Wednesday 28 March 2018

காட்டுக்குள்ளே திருவிழா

   இன்னும் சில மணி நேரத்தில் இந்தியாவை நோக்கிய இனிய பயணம் தொடங்க உள்ள நிலையில், நிறைவாக நிறைவான ஒரு பதிவை இடும் நோக்கில் மடிக்கணினியைத் திறக்கிறேன்.

   “முதலில் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டுப் புறப்படத் தயாராகுங்கள்” – இது என் மனைவியின் அன்புக் கட்டளை. 

“சரி சரி ஒரு மணி நேரம் மட்டும்தான்”- என்று தன் தீர்ப்பை மாற்றி அமைத்தாள்.

 இந்தச் சலுகையைப் பயன்படுத்தும் விதத்தில் என் கைவிரல்கள் பத்தும் மடிக் கணினியின் விசைப்பலகை மீது சிவ தாண்டவம் ஆடத் தொடங்கிவிட்டன.

  “என்றும் நினைவில் நிற்கத்தக்க ஓர் இடத்திற்கு அழைத்துச் செல்கிறேன்” என்றார் என் மாப்பிள்ளை. “அப்பா, அது உங்களுக்குப் பிடித்த இடமும் கூட.” என்று உடன்பாட்டுப் பாடினாள் என் மகள். இராமன் இருக்கும் இடம் அயோத்தி என்றபடி என் மனைவியும் என்னுடன் எழுந்தருள எனது மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகியது.

  
  மாநகரைத் தாண்டி கிராமங்களின் ஊடே கார் விரைந்தது. வனாந்திரப் பகுதியில் இருந்த ஓர் அழகிய கட்டடத்திற்கு அருகில் உரிய இடத்தில் காரை நிறுத்திவிட்டு வரவேற்பகத்தில் நுழைந்தோம்.

  இது இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள பறவைகள் சரணாலயம். இந்த இடம் ஒருகாலத்தில் நகரின் குப்பைக் கழிவுகள் குன்றெனக் குவிந்து கிடந்த இடம். கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட தன்னார்வத் தொண்டர்களின் உழைப்பால் இந்த இடம் இப்போது பசும் சோலைவனமாக மாறி, நூற்றுக் கணக்கான பறவை மற்றும் கானுயிர்களுக்கு வாழிடமாக மாறியுள்ளது.

  
எப்படி என் சிவப்பழகு!

சிட்டுக்குருவிதான்!

அவள் வருவாளா?

காத்திருந்து காத்திருந்து....

ஆமைகளின் அணி வகுப்பு

அமைதியாக ஓடும் ட்ரினிட்டி ஆறு

அழகிய குட்டை
உயர்ந்த கட்டடங்களுக்கு நடுவே நகரின் மையப்பகுதியில் ஓடும் ட்ரினிட்டி ஆறு இங்கே வனப்பகுதிக்குள் கண்ணாமூச்சி காட்டி ஓடுவது தனி அழகுதான். வள்ளுவன் குறிப்பிடும் மணிநீர் இந்த ட்ரினிட்டி ஆறில் வளைந்தும் நெளிந்தும் துள்ளியும் செல்கிறது. ஆங்காங்கே நீர் நிரம்பிய குட்டைகள் மரங்கள் சூழ அமைந்து மனத்தைக் கொள்ளை கொள்கின்றன.

  
இது அமெரிக்க எலி அண்ணன்


ஓ மைனா மைனா

மரங்கொத்தியார்

நம்புங்கள்... காகம்தான்!



அதோ நம் அம்மா....!

இந்தக் குருவி போதுமா?

மாமோய்..நீங்க எங்க இருக்கீங்க?

அங்கேயே இரு வருகிறேன்
மலைப் பாம்பைப் போல வளைந்து செல்லும் வனப்பாதையில் மணிக்கணக்கில் நடந்தோம். கண்ணில் பட்ட உயிரினங்களை என் கேமராவுக்குள் பிடித்துப் போட்டேன்.

 
மரப் பலகைப் பாதை

  இதுவரை நான் அமெரிக்காவில் பார்த்த இடங்களுக்கு மதிப்பெண் போடச் சொன்னால் இதற்குச் சற்றும் தயங்காமல் முதல் மதிப்பெண் தருவேன்.

