Sunday, 8 October 2017

நான் பார்த்த சாரதி

 நான் பிஞ்சில் பழுத்தவன் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமையா? சிலர் சொல்லிக் கொள்கிறார்களே!. ஆனால் நான் பிஞ்சில் படித்தவன் என்று சொல்வதில் எனக்குப் பெருமைதான். பதினோராம் வகுப்பில் படித்தபோதே நா.பார்த்தசாரதியின் குறிஞ்சிமலரை எழுத்தெண்ணிப் படித்தவன். பிறகு வளர்ந்து பெரியவன் ஆனதும் முனைவர் பட்டத்துக்காக அவருடைய நாவல்களை எடுத்து ஆய்வு செய்தவன். அவரை நேரில் சந்தித்துப் பேசியவன். இந்தக் கதை எல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா?

  

கனடாவில் டொரண்டோ தமிழ்ச் சங்கம் புகழ் வாய்ந்தது. வருகிற இருபத்து எட்டாம் நாள் அங்கே சென்று நா.பார்த்தசாரதியைப் பற்றிப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதற்காக ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன். கடந்த பத்து நாள்களாக நா.பா.வின் நாவல்களை எனது மடிக்கணினியில்  தரவிறக்கம் செய்து (சு)வாசித்துக் கொண்டுள்ளேன்.

   என் மனைவி  வடை சுடும்போது முதல் வடையை எனக்குக் கொடுத்து ருசி பார்க்கச் சொல்வாள். அதுபோல கட்டுரையின் முதல்  பகுதியை வலைப்பூ வாசகர்களுக்காகப் பதிவிடுகிறேன்.

   ஒரு சமுதாயம் மேன்மையுற்று விளங்க வேண்டுமாயின் அச் சமுதாயத்தில் நிலவும் குடும்ப அமைப்பு சீராக இயங்க வேண்டும். அதேபோல்  குடும்ப அமைப்பு மேன்மையுற்று விளங்க வேண்டுமாயின் அச் சமூக  அமைப்பும் சீராக இயங்க வேண்டும். சமூக அமைப்பில் ஏற்படும் சிக்கல்கள் குடும்ப அமைப்பையும், குடும்ப அமைப்பில் ஏற்படும் சிக்கல்கள் சமூக அமைப்பையும் தாக்கும் தன்மையன. சிக்கலற்ற நல்ல குடும்பங்களால் சமூக அமைப்பிற்கு மிகுதியான பயன்கள் உண்டாகும்.

    நா.பா.வின் நாவல்களில் காணப்படும் குடும்பச் சிக்கல்களுக்குப் பல்வேறு காரணிகள் இருப்பினும் அவற்றுள் உளவியல் அடிப்படையிலான காரணிகளே முதன்மையாகின்றன. மேலும் குடும்ப மாந்தர்தம் மனப் பரிமாணங்கள் எவ்வாறு சிக்கல்களை உருவாக்க அல்லது தீர்க்க ஏதுவாகின்றன என்பதையும் அவரது நாவல்கள் வழி நின்று ஆய்தல் பொருத்தமாக அமையும்.

  தனிமனித நடத்தைகளே குடும்பத்தின் ஒழுகலாற்றை உறுதி செய்கின்றன. எனவேதான் சமூக உளவியலார் தனி மனித நடத்தைகள் மிக இன்றியமையாதவை எனக் கருதி ஆராய்கின்றனர்.

  படைப்பாளியின் மன நிலையை மற்றும் அவனுடைய படைப்பு நோக்கத்தை ஆய்ந்து அறிவதற்கு உளவியல் அணுகுமுறை பெரிதும் பயன்படும் என்று நா.பா. அவர்களே தன் தீபம் இதழில் குறிப்பிட்டுள்ளார்.

