Tuesday, 21 February 2017

வெட்கித் தலை குனிந்தேன்

     இன்று உலகத் தாய்மொழிகள் நாள்.

 யுனெஸ்கோ நிறுவனம் இந்த நாளைக் கொண்டாடச் சொல்லி வலியுறுத்துகிறது. ஒரு மொழி அழிந்து வருவதற்கான அறிகுறிகள் இவை இவை என யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. அவையாவன:

  அரசு ஆதரவின்மை, ஆட்சி மற்றும் பயிற்று மொழியாக இல்லாமை, மொழி பேசும் மக்களின் எண்ணிக்கைச் சரிவு, ஊடகங்கள் மொழியைக் கவனமாகக் கையாளாமை, தம் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேசாத பெற்றோரின் பொறுப்பற்றப் போக்கு, தாய்மொழியில் அமைந்த  நூல்களை வாசிப்பதில் ஆர்வமின்மை, மொழி இலக்கண மரபுகளைப் பேணாமை, பிற மொழி மோகம், அளவுக்கு அதிகமான பிற மொழிக் கலப்பு.

   மேலே சொல்லப்பட்ட அனைத்து அறிகுறிகளும் நம் தமிழ் நாட்டில் தென்படுகின்றன. இனியும் காலம் தாழ்த்தாமல் அரசு ஆவன செய்தல் வேண்டும். இல்லையேல் அன்னைத் தமிழை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

   தாயைப் புறக்கணிப்பதும் தாய் மொழியைப் புறக்கணிப்பதும் ஒன்றுதான். தாய்ப்பால் அருந்தி வளராத குழந்தையும், தாய் மொழியைப் பேசி வளராத குழந்தையும் உடல், மன முதிர்ச்சியற்ற மனிதனாகவே உருவாக முடியும்.

    ஒவ்வொருவரும் தன் தாயையும், தாய் மொழியையும், தாய் நாட்டையும் நேசிக்க வேண்டும். நேசித்தால் மட்டும் போதாது; பேணிக் காக்கவும் வேண்டும். 

   ஒருவன் தன் தாயைக் காப்பதிலும் தாய் மொழியைக் காப்பதிலும் இலாப நட்டக் கணக்கு பார்த்தல் கூடாது. ஒரு கரும யோகியைப் போல தாய்க்கும் தாய் மொழிக்கும் தன்னால் இயன்ற நற்பணிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    எங்களுடைய தாய்மொழி தமிழாகும். அதுவும் எங்கள் தலைமுறை வரைதான். அண்மையில் என் அண்ணன் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். மண மக்களிடம் நான் எழுதிய தமிழ் நூல்  ஒன்றைப் பரிசாகத் தந்து, “இந்த நூலில் உள்ளவை நான் தினமணியில் எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. படித்துப் பாருங்கள்” என்று சொன்னேன். “ஐ டோன்ட் நோ டமிள். குட் யூ ப்ளீஸ் கிவ் மி எ ட்ரான்ஸ்லேட்டெட் வெர்சன்?” என்று  கேட்டான் அந்த மாப்பிள்ளைப் பையன்.

     இது ஒரு பதச் சோறு மட்டுமே. ஊதியத்திற்காக மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு இடம் பெயரத் தொடங்கியபின் தாய் மொழி அறியாத அல்லது எழுதப் படிக்கத் தெரியாத குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிவிட்டன.

     இதைவிடக் கொடுமை ஒன்று உண்டு. உள்ளூரில் படிக்கும் குழந்தைகளும் ஆங்கில வழியில் படிக்க வற்புறுத்தப்படுவதால் தமிழில் சரியாகப் பேசவும் எழுதவும் முடியாத linguistically handicapped எனச் சொல்லத்தக்க இயலாக் குழந்தைகளாகவே உள்ளனர். இவர்கள் நீந்த மறந்த மீன்களைப் போன்றவர்கள். நீந்த மறந்த மீன்கள் நீரில் இருந்தாலும் பயன் இல்லை.

       இப்படிப்பட்ட குழந்தைகளால் ஆங்கிலத்திலாவது திருத்தமுற பேசவும் எழுதவும் முடிகிறதா என்றால் அதுவும் இல்லை. “ஒருவன் தன்  தாய் மொழியில் திறன் பெறாமல் பிற மொழிகளைச் சரியாகப் பேசவும் எழுதவும் கற்க இயலாது” என்னும் திரு.வி.கலியாணசுந்தரனாரின் கூற்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.