   மாந்த இனத்தின் பேராசையால் 2050 ஆம் ஆண்டுக்குள் உலகில் உள்ள உயிரினங்களில் பாதி அழிந்துவிடும் என ஓர் அதிர்ச்சி ஆய்வறிக்கை வெளியாகி உள்ளது. இது மாந்த இனத்தின் தற்கொலை முயற்சி என்பதை எப்போது அறியப் போகிறோம்?

  இந்த வன நடைப் பயணம் இங்கு வரும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இனியாவது நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்னும் உணர்வை ஏற்படுத்தும் என்பது உறுதி.

  நம் நாட்டு இளைஞர் கூட்டம் நடிகர் நடிகையர் பின்னால் செல்வதை நிறுத்தி இப்படி ஆக்க வழியில் அறிவைச் செலுத்துதல் எந்நாளோ என்ற ஏக்கத்துடன் மீண்டும் கான்கிரீட் வனத்தை நோக்கித் திரும்பினோம்.
...........................
முனைவர் அ. கோவிந்தராஜூ,

அமெரிக்காவிலிருந்து.

11 comments:

  1. ட்ரினிட்டி ஆறு ,பறவைகள், 🐦 புகைப்படங்கள் ,அற்புதம். தங்கள் அமெரிக்கப் பயணம் அமெரிக்கைமாக நிறைவுபெற்றதை அறிந்து மகிழ்ச்சி.
    அருணா மற்றும் மாப்பிள்ளைக்கு அன்பு விசாரிப்புகள்.

    ReplyDelete
  2. நம் நாட்டு இளைஞர் கூட்டம் நடிகர் நடிகையர் பின்னால் செல்வதை நிறுத்தி இப்படி ஆக்க வழியில் அறிவைச் செலுத்துதல் எந்நாளோ என்ற ஏக்கத்துடன் மீண்டும் கான்கிரீட் வனத்தை நோக்கித் திரும்பி//

    நன்றாகச் சொன்னீர்கள் ஐயா...ட்ரினிட்டி ஆறு படம் அழகு! அது அழகு என்றால் பறவைகளோ?!! என்ன சொல்ல எதை விட? அனைத்துமே அத்தனை அழகு! மிக மிக அருமையான இடத்தைப் பற்றிய பகிர்வு...மிகவும் ரசித்தேன். கேமராவுக்குள் பிடித்துப் போட்டபடியே கொஞ்சம் பைக்குள் பிடித்துப் போட்டு இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கலாம்....ஹா ஹா ஹா ஹா ஹா...

    கீதா

    ReplyDelete
  3. அருமையான படங்கள்...

    முடிவில் தங்களின் தகவல்கள் வேதனை...

    ReplyDelete
  4. Sir....Good afternoon . Your Collections are very good Sir. Thank you Sir.

    ReplyDelete
  5. Sir....Good afternoon . Your Collections are very good Sir. Thank you Sir.

    ReplyDelete
  6. ஐயா வணக்கம்.இயற்க்கையான பதிவு அழகான பதிவு. மனிதன் பேராசையால் மனிதநேயத்தை மறந்துவிட்டான். பணம் ஒன்றே அவனது குறிக்கோள் என்று பாதிபேர் இருக்க, மீதி பேர் எதையும் சிந்திக்காமல் நடிகர் நடிகையர் பின்னால். என்றாவது ஒருநாள் இந்நிலை மாறும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  7. நம் நாட்டு இளைஞர் கூட்டம் நடிகர் நடிகையர் பின்னால் செல்வதை நிறுத்தி இப்படி ஆக்க வழியில் அறிவைச் செலுத்துதல் எந்நாளோ

    ஏக்கம்தான் மிஞ்சுகிறது ஐயா

    ReplyDelete
  8. அருமையான சரணாலயம். உங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் அருமை.

    ReplyDelete
  9. இயற்கை ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கியுள்ள பறவைகள் சரணாலயம் விவரித்த விதம் படங்கள் மிக அருமை.

    ReplyDelete