Wednesday, 27 December 2017

குப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே?

   நினைத்தால் வெளியில் சென்று உணவகங்களில் சாப்பிடுவது என்பது இங்கே(அமெரிக்காவில்) இயல்பான நிகழ்வாகும். நம் நாட்டிலும் இந்தக் கலாச்சாரம் பரவிவிட்டது. கணவன் மனைவி இருவரும் அலுவலகம்  செல்லும் குடும்பங்களில் கேட்கவே வேண்டாம்; வாரத்தில் பாதி நாள்கள் வீட்டில் சமையல் இருக்காது.

  என் முன்னாள் மாணவர் ஒருவர் புகழ் பெற்ற கட்டுமானப் பொறியாளராய் உள்ளார். அவர் சொன்ன ஒரு செய்தி எனக்கு அதிர்ச்சி அளிப்பதாய் இருந்தது. சென்னையில் சமையல் அறை இல்லாமல் வீடு கட்டும் போக்கு துளிர்த்துள்ளதாகத் தெரிவித்தார். அதனால் கட்டுமானச் செலவு கணிசமாகக் குறைகிறதாம்! என்ன கொடுமை இது!

   ஓர் உளவியலாளர் என்ற முறையில் சொல்கிறேன். கணவன் மனைவிக்கிடையே, அம்மா பிள்ளைகளுக்கிடையே அன்புப் பிணைப்பு உண்டாவதற்குக் காரணமே சமையல் அறைதான். மனைவி சுவைபட சமைத்துப் பரிமாறினால் போதும் கணவன் அவளைச் சுற்றிச் சுற்றி வருவான். அவளுக்கு உடல்நலம் இல்லாதபோது கணவன் சமையலறையில் புகுந்து சிறிது உப்புமா செய்து அன்புடன் கொடுக்கும்போது அப்படி மகிழ்ந்து போவாள். அதனால்தான் ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமைத்துப் பழக வேண்டும் என்று நான் பள்ளிப் பிள்ளைகளிடம் சொல்வதுண்டு.

  பள்ளிப் பிள்ளைகள் என்றதும் எனது பள்ளிப் பருவம் நினைவில் பளிச்சிடுகிறது. கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அரசுப்பள்ளி அது. ஈயம் பூசப்பட்ட பித்தளைத் தூக்குப் போசியில் அம்மா போட்டுத்தரும் மோர் கலந்த  பழைய சாதத்தை மதியத்தில் சாப்பிட்டு வந்தேன். பத்தாம் வகுப்பு வந்ததும் தம்பி நல்ல சாப்பாடு சாப்பிடட்டும் என்று நினைத்த என் அண்ணார் பள்ளி அமைந்திருந்த ஆண்டிமடம் நகர் ஓட்டல் ஒன்றில் கணக்கு வைத்துக்கொண்டு சாப்பிட ஏற்பாடு செய்தார். வாழ்க்கையில் முதன்முதலில் மதியத்தில் சுடச்சுட அறுசுவை உணவைச் சுவைத்துச் சாப்பிட்டேன். காலை நான்காம் பிரிவேளை அன்றைய மதிய உணவு எப்படி இருக்கும் என்ற கற்பனையில் கழியும். மதிய உணவுக்குப் பிறகு ஐந்தாம் பிரிவேளை தூங்கி வழிவதில் கழியும். அதனால் அடுத்தடுத்து வந்த தேர்வு விடைத்தாளில் வந்தது சுழியும்!

   தொடர்ந்து நண்பர் சிலரையும் அழைத்துச் சென்று என் கணக்கிலேயே சாப்பிட்டோம். மாதாமாதம் சாப்பாட்டுச் செலவு கூடிக்கொண்டே போனது. ஒருநாள் சந்தைக்குச் சென்ற என் அண்ணார் ஓட்டல்காரரிடம் சண்டைக்குப் போனார். என் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது. என் நல்லகாலம் நான் தவறு செய்யும்போது என்னைக் குனிய வைத்துக் குமுறும் என் அண்ணார் அன்று என்னை எச்சரித்து விட்டுவிட்டார்.

