Tuesday, 30 August 2016

பிழை மலிந்த மொழியினாய் போ போ போ

  நாற்பதாண்டு கால ஆசிரியப் பணியில் ஒரு முப்பதாயிரம் விடைத் தாள்களையாவது திருத்தியிருப்பேன். விடைத்தாள் திருத்தும்போது முதலில் மாணவர் செய்த பிழைகள்தாம் கண்ணில் படும். இப்போதும் நான் பார்க்கும் இடங்களில் எல்லாம் பிழைகளே என் கண்ணில் படுகின்றன. படிக்கும் நாளிதழ், பார்க்கும் தொலைக் காட்சி என அனைத்திலும் பிழைகளே முதலில் தெரிகின்றன.


    ரேஷன் கார்டில் ஆதார் விவரத்தை இணைக்க வேண்டி நேற்று எங்கள் பகுதி ரேஷன் கடைக்குச் சென்றிருந்தேன். நீண்ட வரிசையில் நின்றபடி நோட்டமிட்டேன். சுவரில் ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சிடப்பெற்ற போஸ்டர்கள் வைக்கப்பட்டிருந்தன. Goverment of Tamilnadu என்ற வரியைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். Government என்ற சொல்லில் ஒரு எழுத்தைக் காணவில்லை. ஒட்டு மொத்தமாக நூற்றுக் கணக்கான போஸ்டர்கள் இந்த எழுத்துப் பிழையோடு அச்சிடப்பெற்று அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒட்டியிருக்கும் கொடுமையை என்னென்பது?

    வரிசையில் அருகில் நின்ற ஒருவர் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு ஆங்கிலத்தில் அமைந்த முகவரி அட்டையைத் தந்தார். அதில் 142, Salem Bye pass Road, Karur என்று இருந்தது. குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது “Bye அம்மா” என்று சொல்லுமே அதைப் போட்டிருந்தார். 142, Salem By pass Road என்றுதானே இருக்க வேண்டும்?

     சரி ஆங்கிலத்தை விட்டுத் தள்ளுங்கள். நாம் எழுதும் தாய்மொழியாம் தமிழ் எப்படி இருக்கிறது?

   அதே ரேஷன் கடையில் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்படுகிறது என எழுதப் பட்டிருந்தது. ஒரு வரியில் இரு பிழைகள். அரிசி, பருப்பு வழங்கப்படுகின்றன என அமைய வேண்டும். And என்பதன் மொழிபெயர்ப்பு மற்றும் என்பது. ஆங்கிலத்தில் bread and  butter, ladies and gentlemen என்று எழுதுவது அவர்கள் மரபு. நாமும் அவர்களைப்போல ரொட்டி மற்றும் பால் கிடைக்கும் என்று எழுதுவது சரியன்று. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என்று எழுதுவது தமிழ் மரபு. சேர மற்றும் சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் ஆண்டனர் என எழுதுவது தவறு.

    ஒரு வாக்கியத்தை ஒருமையில் தொடங்கினால் ஒருமையில் முடிக்க வேண்டும். பன்மையில் தொடங்கினால் பன்மையில் முடிக்க வேண்டும். அரிசி, பருப்பு என ஒன்றுக்கும் மேற்பட்டப் பொருள்களை வழங்குகிறார்கள். வாக்கியம் பன்மையில் தொடங்குகிறது; வழங்கப் படுகின்றன என்று பன்மையில் முடிய வேண்டும். மாடுகள் மேய்கிறது என எழுதலாமா? மாடுகள் மேய்கின்றன என எழுத வேண்டும். உதடுகள் ஒட்டாது என்பது தவறு. உதடுகள் ஒட்டா என்பதே சரி.

    அங்கே இருந்த கரும்பலகையில், அரிசி இருப்பு- முன்னூறு மூட்டைகள் என எழுதப்பட்டிருந்தது. முன்னர் நூறு மூட்டைகள் இருந்தன என்றால் இப்போது இருப்பில் எத்தனை மூட்டைகள் உள்ளன என்று கேட்கத் தோன்றியது. முந்நூறு மூட்டைகள் என எழுதுவதே சரியாகும். அதே கரும்பலகையில் இக் கடைக்கு ஐநூறு அட்டைதாரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர் என எழுதப் பட்டிருந்தது. ஐந்நூறு என எழுதுவதே முறையாகும்.

