Saturday 4 February 2017

காலமும் கருத்தும்

   சூடிய பூ சூடற்க. இது நான் அண்மையில் வாசித்த நாஞ்சில் நாடனின் சிறுகதை நூல். சாகித்திய அகாதமியின் பரிசு பெற்றது


    அவருடைய படைப்புகள், அவருடைய படைப்புகள் குறித்த அவரது கருத்துகள், பிறரது கருத்துகள், படைப்புகளின் பட்டியல் முதலியவற்றை https://nanjilnadan.com/ என்னும் இணையதளத்தில் காணலாம்.

   நான் எப்போதும் ஒரு நூலைப் படிக்கத் தொடங்கினால் அந்நூலின் முன்னுரையை முதலில் படிப்பேன். நூலாசிரியர் தன் படைப்பு நோக்கத்தை அதில் சொல்லியிருக்கிறாரா என்று ஆய்வேன். இது அந்தப் படைப்பைப் பிறழ உணராமல் இருக்க வழி செய்யுமென்பது என் கருத்து.

    பிறகு அந்த நூலில் கிடந்த வகையில் கதைகளைப் படிக்காமல் படித்து முடித்தேன். நான் முன்னர் இராஜம் கிருஷ்ணன், பெருமாள் முருகன் இன்னும் சிலர் எழுதிய வட்டார நாவல்களைப் படித்துள்ளேன். ஆனால் இப்படி நான் தடுமாறியதில்லை. அநியாயத்திற்கு வட்டார வழக்குச் சொற்களைப் போட்டுள்ளார். நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட வாசகர்களுக்கு மட்டும் எழுதியிருப்பாரோ? வெறுமனே ஒன்றரை ஜல்லி பரப்பிய சாலையில் வெறுங்காலால் நடக்கும் உணர்விலேதான் படித்து முடித்தேன். ஆனால் ஒன்று, அந்தச் சாலையிலும் பயணத்தைத்தொடரவே செய்தேன். காரணம் அவர் எடுத்துக் கொண்ட பேசுபொருள் அப்படி. பேசும் விதம் அப்படி.

   எல்லாமே கட்டுக்கதை. அதாவது கட்டுரையா கதையா எனப் பிரித்து அறிய முடியாது. அதனால்தான் கட்டுரை + கதை = கட்டுக்கதை என்றேன். கட்டுரைக்கும் கதைக்கும் இடையே இருந்த ஆளுயரச் சுவர் இடிக்கப்பட்டுவிட்டது என்று ஓர் இடத்தில் நாஞ்சில் நாடனே பதிவு செய்கிறார். படைப்பின் வடிவத்தை விட்டுத் தள்ளுவோம். இட்லி என்ன, தோசை என்ன, பணியாரம் என்ன அடிப்படையில் மாவு என்னவோ ஒன்றுதான்.

   படைப்பின் மையப்பொருள் அது? அதுதான் முக்கியம். நாஞ்சில் நாடன் தன் எழுத்துகளில் கசப்பு அதிகம் உள்ளதாக வாசகர் கருதுவதைக் குறிப்பிட்டு, இந்நூலின் முன்னுரையில் ஒரு தன்னிலை விளக்கம் தருகிறார்.  அந்த விளக்கம் எனக்கு ஏற்புடையதாக இருந்ததால், அவருடைய எழுத்திற்குள் என்னால் பயணிக்க முடிந்தது. அது ஒன்றுமில்லை. “சமூகத்தில் கசப்புகளே மிகுதியாக உள்ளன. அவை என் எழுத்துகளில் எதிரொலிக்கின்றன. நான் என்ன செய்ய?” இதுதான் அவருடைய நிலைப்பாடு.

   “இன்னாது அம்ம இவ்வுலகு; இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே” என்பது பக்குடுக்கை நன்கணியார் கூற்று. அதாவது சங்க காலச் சான்றோரின் நிலைப்பாடு அது.


    காலம் மாறிவிட்டது; கருத்தும் மாறி விட்டது.

3 comments:

  1. காலத்திற்கேற்ப நாமும் மாறிட வேண்டியது தான்...

    ReplyDelete
  2. கட்டுக்கதை சொல் பயன்பாடு ரசித்தேன்.

    ReplyDelete
  3. உங்களாய்வு உயர்வானதே!-நீதிபதி மூ.புகழேந்தி

    ReplyDelete