  அடுத்த நாள் முதல் பாடவேளையில் தமிழ் வகுப்பில் எனது தமிழாசிரியர் புலவர் பூவராகவன் அவர்கள் காந்தி இங்கிலாந்து சென்று ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டுப் படிப்பில் ஆர்வம் குன்றியது, பிறகு அவராகவே மனம் திருந்தி படிப்பை முடித்த வரலாற்றை சத்திய சோதனை நூலிலிருந்து படித்துக்காட்டி விளக்கினார். அப்போது என் உள்ளுணர்வு “நீ திருந்துவதற்கான சமயம் இது” என்று சொன்னது.

   மறு நாள் என் மிதிவண்டியில் புத்தகப்பையோடு பழையபடி என் அம்மா தந்த பழையசாதமும் பயணித்தது. அந்தப் பழைய சாதம் என்னைப் பொருத்தவரையில் ஒரு மீண்ட சொர்க்கம்! பிறகென்ன? அடுத்த மாதத்தேர்வில் கணக்குப் பாடத்தில் இரண்டு சுழிகள்! ஆனால் ஒன்றையடுத்து இரண்டு சுழிகள்!

  சரியோ தவறோ இந்த அனுபவத்தின் காரணமாக நான் முதல்வராய்ப் பணியாற்றிய பள்ளிகளில் கேண்ட்டீன் வசதியை ஏற்படுத்தித் தரவில்லை. அம்மாக்கள் கொடுத்தனுப்பிய பாசம் நிறைந்த உணவைத்தான் எல்லோரும் சாப்பிட்டார்கள். 

 இல்லத்தில் அம்மா சமைக்கும் உணவில் அல்லது மனைவி சமைக்கும் உணவில்  உள்ளவை உப்பு, காரம், புளி மட்டுமா? ஒரு குப்பைக் கீரையைக் கடைந்து வைத்தாலும் கூட தேவாமிர்தம் எனச் சுவைத்துச் சாப்பிடுகிறோமே ஏன்? அன்பையும் பாசத்தையும் சேர்த்துச் சமைக்கப்படுவதால் குப்பைக் கீரையும் குபேர உணவாக மாறிவிடுகிறது.

      குப்பைக் கீரை என்றாலும் அப்படிச் சுவைப்பது எதனாலே
      உப்புடன் அன்பு பாசமிட்டு உணர்வுடன் சமைத்தாள் அதனாலே

என்று பல ஆண்டுகளுக்குமுன் நான் எழுதிய கவிதையில் எனது வாக்குமூலமாக இதைப் பதிவு செய்துள்ளேன்.

  அது ஒரு கனாக் காலம். எனக்குத் திருமணம் ஆகி ஒரே மாதத்தில்  சமையல் அறை, பள்ளியறை மட்டும் இருந்த வாடகை வீட்டில் தனிக்குடித்தனம். நான் பணியாற்றிய பள்ளி அருகில் இருந்ததால் மதிய உணவை இல்லத்தில் அருந்துவதுண்டு.

   அன்று மதியம் இல்லம் திரும்பியபோது சமையல் வாசனை என்னை வரவேற்றது. சமையற்கட்டின் ஒரு பகுதியில் அமர்ந்து உண்டேன். சாதம், பருப்புக் குழம்பு, வத்தல் குழம்பு, திப்பிலி ரசம், தாளித்த தயிர், இரண்டு வகைப் பொரியல் எல்லாவற்றையும் பொறுமையாக உண்டேன். நான் உணவு குறித்து ஏதேனும் சொல்வேனா என்று எதிர்பார்த்து நின்றிருந்தாள் என் மனைவி. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, “ஏங்க சாப்பாடு எப்படி இருந்துச்சு?” என்று கேட்டாள்.

  “இதை மனுசனா சாப்பிடுவான்?” என்று நான் சொன்னதும் மிரண்டு போனாள். அவள் கண்களில் கண்ணீர் அரும்பி நின்றது. அடுத்து நான் சொன்னதைக் கேட்டு அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது.