    வரிசை ஆமை வேகத்தில் நகர்ந்தது. எதிரில் இருந்த உணவகம் கண்ணில் பட்டது. போவோர் வருவோரைக் கவரும் இன்றைய ஸ்பெஷல் பலகையில் அக் கடைக்காரர் எழுதியிருந்தப் பட்டியலைப்  பார்த்தேன். முள்ளங்கி சாம்பார், கோஸ் பொறியல், மீன் வருவல் எனப் பட்டியல் நீண்டது. கடைசியில் அன்புடன் வரவேற்க்கிறோம் என்று எழுதி முயற்ச்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்னும் பொன்மொழியுடன் முடித்திருந்தார்.

    பொரிப்பதால் பொரியல், வறுப்பதால் வறுவல். இது தெரியாமல் பொறியல், வருவல் என எழுதிவிட்டார். பொறி என்னும் சொல்லுக்கு இயந்திரம், கருவி எனப் பல பொருள்கள் உண்டு. எலியைப் பிடிக்க உதவும் கருவிக்கு எலிப்பொறி என்று பெயர். வருவல் என்றால் வருக என்று பொருள். கோழி வருவல் என்றால் கோழியே வருக என்றாகிவிடும்! வரவேற்க்கிறோம் முயற்ச்சி என்பனவும் பிழையுடைய சொற்கள்தாம். இரண்டு வல்லின மெய்கள் இணைந்து வாரா என்பது விதி. அதாவது க்,ச்,ட்,த்,ப்,ற் என்னும் ஆறு மெய் எழுத்துகளில் எந்த இரண்டு எழுத்துகளும் அருகருகே அமைவது தவறு.

    அந்த இன்றைய ஸ்பெஷல்  பலகைக்கு அருகில் காவல் துறையினர் வைத்திருந்த வாசகம் சாலை  விதிகளைக் கடைபிடித்தல் நல்லது என்பதாகும். கடைப்பிடித்தல் என எழுதியிருக்க வேண்டும். நடுவில் ப் போடாமல் கடைபிடித்தல் என்று எழுதினால், கடையை வாடகைக்குப் பிடித்தல் என்றுதான் பொருள் தரும்.

   அந்த வழியாக ஒரு கல்லூரிப் பேருந்து கடந்து சென்றது. அதன் பின்புறம் மாணவியர்கள் உள்ளே என எழுதப் பட்டிருந்தது. வாழும் வழியிலும் சரி, பேசும் மொழியிலும் சரி கள்ளின் ஆதிக்கம் அதிகம். மாணவி என்பது ஒருமை; மாணவியர் என்பது பன்மை. மாணவியர்கள் என்று  எழுதலாமா? கோள்கள் என எழுதும் நாம் நாள்கள் என எழுதாமல் நாட்கள் எனத் தவறாக எழுதுகிறோம். நாட்கள் என்றால் அந்த நாளுக்குரிய கள் என்று பொருள்படும்.

     அப்போது அவசரமாக வந்த ஒருவர் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு நுழைந்தபோது, மற்றொருவர், ”அங்கே என்ன எழுதியிருக்கு? பாருங்க” என்றார். வரிசையில் நிற்கவும் என்று எழுதியிருந்தார்கள். வரிசையில் நிற்க என்பதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். எல்லோரும் வரிசையில் வரவும் என்பது தவறு. விரைந்து செல்லவும் என  எழுதினால் தவறு. செல், செல்க, செல்ல வேண்டும் என எழுதலாமே. வரிசையில் வருக என்பதே சரி. உம் என்னும் ஓசையுடன் வாக்கியம் முற்றுப்பெறுவது தமிழ் மரபு அன்று.

      என் பணியை முடித்துத் திரும்பினேன், எனது அலைப்பேசியில் குறுஞ்செய்தி வந்ததாக ஒலித்தது. ஒரு நண்பர், ”இன்று இரவு எட்டு மணிக்கு என் உரை திருச்சி வானொலியில் ஒளி பரப்பாகிறது” என்று செய்தி அனுப்பியிருந்தார். வானொலியில் ஒலிபரப்பும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் நிகழும். இந்த வேறுபாட்டை அவர் அறியவில்லை. அவர் ஒரு கல்லூரியில் கணிதப் பேராசிரியராக உள்ளார்!

