Monday 22 August 2016

சரிந்துவரும் சர்க்கஸ் கலை


      கால வெள்ளத்தில் பல நல்ல விஷயங்கள் காணாமல் போய்விடுகின்றன. அம்மியும் ஆட்டாங்கல்லும் போன இடம் தெரியவில்லை. அஞ்சாங்காய், பல்லாங்குழி விளையாட இப்போது யாருக்குத் தெரியும்? இந்தக் காலத்துச் சிறுவர்களுக்கு சைக்கிள் டயர், பனங்காய்கள் பயன்படுத்தி வண்டிகள் செய்து ஓட்டி விளையாடத் தெரியுமா?

           அந்தக் காலத்தில்  சிறியவர்களும் பெரியவர்களும் தெருப்பக்கத்  திண்ணைகளில் ஓய்வு நேரத்தில் அமர்ந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவார்கள். அதனால் அவர்களுடைய மூளை எப்போதும் சுறுசுறுப்பாகவே இருந்தது. இன்றைக்கு மூன்று மாத குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முட்டாள் பெட்டிக்கு முன் முடங்கிக் கிடக்கிறார்கள். அதனால் மூளை மழுங்கிப்போய் மறதி நோய்க்கு ஆளாகிறார்கள்.

       ஆய கலைகள் அறுபத்து நான்கில் போயே போன கலைகள்தாம் அதிகம்.  அவற்றுள் ஒன்று சர்க்கஸ் கலை. சர்க்கஸ் கலை என்பது மற்றவருக்குப் பொழுது போக்காக இருக்கலாம். ஆனால் அதை நடத்திக் காட்டும் கலைஞர்களுக்கு அது வாழ்வாதாரம் ஆகும். அதனால் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு சர்க்கஸ் பார்ப்பதை, அதுவும்  அவர்கள் நிர்ணயித்திருக்கும் கட்டணத்தில் எது அதிகமோ அதைக் கொடுத்துப் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அண்மையில் சிதம்பரம் வந்து சில நாள்கள் தங்க நேர்ந்தபோது அங்கு சர்க்கஸ் நடப்பதை அறிந்து ஒரு மாலைக் காட்சிக்குச் சென்றேன்.

         குளோபல் சர்க்கஸ் என்று பெயர். நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு உள்ளே சென்று உரிய இருக்கையில் அதாவது ஒரு தூய்மையான நெகிழி நாற்காலியில் அமர்ந்தேன். குறைவானக் கட்டணத்தில் பார்ப்பவர்களுக்கு பழைய அழுக்கடைந்த நாற்காலிகள்! கூட்டம் அதிகம் இல்லாத நிலையிலும் குறித்த நேரத்தில் காட்சியைத் தொடங்கினார்கள்.

        முதலில் அழகான சீனத்துப்  பெண் கலைஞர்கள் இளமை ததும்ப  கைகளில் வண்ணக் கொடிகளை ஏந்தி மின்னலெனத் தோன்றி, புன்முறுவலுடன்  வணங்கிச் சென்றார்கள். ஆபாசமில்லாத அழகிய வண்ணச் சீருடை!  இனிய பின்னணி இசை!  தொடக்கமே அசத்தலாக இருந்தது.

      ஒரு சீனப்பெண்  குமிழ்ச் சிரிப்புடன்  வந்து நான்கு பந்துகளைக் கீழே விழாமல் மேல்நோக்கி வீசியபடி வளைய வளைய வந்தாள். பிறகு நான்கு சிறிய வளையங்களை வைத்து அவ்வாறே விளையாடினாள்.

      அடுத்து வந்தவள்  மேசை மீது இரண்டு அடி நீளமுள்ள ஓர் இரும்புக் குழாயின் மேல் வைக்கப்பட்ட நீள் சதுரப் பலகையின் மேல் நின்று ஒய்யாரமாக பின்னணி இசைக்கேற்ப அபிநயம் பிடித்தாள்! பிறகு அப் பலகையின் நான்கு மூலைகளில் நான்கு கண்ணாடி தம்ளர்களை அவளே வைத்தாள். அவற்றின் மீது ஒரு பலகையை வைத்து ஏறி நின்று ஆடினாள்! இவ்வாறே மேலும் சில பலகைகளை வைத்து ஆடி நின்றதைத் தில்லை நடராசன் பார்த்திருந்தால் அவள் கேட்ட வரத்தைக் கொடுத்திருப்பான்! புவி ஈர்ப்பு விசை மேலாண்மையை எங்கு படித்தாளோ? அவள் வாழ்க!