   நல்லூழ் காரணமாக இவர்களில் சிலர் மாவட்ட ஆட்சியராகி விடுகிறார்கள். நம்மூர் அரசுக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு அழைத்தால், மேடையில் தோன்றி “எனக்குத் தமிழில் பேச வராது” என்று தொடங்கி தமிங்கலத்தில் பேசிச் செல்கிறார்கள்.

   “மகனே! இங்கே வா. இந்த இரும்புப் பேழையில் நம் பரம்பரைச் செல்வங்களான வெள்ளி, தங்கம், மணிகள்  மற்றும்  என்னுடைய முயற்சியால் கிடைத்த செல்வம் எல்லாம் உள்ளன. இந்தச் சாவியைப் பத்திரமாக வைத்துக்கொள். உனக்கு நாற்பது வயதாகும்போது திறந்து எடுத்துக் கொள். அதற்கு முன்னர் நீ விரும்பினாலும் திறக்க முடியாது” எனச் சொல்லிச் சாவியைத் தருகிறார் அப்பா. ஆனால் அவனோ சாவியைத் தொலைத்துவிட்டு ஏழையாகவே சாகிறான்.  இப்படித்தான் இன்று நம் குழந்தைகள்  தாய்மொழி என்னும் சாவியைத் தொலைத்துவிட்டுப் பரம்பரையாக அனுபவித்து வந்த இலக்கியச் செல்வங்களை  நுகரமுடியாமல் கிடக்கின்றனர். ஆனால் அது குறித்த வருத்தம் அவர்களிடத்தில் இல்லை என்பதுதான் எனது வருத்தம்.
   ஒரு நீண்ட சங்கிலியின் நுனியில் தொங்கும் பெரிய கொத்து விளக்கு, அச் சங்கிலியின்  ஒரு கண்ணி உடைந்து விட்டாலும் கூட அக் கொத்து விளக்கு கீழே விழுந்து நொறுங்கிவிடும். அதுபோல ஒரு தலைமுறையைச் சார்ந்த குழந்தைகள் தாய்மொழியைப் படிக்காமல் விட்டாலும் அம் மொழியும் வீழ்ந்து அழியும். கூடவே அம்மொழியில் உள்ள இலக்கிய இலக்கணச் செல்வங்களும் அழியும்.

   எனக்குத் தெரிந்த ஒரு தமிழ்க் குடும்பம். கணவன் மனைவி இருவரும் அரசு அதிகாரிகள். தன் ஒரே மகனை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்க வைத்தார்கள். அவன் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவேண்டும் என்னும் நோக்கத்தில் வீட்டிலும் அவனோடு ஆங்கிலத்தில் பேசினார்கள். பள்ளியில் முதல் மொழியாக இந்தி படிக்கச் செய்தார்கள். . இன்று அவனும் படித்துப் பெரிய வேலையில் உள்ளான். ஆனால் தாய்மொழியாம் தமிழில் ‘அ’ னா ‘ஆ’வன்னா கூட தெரியாது. தாய்மொழி என்னும் இயற்கை விழிகளை எடுத்துவிட்டு, ஆங்கிலம் என்னும் செயற்கை விழிகளைப் பொருத்தி விட்டார்கள் அந்தப் பெற்றோர். அதனால் கீட்சும் ஷெல்லியும் அவன் கண்களுக்குத் தெரிகிறார்கள். கம்பரும் வள்ளுவரும் அவன் கண்களுக்குத் தெரிந்திலர். இத்தகையப் பெற்றோர்களைத் தமிழன்னை ஒருபோதும் மன்னிக்க மாட்டாள்.

      இன்று காலையில் நான் என் மகிழுந்தில் சென்றபோது, நாற்சந்தியில் பச்சை விளக்கொளிக்காகக் காத்திருந்தேன். முன்னால் நின்ற ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகத்தைக் கண்டு அவருக்குள்ள தாய்மொழி உணர்வு எனக்கில்லையே என்று வெட்கித் தலைகுனிந்தேன்.

    அவ்வாசகம் இதுதான்:
தமிழே! என் உயிரே! வணக்கம்!
தாய் பிள்ளை உறவம்மா எனக்கும் உனக்கும்!
   


7 comments:


 1. கிளி போல பேசு இளங்குயில் போல பாடு
  மலர் போல சிரித்து நீ குறள் போல வாழு
  மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம்
  மெய்யான அன்பே தெய்வீகமாகும்...

  நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே...
  விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்...
  விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்...
  தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்...
  தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்...

  ReplyDelete
 2. அந்த ஆட்டோகாரரைப் போலுள்ளோர்தான் ஐயா உண்மையான தாய்மொழி நேசிப்பாளர்கள். மற்றவர்கள் விளம்பரத்திற்காகவும், விழாவிற்காகவும், மேடையில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதற்காகவும்தான் ஐயா...

  ReplyDelete
 3. முக்கியமான காரணிகளைப் பட்டியலிட்டுள்ளீர்கள். அனைத்தையும் சரி செய்யவேண்டும். ஆக்கப்பூர்வமாக - ஒன்றிணைந்து ..ஒவ்வொன்றாக
  1. அரசு ஆதரவின்மை,
  2. ஆட்சி மற்றும் பயிற்று மொழியாக இல்லாமை,
  3. மொழி பேசும் மக்களின் எண்ணிக்கைச் சரிவு,
  4. ஊடகங்கள் மொழியைக் கவனமாகக் கையாளாமை,
  5. தம் குழந்தைகளிடம் தாய்மொழியில் பேசாத பெற்றோரின் பொறுப்பற்றப் போக்கு,
  6. தாய்மொழியில் அமைந்த நூல்களை வாசிப்பதில் ஆர்வமின்மை,
  7. மொழி இலக்கண மரபுகளைப் பேணாமை,
  8. பிற மொழி மோகம்,
  9. அளவுக்கு அதிகமான பிற மொழிக் கலப்பு

  ReplyDelete
 4. தமிழ் மொழியின் பெருமையை தொன்மையை அறியாதவர்களாகவே
  தமிழர்கள்இருக்கிறார்கள் ஐயா
  முதலில் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டும்
  வெளிநாடு வாழ் தமிழர்களால்தான்,அதிலும் குறிப்பாக இலங்கைத் தமிழர்களால்தான்
  பல நாடுகளில் தமிழ் இன்று உயர்த்திப் பிடிக்கப் படுகிறது

  ReplyDelete
 5. இன்றையத் தலை முறையினர் பலர் எனக்கு தமிழை விட இங்கிலீஷில் தான் எழுத வரும் என்று சொல்லும் போது வருத்தம் தான் . என்ன செய்ய ....

  ReplyDelete
 6. ஐயா இப்பதிவு அனைத்துப் பெற்றோர்களுக்கும் வழகப்படவேண்டியது. என் அப்பா ஆசிரியராக இருந்ததால் என்னை ஆங்கிலவழிப் பள்ளியில் (LKG) சேர்த்தார். ஆனால் நான் ஆங்கிலத்தில் படிக்கமாட்டேன் என்று அடம்பிடித்து முதலாம் வகுப்பிற்கு தமிழ்ப்பள்ளிக்கு வந்தேன். ஆனால் என்னுடன் ஆங்கிலத்தில் படித்த நண்பர்கள் மிக நல்ல பொருளாதார நிலையில் உள்ளதால் என் அப்பா இதுவரை என்னை கடிந்து கொண்டே இருப்பார். ஆனால் இப்போது எனக்கு ஆங்கிலம் மிக அருமையாக வருகிறது.அதற்கு காரணம் தமிழே.பொருளாதார நிலைக்காக நமது தாய் மொழியை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காதது அவர்களுக்குப் பேரிழப்பாகும். இதை நான் படித்த வகையில் தெரிந்து கொண்டது. ஒருநாட்டில் குறிப்பிட்ட பறவையினம் அழிவை நோக்கிப் போனதால் உயிரியல் விஞ்ஞானிகள் அதை பாதுகாப்பான இடத்தில் வைத்து இனவிருத்தி செய்ய முடிவு செய்தனர். அப்போது வெரும் 50 பறவைகளே இருந்தன. பின்பு அவற்றிக்கு நல்ல உணவு கொடுத்து குளிர் சாதனவசதியுடன் பாதுகாத்து வந்தனர்.அவ்வாறே பறவைகள் 100, 500, 1000, 10,000 எனப் பெருகியது. விஞ்ஞானிகள் தங்களது செயலால் ஒரு பறவையினம் 10000 ஆகிவிட்டதென்று பெருமையடைந்து அப்பறவைகளை வெளியுலகில் பறக்கவிட்டனர். ஆனால் அவைகள் திசை தெரியாமலும், வாகனங்களில் மோதியும், மின்கம்பியில் உராய்ந்தும், உணவின்மை போன்ற காரணங்களால் சிறிது நாட்களில் அழிந்துவிட்டன. இதில் 50 பறவைகளும் அடங்கும். தன் இயல்பை சிறிது நாட்கள் மறந்த பறவைக்கே இந்நிலை என்றால், தாய் மொழியாம் தமிழ் மொழியை மறந்தால் நமது அடுத்த தலைமுறையின் அழிவு நம் முன்னே நிகழும். இக்கட்டுரை எழுதிய தங்களுக்கு என் நன்றிகள் ஐயா

