Wednesday 18 April 2018

விபத்தை விளைவிக்கும் விநாயகர்

   சிதம்பரம் கோவில் நகரம் எனக் குறிப்பிடும் அளவுக்கு தெருவுக்குத் தெரு கோவில்கள் காணப்படுகின்றன. கொஞ்சம் பெரிய கோவிலாக இருந்தால் திருக்குளமும் இருக்கும். போதிய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாத காரணத்தால் அந்தத் திருக்குளங்கள் பொதுமக்களின் கையகப்படுத்தலுக்கு உள்ளாகி இன்று கழிவு நீர்க் குட்டைகளாக மாறிவிட்டன. இளமையாக்கினார் கோவில் திருக்குளம் இதற்கு முதன்மையான எடுத்துக்காட்டாகும்.

  இது இப்படியிருக்க, சாலைகள், தெருக்கள் நடுவில் அமைந்திருக்கும் கோவில்கள் சாலைப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளன. எதிரில் வரும் வாகனங்களைக் காணமுடியாத நிலையில் விபத்துகள் ஏற்பட்டு உறுப்பிழப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளன.

   சிதம்பரத்தில் விழல்கட்டி பிள்ளையார் கோவில் தெரு போக்குவரத்து மிகுந்தது. இங்கே அக்கசாலை விநாயகர் கோவில் சாலையின் நட்ட நடுவில் அமைந்துள்ளது. இன்னொரு விநாயகர் கோவில் பாழடைந்து கிடக்கின்றது.   இதுவும் தெரு நடுவே அமைந்துள்ளது.  இத் தெருவில் நடக்கும் விபத்துக்களைக் காணச் சகிக்காமல்  விநாயகர் கோவிலைவிட்டுச் சென்றுவிட்டார் போலும்! கோவில் உருக்குலைந்த நிலையில் உள்ளது.

  சாலை விரிவாக்கத்தின்போது இக் கோவில்களை அகற்ற அரசு முன்வரவில்லை. அல்லது அரசு முன்வந்தபோது சிலர் எதிர்ப்பைக் காட்டியிருக்கலாம்.

   நாங்கள் வசிக்கும் கரூர் காந்திகிராமத்தில் சாலை விரிவாக்கத்தின்போது தடையாக இருந்த ஒரு விநாயகரையும் ஒரு பெரிய அரசமரத்தையும் அகற்ற வேண்டியிருந்தது. கருத்துக்கணிப்பு நடந்தபோது பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு அரசமரத்தையும் விநாயகரையும் அகற்றிட ஆதரவு தெரிவித்தோம். அரசமரத்தை அலுங்காமல் பிடுங்கி எடுத்து ஒரு கல்லூரி வளாகத்தில் நடப்பட்டது. அகற்றப்பட்ட விநாயகர் மீண்டும் தழைத்து வளரும் அந்த அரசமரத்தடியில்  புத்துணர்வோடு அமர்ந்துள்ளார். சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுப் போக்குவரத்து இயல்பாக நடைபெறுகின்றது.

    தமிழ் நாட்டில் பல ஊர்களில் சாலை நடுவில் இருக்கும் கோவில்கள், மசூதிகள் பலவாக உள்ளன. அரசும் பொதுமக்களும் இணைந்து சிந்தித்தால் தீர்வு காணலாம்.

   தேவையெனின் நீதிமன்றங்கள் தலையிட வேண்டும்.

   ஆன்மிகம் பகுத்தறிவு என்பவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை
அல்ல என்பதை நாம் உணரும் நாள் எந்நாளோ?
     

  

5 comments:

  1. ஆன்மிகம் பகுத்தறிவு என்பவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை
    அல்ல என்பதை நாம் உணரும் நாள் எந்நாளோ?//

    ஆம்! ஐயா. மிகவும் சரியான கருத்து. நல்லதொரு பதிவு.

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  2. நாம் உணர மாட்டோம் ஐயா

    ReplyDelete
  3. பல இடங்களில் இவ்வாறாக சாலையின் முக்கியமான பகுதிகளில் வழிபாட்டுத்தலங்களை அமைத்து வருகிறார்கள். இடிக்கப்போனால் அதற்கு ஒரு சாயம் பூசி வேறு நிலைக்கு எடுத்துச்சென்றுவிடுவார்கள்.

    ReplyDelete
  4. நெடுஞ்சாலைகளில் இடைஞ்சலாக உள்ள கோவில்களை (பிள்ளையார் கோவில், அம்மன் கோவில், மாதா கோவில், தர்க்கா) போன்றவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் நோட்டீஸ் கொடுத்து அகற்றிய சம்பவம் சென்னை புறநகர் உள்ளிட்ட பல இடங்களில் நடந்துள்ளது. உள்ளூரிலும் பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி போன்ற உள்துறை அமைப்புகள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்ற பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

    ReplyDelete