    கட்சித் தொண்டர்கள், நடிகர்களின் இரசிகர்கள் வைக்கும் பதாகைகளில் காணப்படும் பிழைகளுக்கு அளவே இல்லை. செய்தித் தாள்களின் தலையங்கக் கட்டுரைகளிலும் பிழைகள் மலிந்துள்ளன. வணிக எழுத்தாளர்களின் படைப்புகளில் எண்ணற்றப் பிழைகள்! சமூக வலைத் தளங்களில் காணப்படும் பதிவேற்றங்களில் உள்ள பிழைகளுக்கும் பஞ்சமில்லை.

    “இவை எல்லாம் பெரிய பிழைகளா? பிழை இருந்தாலும் விஷயம் புரிகிறது. அது போதாதா?” இப்படிக் கேட்டவர் ஒரு தமிழர். இப்படி ஒரு சமரசம் நம் மூதாதையர்களிடம் இருந்திருந்தால் இன்றைக்குத் திருக்குறளும், தொல்காப்பியமும், சங்க இலக்கியமும் நமக்குச் சிந்தாமல் சிதறாமல் கிடைத்திருக்குமா? ஒருவன் தன் தாய்மொழியில் பிழையின்றி எழுதவும் பேசவும் கற்றுக் கொள்வது ஒரு வாழ்வியல் திறனாகும். இந்தத் திறமை வாய்க்கப் பெறாதவர்கள், திறனுடையாரை அணுகித் தவறில்லாமல் எழுதிட ஆவன செய்வது தாய்மொழிக்குச் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும்.

      இப்போது பாரதியார் இருந்தால், பிழை மலிந்த மொழியினாய் போ போ போ என்று பாடியிருப்பார்; இல்லை இல்லை  சாடியிருப்பார்!
    

  

4 comments:

 1. தமிழ் ஆங்கிலம் இரு மொழிப் பயன்பாட்டிலும் இவ்வாறான பிழைகளை அதிகமாகக் காணமுடிகிறது. இதில் வியப்பு என்னவென்றால் படித்தவர்கள் இந்தப் பிழைகளை அதிகமாகவே செய்கிறார்கள்.

  ReplyDelete
 2. It is an enlightening glimpse of mistakes done often in public. No words to say! Very fantastic article. It shows 100% the real life situation. Nowadays the importance to Mother Tongue has been dwindling. As you suggest it is the duty of every one to have a self-evaluation of their language skills (Tamil). The spelling bugs done frequently are to be corrected by knowing its correct usage. Kindly post often such a article to know the usual things. I learnt many from this posting and I have corrected myself sir. Thanks for enlightening us.

  ReplyDelete
 3. அண்ணா மிக அருமையான பதிவு. எனக்குள் ஒரு எரிமலையாக இருந்ததை மிக அழகான நடையில் உங்களுக்கே உரித்தான நடையழகில் பதிவு செய்திருந்தீர்கள்.

  எழுத்துப் பிழைகள் இப்படிக் காணும் இடமெல்லாம் மலிந்து கிடக்கும் அதே சமயம், உச்சரிப்பில் நடக்கும் கூத்து.... சொல்லி மாளாது.