   மனிதப் படைப்பே விந்தையானது. மனிதன் மனமோ விந்தையிலும் விந்தையானது. அருவ மனம் உருவ மனிதனைப் படாதபாடு படுத்துகிறது. நிலையாமையை உணராத மனிதன், தான் என்னும் அகந்தையில், செய்யத் தகாதனவற்றைச் செய்து தானும் வருந்தி, பிறரையும் வருந்தச் செய்வதற்கு அவனுடைய மனமே காரணமாகும்.
 
 “வாடி மனம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து....” என்று இம் மன நிலையை இனங்காட்டுவான் பாரதி. இப்படிப்பட்டவர்களால் குடும்பங்களில் சிக்கல்கள் தோன்றிய வண்ணம் இருக்கும்.

   மனித மனத்தில் பல இயல்பூக்கங்கள் மறைந்து கிடக்கின்றன. மனிதன் அவற்றை நெறிப்படுத்தாதபோது குடும்பத்தில் சிக்கல்கள் உண்டாகின்றன. மனிதனுக்கு இயல்பாய் உள்ள போரூக்கத்தை நெறிப்படுத்தாத ஒருவன் மனைவி மக்களை அடித்துத் துன்புறுத்துவான். பாலூக்கத்தை நெறிப்படுத்திக் கட்டுப்பாட்டில் வைக்காதவன் பிற பெண்களை விரும்பும் போக்கிரியாக மாறிவிடுகிறான்.

   இப்படிப்பட்ட மன வக்கிரங்கள் கொண்ட கதை மாந்தர்களைப் படைத்து, அவர்களால் ஏற்படும் குடும்பச் சிக்கல்களைத் தன் நாவல்களின் வழியே காட்டுகிறார் நா.பா.
 
  வறுமையில் சோரம்போகும் ஏழைப்பெண்களை காவல் நிலையத்திற்கு வரவழைத்துத் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ளும் இன்ஸ்பெக்டர் குருசாமி (நிசப்த சங்கீதம்), தங்கையாக நினைக்க வேண்டிய மாணவியை தன்னவளாய் எண்ணிய பேராசிரியர் மதனகோபால்(சத்திய வெள்ளம்) – இப்படி மனவிகாரம் கொண்ட பாத்திரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் குடும்பச் சிக்கல்களுக்குக் காரணமாய் இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவருகிறது.

  சுலபா என்னும் சினிமா நடிகை சுலபா என்னும் நாவலின் நாயகி ஆவாள். அவளுக்குத் திரைப்பட வாய்ப்பு வாங்கித் தருவதாகச் சொல்லிச் சென்னைக்கு அழைத்து வந்து விபச்சார விடுதியில் விற்றவன் குப்பைய ரெட்டி என்பவன். ஆந்திராவிலிருந்து சுப்பம்மாவாக சென்னைக்கு ஓடிவந்து தன் கற்பை விலையாகக் கொடுத்து நடிகையாகிச் சுலபா என்னும் பெயரில் செல்வம் மற்றும் புகழின் உச்சிக்குச் செல்கிறாள். ஆண்கள் பலரிடம் கெட்டுப்போன சுலபா, புணர்தல் அனுபவமே இல்லாத ஓர் ஆண்மகனையாவது வலிந்து சென்று கெடுக்க வேண்டும் என்னும் வக்கிர மனப்பாங்குடையவளாக மாறுகிறாள்.

  இவளுக்கு ஏற்றாற்போல் ‘மை பொதி விளக்கே போல” மனமெல்லாம் மாசு கொண்ட  ஒரு தோழி வாய்க்கிறாள். அவள் பெயர் கோகிலா. மேல்தட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத் தலைவி. மது அருந்துவதிலிருந்து மட்டமான பாலியல் செய்திகள், செய்கைகள் அத்தனையும் அவளுக்கு அத்துபடி. 
 
  அவள் தன் நரித் தந்திர மூளையைப் பயன்படுத்தி ஓர் இளம் ஆண் துறவியைச் சுலபாவுக்கு ஏற்பாடு செய்கிறாள். அழகுப் பதுமையாக அலங்காரம் செய்திருந்த சுலபாவை அழைத்துச் சென்று அந்த இளம் துறவியிடம் முன்னிரவில் தனியே விட்டுவிட்டு மறுநாள் வருவதாகச் கூறிச் சென்று விடுகிறாள்.

