Sunday 15 January 2017

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே

     பொங்கல் என்றால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. மாட்டுப் பொங்கலன்று எல்லோருக்கும் புத்தாடைகளைக் கொடுப்பார் எங்கள் அப்பா. முதலில் தலைமைப் பண்ணையாள் நாயகனுக்கும் அவர் மனைவிக்கும் கொடுப்பார். தொடர்ந்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுப்பார். பிறகு என் அண்ணன் இருவருக்கும் வேட்டி சட்டை கொடுப்பார். அம்மாவை அழைத்து சேலை கொடுப்பார்; இரவிக்கை எல்லாம் கிடையாது. எங்கள் அம்மா இரவிக்கை போட்டு நான் பார்த்தது இல்லை; அப்பா சட்டை போட்டும் பார்த்ததில்லை. கடைக்குட்டி என்பதாலோ என்னவோ என்னைக் கடைசியாக அழைத்து, புது அரைக்கால் சட்டை, அரைக்கை சட்டை இரண்டையும் எடுத்துக் கொடுப்பார்.


     மறுநாள் காணும் பொங்கலன்று என் அண்ணன் இருவரும் நானும் புது உடைகளை அணிந்துகொண்டு வரிசையாக  அப்பா அம்மா காலிலே விழுந்து வணங்குவோம். காலணாவோ அரையணாவோ காசு கொடுத்து “மகராசனா இருங்க” என்று சொல்லி வாழ்த்துவார்கள். தாத்தா பாட்டியர் கால்களில் விழுந்து கும்பிடும் பேறு எனக்கு வாய்க்கவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள்களில் அவர்கள் இறைவனடி சேர்ந்திருந்தார்கள்.

      அப்பா கொடுத்த காலணா காசின் நடுவில் சிறு துளை இருக்கும். அதை என் அரைஞாண் கயிற்றில் கோர்த்துக் கட்டிக் கொள்வேன்!

       அந்தக் காலத்துச் சட்டை இப்போதிருக்கும் நான்கு ஐந்து பித்தான் வைத்த சட்டை போல் இருக்காது. பனியன் போடுவது போல தலை வழியாக போடும் சட்டை அது. இரண்டே பித்தான் மட்டும் இருக்கும். துணியை எடுத்து தைத்துக்கொள்ள வேண்டும். ஆயத்த ஆடை அறிமுகம் ஆகாத காலம் அது.


    எங்கள் ஊரான கூவத்தூரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் ஆண்டிமடம் என்னும் சிறு நகரம். அங்கே அருணாசல முதலியார் துணிக்கடை. எங்கள் அப்பாவுக்கு அங்கே கணக்கு உண்டு. கடனில் வாங்கிவிட்டு அறுவடை சமயத்தில் பணம் கொடுப்பது வழக்கம். பொங்கல் சமயத்தில் பண்ணையத்தில் வேலைசெய்யும் வேலையாள்கள், அவர்களுடைய மனைவி மக்கள், நாங்கள் அண்ணன் தம்பி மூன்று பேர் என எல்லோருக்கும் அப்பா புதுத் துணி எடுப்பார். அம்மாவுக்கும் உண்டு. ஆனால் அவர் சலவைத் துணி மட்டுமே போடுவார்; புதுத் துணி போட்டதாக எனக்கு நினைவில்லை. எனக்கும் என் அண்ணன்களுக்கும் ஒரே மாதிரியாக சட்டைத்துணி எடுப்பார். மூன்று பேருக்கும் சீருடைதான்! அதுவும் அவருடைய எண்ணத்தில்தான் வண்ணத்தில்தான்! யாரும் பிடிக்கவில்லை என்று முணுமுணுக்க மாட்டோம்.

       எங்கள் வீட்டை விட மாட்டுக் கொட்டைகை பெரிதாக இருக்கும். வீடும் கொட்டகையும் வரகு வைக்கோலால் வேயப்பட்டவை. வரகு வைக்கோலால் வேய்ந்த காரணத்தால், வீட்டின் உட்புறம் கோடையில் குளிர்ச்சியாகவும் மழைக்காலத்தில் கதகத எனவும் இருக்கும்.

   அந்த நீண்ட மாட்டுக் கொட்டகையின்   உள்ளும் புறமும் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுகள் கட்டியிருக்கும். உழவு மாடுகள் ஆறு ஜோடி இருந்தன. முப்பது நாற்பது காணி நிலம் இருந்ததால் அத்தனை உழவு மாடுகள் தேவைப்பட்டன. வண்டி மாடுகள் இரண்டும் மணப்பாறை காளைகள். வண்டி என்றால் சாதாரண வண்டியன்று. முற்றிலும் தேக்கு மரத்தால் ஆன வண்டி. அந்த ஊரில் ஓரிரு வீடுகளில்தாம் இதுமாதிரி தேக்கங்கால் வண்டியும் மணப்பாறை மாடும் இருக்கும். ஒரு பி.எம்.டபிள்யூ கார் வைத்திருப்பதற்குச் சமம் அது.