  ReplyDelete
 4. பிழை. தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் பிழை ஏற்படுவது இயற்கை. ஆனால், தமிழ்நாட்டில் பிறந்து, பிறந்தது முதல் தமிழ் மொழி பேசி வளர்ந்து, வாழ்ந்து வரும் இன்றைய தமிழர்கள் ஒரு மொழியின் அடையாளத்தை அறியாதது, பிழையுடன் பேசுவது, எழுதுவது மிகவும் வருத்தத்திற்குரியது. இதற்குக் காரணம் கற்றவர்களைக் கூறுவதா?, கற்பித்தவர்களைக் கூறுவதா? அல்லது இருவரிடமும் தவறா? என ஆராயவேண்டியுள்ளது. எனது சிந்தனைப்படி ஆரம்பக்கல்வியைச் சரியாகக் கற்பித்திருந்தால் பிழையுடன் எழுதும் நிலையைத் தவிர்த்திருக்கலாம். நான் முதுநிலைத் தமிழாசிரியராக மூலனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்தபோது ஏழாம் வகுப்பில் அறிவியல் பாடத்தை ஒரு ஆசிரியர் கற்பித்துக்கொண்டிருந்தார். இவரை எங்கோ பார்த்திருக்கிறோமே என நினைத்த அளவில் நினைவில் வந்தார். ஆழ்குழாய் அமைப்பதற்கான ஒரு உபகரணத்தை ஒவ்வொரு நாளும் பேருந்தில் ஏற்றிச் செல்வார் அப்பொழுது பார்த்திருக்கிறேன். அவரிடமே கேட்டேன் விடுமுறை மற்றும் பெரும்பாலான நாட்களில் இப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதாகக் குறிப்பிட்டார். அன்று அவரை ஆசிரியப்பணி தவிர்த்து பிறபணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளக் கூடியவராக நான் பார்த்தேன். ஆசிரியப்பணியை அ(ற)ரைப்பணி ஆக்கிவிட்டார். ஆசிரியரிடம் கற்பிக்கும் கவனமின்மைக்குச் சான்றாகச் சுட்டியுள்ளேன். ஆரம்பப்பள்ளிகளில் எழுத்துப்பயிற்சி, வாசிப்புப்பயிற்சி இவ்விரண்டையும் முறையாக வழங்கினால் போதுமானது. மேல்நிலை வரும்பொழுது பிழையும் வராது, படிப்பில் கடினமும் ஏற்படாது. பெரும்பாலும் சந்தி எழுத்துக்கள் எங்கு தோன்றும் என்பதற்கு இலக்கணம் கற்காமல் பிழையின்றி எழுத நான்கு பக்கங்களில் குறிப்புகள் ஒன்றைத் தயாரித்துள்ளேன். முறையே அகர ஈற்றுச் சொற்கள், ஆகார ஈற்றுச் சொற்கள் என 12 தலைப்புகளில் (பெயர்+பெயர்), (வினை+வினை), (பெயர்+வினை) என சொற்களில் சந்தி தோன்றும் நிலையைக் குறித்துள்ளேன். இச்செய்தி இன்றைய மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. பாடம் கற்பிக்கும் பொழுது உடனே அதற்கான தீர்வைக் கொடுத்து புரிதலை ஏற்படுத்துகிறேன். கை எலும்பில் ஏற்பட்ட சிறு விரிசலுக்கு மருத்துவச் சிகிட்சைக்காக அபிஷேக் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அங்கு பார்த்த பெயர்ப்பலகைகள் எல்லாமே எழுத்துப்பிழை தான். நான் அங்கு பணியாற்றிய செவிலியர்களிடம் கேட்டுவிடத் தீர்மானித்து “என்ன, இங்குள்ள பெயர்ப்பலகைகள் எல்லாமே எழுத்துப்பிழையாக உள்ளதே” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்ன பதில் சிரிப்பைத் தான் வரவழைத்தது. இந்த பலகைகள் நாங்கள் தயாரித்தது அல்ல “மருந்து விற்பனையாளர்கள் தயாரித்து வழங்கியது என்றனர்”. யார் வழங்கினாலும் பிழையானதை வைக்கலாமா? எனக் கேட்டுவிட்டுப் புறப்பட்டேன். ஆரம்பக்கல்வியில் ”சிலேட்டு” என்ற பென்சிலால் எழுதும் ஒரு பொருளை மிகவும் பாதுகாப்பாக பள்ளிக்குக் கொண்டு செல்வோம். அதில் வீட்டுப்பாடம் எழுதி வர ஆசிரியர் கூறுவார். அடுத்தநாள் எழுதிவராத மாணவர்களுக்கு ஆசிரியர் தண்டனை வழங்குவார். அதேபோல் இரட்டை ரூல் நோட்டு, நான்கு ரூல் நோட்டு இதில் எழுதி வரும் பயிற்சி வழங்கப்பட்டது, பிழைகள் இல்லை. ”போலச்செய்தல்” அடிபடையில் ஆசிரியர் கரும்பலகையைப் பயன்படுத்தினார். மாணவர் ஆசிரியரின் கையெழுத்தைப் பார்த்து தானும் அதுபோன்று எழுதினர். மீண்டும் 40 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றால் பிழையின்றி எழுதலாம்.
  டாக்டர்.ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete