Tuesday, 9 August 2016

ஆயிரங்காலத்துப் பயிரில் அவசரம் காட்டலாமா?

     திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்னும் சொல் வழக்கு நம் கிராமங்களில் உண்டு. திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்த திருவள்ளுவர் இல்லறவியலில் இருநூறு குறட்பாக்களை அமைத்து மிக விரிவாகப் பேசுகிறார். மணமகன் மணமகள் பொருத்தப்பாடு குறித்துத் தொல்காப்பியர் தனி நூற்பாவை அமைத்துள்ளார்.


       ஆனால் இவற்றைப் பற்றி எந்த ஒரு புரிதலும் இல்லாமல் அவசர கோலத்தில் திருமணத்தைச் செய்துவிட்டு, பிறகு ஓய்வாக அமர்ந்து கவலைப்படும் பெற்றோர்கள் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு அண்மையில்  சென்னை உயர்நீதி மன்றத்தில் அரங்கேறிய ஒரு மணமுறிவு வழக்கே சான்றாகும்.

      மணப் பெண்ணுக்கு இருபத்து நான்கு வயது; மணமகனுக்கு இருபத்து ஆறு வயது. படிப்பு, வேலை, சம்பளம், சாதகப் பொருத்தம் பார்த்து ஒரே வாரத்தில் திருமணம் செய்து வைக்கிறார்கள்.  திருமணம்  முடிந்து இரண்டே நாளில் அப்பாவை தொலைப்பேசியில்  அழைத்து, "இவரோடு எனக்கு வாழப் பிடிக்கவில்லை; உடனே வந்து அழைத்துச் செல்லுங்கள்" என்று கூறுகிறாள். நேரில் சென்று சமாதானம் செய்கிறார். சரியாக பதினைந்தாம் நாள் பெட்டியும் கையுமாக பெற்றோர் வீட்டுக்கு வந்து விடுகிறாள். தாலி கட்டியவன் ஓடிவந்து கெஞ்சிப் பார்க்கிறான்; உறவினர் வந்து பேசிப் பார்க்கிறார்கள். அவள் உறுதியாக இருக்கிறாள்; மண முறிவு வேண்டி வழக்குத் தொடுக்கிறாள்.

       இரண்டு ஆண்டுகள் நடந்த வழக்கு நிறைவுக்கு வந்தது. இரு தரப்பினரும் தீர்ப்பினை எதிர்பார்த்து நீதிமன்றத்து வாயிலில் நின்றார்கள். மாண்பமை நீதிபதி என்.கிருபாகரன் தீர்ப்பை வழங்கினார். பெற்றோர், மணமகன், மணமகள், பதின்ம வயது இளைஞர் இளம்பெண்கள்,அரசினர் என அனைவரையும் சிந்திக்க வைக்கும் தீர்ப்பாக அது அமைந்துள்ளது. இனி அவருடைய கூற்றில் தீர்ப்பினைப் பார்ப்போம்.

     " திருமணம் என்பது ஒரு புனிதமான நிறுவனமாகும். அது உண்மை மற்றும் பரஸ்பர நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டது.அதில் மணமகனும் மணமகளும் பங்குதாரர்கள்; சம உரிமை உடையவர்கள். இந்த வழக்கில் தொடர்புடைய மணமகனுக்கு இதய நோய், புற்று நோய் இருந்தது என்பது மறைக்கப்பட்டுத் திருமணம் நடந்துள்ளது. திருமணவாழ்வில் ஈடுபடக்கூடாது என மருத்துவர் கூறியிருந்தும் அவர் அதை மறைத்துத் திருமணம் செய்துள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய பெண்ணின் வேண்டுகோள் நியாயமானது. எனவே இந்த நீதிமன்றம் இத்திருமணம் செல்லாது எனத் தீர்ப்பு வழங்குகிறது".

   தீர்ப்பின் அடுத்தப் பகுதிதான் மிக முக்கியமானது; சிந்திக்கத் தக்கது.

       "மணமக்கள் குறித்த உடல்நலத் தகவல்கள் மறைக்கப்பட்டு இன்றைக்குப் பல திருமணங்கள் நிச்சியக்கப்படுகின்றன. அதனால் அவர்களுடைய இல்லற வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. மேற்காண் வழ்க்கில் மணமகனின் உடல்நலம் குறித்த மருத்துவர் அறிக்கையைக் கோரியிருந்தால் அப்பெண்ணுக்கு இந்தச் சோகம் நேர்ந்திருக்காது. எனவே இனியாவது மாநில மத்திய அரசுகள் திருமணத்துக்கு முந்தைய  ஆலோசனை(Pre-marital counselling) வழங்க ஆவன செய்ய வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு விளம்பரங்கள் ஒலி, ஒளி மற்றும் அச்சு  ஊடகங்களில் வெளிவர அரசு ஆவன செய்ய வேண்டும். இது குறித்தக் கருத்தரங்குகள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் நடைபெற  வேண்டும். செய்வார்களா?" என்று தன் தீர்ப்பை முடிக்கின்றார்.