        தொடர்ந்து வந்த இளம்பெண் ஒருத்தி மேசையின் மேல் மல்லாந்து படுத்து, கால்களைத் தொண்ணூறு டிகிரியிலும், பாதங்களை நூற்று எண்பது டிகிரியிலும் வைத்தாள். பாதங்களின் மீது இருபதுஅடி உயர  மெல்லிய எவர்சில்வர் குழாயைச்  செங்குத்தாக நிறுத்தினார்கள். அந்தக் குழாயில்  இரண்டடிக்கு ஒன்றாக வெவ்வேறு திசை நோக்கி பெரிய பெரிய தோசை திருப்பிகளைப்  பொருத்தி இருந்தார்கள்.  குழாயின்  உச்சியில் ஒரு கூடை இருந்தது. சக கலைஞர் ஒருவர்  ஒரு பந்தை அவளிடம் வீச, அதை ஒவ்வொரு தோசைத் திருப்பியிலும் படச் செய்து மேலே மேலே ஏற்றி கடைசியில் கூடையில் விழச் செய்தாள்! கால்களைக் கொண்டே அந்த அதிசயத்தை நிகழ்த்தினாள். கம்பன் வந்து பார்த்திருந்தால்  அவள் கால் வண்ணம் இங்கு கண்டேன் என்று பாட்டொன்றைப் பாடியிருப்பான்!

       மற்றொரு இளைஞன் வந்து சிவப்பு வண்ண நீரையும், தொடர்ந்து பச்சை வண்ண நீரையும் வயிறு முட்டக் குடித்தான். அங்கும் இங்கும் நடந்தான். பிறகு வரிசை மாறாமல் தனித்தனி வண்ண நீரை வாயின் மூலம் விரைந்து வெளியேற்றினான்!

       சைக்கிள் இல்லாத சர்க்கஸா? ஆறு வளரிளம் பெண்கள் வந்து பல்வேறு சாகசங்கள் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து ஒரு கோமாளி வந்து ஒரு முன் சக்கரம் ஒரு பின் சக்கரம் மட்டும் வைத்துக் கொண்டு சைக்கிள்  ஓட்டி பலத்தக் கைத்தட்டலைப் பெற்றான்.

       சீனத்துச் சிட்டு ஒருத்தி சிங்கார நடையில் வந்து, மேசையின் மீது செங்குத்தாக நிறுத்தப்பட்டிருந்த சம அளவு உயரமுள்ள நான்கு கூர்மையான ஈட்டிகளின்  மீது படுத்துக் கொண்டு பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினாள். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர், "இது உங்களுக்கு வேடிக்கை; அவர்களுக்கோ வாழ்க்கை" என்று கூறியது நெஞ்சை நெகிழ வைத்தது.

      அடுத்து இரு மகளிர் துப்பாக்கியும் கையுமாக வந்தார்கள். முப்பது அடி தூரத்தில் வைக்கப்பட்டிருந்த பலூன்களைக் குறி தவறாமல் சுட்டு உடைத்தார்கள். அவர்களுள் ஒருத்தி ஒரே நேர்க் கோட்டில் வைக்கப்பட்டிருந்த இரு பலூன்களை ஒரே தடவையில் சுட்டு வீழ்த்தினாள். மற்றொருத்தி திரும்பி நின்று கொண்டு முகம் பார்க்கும் கண்ணாடியைப் பார்த்தபடி, துப்பாக்கியைப் பின்புறமாகத் திருப்பிக் குறித் தவறாமல் சுட்டாள். இவர்களை ரியோவுக்கு அனுப்பியிருந்தால் ஒலிம்பிக்கில் தங்கம் கிடைத்திருக்கும் என உரக்கச் சொன்னது நீண்ட கரவொலிக்கு இடையிலும் தெளிவாகக் கேட்டது.

         நிறைவாக அரைவட்டக் கோள வடிவத்தில் அமைந்த சர்க்கஸ் கொட்டகையின் உச்சிப் பகுதியில் அதாவது முப்பது அடி உயரத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆண் கலைஞர்களும் ஒரு பெண் கலைஞரும் நிகழ்த்திக் காட்டிய பார் விளையாட்டு வியப்பின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. கணம் தப்பினால்  கீழே விழ வேண்டியதுதான். இந்த விளையாட்டில் காலக் கணக்கீடுதான் முக்கியம். நேர மேலாண்மை என்பது இவர்களுக்குதான் மிகவும் பொருந்தும்.