    


கூவத்தூரில் உள்ள சின்ன ஏரியின் இன்றைய தோற்றங்கள்
மாட்டுப் பொங்கலன்று காலையில் அத்தனை மாடுகளையும் ஓட்டிச் சென்று சின்னேரி என்ற ஏரியில் குளிப்பாட்டுவதே ஒரு வைபவமாக இருக்கும். ஏரி முழுவதும் மாடுகளாகவே காட்சியளிக்கும். வேலையாள்களும் என் நடு அண்ணன் கிருஷ்ணன் அண்ணனும் மாடுகளுடன் மாடாக என்னையும் ஒரே அமுக்காக அமுக்கிக் குளிப்பாட்டி விடுவார்கள். என் தம்பி குளிக்கிறான் பாருங்கள் என்று ஊரைக்கூட்டி அறிவிப்பார். அப்படி செய்ததற்குக் காரணம் உண்டு. நான் சிறுவனாக இருந்தபோது குளிக்கமாட்டேன் என அழுது அடம்பிடிப்பதுண்டு!

     நாள் முழுவதும் மாட்டு வேலையாகவே இருக்கும். பசும்புல்லை அறுத்துவந்து மாடுகளுக்குப் போடுவோம். மற்ற நாள்களில் காய்ந்த வைக்கோலும் கடலைக் கொடியும்தான். காளைகளின் கொம்புகளை வழ வழவென சீவி  வண்ணம் பூசுவோம். பள பள என்று மின்னும் புது பித்தளைக் கொப்பிகளை கொம்புகளின்மீது பதிப்போம் புது மூக்கணாங்கயிறை மாட்டுவோம். கழுத்தில் புது சலங்கைகளை மாட்டுவோம். கால்களுக்கு இலாடம் அடிப்போம்.(நமக்கு புது செருப்புகள் போல) பல்வேறு தழை பூக்களால் மாலை கட்டி எல்லா மாடுகளின் கழுத்தில் சூட்டுவோம். அவை மாறி மாறி மாலைகளில் உள்ள பசுந்தழைகளை கடிக்கும் அழகே அழகு.

    மாட்டுக் கொட்டகையில் சாணியால் மெழுகிடுதல், அரிசிமாவால் கோலமிடுதல், பெரிய வெண்கலப் பானையில் பொங்கல் வைத்தல் என அனைத்துப் பணிகளையும் என் அம்மா தனியாகவே செய்வார். பாவம் என்ன செய்வார் நாங்கள் மூவரும் ஆண்மக்களாய்ப் போனோம். தலித் பணிப் பெண்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஓர் எல்லை இருந்தது. அது அக்காலச் சூழல். ஒரு முரண்பாடு பாருங்கள். எனக்குப் பள்ளியில் வாய்த்த நண்பர்களில் பலர் தலித் சமூகத்தினராய் இருந்தனர். இன்றளவும் நட்பு தொடர்கிறது!

     பொங்கல் வைத்துப் பூசைகள் தொடங்க முன்னிரவு ஆகிவிடும். பெரிய பெரிய பரங்கி இலகளில் பொங்கலை ஆவி பறக்க எடுத்து வைத்து அதன் மீது நெய், வெல்லச்சர்க்கரை, உரித்த வாழைப்பழம் ஆகியவற்றை வைப்பர். நான் ஒரு கையில்  பெரிய பித்தளைத் தாம்பாளத்தையும் மற்றொரு கையில் ஒரு கரண்டியையும் வைத்துக் கொண்டு தயாராக இருப்பேன். அப்பா சூடம் கொளுத்தி, பட்டிப் பெருக பால் பொங்க கார் பெருகி கழனி விளைக என்று தொடங்கி ஏதேதோ சொல்வார் எல்லாம் இப்போது மறந்துவிட்டது. இவையெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முன் நடந்தவை.

   தீப தூபம்  காட்டி பொங்கலோ பொங்கல் என்று அவர் கூவ எல்லோரும் பொங்கலோ பொங்கல் என்று பெருங்கூப்பாடு போடுவார்கள். அண்ணன் மாடுகளின் முன்னங்கால்களை நீரால் கழுவி விடுவார். அப்பா மாடுகளுக்கு ஒரு கவளம் பொங்கல் ஊட்டியபடி செல்வார். நான் அவரைத் தொடர்ந்து கண கணெவென்று தாம்பாளத்தைக் கரண்டியால் தட்டியபடியே  செல்வேன். சில மாடுகள் சாதுவாக நிற்கும்; சில மாடுகள் மிரளும்; சில மாடுகள் கொம்பை ஆட்டி எதிர்க்கும். அப்பா அவற்றுக்குத் தெரிந்த மொழியில் ஏதோ சொல்வார்; ஆராவாரம் இல்லாமல் அவர் தரும் பொங்கலை நக்கிச் சுவைக்கும்.