       உண்மையில் இது யோசிக்க வேண்டிய விஷயம்தான்.

3 comments:

 1. காலங்கள் மாறமாற அனைத்திலும் முன்னேற்றம் என்று சொல்லிக்கொண்டு பின்னுக்கு அல்லவா போய்க்கொண்டிருக்கிறோம்?

  ReplyDelete
 2. பால்ய விவாகம் முடிந்து தற்காலத்தில் அவசர அவசரமாகத் திருமணங்கள் நடத்துகிறார்கள். ஜாதகப் பொருத்தம் என்பது சாதகமாக்கிக் கொள்ளுதல் என்பது தான். ஜோசியர் கடவுள் அல்ல. கட்டத்திற்குள் வாழ்கை தெரியாது. வாழ்ந்து பார்த்தால் தான் வாழ்கை புரியும். தற்காலத்தில் மணமுறிவு என்பது சர்வ ’சாதாரணம்’ அதுவும் பெண்பிளளையைப் பெற்றவ்ர்களுக்கு ‘ரணம்’. நடை பிணமாக வாழ்வர். ஆனாலும் கூட ஜாதகத்திற்கு தரும் முக்கியத்துவம் மருத்துவ உடற்கூறு அறிக்கையை இருதரப்பும் வழ்ங்கிச் சம்மதித்தால் இத்தகைய மனமுறிவோ, மனஉளைச்சலோ ஏற்படுவதைத் தவிர்க்கலாம். நமது பழமொழிகள் கூட அறிவியலை மையப்படுத்தியே நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். நாம் தான் அதற்கு ஏற்புடைய வேறு சிந்தனைகளை ஒப்புமையாக்கி வாழ்ந்து வருகிறோம். இன்று மருத்துவமும், அறிவியலும் நல்ல வளர்ச்சியில் இயங்குகிறது. மனவேறுபாடின்றி ஆணும் பெண்ணும் சம்மதித்து உடல்நோய், உள்ளநோய், குழந்தைப்பேறு இன்னபிறவற்றை வெளிப்படையாக அறிந்து திருமணத்திற்குச் சம்மத்தித்தால் மனமுறிவின்றி, மணமுறிவின்றி மகிழ்ச்சியாக இல்லறத்தை நல்லறமாக மாற்றியமைக்கலாம். எதிர்காலச் சந்ததியினர் தாங்கள் தெரிவித்த செய்தியை உணர்ந்து மணவாழ்வில் இன்புற்று வாழ வழியை அறிந்து அமைத்துக் கொள்ளவேண்டும்.
  டாக்டர்.ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete
 3. பால்ய விவாகம் முடிந்து தற்காலத்தில் அவசர அவசரமாகத் திருமணங்கள் நடத்துகிறார்கள். ஜாதகப் பொருத்தம் என்பது சாதகமாக்கிக் கொள்ளுதல் என்பது தான். ஜோசியர் கடவுள் அல்ல. கட்டத்திற்குள் வாழ்கை தெரியாது. வாழ்ந்து பார்த்தால் தான் வாழ்கை புரியும். தற்காலத்தில் மணமுறிவு என்பது சர்வ ’சாதாரணம்’ அதுவும் பெண்பிளளையைப் பெற்றவ்ர்களுக்கு ‘ரணம்’. நடை பிணமாக வாழ்வர். ஆனாலும் கூட ஜாதகத்திற்கு தரும் முக்கியத்துவம் மருத்துவ உடற்கூறு அறிக்கையை இருதரப்பும் வழ்ங்கிச் சம்மதித்தால் இத்தகைய மனமுறிவோ, மனஉளைச்சலோ ஏற்படுவதைத் தவிர்க்கலாம். நமது பழமொழிகள் கூட அறிவியலை மையப்படுத்தியே நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். நாம் தான் அதற்கு ஏற்புடைய வேறு சிந்தனைகளை ஒப்புமையாக்கி வாழ்ந்து வருகிறோம். இன்று மருத்துவமும், அறிவியலும் நல்ல வளர்ச்சியில் இயங்குகிறது. மனவேறுபாடின்றி ஆணும் பெண்ணும் சம்மதித்து உடல்நோய், உள்ளநோய், குழந்தைப்பேறு இன்னபிறவற்றை வெளிப்படையாக அறிந்து திருமணத்திற்குச் சம்மத்தித்தால் மனமுறிவின்றி, மணமுறிவின்றி மகிழ்ச்சியாக இல்லறத்தை நல்லறமாக மாற்றியமைக்கலாம். எதிர்காலச் சந்ததியினர் தாங்கள் தெரிவித்த செய்தியை உணர்ந்து மணவாழ்வில் இன்புற்று வாழ வழியை அறிந்து அமைத்துக் கொள்ளவேண்டும்.
  டாக்டர்.ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர்
  அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)
  கரூர் - 639 005

  ReplyDelete