   வாழ்க்கையில் வழுக்கி விழுந்த பெண்களுக்கு, ஆதரவற்றப் பெண்களுக்குக்  கைத்தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தந்து அவர்களை அற வழியில் மானத்துடன் வாழ வழி செய்யும் துறவி அவர். சுலபா அவரைக் கெடுக்கும் எண்ணத்தோடு  நெருங்குகிறாள். அப்போது அவர் அவளிடம் பரிவுடன் பேசிய பாங்கு அவளிடத்தில் திடீர் மனமாறுதலை ஏற்படுத்துகிறது. அவளைப் பார்த்து,

 “எந்த ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால் எங்கே என் தாயின் முன் நிற்பது போன்ற உணர்வு வருகிறதோ அப்படி ஒரு முகம் உனக்கு இருக்கிறது. உன் முகத்தில் ஒர் ஆசிரமத்தின் அன்னையைப் பார்க்கிறேன்”

என்று அந்த இளந்துறவி சொல்கிறார்.

  ஒரு குகைக்குள் பல காலமாக இருந்த கும்மிருட்டு ஒரு சிறு மெழுகு வர்த்தியை ஏற்றும்போது அகன்று போனதைப்போல அவள் மனத்திலிருந்த பாலியல் வக்கிரமும் அகம்பாவமும் அந்த நொடியில் அகன்று விடுகின்றன. ஆசிரமத்தின் அருகில் ஓடிய ஓடைக்கு ஓடிச்சென்று நீராடி, காவி உடுத்தி அந்த ஆசிரமத்தின் அன்னையாக மாறுகிறாள். இளம் துறவியைக் கெடுக்கத்தான் சென்றாள். ஆனால் கெட்டது என்னவோ அவளுடைய பாலியல் வக்கிரங்கள்!

   மனத்தைச் சமூகப் பணியில் மடைமாற்றம் செய்வதன் மூலம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்னும் ஒரு தீர்வை நாவலாசிரியர் தருகிறார் என்பது இவ்வாய்வாளரின் கருத்தாகும்.
...............................................
முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.


6 comments:

 1. அருமையான ஆய்வுக் கட்டுரை ஐயா

  ReplyDelete
 2. We wish you more effort to do your Best in the forthcoming participation on 28th October 2017

  ReplyDelete
 3. ஐயா இன்றும் பல சுலபாக்கள்,குருசாமிகள், மதனகோபால்கள் இருக்கின்றனர். அவர்களை மாற்றும் துறவிகள் இல்லை. அருமையான ஆய்வு. ஒழுக்கம் குறைந்து செல்லும் உலகிற்கு செவியில் அறையும் பதிவு.

  ReplyDelete
 4. துளசிதரன்: மிக மிக அருமையான ஆய்வுக்கட்டுரை ஐயா.

  கீதா: துளசியின் கருத்துடன்.....நாபாவின் குறிஞ்சிமலர் வசித்ததுண்டு. அரவிந்தன் மற்றும் பூரணி மனதில் நிற்பவை....நாபாவின் நாவல்களில் நல்ல கருத்துகள் மட்டுமே இடம்பெறும். தங்களின் ஆய்வு மிக அருமை ஐயா...வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. மகிழ்ச்சி அண்ணா! பாலியல் வன்புணர்ச்சி ஆணுக்கு மட்டுமே சொந்தமான ஒரு அறக்குற்றமாக சமூகம் காட்டிக் கொண்டிருந்தது. ஆனால் நா. பா அவர்கள் எப்போதோ அதனை இரு பலருக்கும் பொதுவில் வைத்து அதற்கு தீர்வையும் தந்திருக்கிறார் என்பதை தங்கள் எழுத்து மூலம் கண்டு கொண்டேன். நன்றி!

  ReplyDelete
 6. வலைப்பூ வாசகர்களுக்காக நீங்கள் பகிர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete