Monday 22 January 2018

விளையாடலாம் மீண்டும்

         
  விளையாடுதல் என்பது விலங்கினங்களுக்கே உரித்தான ஓர் இயல்பூக்கமாகும். மேய்ந்து வயிறு நிரம்பிய ஆடுகள், மாடுகள் ஒன்றுடன் ஒன்று கொம்புகளால் உரசித் துள்ளி விளையாடுவதை நாம் பலகாலும் பார்த்திருக்கிறோம். நாய்கள் சேர்ந்து ஓடித் தழுவி விளையாடும் அழகே அழகு.

    ஐந்தறிவு உள்ள விலங்குகள் விளையாடி மகிழும்போது ஆறறிவு கொண்ட மனித இனம் சும்மா இருக்குமா? நம் முன்னோர்கள் எண்ணற்ற விளையாட்டுகளைக் கண்டுபிடித்தார்கள். “அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்றும், “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்றும் கடவுளை பெரிய விளையாட்டு வீரனாக உருவகம் செய்தார்கள்.

   விளையாட்டுகளை வீர விளையாட்டுகள் என்றும், உடல் உரத்துக்கான விளையாட்டுகள் என்றும், பொழுது போக்கு விளையாட்டுகள்  என்றும் வகைப்படுத்திக் கொண்டார்கள். ஏறு தழுவுதல் என்னும் காளையடக்கல் என்பது இன்றளவும் வீர விளையாட்டுகளில் ஒன்றாக ஒத்துக்கொள்ளப்படுகிறது.

     ஆடவர்க்கு நிகராக விளையாடி மகிழ்ந்தவர்கள் பெண்கள் எனப் பண்டை இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்று எளிமையாக மனிதன் வாழ்ந்தவரை விளையாட்டு என்பது வாழ்வில் ஓர் அங்கமாக இருந்தது.

    விளையாட்டும் சிரிப்பும் குழந்தைப் பருவத்தில் பொங்கிப் பூத்துக் குலுங்குகின்றன. வளர வளர இரண்டையும் மறந்துவிட்டு அல்லது மறுத்துவிட்டு வாழ்வதை வழக்கமாக்கிக் கொள்கின்றோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை ஏட்டளவில் படித்ததோடு நிறுத்திவிட்டு, நம் குழந்தைகளை டாலர் கனவில் திளைக்கச் செய்கிறோம். அல்லும் பகலும் அயராமல் படிக்கச் செய்கிறோம். இதன் விளைவாக இளைஞர்களையும் விட்டுவைக்கவில்லை இதயநோய்.

   குருகுலக்கல்வி, திண்ணைப் பள்ளி போன்ற பண்டைய முறைசாராக் கல்வி முறையில் விளையாட்டின் இடம் முக்கியமானதாக இல்லை. காரணம் வாழ்வியலின் ஒரு கூறாகவே விளையாட்டு இருந்தது.

    நம் நாட்டை ஆங்கிலேயர்கள் ஆண்டபோது முறைசார் கல்விக்கூடங்கள் பல்கிப் பெருகியபோதும் பாடத்திட்டத்தில் விளையாட்டு சேர்க்கப்படவில்லை. முதன் முதல் பள்ளிப் பாடத்திட்டத்தில் விளையாட்டைச் சேர்க்கச் சொல்லி வலியுறுத்தியவர் இரஷ்ய நாட்டுக் கல்வியாளர் மெக்கன்ரோ என்பவரே. Let the noble thoughts come from every side என்னும் கோட்பாட்டை மதிக்கும் இயல்புடைய ஆங்கில அரசு 1927ஆம் ஆண்டில் பள்ளிக் கால அட்டவணையில் விளையாட்டுப் பாடவேளையைச் சேர்த்தது.

   எண்பதுகளுக்குப் பிறகு பாழாய்ப்போன மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் நாமும் பள்ளிகளும் குழந்தைகளை விளையாட அனுமதிக்கவில்லை. உடற்கல்வி ஆசிரியர்கள் குழந்தைகளைச் சத்தம் போடாமல் பார்த்துக்கொள்ளும் சட்டாம்பிள்ளைகளாக மாறிவிட்டார்கள். விளையாட்டுப் பாடவேளைகள் பாட ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டன. விடுமுறை நாள்களிலும் தனிவகுப்புகள், தனிப்பயிற்சி நடத்தப்பட்டதால் விளையாடும் வழக்கம் வழக்கொழிந்தன. இன்றளவும் இதே நிலைதான் தொடர்கிறது.

