Wednesday, 6 January 2016

அது நமக்கு ஆறாம் உணர்வாகட்டும்

      சாலை விபத்துகளில் சிக்கி உயிர் இழப்பவர்களையும் உறுப்புகளை இழப்பவர்களையும் கணக்கெடுத்துப் பார்த்தால், அவர்களுள் படித்தவர்களே அதிகம்பேர் என்பது தெரியவரும்.
பதினெட்டு வயது முதல் முப்பது வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களே மிகுதியாக சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விவர அறிக்கை கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் பள்ளிப்பருவத்தில் சாலை விதிகளை முறையாகச் சொல்லித் தராததே ஆகும்.

     முதல் வகுப்பிலிருந்தே ஒரு புதுவகை ஆத்திசூடியைச் சொல்லித்தர வேண்டும்.

அதிவேகம் ஆபத்து
ஆபத்தை உணர்
இயல்பாய் ஓட்டு
ஈனம் குடித்தோட்டல்
உரிமம் வேண்டும்
ஊர்தியை நிறுத்தி செல்பேசு
எப்பொழுதும் தலைக் கவசம்
ஏறாதே சரக்கூர்தியில்
ஐயமற விதியறி
ஒப்பிலாதது உயிர்
ஓம்புக ஊர்தியை
ஒளடதம் பொறுமை

  தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் ஈறாக  பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகவே சாலை விதிகள் பற்றிய பாடங்கள்  அமைய வேண்டும்.
மனிதருக்கு இயற்கையாய் உள்ள ஐந்து உணர்வுகளோடு சாலை உணர்வு என்பது ஆறாவது உணர்வாக அமையும் வகையில் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பதுபோல சொல்லித்தர வேண்டும்.

   சாலை வெறிச்சோடிக் கிடந்தாலும் சாலைச் சந்திகளில்  ஒளிரும் சிவப்பு விளக்கை மதித்து நின்று செல்ல வேண்டும்; வண்டியை நிறுத்திப் பேசினால் அது செல்போன்; வண்டியை ஓட்டியபடி பேசினால் அது கொல்போன். மது அருந்தி ஓட்டுதல் மடத் தனம். இவற்றை எல்லாம் பதின் பருவத்தினர் மனத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்தால் சாலை விதிகளைப் பின்பற்றுதல் என்பது ஓர் அனிச்சைச் செயலாக மாறிவிடும். ஒரு தலைமுறை மக்கள் சாலை விதிகளைப் பின்பற்றி வாழ்ந்தால் அது கருப் பதிவாக மாறும்; அடுத்தத்  தலைமுறையினர் கல்லாமலேயே சாலை விதிகளைப் பின்பற்றுவர்.

    அடுத்து, சாலை விதிகளை மீறுவோரை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆயிரக் கணக்கில் அபராதம் வசூலிக்க வேண்டும். மூன்று முறைகள் அபராதம் செலுத்திய  ஒருவர் நான்காம் முறையாகத் தவறு செய்தால் ஓட்டுநர் உரிமத்தை நீக்கிவிட வேண்டும். சுயக் கட்டுப்பாடும் சுய ஒழுங்கும் இல்லாதவர்களை இப்படித்தான் திருத்த வேண்டும்.

      சாலை விபத்துகளுக்கான மற்றொரு முக்கிய காரணம் உண்டு. சரக்குந்துகளில் பழைய உதிரிபாகங்கள் அல்லது தரக்குறைவான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்படுவதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. நாடு முழுவதும் தரச் சான்று பெற்ற முதல் தர உதிரிபாகங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். பழைய உதிரி பாகங்கள் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும்.

      தலைக்கவசம் அணியாமலும் அல்லது முறையாக அணியாமலும் ஓட்டுவது, இருக்கைப் பட்டை போடாமல் ஓட்டுவது இவற்றால்தான் விபத்துக் காலங்களில் அதிகமான உயிரிழப்பு ஏற்படுகிறதாம். தலைக்கவசத்தையும் இருக்கைப் பட்டையையும் முறையாகப் பயன்படுத்தினால் மட்டுமே ஊர்தியை இயக்க முடியும் என்ற வகையில் ஊர்திகளை வடிவமைக்க வேண்டும்.

   சாலைகள் குண்டும் குழியுமாகக் கிடப்பதும்  விபத்துக்கான இன்னொரு காரணமாகும். எனவே முன்னுரிமை அடிப்படையில் அரசினர் சாலைப் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும்.