        இந்த சர்க்கஸில் விலங்குகளைக் காட்சிப்படுத்தவில்லை என்பது பாராட்டத் தகுந்ததாகும்.

        ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் அரசே முன்வந்து நிரந்தர சர்க்கஸ் கொட்டகையை இலவச மின் இணைப்புடன், இருக்கை வசதியுடன்  அமைத்துத் தந்தால் இந்த சர்க்கஸ் கலை புத்துயிர் பெறும்; கலைஞர்களின் வாழ்வும் வளம்பெறும்.

     நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர்களையும் மேலாளரையும் சந்தித்துப் பாராட்டிப் பேசிவிட்டு வெளியில் வந்தேன். அப்போதுதான் மனைவியிடம் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது நினைவுக்கு வந்தது. சர்க்கஸில் சிங்கம் இல்லாவிட்டால் என்ன, வீட்டுக்குச் சென்றால் பார்க்கலாம் என்று எண்ணியபடி மகிழ்வுந்தை விரைந்து செலுத்தினேன்.

     
  








4 comments:

  1. உண்மைதான் ஐயா
    சர்க்கஸ் கலை போற்றுவார் இன்றி தேய்ந்துகொண்டுதான் வருகிறது

    ReplyDelete
  2. நாம் தொலைத்துவரும் பல கலைகளில் இதுவும் ஒன்று. வேதனைதான்.

    ReplyDelete
  3. Very nice narration Anna! I used to think the same way as you mentioned in this blog about the current status of Circus. Yes, this kind of art is to be preserved / protected. The way you described the whole event gave me the feeling as if I was in that Circus Tent at Chidhambaram. Finally the SINGAM touch .........!!!!!!!!!!!!!

    ReplyDelete
  4. ஆயகலைகள் 64 என முன்னோர்கள் கூறிச்சென்றுள்ளனர். ஆனால் அனைத்து கலைகளையும் நம்மால் கற்க இயலாது. எது நம்மால் இயலுமோ அதனைப் பின்பற்றி மேலே செல்லல் வேண்டும் என்பதன் அடிப்படை தான் வித்தைக்காரர்களின் அற்புதமான செயல்கள். பாராட்ட வேண்டும், போற்ற வேண்டும், அவ்வித்தை கலைஞர்களின் வாழ்கைக்கு ஆதரவாகக் காட்சிக்குச் செல்ல வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பார்கள் அவர்களின் நேரமேலாண்மையே அவர்களை வாழவைக்கிறது. மெல்ல கலைகளும் கலைஞர்களும் அழிந்து கொண்டுள்ளனர். அதற்குக் காரணம் நமக்கு நேரமில்லாமை. தாங்கள் முட்டாள் பெட்டி என குறிப்பிட்ட தொ(ல்)லைக்காட்சிப்பெட்டியில் ஒலி ஒளிக் காட்சிகள் ஆகியன வீட்டினுள் முடக்கிப்போடுகின்றன. இன்றைய விஞ்ஞான யுகத்தில் அழிந்தது சின்னச் சின்னப் பறவைகள் மட்டுமல்ல கலைகளும் தான். திரைப்படங்களில் கமல் போன்றவர்கள் தோல்பாவைக் கூத்தினைச் சுட்டியுள்ளனர். மற்றவர்கள் எப்படித் திருடலாம், எப்படி கொள்ளை அடிக்கலாம், எப்படி கொலை செய்யலாம், செய்த தவறுகளை எப்படி மறைக்க்லாம் எனச் சித்தரிக்கின்றனர். சிலர் பண்டைய மரபுகளை மீறும் செயல்களைப் பதிவு செய்கின்றனர். இனிவரும் எதிர்காலச் சந்ததியினருக்கு ”தொலைந்து போன நினைவுகள்” எனத் தாங்கள் குறிப்பிட்ட விளையாட்டுகள், கலைகள் என அனைத்தையும் எழுதிவைக்க வேண்டும். ஓ இப்படியெல்லாம் நம் முன்னோர்கள் வாழ்ந்துள்ளனர் என வியக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது நமது கலைகள்.
    டாக்டர்.ரா.லட்சுமணசிங்
    பேராசிரியர்
    அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
    கரூர் - 639 005

    ReplyDelete