    காலச் சக்கரம் மிக வேகமாய்ச் சுழன்றது. காட்சிகள் மாறின. இன்று அந்தக் காடு கழனிகள் இல்லை’ மாடுகள் இல்லை. அந்தக் கிராமத்துக் கூரை வீடு இருந்ததற்கானச் சுவடு கூட இல்லை.  அப்பா இல்லை; அம்மா இல்லை; மாட்டோடு மாடாக என்னைக் குளிப்பாட்டிக் கேலி செய்த கிருஷ்ணன் அண்ணனும்  இல்லை. 

     எல்லாமே தலைகீழாய் மாறிவிட்டன.     ஆனால் அவர்களைப் பற்றிய நினைவலைகள் மட்டும் என் நெஞ்சத் தடத்தில் மலரும் நினைவுகளாய் மாறாமல் உள்ளன.

11 comments:

  1. ஐயா,
    நீங்கள் எழுதிய இக்கட்டுரை என்னுள் இருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடாகவே நான் கருதுகின்றேன். கடந்த ஆண்டுவரை நாங்கள் மாடு வைத்திருந்தோம். 35 ஆண்டுகள் மாட்டுப்பொங்கலில் எங்கள் கட்டுத்தரையில் மாடு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு இல்லை.உண்மையாகவே மாட்டுப்பொங்கல் என்பது மாடுகளுக்காக இல்லை. மனிதன் மாட்டை நம்பித்தான் வாழ்கிறானே தவிர மாடு நம்மை நாடி இல்லை என்பதன் அர்த்தம். எங்கள் தோட்டத்தை குத்தகைக்கு விட்டதன் காரணமாக எனது தந்தை இந்த ஆண்டு மாட்டை விற்று விட்டார். அவர் எழுபதை நெருங்கி காரணமாக அவரால் கவனிக்க முடியவில்லை. மாடு இல்லை என்பதால் இந்த ஆண்டு நான் பொங்கல் நாளுக்கு எனது ஊர் செல்லவில்லை. உங்கள் பதிவு எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னை மீண்டும் விவசாயப்பாதைக்கு அழைத்துச்செல்லும்

    ReplyDelete
  2. தங்களின் நினைவலைகள் வாசிக்க வாசிக்க தித்திப்பாக இருக்கிறது ஐயா...

    ம்...

    ReplyDelete
  3. மலரும் நினைவுகள் என்றுமே இனிமையானவை
    தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  4. வாழ்க்கை என்பதே நினைவுகளின் தொகுப்புதானே! ...-இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
  5. நினைவலைகள் சுவாரசியமாக இருக்கிறது

    ReplyDelete
  6. கடந்த கால நினைவுகள் என்றுமே சுவையானவை. அவற்றை நினைக்கும்போது பலவற்றை இழந்ததைப் போலத் தோன்றினாலும், அந்த நாள் நினைப்பு என்பதானது மனதிற்குத் தரும் மகிழ்ச்சிக்கு இணை வேறு எதுவுமில்லை.

    ReplyDelete
  7. கடந்து சென்ற காலங்களின் நினைவுகள் எப்போதுமே இனிமையானவை, சுவாரஸ்யமானவை.

    ReplyDelete
  8. #காலச் சக்கரம் மிக வேகமாய்ச் சுழன்றது. காட்சிகள் மாறின. இன்று அந்தக் காடு கழனிகள் இல்லை’ மாடுகள் இல்லை. அந்தக் கிராமத்துக் கூரை வீடு இருந்ததற்கானச் சுவடு கூட இல்லை. அப்பா இல்லை; அம்மா இல்லை; மாட்டோடு மாடாக என்னைக் குளிப்பாட்டிக் கேலி செய்த கிருஷ்ணன் அண்ணனும் இல்லை. $
    நினைவுகள் என்றும் சுகமானவை :)

    ReplyDelete
  9. உங்கள் நினைவுகள் கடந்த கால நினைவுகள்.... சுகம்தான் என்றாலும் அந்த நினைவுகள் நினைவுகளாகிப் போயினவே. உங்கள் நினைவுகள், மற்றும் இணையத்தில் இப்படி எழுதும் பலரின் நினைவுகளிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால், நாம் நம் நாட்டின் அடிப்படைத் தேவைகளையே, பொருளாதரத்தையே இழந்து, பல தூரம் கடந்துவந்து இன்று எப்படி மீட்பது என்று குழம்பி நிற்கிறோம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது.

    கீதா

    ReplyDelete