    உடலில் தேங்கியுள்ள கூடுதல் சக்தி விளையாட்டின் மூலம் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போனதால் இளம் வயதிலேயே சிறுவர் சிறுமியர் வயதுக்கு வரத்தொடங்கினார்கள். பெரிய மனிதர்களைப் போல செயல்படத் தொடங்கியதன் விளைவாக, தீ நட்பு, தீக்குழு,  மது புகைப் பழக்கம், பெண் சீண்டல், கீழ்ப்படியாமை, தன்னினும் இளையோரை வம்புக்கிழுத்தல், வகுப்பறை வன்முறைகள், விதிமீறல் போன்ற பல சிக்கல்கள் பள்ளிகளில் முளைத்துக் களையென வளர்ந்துவிட்டன. ஆசிரியர்களின் கைகளும் கட்டப்பட்ட இக் காலக்கட்டத்தில் மாணவர்களின் நடத்தைப் பிறழ்வுகள் எல்லை மீறி விட்டன.

   இப்போதாவது அரசு விழித்துக்கொண்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விளையாட்டுத் திடல் அறவே இல்லாத பள்ளிகள் நூற்றுக் கணக்கில் உள்ளன. விளையாட்டுத்திடல் இருந்தாலும் விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாத நிலை இன்றும் தொடர்கிறது. உடற்பயிற்சி என்பதை அறியாத மாணவர்கள் தண்டனை என்ற பெயரில் வெயிலில் சில மணித் துளிகள் ஓடச்செய்தாலும் மயங்கி விழுகிறார்கள். அத்தி பூத்தாற்போல் சிலர் இறக்கவும் நேரிடுகிறது.

    மெட்ரிக், சிபிஎஸ்இ போன்ற அனைத்துவகைப் பள்ளிகளிலும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை யோகா, உடற்பயிற்சி உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டுக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் சமரசத்திற்கு இடமில்லாமல் முற்றிலும் தகுதி அடிப்படையில் விளையாட்டு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இப்படிச் செய்தால் மனவழுத்த நோயிலிருந்து மாணாக்கச் செல்வங்கள் விடுபடுவர்.  தற்கொலை முதலான சிக்கல்கள் பாதியாகக் குறைந்துவிடும்.

 இளைய தலைமுறையின் மீது உண்மையான அக்கறை இருந்தால், பள்ளிப் பாடத் திட்டத்தை மாற்றி அமைக்க முன்வந்துள்ள   அரசு மாணவ மாணவியரை விளையாட்டுகளில் ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்க ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும்.



5 comments:

  1. மிக மிக அருமையான இப்போதையச் சூழலுக்கு ஏற்ற பதிவு. நாங்கள் பள்ளியில் படிக்கும் போதெல்லாம் விளையாட்டு வகுப்புகள் உண்டு. நன்றாக விளையாடியதுண்டு.

    துளசி: நான் ஆசிரியராகப் பணி செய்யும் பள்ளியிலும் பிற பள்ளிகளிலும் 9 ஆம் வகுப்பு வரை விளையாட்டிற்கான வகுப்புகள் இருக்கின்றன. 10,11,12 வகுப்புகளுக்கு இல்லை. ஆனால் என்சிசி, ஸ்கௌட் போன்றவை உண்டு.

    கீதா: எனக்குத் தெரிந்து விளையாட்டு வகுப்புகள் என்று பள்ளியில் முன்பு போல் இருப்பதாகத் தெரியவில்லை. அரசுப்பள்ளியிலும் சரி தனியார்ப்பள்ளிகளிலும் சரி. என் மகன் படிக்கும் போது வாரத்தில் ஒரு வகுப்போ 2 இருந்தது ஆனால் பெரும்பாலும் வேறு பாடங்களுக்கு எடுத்துக் கொண்டுவிடுவார்கள். சில தனியார்ப்பள்ளிகளில் யோகா வகுப்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் பொதுவாகவே விளையாட்டுகள் குறைந்துவிட்டது...

    அமெரிக்காவில் என் மகன் படித்த பொதுப்பள்ளியில் முதல் வகுப்பு விளையாட்டுதான் இருந்தது. 7 ஆம் வகுப்பு மட்டும் அங்கு படிக்க நேர்ந்தது. பெரிய மைதானத்தைச் சுற்றி 4 முறை ஓட வேண்டும். ரக்பி, கூடைப்பந்து விளையாட்டு, பேஸ்பால் எல்லாம் விளையாடியதுண்டு. அவனுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

    விளையாட்டு என்பது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும் மிகவும் நல்லது பயக்கும். நல்ல கட்டுரை

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை ஐயா.

    ReplyDelete
  3. Mr T P Subramaniam, Retired HM sent through Whatsapp

    ஓடி விளையாடு பாப்பா
    - - இனியன்
    ஓங்கி ஒலிக்கிறார்
    பாப்பா
    நாடி நன்றி சொல்லு பாப்பா - - அவர்
    நலமுடன் வாழ்க வென்று பாப்பா

    ReplyDelete
  4. Increase of syllabus of subjects influences on the reduction of sports hours. More workload and less relaxation. Poor students.

    ReplyDelete
  5. http://nanjappachinnasamy.blogspot.in/2017/01/blog-post_16.html?m=1

    ReplyDelete