     கொரில்லா போர்முறை என்று ஒருவகை உண்டு. மறைந்திருந்து தாக்குதலே இதன் சிறப்பம்சமாகும். இதே முறையில் வாகன விபத்துகள் ஏற்படுகின்றன. ஆம் சாலையின் திருப்பங்களில்  பழுதாகி மறைந்து நிற்கும் வாகனங்களின் மீது விரைந்து செல்லும் வாகனங்கள் மோதி விபத்தை ஏற்படுத்துகின்றன. பழுதாகி நிற்கும் வாகனங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்.  

     மாட்டு வண்டி, மிதிவண்டி உட்பட அனைத்து வாகனங்களின் பின்புறத்திலும் இரவு நேரத்தில் ஒளிரும் செம்பட்டையை ஒட்டுவது  கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பல சமயங்களில் வேகத் தடைகளே விபத்துகளுக்குக் காரணமாகின்றன. அவற்றின் உயரம், அகலம், எண்ணிக்கை முதலியவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை. அவற்றின் மீது வெண் பட்டைக் கோடுகளும் இருப்பதில்லை. 

  சாலை இடைச் சுவர்களில் மீதும், மேம்பாலங்களின் பக்கச் சுவர்கள் மீதும் சுவரொட்டிகளை ஒட்டுகின்றனர்; விளம்பரங்களை எழுதி வைக்கின்றனர். அதேபோல் சிக்னல்களில் கண்ணக் கவரும் விளம்பரத் தட்டிகள் தொங்க விடப்படுகின்றன.  மேலும் சாலையின் இரு பக்கங்களிலும் வைக்கப்பட்டுள்ள நடிக நடிகையரின் ஆளுயர பதாகைகள், அரசியல் தலவர்களின் பிறந்த நாள் பதாகைகள் என பலவும் அணிவகுத்து நிற்கின்றன.  இவை எல்லாம் ஓட்டுநரின் கவனச் சிதறலுக்குக் காரணமாகின்றன. இப்படி விளம்பரம் செய்வது வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட நடைமுறைகளாகும். நமக்கு ஏனோ இன்னும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. 

  புதிதாக சந்தைக்கு வரும் வாகனங்களில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதால், தொழில்முறை ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது கட்டணமின்றி  பணியிடைப் பயிற்சியைத் தருவதற்கு  அரசு ஆவன செய்ய வேண்டும்.

   அமெரிக்காவில் அண்மைப் பள்ளி திட்டம் செயல்படுவதால் பள்ளிப் பேருந்துகள் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டுமே இயக்கப்படுகின்றன. நம் நாட்டில்தான் பள்ளிக் குழந்தைகள் பேருந்துகளில் நீண்ட நேரம் பயணம் செய்து முப்பது கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள சேய்மைப் பள்ளிகளில் படிக்கின்றனர். அதி தூரப்பயணம் அதிவேகப் பயணமாக மாறி விபத்துகள் ஏற்படுகின்றன. அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைக்கும் அண்மைப் பள்ளி திட்டம் ஏட்டளவில் உள்ள நிலைமை மாறி செயல்பாட்டுக்கு வர வேண்டும்.

    அத்தி பூத்தது போல சாலை ஒழுக்கம் தொடர்பான விளம்பரங்கள் இப்போது ஊடகங்களில் வருகின்றன. இவை பரவலாக்கப்பட வேண்டும். இவை பொதுமக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

    இவ்வாறு பல வழிகளிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாலை விபத்துகள் குறைந்த மாநிலமாக நம் தமிழகத்தை மாற்ற முடியும்.
                                                           /////3/


7 comments:

 1. அருமை ஐயா!
  நம் நாட்டில் அனைவரும் சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும், வெளி நாடுகளில் வேகம் அதிகமாக இருந்தாலும் விபத்துக்கள் குறைவே! காரணம் விதிகளை மதிப்பதே!

  ReplyDelete
 2. பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி

  ReplyDelete
 3. ஒப்பீடு - அழகின் அழகே! இதைப் பார்த்தவர்களாவது முறையாகப் பின்பற்றினால் அவர்கள் பார்த்ததற்கு அழகாகும்.-
  நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 4. விதிகளை மதித்தால் பிரச்சனையே இல்லை. மதிக்காததால் வேதனையே.

  ReplyDelete