Friday, 30 December 2016

ஒருத்தி இராணுவமாய் ஒரு தமிழ்ப்பெண்

   அன்பு மகள் அருணாவுக்கு,
       இன்று உன்னுடைய பிறந்தநாள். கணவன் மனைவி என்று இருந்த எங்களைப் பெற்றோர் என்னும் பெரும் பேற்றினை நீ பெறச் செய்த நாளும் இதுதான்! உனக்கு எங்கள் இதயம் நிறைந்த  பிறந்தநாள் வாழ்த்துகள்.


   நீ அனுப்பிய கட்செவி அஞ்சலில், நியூ ஆர்லியன்ஸ் என்னும் சுற்றுலா தலத்தில் இப்போது உன் கணவருடனும் உறவினர்களுடனும் சேர்ந்து உன் பிறந்த நாளைக் கொண்டாடுவதாய்க் குறிப்பிட்டிருந்தாய். மிக்க மகிழ்ச்சி.

    பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று இந்தியாவையும், செந்தமிழ் நாடென்னும் போதினிலே- இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே என்று தமிழ் நாட்டையும் பாரதி போற்றிப் பாடியிருப்பது உனக்குத் தெரியும். ஆனால் அவன் வாழ்ந்த காலத்தில்  அப்படி ஒன்றும் பாராட்டும்படியாய் நாடும் இல்லை தமிழ்நாடும் இல்லை என்பதுதான் உண்மை.

      பெண் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாவம் எனப் பெற்றோர் கருதிய காலம் அது.. பத்து வயது முடிவதற்குள் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும். பகலில் வக்கணையாய் சமைத்துப் போட்டுக் கணவனின் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதும், இரவில் அவன் விரும்பும் போதெல்லாம் காமப்பசியைத் தீர்ப்பதும், ஆண்டு தோறும் குழந்தை ஈனுவதும் அவளது வேலை என்றிருந்தக் காலக்கட்டம் அது.

     இளம் வயதில் கணவனை இழந்த பெண் உடன்கட்டை ஏற வேண்டும் அல்லது வெள்ளை ஆடை உடுத்தி நல்லது எதற்கும் முகம் காட்டாமல் மூலையில் கிடந்து நோக வேண்டும்; பின் சாக வேண்டும்.

     இது ஏதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை  என்று எண்ணாதே. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ்நாட்டு நிலைதான் இது! சமுதாயத்தில், குறிப்பாக இந்துக்கள் சமுதாயத்தில், மேலும் குறிப்பாக பிராமணர் சமுதாயத்தில்தான் இந்த இழிநிலை வேரூன்றி இருந்தது.

     அந்தக் காலக்கட்டத்தில் பெண் சமுதாயம் அஞ்சி நடுங்கும் ஒரு வழக்கம் இருந்தது. மேல்தட்டு ஆண்களின்  காமநுகர்வுக்கு என்ற வகையில் கோவில்களில் பல இளம்பெண்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக ஒப்படைக்கப்பட்டனர். கடவுளுக்கே பொறுக்காத அடாவடித்தனமான செயல் அது. அதற்கு தேவதாசி முறை என்று திருப்பெயர் சூட்டியிருந்தது அன்றைய ஆணாதிக்கச் சமுதாயம்.. இவற்றை எல்லாம்  நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை.

   இந்தப் பின்னணியில், புதுக்கோட்டையில் ஒரு பிராமணர் குடும்பத்தில் மூத்தப் பெண்ணாகப் பிறந்து கட்டுத் தளைகளை எல்லாம் உடைத்தெறிந்து தானே முயன்று படித்து நாட்டின் முதல் மருத்துவப் பட்டதாரியாக வலம் வந்தவர் முத்துலட்சுமி ரெட்டி.
       அவர் ஒரு புரட்சிப் பெண்மணி. அவர்  செய்த புரட்சிகள் பற்பல. பத்து வயது ஆனவுடன் திருமண ஏற்பாடு நடந்தது. அதை முதலில் எதிர்த்து வெற்றிகண்டார். வயதுக்கு வந்ததும் பள்ளிக்கூடம் அனுப்ப மறுத்தனர். வீட்டிலிருந்தே படித்துத் தனித் தேர்வராக பொதுத்தேர்வு எழுதி மெட்ரிகுலேட் ஆனார். 

     அக்காலத்தில் கல்லூரியில் சேர்ந்து படிக்க பெண்களுக்கு அனுமதியில்லை. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த குறுநில மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டமான் முத்துலட்சுமியின் விண்ணப்பத்தை ஏற்று புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர அனுமதி அளித்தார். உதவித் தொகையும் அளித்தார். அக்கல்லூரியின் முதல்வரே அதை எதிர்த்தார் என வரலாறு சொல்கிறது. அந்த முதல்வர் வேறு யாருமல்லர்; முத்துலட்சுமியின் அப்பா நாராயணசாமி ஐயர்தான்!      போனால் போகட்டும் என்று ஓராண்டு படித்தவுடன் ஆசிரியராகச் சொன்னார். ஆனால் மகளோ மருத்துவம் படிப்பதில் உறுதியாக இருந்தார்.

