Monday, 25 December 2017

அமெரிக்க மண்ணில் அருமையான விழா

 இந்தப் பதிவை எழுதும்போது கடிகாரம் பன்னிரண்டு மணி எனச் சொல்கிறது. குழந்தை இயேசுவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் தூரத்து மாதா கோவிலில் மணி ஓசை நீண்டு ஒலிக்கிறது. அங்கே நடுநிசி பூசை நடக்கும் என எண்ணுகிறேன்.

  இங்கே குளிர் வாட்டி எடுக்கிறது. சில நாள்களில் வெப்பம் சுழியனுக்கும் கீழே செல்கிறது. தெர்மல் பேண்ட், ஷூ, பனியன், டி-ஷர்ட், ஜாக்கெட், இரண்டு கண்களையும் மூக்கையும் தவிர்த்த ஒரு தலைக் கவசம், கையுறைகள்- அதாவது ஒரு விண்வெளி வீரனைப்போல உடையணிந்துகொண்டு, நெஞ்சில் துணிவிருந்தால் கொஞ்ச நேரம் வெளியில் போய் வரலாம். இப்படியாக  ஒரு நகர் வலம் வந்தேன்.   இங்கே கிறிஸ்துமஸ் விழாக் கோலம் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிட்டது. ஒரு தெருவில் இருபது வீடுகள் இருந்தால் இருபது வீடுகளிலும் கண்ணைக் கவரும் அலங்கார மின்விளக்குகளை ஒளிரவிட்டுள்ளனர். கிறுஸ்துமஸ் மரத்தை வீட்டுக் கூடத்தில் வைத்து அழகுபடுத்தியுள்ளனர். வீட்டு முகப்பில் வண்ண வண்ண பலூன்களை காற்றடைத்து வைத்திருப்பது விழாவுக்குக் கூடுதல் அழகைச் சேர்க்கிறது.  அவர்கள் மரங்களையும் விட்டுவைக்கவில்லை. இலையுதிர்த்த மரங்கள் அலங்கார மின்னொளியில் வெகு அழகு! இதிலே சிறப்பு என்னவென்றால், அந்த  வீடுகள் சிலவற்றில் இந்துக்களும் வசிக்கிறார்கள்! ஆக கிறிஸ்துமஸ் விழாவை ஒரு தேசிய விழாவாகக் கருதி அனைத்து மதத்தினரும் சேர்ந்து கொண்டாடுகிறார்கள்.

   சிலர் கிறிஸ்துமஸ் தாத்தாவாக வேடமணிந்து குழந்தைகளுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்குகிறார்கள். அதாவது பிஞ்சு உள்ளங்களில் அன்பை விதைக்கிறார்கள்.

  நல்லூழ் இல்லாதவர்களுக்காக உள்ளம் உருகி இறைவனை மன்றாடி வேண்டிக்கொள்ளும் ஒப்பற்ற கோட்பாட்டினை உடையது கிறித்துவமதம். அணுவளவும் வன்முறையப் போதிக்காத மதம். எதிரிகளை ஆயுதபலத்தாலும் வீழ்த்தலாம்; அவர் நாணும்படியாக நன்னயம் செய்தும் வீழ்த்தலாம். இரண்டாவது வகையைப் போதித்தவர் இயேசு நாதர்.

  போதிய விழிப்புணர்வு இல்லாததால் நாம் நம் மதங்களைத் தவறாகக் கையாள்கிறோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

10 comments:

 1. "பிஞ்சு உள்ளங்களில் அன்பை விதைக்கின்றார்கள்"

  அடுத்த சந்ததியினருக்கு நாம் கொடுக்க வேண்டிய கடமையல்லவா! இது பகிர்வுக்கு நன்றி ஐயா - கில்லர்ஜி

  ReplyDelete
 2. உண்மை. போதிய விழிப்புணர்வு இல்லாததால் நம்மில் பலர் மதங்களைத் தவறாகக் கையாள்வதைப் பார்ககும்போது வேதனையாக உள்ளது.

  ReplyDelete
 3. அன்பை வெளிப்படுத்தும் கிறுஸ்துவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அன்பை வெளிப்படுத்தும் கிறுஸ்துவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அருமையான பதிவு ஐயா! உண்மைதான்!! நல்லதொரு மதம்..

  கீதா

  ReplyDelete
 6. கருத்துள்ள பாடமே -நீதிபதி மூ புகழேந்தி

  ReplyDelete
 7. படக்காட்சிகளுடன் அருமையான பதிவு.கரூரில் நம் வீட்டருகில் ஐ.பி.ஏ., சர்ச்சில் ஆண்டுதோறும் நீங்களும் நானும் சென்று கிறிஸ்துமஸ் உரையாற்றுவதுண்டு. இவ்வாண்டு நான் மட்டும் சென்று நீங்கள் பேச வேண்டியதையும் சேர்த்துப் பேசிவிட்டு வந்தேன். அமெரிக்கர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் காட்சியாகக் கண்டு மகிழ்ந்தேன்.
  முனைவர் ரா.லட்சுமணசிங்
  கரூர்.

  ReplyDelete