  “நீ சமைத்த உணவு தேவர்கள் சாப்பிடும் அளவுக்குச் சுவையாக உள்ளது” என்ற உண்மையை உணர்வுப் பூர்வமாகச் சொன்னேன். அது இன்றும் தொடர்கிறது வெவ்வேறு சொற்கட்டில்!

எங்கள் சமையலறை அனுபவங்களைத் தனிப் புத்தகமாகவே எழுதலாம்!
  .................................

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

11 comments:

 1. Kitchen is very important place,no doubt about that

  ReplyDelete
 2. அந்தக் கைவண்ண உணவை நானும் உண்டு களித்தது இன்றும் மகிழ்விக்கின்றது. அந்தப் பாக்கியமே பாக்கியம்.
  நீதிபதி மூ.புகழேந்தி

  ReplyDelete
 3. மனித வாழ்க்கையில் உணவு முக்கிய இடம் பிடிக்கிறது. அதிலும் கனவன் மனைவி இடையே உள்ள அன்புறவின் வெளிப்பாடு உணவின் சுவை குன்றியபோதும் அன்பின் பிணைப்பு உணவின் சுவையைக் கூட்டிவிடுகிறது. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் அகத்திணைக் காட்சிகளில் சமைக்கத்தெரியாத மனைவி சமைத்ததை அருமை என கணவன் பாராட்டியதைப் பார்க்கலாம்.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  கரூர்.

  ReplyDelete
 4. எத்தனை உணவகங்கள் இருந்தாலும் அம்மாவின் கைப்பக்குவம்போல வருமா?

  ReplyDelete
 5. அருமையான பதிவு. ருசிகரமா சொன்னீங்க

  ReplyDelete
 6. அன்பு தருவோர், அன்புடன் அமுது தருவோரிடம் எல்லாம் தாயைக் கண்டேன்.
  அறிவூட்டுபவர் எல்லாம் தந்தை எனத் தெளிந்தேன்.

  ReplyDelete
 7. சமையலையறையின் முக்கியத்துவத்தை உணர்ந்தபடியே பகிர்ந்துள்ளீர்கள்.இவ்வாறான அனுபவங்களை நானும் எதிர்கொண்டுள்ளேன். நாகரிகம் என்ற போர்வையில் நாம் ஒவ்வொன்றாகத் தொலைத்துவருகிறோம். அதில் சமையலையும் சேர்ந்துவிட்டதோ?

  ReplyDelete
 8. சமையலறை இல்லா வீடுகள்
  வேதனையாக இருக்கிறது ஐயா

  ReplyDelete
 9. மிகவும் அருமையான சுவையான பதிவு ஐயா....100% வழி மொழிகிறேன் உங்கள் உளவியல் கருத்தை...

  கீதா

  ReplyDelete
 10. I am impressed by your prolific writing.

  ReplyDelete
 11. ஐயா, உண்மையிலேயே அம்மா செய்த உணவு தான் பெரிய உந்து சக்தியைத் தருகிறது. இன்று நான் மாணவர்கள் பலரிடமும் ஏன் உணவு எடுத்து வருவதில்லை எனக் கேட்டால், பலரது பதில் அதைத் தூக்கி வருவது அவமானமாக இருக்கிறது என்று. இந்த எண்ணத்தில் இருக்கும் இன்றைய தலைமுறை எப்படி இருக்கப் போகிறது என பல நாட்கள் நான் வருத்தப்படுவதுண்டு. நானோ எனது குடும்பமோ தவிர்க்க இயலாத நேரத்தில் தான் வெளி உணவை உண்போமே தவிர பகட்டுக்காக விடுதியில் உண்ணும் பழக்கம் கிடையாது. எது மாதிரி உணவு வேண்டும் என்று என் குழந்தைகள் கேட்டாலும் அதை முடிந்தவரை நானோ அல்லது என் மனைவியோ செய்துவிடுவதுண்டு.

  ReplyDelete