    இண்டர்மீடியட் படிப்பு முடிந்ததும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் படிக்க விண்ணப்பித்தார். வெள்ளைக்கார முதல்வர் விதிகளில் திருத்தம் செய்து அனுமதி அளித்தார். மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஒரே பெண் அவர்தான்! சிறந்த முறையில் படித்துத் தேறினார். இது நடந்த ஆண்டு 1912.

   சென்னையில் அவருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. என்றாலும் தன்னைப்போல  மற்றப் பெண்களும் முன்னேற ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி செயலில் இறங்கினார். சென்னை மயிலாப்பூரில் ஒளவையார் பெயரில் ஒளவை ஹோம் என்னும் விடுதியோடு இணைந்த பள்ளியைத்  தொடங்கினார். ஆதரவற்றப் பெண்களுக்கென முதல் இல்லம் தொடங்கியவரே அவர்தான். அப்பள்ளியில் பயின்று பிறகு மருத்துவம் படித்த சிலரின் உதவியோடு அடையாறு புற்றுநோய் மருத்துவ மனையைத் தொடங்கினார்.  அங்கே தன்னுடன் பணியாற்றிய ஒத்த அறிவும் உணர்வும் கொண்டடாக்டர் சுந்தர ரெட்டி என்னும் இளைஞரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்தெட்டு. அவர்கள் தொடங்கிய நிறுவனங்கள் அனைத்தும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி இன்றும் பயன் தருகின்றன.

     ஒரு மூன்றாண்டுகள் மெட்ராஸ் இராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தபோது நாட்டில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினர் ஆன பெண்மணி அவரே. அவ் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டார். சரோஜினி நாயுடு, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோருடன் நெருங்கிப் பழகினார்.

    பெண்குழந்தைத் திருமண தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தார். தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்தைப் பலத்த எதிர்ப்புக்கிடையே போராடி நிறைவேற்றினார். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உடன்கட்டை ஏறும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். நாடு முழுக்க பெண்கள் சங்கங்களை நிறுவி அவர்தம் உரிமைக்ககப் போராடினார். நேரு அவர்களைச் சந்தித்து வாதம் செய்து பெண்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுத் தந்தார்.
   இவரது புரட்சி மிகுந்த செயல்பாடுகளைக் கண்டு மகிழ்ந்த காந்தி அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்துக்கு நான் சென்றபோது அக் கடித நகலைப் பார்த்து வியந்திருக்கிறேன்.

      “என்னுடைய போராட்ட உணர்வுக்கு உரமாக அமைந்தவர்கள் இரு தமிழ்ப் பெண்கள். அன்று தென் ஆப்பிரிக்காவில் தில்லையாடி வள்ளியம்மை; இன்று இந்தியாவில்  முத்துலட்சுமி” என்று பதிவு செய்துள்ளார்.
முத்துலட்சுமி ரெட்டி  எழுதியுள்ள My Experience as Legislator என்னும் நூலைப் படி. நீ மட்டும் அன்று இம் மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு பெண்ணும் அந்நூலைப் படிக்க வேண்டும்.

    அன்பு மகளே! இவற்றை  உன் பிறந்தநாளில் பகிர்ந்துகொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நீ எல்லயற்ற சக்தி உடையள்; அறிவாற்றலும் செயல்துடிப்பும் மிகுந்தவள். நீ கரம்பற்றிய  கணவரும் உன்னைப் போலவே ஒரே அலைவரிசையில் சிந்திக்கும் சமூக ஆர்வலர். எனவே  நீங்களும் வருங்காலத்தில் முத்துலட்சுமி ரெட்டி இணையரைப்போல ஒரு நற்செயலைச் செய்யத் தூண்டும் நோக்கில் இம்மடலை எழுதுகிறேன்.

    இது குறித்துச் சிந்தித்து அதை உன் ஆழ் மனதில் பதியம் போடு. அது செயல் வடிவம் பெறுவதற்கான  காலம் கனியும்.

   வழக்கம்போல இந்த ஆண்டும் உன் பிறந்த நாளில் ஆதரவற்ற நூறு முதியவர்களுக்கு கரூர் ஞானாலயா வள்ளலார் கோட்டம் மூலம் சுவையாக சூடாக மதிய உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளேன்.

