Tuesday 31 May 2016

சூர்யாவின் இன்னொரு முகம்

    சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குப் பஞ்சமா என்ன? ஒரு மேம்பாலத்தில் சாரை சாரையாக வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தபோது முன்னால் சென்ற கார் கிரீச் சத்தத்துடன் நிற்கிறது. 


   தன் கார் மீது பின்னால் வருகிற ஒரு பைக் பெரும் சத்தத்துடன் மோதுவதை உணர்ந்த காரோட்டி இறங்கிச் செல்கிறார். அவர் அந்த பைக் காரரிடம், “வெரி சாரிங்கண்ணா முன்னால் சென்ற லாரி திடீரென்று நின்றதால் நானும் சடன் பிரேக் போடவேண்டியதா போச்சு” என்று சொல்லியிருந்தால் பிரச்சனை முடிந்திருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இரு தரப்பினரும் சணடைக் கோழிகளாக மாறுகிறார்கள். காரோட்டி ஒரு பெண் என்றுகூட  பாராமால் கையை நீட்டி நீட்டிப் பேசுகிறார். அவருடன் வந்து விழுந்து எழுந்த நண்பரும் கூட்டணி சேர்ந்து கொண்டு குதிக்கிறார்.

      அந்த வழியே போகிற நடிகர் சூர்யா தன் படகுக் காரை அவசரமாக நிறுத்தச் சொல்லி  இறங்கிவருகிறார். பைக் இளைஞரிடம் ஏதோ பேசுகிறார். வாக்குவாதம் முற்றுகிறது. ஓங்கி பளார் என்று கன்னத்தில் அறைகிறார்; கன்னச்சதை பிய்ந்து இரத்தம் வழிகிறது. வாக்கு வாதம் முற்றியபோதே அதைக்கண்ட பலரும் சூர்யாவின் படப்பிடிப்பு நிகழ்ச்சி என நினைத்து, கண்டு வியந்ததோடல்லாமல் தம் செல்போனிலும் வீடியோ எடுத்துக் கொண்டனர். அடுத்த வினாடியில் தன் காருக்குள் புகுந்து விரைகிறார்  சூர்யா.

    இது ஏதோ சூர்யாவின் படப்பிடிப்பு என நீங்கள் நினைத்தால் உங்களை ஓர் அப்பாவி என்றுதான் நான் நினைக்க வேண்டியிருக்கும். இது உண்மையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்வு  ஆகும். இன்றைய நாளேடுகளில் வந்த செய்தி இது.

     மனிதரை மனிதர் இப்படி காட்டுமிராண்டித் தனமாகத் தாக்குவது எப்படி நியாயமாகும்?. பைக் காரர் பக்கம் தவறே இருக்கட்டும். தட்டிக் கேட்கலாம்; அதற்கென்று தாடையை உடைக்கலாமா? சூர்யா தன் காரில் இருந்தபடியே போலீஸை வரவழைத்திருக்கலாம். அழைப்பது சூர்யா என்பதால் அடுத்து நிமிடமே ஓடிவந்து அணிவகுத்து நிற்பார்கள். அதைவிடுத்து, தானே களத்தில் இறங்கி சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டார். இது சினிமாவில் அவருக்குப் பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் நிஜ வாழ்க்கையில் இது சரியல்லவே.

     கன்னத்தில் அறை வாங்கிய அந்த இளைஞர் ஓர் அரசு மருத்துவ மனைக்குச் சென்றார்; போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நின்றார். பிறகு என்ன நடந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். செருப்பால் அடித்துவிட்டு கையிலே  கருப்பட்டி கொடுத்தானாம் என்னும் கிராமத்துப் பழமொழிதான் என் நினைவுக்கு வருகிறது.

     பேசிக்கொண்டிருக்கும்போதே கையை ஓங்குவதும், கத்திக் கபடாவை எடுப்பதும் மனிதர்க்கு அழகல்ல. அதுவும் படித்த, சமுதாயத்தில் மதிக்கத் தக்க இடத்தில் இருப்போருக்குக் கொஞ்சமும் அழகல்ல.

      பண்புடையார் பட்டுண்டு உலகம் என்று நம் பாட்டன் வள்ளுவர் கூறுவதைக் காற்றிலே போகவிட்டோம். ஆறுவது சினம் என்ற ஒளவையாரின் ஆத்திசூடியைத் தேர்வுக்குப் படித்தவுடன் மறந்து விட்டோம்.

      மனிதரை மனிதராக மதிக்கத் தெரியாதபோது, நாம் பெறும் பட்டங்கள், பதவிகள், விருதுகள் இவற்றால் ஒரு பயனும் இல்லை.
  

     

3 comments:

  1. நல்லக் கருத்து.- நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  2. நல்லக் கருத்து.- நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete
  3. செய்தியைப் படிக்கும்போது நான் நினைத்ததை அப்படியே பகிர்ந்துள்ளீர்கள். அவருடைய இன்னொரு முகம் என்பதைவிட அவருடைய உண்மையான முகம் என்று கொள்ளலாம் போலுள்ளது. நன்றி.

    ReplyDelete