Sunday 17 December 2017

முயன்று பெற்றாள் முனைவர் பட்டம்

  நம் சென்னைப் பல்கலைக்கழகம் போல ஊரின் பெயரால் அமைந்தது இந்த டெக்சாஸ் பல்கலைக்கழகம். இங்கு நூற்றி இருபது நாடுகளைச் சேர்ந்த நாற்பத்தெட்டாயிரம் மாணவ மாணவியர் கல்வி கற்கின்றார்கள். நூற்றுக் கணக்கில் பணியாற்றும் உலகப் புகழ் வாய்ந்த பேராசிரியர்கள் நூற்றி எண்பது பாடப்பிரிவுகளில் பாடம் நடத்துகிறார்கள்.  இங்கே என் பெரிய மகள்   திருமணம் முடிந்த கையோடு உயிரியல் துறையில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பில் சேர்ந்தாள்.

   ஓயாத உளியடிக்குக்குப்பின் ஒரு கல் சிலையாவதுபோல், நெருப்பில் உருகி உருகி கட்டித்தங்கம் கண்கவரும் நகை ஆவதுபோல் கடுமையான ஆய்வுநெறிமுறைகளுக்கு உட்பட்டு, பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரவு பகலாக ஆய்வுகளை நடத்தி, ஆய்ந்து கண்ட முடிவுகள் உலகத் தரத்துக்கு ஒப்பானது எனத் தேர்வுக்குழுவினர் ஒருமனதாய் ஒப்புதல் தர முனைவர் பட்டப்பேற்றுக்கு ஆளானாள்.


   நேற்று(15.12.2017) மாலை ஏழு மணி அளவில் பல்கலைக்கழக வளாக முதன்மை அரங்கில் கோலாகலமாய் நடைபெற்ற வண்ணமிகு பட்டமேற்பு விழாவில் அவள் அரிமா என அணிநடை பயின்று, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நடத்த வந்தோம்” என்னும் பெருமித உணர்வுடன் மேடையேறி முனைவர் பட்டம் பெற்றாள். 
    அப்போது உறவும் நட்பும் உற்சாகமாக எழுப்பிய கரவொலியும் குரலொலியும் அவளது வெற்றிக்குத் திருவொலியாய் தருவொலியாய் அமைந்தன. கரவொலி அடங்கிய பின்னும் ஓர் ஒலி தொடர்ந்து ஓங்கி ஒலித்தது. அது அவளுடைய அன்புக் கணவரின் ஆசைக் கரவொலி இல்லை இல்லை அது ஆதரவுக் கரவொலி!



   



காரியம் யாவினும் கைகொடுக்கும் மனைவியைப்பற்றிக் குறிப்பிடுவார் பாரதியார். என் மகளுக்கு அவளது காரியம் யாவினும் கைகொடுக்கும் கணவர் வாய்த்துள்ளார் என்பது அவள் செய்த பெரும்  பேறு. அவள் இரவு பத்துமணிவரை ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியபோது தானே அன்புடன் சமைத்த அறுசுவை உணவை ஆய்வகத்திற்குக் கொண்டு சென்று கொடுத்தவர் என் மாப்பிள்ளை  என என் மகள் என்னிடத்தில் சொல்லியிருக்கிறாள். ஒரு பெண்ணுக்குக் கணவர் வாய்ப்பதும் இறைவன் தரும் வரம்தானே?

    இந்த விழாவில் பெருமை பிடிபடாமல் தரையில் கால்கள் பாவாமல் நடந்தவள் என் அருமை மனைவிதான். ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகளை முனைவர் எனக் கேட்ட தாயல்லவா அவள்!

  என் மகள் கடந்த ஐந்தாண்டுகளில் எடுத்த விடா முயற்சியின் பயனாய் வாய்த்தது இந்த உயர்பட்டம். அவள் ஆய்வுப் படிப்பில் சேர்ந்த முதலாண்டில் ஒரு வாழ்த்துக் கவிதையாக ஓர் ஆங்கிலக் கவிதையை எழுதி அனுப்பியிருந்தேன். அதை அச்சிட்டு தன் ஆய்வகத்தில் கண்ணில் படும்படியாய் ஒட்டி வைத்திருந்தாள். அந்தக் கவிதையின் கடைசி இரண்டு வரிகள்:

It’s sure that you will get
Proportionally to your sweat

 அது வேறு ஒன்றுமில்லை. நம் பூட்டாதி பூட்டன் திருவள்ளுவர் சொன்ன ‘மெய்வருத்தக் கூலி தரும்” என்பதன் மொழிபெயர்ப்புதான் அது!
................................
முனைவர் அ.கோவிந்தராஜூ,


12 comments:

  1. ஐயா, சகோதரிக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிடுங்கள். உங்கள் மகிழ்ச்சி என்ன என்பது உங்கள் வார்த்தைகளில் உணரமுடிகிறது. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. தங்களின் அன்பு மகளுக்கு மனமார்ந்த நல வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  3. Aruna akka this is the beginning.. Way to go yet. Love u .cheers!

    ReplyDelete
  4. மகளுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  5. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். அருமை மகளின் சாதனைகள் தொடரட்டும்.

    ReplyDelete
  6. உங்களின் மகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்களைப் போன்ற பெற்றோரின் அன்பும், ஆதரவும்கூட அவர் இந்நிலைக்கு வர உதவியாக இருந்துள்ளது என்பதை மறக்க முடியாது. அவரைவிட நீங்கள் அதிகம் மகிழ்ச்சியோடு இருந்திருப்பீர்கள் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  7. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் அருமையாகப் பட்டம் பெற்ற
    அன்புச் சகோதரி
    அருணாவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. தெய்வத்தான் ஆகதெனினும் முயற்சி தன்
    மெய் வருத்தக் கூலி தரும். குறள்-619.
    முயற்சி, பயிற்சி, தொடர்ச்சியாய் பின்பற்றுபவர்களுக்கு தோல்வி பயம் கிடையாது. அதிலும் Highly Command பெற்றமைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்னும் பல பட்டங்கள் பெற்று உயர வேண்டும் என மீண்டும் வாழ்த்தைத் தெரிவிக்கிறேன். வாழ்க! வளர்க! வெல்க!
    Dr.R.LAKSHMANASINGH
    Professor, Govt.Arts College(Autonomous)
    KARUR - 639 005

    ReplyDelete
  9. Aiya . Sakotharikku ean manamaarntha vaazhthukal. Melum pala pattamgal Pera vazhthukiren.

    ReplyDelete
  10. Aiya . Sakotharikku ean manamaarntha vaazhthukal. Melum pala pattamgal Pera vazhthukiren.

    ReplyDelete
  11. 17 டிசம்பரில் பதிவிட்ட இக்கட்டுரையை இன்று படித்தபோது என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. அன்பு மகளுக்கு வாழ்த்துகள். "முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்"

    ReplyDelete
  12. 17 டிசம்பரில் பதிவிட்ட இக்கட்டுரையை இன்று படித்தபோது என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது. அன்பு மகளுக்கு வாழ்த்துகள். "முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்"

    ReplyDelete