மீண்டும் உனக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

 இப்போது  கரூரில் நம் இல்லத்தில் தங்கியுள்ள உன் தாத்தாவும் தம் வாழ்த்துகளையும் ஆசிகளையும் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

இப்படிக்கு,
உன் பாச மழையில் நனையும்,
அம்மா, அப்பா.

    

12 comments:

 1. அருமையான கடிதம் ஐயா... உங்கள் எண்ணம் நிறைவேறட்டும்...

  சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 2. arumai arumai
  manathai nekizha seisuthu vittsthu

  ReplyDelete
 3. வணக்கம்
  ஐயா.

  மனதை நெரும் கடிதம்.சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இது உங்கள் மகளுக்கு மட்டும் நீங்கள் எழுதியுள்ள கடிதமல்ல. அனைத்துப் பெற்றோரும் தத்தம் மகளுக்கு எழுதியுள்ள கடிதமாகவே கொள்கிறோம்.

  ReplyDelete
 5. மிகச்சிறந்த ஒரு வாழ்த்து மடல். அருணாவுக்கு எம் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளர்க.

  ReplyDelete
 6. இப்படியல்லவோ இருக்க வேண்டும் தந்தை! இப்படிப்பட்ட தந்தையை தாயை பெற்ற அருணாவிற்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க குலமோடு! - நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 7. இப்படியல்லவோ இருக்க வேண்டும் தந்தை! இப்படிப்பட்ட தந்தையை தாயை பெற்ற அருணாவிற்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள். வாழ்க குலமோடு! - நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 8. Belated Birthday wishes to dear Aruni and Very happy and prosperous new year to the entire family of respected Dr.AG sir. Indeed I feel very proud to be the part of the family. May God shower his blessings on each and every one of them in view of making them live very healthy and happily.

  ReplyDelete
 9. அன்பு மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்து மட்டும் தாங்கள் தெரிவிக்கவில்லை. தன்னைத் தந்தையாகிய தருணத்தை மகளுடன் பகிர்ந்து கொண்டீர்கள். உங்களை அடுத்த உயரத்திற்குக் கொண்டு சேர்த்தவர் உங்கள் மகள் அருணா. வள்ளுவரின் குறட்பாவான,
  ”ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனைச்
  சான்றோன் எனக்கேட்ட தாய்”
  எனக் கூறுகிறது. வள்ளுவர் கூறிய வாக்கினைத் தங்கள் மகள் மெய்ப்பித்துள்ளார். தங்களது கட்டுரையில் குறிப்பிட்டது போல மதர் தெரசா, முத்துலட்சுமி ரெட்டி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, அன்னிப்பெசண்ட் அம்மையார் மற்றும் எண்ணற்ற பெண்மணிகள் வீட்டை மட்டுமல்ல நாட்டையும் கண்ணாகப் போற்றிப் பேணினர். அன்றைய பெண்கள் நாட்டில் பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டனர். இன்றைய பெண்கள் அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியில் தங்களின் பங்களிப்பைச் செய்கின்றனர்.
  தங்களது மகள் அருணாவிற்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
  நன்றி! வணக்கம்.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  கரூர்.

  ReplyDelete
 10. ஐயா தாங்கள் எழுதிய இக்கட்டுரையைப் படித்த பின்னர் தான் முதல் மருத்துவப் பட்டதாரி நம் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதை அறிய முடிந்தது.பாரதியின் காலத்தில் பெரும் முன்னேற்றம் இல்லை. ஆனால் அவரின் தொலைநோக்குப் பார்வை எவ்வளவு வியப்பானது. இதே போன்ற நிகழ்வுதான் 1993ம் ஆண்டு நான் ஒன்பதாம் வகுப்புப் பயின்று கொண்டிருந்தேன். ஒரு நாள் காலையில் நடந்த பள்ளியின் வழிபாட்டுக்கூட்டத்தில், மாணவர்களே!உங்களைச் சுற்றுலா அழைத்துப் போகப்போகிறோம். ஒருநாள் இரண்டு நாள் இல்லை, பத்து நாள் என்றீர்கள். நாங்கள் வியப்பின் உச்சியில் இருந்தோம். நீங்கள் சொன்ன சுற்றுலாத் தளம் அந்தமான். ஆனால் அது நடக்கவில்லை. 21 ஆண்டுகள் கழித்து 2014ம் ஆண்டு நானும் எனது மனைவியும் 6 நாட்கள் சென்று வந்தோம் எந்த விதமான செலவுமின்றி. இதில் நான் சொல்ல வரும் தகவல் என்னவென்றால், ஓர் உயர்ந்த மனிதரின் தொலைநோக்குச் சிந்தனைக்கனவுகள் நனவாக நாட்களானாலும் நடக்கும். எனது சகோதரிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete