Monday 2 October 2017

கனடாவில் காந்தியைக் கண்டேன்

   ஆம். உண்மையில் மகாத்மா காந்தி பிறந்த நாளில் அவரைப் பார்க்கும் பேறு பெற்றேன். நீங்கள் கல்லில் கடவுளைப் பார்ப்பது உண்மை என்றால் நானும் கல்லில் காந்தியைப் பார்த்தேன் என்பதும் உண்மையே.

    என் மகள் படித்த கார்ல்டன் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலையைத்  தேடிப்பிடித்துப் பார்த்து விடுவது என்ற முடிவோடு தனி ஒருவனாக பேருந்தைப் பிடித்துச் சென்றேன். உடல்நலம் இல்லாமல் இருந்த தோழி ஒருத்தியைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததால் என் மகளால் வர இயலவில்லை.

  
அது மிகப்பெரிய வளாகம். அந்த வளாகத்தின் நடுவே ஓடுவது ரிடியூ கால்வாய். அந்தக் கால்வாயின் கரையில் காந்தி சிலை இருக்கும் என மகள் கூறியிருந்தாள். கால்வாய் இருக்கும் திசை நோக்கி நடந்தேன் நடந்தேன் நடந்து கொண்டே இருந்தேன். கடைசியில் கண்டேன் காந்தி சிலையை.

    காந்தியைக் கண்ட முதல் ஆள் நான். சிலை கொஞ்சம் தூசும் தும்புமாக இருந்தது. என் கைக்குட்டையை எடுத்து அடி முதல் முடிவரை துடைத்தேன். பதினைந்து நிமிடத்தில் சிலை பளிச்சென்று ஆனது. துடைத்து முடிக்கும் தருவாயில் இரண்டாவதாக ஒருவர் மாலையும் கையுமாக வந்தார் எனக்கு நன்றி சொல்லிக்கொண்டே.

  இருவரும் சேர்ந்து ஒரு மேசையைத் தூக்கிப் போட்டோம்; விரிப்பை விரித்தோம். அவர் கொண்டு வந்திருந்த மாலைகளை அதன் மீது வைத்தார்.

   மூன்றாவதாக ஒருவர் வந்தார் நடந்துதான் வந்தார். பிறகுதான் தெரிந்தது அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்று. அடுத்து வந்தவரும் நடந்துதான் வந்தார். அவர்தான் முதன்மை விருந்தினரான அருண் குமார் சாகு, கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தின் துணை ஆணையர். வந்தவர் எல்லோரும் தம் கார்களை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு எளிமையாக நடந்தே வந்தனர். அடுத்த பத்து நிமிடத்தில் நூறு பேருக்குமேல் வந்து குவிந்தனர். அவர்களில் பெரும்பாலும் இந்தியராக இருந்தனர்.




A source of inspiration in the University Campus












  



A proud moment


தூதரகத் துணை ஆணையர் தொடங்கிப் பலரும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். கடைசியாக நானும் அழைக்கப்பட்டேன். இரண்டாவது ஆளாக வந்தாரே அவர் ஒரு மாலையை என்னிடம் தர நான் பயபக்தியுடன் காந்தியின் கழுத்தில் அணிவித்தேன். நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.   

Rendition of Gandhi bajan






பிறகு அவர் அனைவரையும் அருகிலிருந்த அரங்குக்கு அழைத்துச் சென்றார். காந்தி பஜனை தொடங்கியது.. தாளம் தப்பாமல்  மகளிர் ஐவர் அழகாகப் பாடினர். நிறைவுப் பாடலான வைஷ்ணவ ஜனதோ என்னும் பாடலை வந்தவர் அனைவரும் சேர்ந்து பாடியது மெய்சிலிர்க்க வைத்தது தொடர்ந்து காந்தியின் அழகான எளிமையான ஆங்கிலப் பேச்சை ஒலிபரப்பினர். பின்னர் தூதரகத் துணை  ஆணையரும் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டுக் கத்தரித்தாற்போல் மும்மூன்று நிமிடத்தில் காந்தியைப் பற்றிப் பேசினர்.

  
Indian embassy deputy Commissioner Arun Kumar Sahu

Dr.Bindu Puri,JNU, New Delhi
















தொடர்ந்து புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் திருமதி பிந்து பூரி ‘காந்தியின் பலமதக் கோட்பாடு” என்னும் தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தினார். கேட்டாரைப் பிணிக்கும் வகையில் தடம் மாறாமல் அருமையான ஆங்கில உரை நிகழ்த்தினார். அவருடைய உரையைத் தொடர்ந்து பார்வையாளர் நால்வர் மட்டும் வினா எழுப்பலாம் என்று அறிவித்தார்கள்.

   நான் முந்திக்கொண்டு கையை உயர்த்தினேன். ஒலிவாங்கிமுன் நின்று யார் எங்கிருந்து வருகிறேன் என்பதைச் சொல்லி, “ மிக அருமையாகப் பேசினீர்கள் வாழ்த்துகள் அம்மா இங்கே பாருங்கள் இங்கு வந்திருப்போரில் இளைஞர் இருவர் மட்டுமே. காந்தியத்தின்பால் இளைஞரை இழுக்க என்ன வழி?’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன். “ அந்த இரண்டு பேர் போதுமே. அவர்கள் விதைநெல் போன்றவர்கள். நம்பிக்கையோடு அவர்களிடத்தில் பேசுவோம். நிச்சயம் இளைய தலைமுறை காந்திப்பக்கம் திரும்பும் காலம் வரும்” என்று விடையளித்தார்.

   விழா நிறைவில் அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி அளித்தார்கள். மாலை அணிவிக்க வாய்ப்பளித்தவரிடம், “சிறந்த முறையில் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக விழாவை நடத்தியுள்ளீர்கள். பாராட்டுகள்” எனச் சொல்லி விடைபெற்றபோது தன் முகவரி அட்டையை என்னிடம் தந்து தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கூறினார்.

    பேருந்தில் இல்லம் திரும்புகையில் அந்த முகவரி அட்டையைப் பார்த்து அசந்து போனேன். அவர் நம் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜெக் மோகன். கார்ல்டன் பல்கலைக்கழகத்தில் கட்டுமானம் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் சிறப்பு ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

   ஆக, அயல்நாட்டில்தான் மகாத்மா காந்திக்கு மதிப்பு அதிகம்.
...........................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.


8 comments:

  1. நல்ல பதிவு ஐயா. காந்திக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பிறந்த நாட்டை விட. முற்றத்து முல்லையின் அருமை தெரியாதே ஐயா.

    கீதா: கொஞ்சமேனும் காந்தியப் பொருளாதாரத்தை இந்தியா பின்பற்றியிருந்தால் இன்று எவ்வளவோ உயர்ந்திருக்கும்..தாங்கள் அங்கு காந்தி தினத்தன்று கலந்து கொண்டு சிறப்பித்தமைக்குப் பாராட்டுகள் வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
  2. மிகவும் அருமையான பதிவு ஐயா. ஆனால் அரசியல் வாதிகள் காந்தியின் பெயரைக் கொண்டு அரசியல் ஆதாயம் மற்றும் பொருளாதாரப் பெருக்கத்தை அடைகின்றனர்.

    ReplyDelete
  3. நன்னாளில் ஒரு மாமனிதரைப் பற்றிய அரிய பதிவு.

    ReplyDelete
  4. அருமையான பதிவு ஐயா
    காந்தியின் பெருமையை உணர்ந்தவர்கள்

    ReplyDelete
  5. அருமை ஐயா!
    வைரவிழா பள்ளியில் காந்தியின் வருகை கல்வெட்டு நூற்றாண்டு விழாவில் நிறுவியது என்றும் மறவாது

    ReplyDelete
  6. No place is necessary for doing service. Judge M.Pughazhendi

    ReplyDelete
  7. கனடா காந்தி அறியத்தந்தமைக்கு நன்றி

    ReplyDelete