Monday 26 March 2018

கலங்க வைத்த கண்ணீர் அருங்காட்சியகம்

   ஆம். இது ஒரு கண்ணீர் அருங்காட்சியகம்தான். ஆருயிர் மனைவியும், அருமைக் குழந்தைகளும் சிந்திய கண்ணீருக்குச் சாட்சியாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளவற்றைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின.

  
  அந்த மாமனிதருடைய உயிரைப் பறித்த துப்பாக்கி இருக்கிறது. அவர் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவு உண்ணும் தட்டு, தம்ளர் போன்றவை, உயிர் பிரிந்த போது அணிந்திருந்த உடை முதலியவை காட்சிப்பொருள்களாக கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டுள்ளன.

   உடலை உள்ளடக்கிய சவப்பெட்டி தனி விமானத்தில் ஏற்றப்பட்டபோது கதறி அழும் அவரது மனைவியும், குழந்தைகளும், பொதுமக்களும் இடம் பெற்றுள்ள ஒரு படம் காண்போரை கலங்கச் செய்கிறது.
 

young and dynamic

with his tender children
ஆறாவது மாடியில், பள்ளிகளுக்கு வழங்க இருந்த பாடநூல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிடிருந்த அறையில் இருந்துதான்  சாலையில் திறந்த காரில் ஊர்வலமாகப் பயணித்துக் கொண்டிருந்த அந்த மாமனிதரை  ஒருவன் சுட்டு வீழ்த்தியுள்ளான். அந்தப் புத்தகக் கட்டுகள் இன்றும் அப்படியே உள்ளன. அந்த ஆறாம் மாடி முழுவதும் திரும்பிய பக்கமெல்லாம் படங்கள். ஒவ்வொரு படத்தின் பின்னணியிலும் ஒரு வரலாறு உள்ளது. உள்ளே நுழையும் போதே அலைப்பேசி அளவில் ஒரு கையடக்கக் கருவியைத் தந்தார்கள். அதில் ஒவ்வொரு காட்சிப்பொருளுக்கும் உரிய எண்ணை அழுத்தினால் உரிய செய்தியை ஆங்கிலத்தில் நாம் செவிமடுக்க முடியும்.

   ஓர் அரங்கில்  இருபது நிமிடத்துக்கு ஒருமுறை பதினைந்து நிமிட காணொளிக் காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. அவரது உடல் அடக்கம் செய்யப்படும் காட்சி கண்முன்னால் விரிகிறது.
  
Shooting site

while seeing from sixth floor
   துப்பாக்கிச் சூடு நடந்த அந்த சாலை இன்றும் வடிவம் மாறாமல் உள்ளது. சுட்ட இடம் மட்டும் ஒரு பெருக்கல் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. வாகனங்கள் வராத சமயத்தில் நான் ஓடிச்சென்று அங்கு நின்றேன். நண்பர் திரு.சுப்பிரமணியம் ஒரு நொடியில் ஒரு படம் எடுத்தார்.

  நடுத் தெருவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த மாமனிதர் அமெரிக்க அதிபர் ஜான் எஃப் கென்னடி அவர்கள்.

 அந்தக் கருப்பு நாள் நவம்பர் இருபத்து இரண்டு. 1963 ஆம் ஆண்டு.

  அந்தச் சோக வரலாற்றைச் சுமந்து கொண்டுள்ள இடம் ஃபோர்ட் ஒர்த், டெல்லாஸ், வடக்கு டெக்சாஸ் மாநிலம், அமெரிக்கா.

 நான் பதினோரு வயது சிறுவனாக இருந்தபோது பள்ளியில் நடந்த காலை வணக்கக் கூட்டத்தில் அப்போதிருந்த தலைமையாசிரியர் தெரேஸ்நாதன் அவர்கள் கென்னடி சுடப்பட்ட சம்பவம் குறித்துப் பேசினார். அந்தச்  சம்பவம் நிகழ்ந்த  இடத்தை அறுபத்தாறு வயது இளம் முதியவராக சென்று கண்ணீர் மல்கப் பார்த்தேன்.

   அவரை மறந்தவர் கூட, அவரது புகழ் பெற்ற வாய்ச்சொல்லை மறக்க மாட்டார்கள்.
   “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக்கொள்”
...................................................................
முனைவர் .கோவிந்தராஜூ,
அமெரிக்காவிலிருந்து.



9 comments:

  1. வேதனையான மறக்க இயலாத நிகழ்வுதான் ஐயா

    ReplyDelete
  2. Nandru, paaraatukal,negilchi

    ReplyDelete
  3. கென்னடியின் ம்ரணம் அதிக வேதனையைத் தருவதாகும்.

    ReplyDelete
  4. அருமை! சமீபத்தில் நான் அபுதாபியில் லூவர் அருங்காட்சியகம் சென்றிருந்தேன். ஆளை அசரடிக்கும் காட்சியகம்.

    ReplyDelete
  5. "My fellow Americans, ask not what your country can do for you, ask what you can do for your country." One of the important quotes I refer often during my interaction with school / college children.

    நாடென்ன செய்தது நமக்கு.... எனக் கேள்விகள் கேட்பது எதற்கு...நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு.....!

    ReplyDelete
  6. “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டிற்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக்கொள்//

    ஆம் மறைந்த நம் அப்துல்கலாம் ஐயா கூட இதைச் சொல்லிவந்தார்...

    நல்லதொரு பதிவு...படங்களுடன் விவரணம் அருமை ஐயா

    கீதா

    ReplyDelete
  7. 1963 ஆம் ஆண்டு நிகழ்ந்த துயரச் சம்பவத்தைக் கண்முன் நிறுத்தியுள்ளீர்கள். கென்னடியின் மறைவு பலநாட்கள் சிலாகித்துப் பேசப்பட்டது. அப்போது தங்களைப் போலவே நானும் பள்ளி மாணவன். (Fifth Form).

    ReplyDelete