு வாங்கி விவசாயம் செய்ய என்று பலரும் பணம் கேட்டு வருவார்கள். கடனாகக் கொடுத்து உதவுவார். வாங்கியவரில் மிகப்பலர் திருப்பித்தரமாட்டார்கள். ஆனால் அதுகுறித்து உன் தாத்தா கவலைப்படமாட்டார். 
    
   எந்தவித பாசன வசதியும் இல்லாத வானம் பார்த்த பூமியில் விவசாயம் செய்து வருவாய் ஈட்டி உன் பெரியப்பாவை கல்லூரியில் படிக்க வைத்தார். நான் நான்காம் வகுப்புப் படிக்கும்போது உன் தாத்தா காலமாகிவிட்டார். பிறகு உன் பெரியப்பாதான் என்னைப் படிக்க வைத்தார்.

    ஊரில் வசதியாக இல்லாவிட்டாலும் வறுமையின்றி வாழ்ந்தவர். பள்ளி சென்று படிக்காவிட்டாலும் தானே முயன்று ஓரளவு படிக்க எழுதக் கற்றுக் கொண்டவர். ஓய்வு நேரத்தில் பெரிய எழுத்து இராமாயணத்தை எனக்கு உரக்கப் படித்துக் காட்டுவார். பின்னாளில் நான் எம்.ஏ  படிக்கும்போது இராமாயணத்தைதான் விருப்பப் பாடமாக எடுத்துப் படித்தேன் என்பது உனக்குத் தெரியும்.

     உன் பாட்டி, அதாவது என் அம்மா தேசம்மாளை இரண்டாம் தாரமாக மணந்து அவருடைய மனம் கோணாமல் குடும்பம் நடத்தியவர் உன் தாத்தா. அவர்களிடையே சிறு சிறு ஊடல்கள் இருந்தன; உரசல் சண்டை சச்சரவு என்றும் இருந்ததில்லை. மனைவியை அடிக்கும் மடத்தனம்  அவரிடத்தில் இருந்ததே இல்லை. நானும் அவர் வழியில்தான் வாழ்கிறேன். வேண்டுமானால் உன் அம்மாவிடம் கேட்டு உறுதி செய்துகொள்.

    ஆண் குழந்தை பிறந்தால் அருணன் பெண் என்றால் அருணா என நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதனால்தான் உனக்கு அருணா என்று பெயர் சூட்டினோம்.

   எனவே நற்பண்புகள் அனத்தையும் உன் அப்பா மற்றும் அம்மாவின் மரபுவழிச் செல்வமாகப் பெற்றிருக்கிறாய். தம்மினும் தம் மக்கள் அறிவுடையார் ஆதலே சிறப்பு என்பார் வள்ளுவர். நீ அவ்வாறே அறிவும் ஆற்றலும் மிக்கவளாய் அமெரிக்காவில் வாழ்ந்து வருவது கண்டு நானும் அம்மாவும் பெருமை அடைகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம்.

   உனக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

 இவ்வாண்டு உன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கனடாவில் படிக்கும் உன் தங்கையும் உடனிருப்பது உனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீ ஊஞ்சல் ஆடுவது போன்ற ஓவியம் ஒன்றை வரைந்து உனக்குப் பரிசாய் வழங்கியதை என்னுடன் மின்னஞ்சலில் பகிர்ந்து கொண்டாள்.
painting by Bhuvana


   வழக்கம்போல் இந்த ஆண்டும் உன் பிறந்த நாளில் கரூர் ஞானாலயா வள்ளலார் கோட்டம் மூலம் வறுமையில் வாடும் 120 முதியவர்களுக்கு மதிய உணவு வழங்க ஏற்பாடு செய்துவிட்டேன்.

உனது சாதனைகளுக்கெல்லாம் உறுதுணையாய் நிற்கும் மாப்பிள்ளைக்கு எங்கள் வாழ்த்துகளைச் சொல்.

இப்படிக்கு,
உன் மாறாத  அன்பினில் மகிழும்
அப்பா, அம்மா.

    

2 comments:

  1. தங்களின் அன்பு மகளுக்கு
    எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. ஆசிரியர் வழி வாழும் எம் தமக்கை நீண்ட நாள் வாழ வாழ்த்திடுகிறோம். உங்கள் அப்பாவின் மாணாக்கர்கள் மாணிக்கம் அத்தாணி, முனைவர் வெங்கடாசலம் அத்தாணி.

    ReplyDelete