  ReplyDelete
 7. தாய் மொழியின் இன்றியமையாமையை உணர்த்தும் கட்டுரை. மண்ணில் பிறக்கும் குழந்தை எந்த மண்ணில் பிறக்கிறதோ அந்த மொழியையே பேசும் அதுவும் தாய் பேசும் மொழியே தாய் மொழி. அதுபோல எந்த மனிதனும் தான் சொல்ல வந்த கருத்தைப் பிழையில்லாமல் பிறர் அறிய தாய் மொழியே உதவும். அன்னிய மொழியான ஆங்கிலத்தில் கூற விழைந்தால் தகுதியில்லாத கருத்தையோ அல்லது உயிரற்ற உணர்வற்ற சொற்களையோ தான் பயன்படுத்த இயலும். அடுத்து நம் தாய்மொழி தமிழுக்கு வருகிறேன். இன்று தமிழைத் தவிற பிற மொழிக்கலப்புச் சொற்கள் அதிகம் வழக்கில் வந்துவிட்டது. அது தவிர்க்க முடியாதது. ஆனாலும் நம் சிந்தனையும் செயலும் ஒருங்கிணைந்தால் முடிந்த அளவிற்கு மாற்றம் ஏற்படுத்தலாம். இன்று செல்லிடப்பேசியில் தமிழை ஆங்கில எழுத்துக்களில் பதிவு செய்து செய்திகளை அனுப்புகின்றனர். அதைத் தங்கிலீஸ் என்கின்றனர். எனக்குத் தெரிந்த ஆங்கிலப்பேராசிரியர் தமிழில் மட்டுமே உரையாடுவார். அது குறித்து கேட்ட போது அவர் சொன்னது அப்படியே, “தமிழ் என் தாய் மொழி, ஆங்கிலம் என் பிழைப்பு மொழி, அம்மொழியை என் பிழைப்பிறக்காக மட்டுமே பயன் படுத்துவேன், மற்ற நேரங்களில் எல்லோருக்கும் தெரிந்த புரிந்த தாய் மொழியாம் தமிழ் மொழியிலேயே பேசுவேன்” என்றார். மகிழ்ச்சியாக இருந்தது. நுனி நாவில் இங்கிலீஸ் பேசினால் இன்று படித்தவன் என நினைக்கும் காலமாக உள்ளது. ஆங்கிலம் கற்காதவர்கள் கூட ஒரு சில சொற்களைத் தங்களை அறியாமல் இது தான் வழக்கில் உள்ள தமிழ் சொல் எனப் பேசும் நிலை காணப்படுகிறது. தமிழுக்காகப் போராடியவர்கள், சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என அறிவிக்கப்பாடுபட்டவர்கள் வாழ்ந்த பூமி இது. இன்று “தமிழ் வாழ்க” என ஊராட்சி அலுவலகங்களில் விளம்பரப்படுத்த வேண்டிய நிலை காணப்படுகிறது. காமராஜர் குஜராத் சென்றபோது ஒரு கூட்டத்தில் பேச ஜவஹர் லால் நேரு அழைத்துள்ளார். தனக்கு ஹிந்தி பேசத்தெரியாது எனக்கூறாமல் தனது தாய் மொழியான அழகு தமிழில் பேசிமுடித்தார். மிகுந்த உற்சாகத்துடன் கரவொலி எழுந்தது. அங்குள்ள நிருபர்கள் கேட்டனர் அவர் பேசியது தமிழில் உங்களுக்குப் புரிந்திருக்காதே என்றனர். அதற்கு அம்மக்கள் அவர் எது பேசினாலும் மக்களின் நன்மைக்காகத் தான் இருக்கும் அதை அவரின் முககுறிப்பில் கண்டோம் என்றனர். இது தான் தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த பெரும் பேறு, பெருமையும் ஆகும்.
  முனைவர்.ரா.லட்சுமணசிங்
  பேராசிரியர், கரூர்

  ReplyDelete