Saturday, 7 April 2018

இன்சொல் இல்லா இந்தியா

   பத்து மாத வெளிநாட்டு வாசத்திற்குப் பிறகு நாடு திரும்பி ஒரு வாரம் ஆகிவிட்டது. நாளும் பல்வேறு அலுவலக வாயில்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறேன். அலுவலக ஊழியர் பலரையும் சந்திக்கிறேன். பெரும்பாலோரிடத்தில் நான் எதிபார்த்த இன்சொல்லோ, ஒரு புன்னகையோ இல்லை. எதிரில் இருக்கைகள் தயாராக இருந்தாலும் அவர்கள் நிற்க வைத்தே பேசுகிறார்கள்; அதுவும் எதிரியிடம் பேசுவதைப் போல்.

    ஒரு வங்கி மேலாளரைச் சந்தித்தேன். புதியவராய்த் தெரிந்தார். “நாளை முற்பகலில் வந்து விடுங்கள் என்றார். எந்த ஒரு காரணத்தையும் சொல்லவில்லை. நான் சென்றது பிற்பகல் மூன்று முப்பது மணி.  நான் அந்த வங்கியில் பல ஆண்டுகளாக பற்று வரவு வைத்துள்ளேன். மறுநாள் காலை பதினொன்று முப்பது மணிக்குச் சென்றால், “இப்படி தாமதமாக வந்தால் என்ன செய்ய முடியும்?” என்று முகாரி இராகம் வாசிக்கிறார். “இங்கே வாடிக்கையாளர்தான் முக்கியமானவர். அவரை நம்பிதான் நாம் இருக்கிறோம்” என்ற காந்தியடிகளின் வாசகம் அவரது பின்புலத்தில் எந்தப் பின்புலமும் இல்லாமல் பளிச்சென்று தெரிந்தது.

   மற்றொரு வங்கிக்குச் சென்றேன். அந்த மேலாளர் அன்பாக வரவேற்று உடனே ஆவன செய்தார். காரணம் அவர் நன்கு அறிமுகமானவர்.

   அடுத்து, தொலைப்பேசி அலுவலகம் சென்றேன். முகத்தைக் கடுகடு என்று வைத்துக்கொண்டு பேசினார்.

    பல்பொருள் அங்காடிக்குச் சென்றேன். அந்தப் பெண் ஒரு எந்திரன்  போல இயங்கி பணத்தைப் பெற்றுக்கொண்டு பொருள்களை அள்ளி ஒரு பையில் போட்டுவிட்டுத் தன் அலைப்பேசியில் ஒன்றி விட்டாள்.

   ஆனால் அமெரிக்காவில் தெரிந்தவர்களிடமும் முன்பின் தெரியாதவர்களிடமும் ஒரே மாதிரியான அன்பை பளிச்சென்று வெளிப்படுத்துகிறார்கள். வாடிக்கையாளரைப் பார்த்தவுடன் வாழ்த்துகளைச் சொல்கிறார்கள்; நலம் விசாரிக்கிறார்கள். நன்றி சொல்லி, “இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்” என்று வாழ்த்தி அனுப்புகிறார்கள். வாடிக்கையாளருக்கு உரிய சேவையை வழங்க இயலாதபோது மன்னிக்கும்படி வேண்டுகிறார்கள். இந்த நடைமுறையை நம் நாட்டில் பதியம் போட முடியாதா?

   இனியவை கூறல் என்று தனி அதிகாரம் அமைத்து வள்ளுவர் நமக்கு வழிகாட்டியும் நம்மவர் பின்பற்றுவதில்லை. படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில்!

இதற்கெல்லாம் என்ன காரணம்?

 மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில்  நம் குழந்தைகளை வளர்க்கவில்லை.

  நம் கல்வி முறை மதிப்பெண்கள் பெறமட்டுமே சொல்லிக் கொடுக்கிறது.
 பணி நியமனத்திற்குப் பிறகு முறையான பயிற்சி இல்லை.

  விலை மதிப்பற்ற அன்புக்கு விலைப்பட்டியலை வைத்துவிட்டோம்.

  ஆனாலும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. அத்தி பூத்தாற்போல் அன்பை வெளிப்படுத்தும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பதற்கு கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன் அவர்களே சான்றாகத் திகழ்கிறார்.

  அண்மையில் ஆதரவற்ற முதிய பெண்மணியின் குடிசைக்குச் சென்று அங்கே தரையில் அமர்ந்து உணவு உண்டு, முதியோர் ஓய்வூதியம் வழங்குவதற்கான கடிதத்தையும் வழங்கினார்.

   மாவட்ட ஆட்சியரின் அன்பில் அந்த அம்மையார் திக்குமுக்காடிப் போனார்.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

6 comments:

 1. தங்களது ஆதங்கம் புரிகிறது. இதே மனநிலை எனக்கும் இருந்தது ; இருந்து கொண்டிருக்கிறது. அரசு பொதுத்துறை ஊழியர்கள் என்றில்லை....பொதுவாகவே இன்னா மொழியாது இனியவை பகன்றிடும் பண்பு அருகி வருவது கொஞ்சம் வேதனை தான்
  உங்களைப் போல எனக்கும் இன்னும் நம்பிக்கை இருக்கிறது அதனால் தான் பள்ளிக் குழந்தைகளிடம் இனியன கூறும் பழக்கத்தை போதிக்க முயல்கிறோம் என் "இனியன்" அண்ணா!

  ReplyDelete
 2. வாழ்வில் திருப்தி என்பதே அறியாதவர்களிடம் சில(பல)வற்றை எதிர்ப்பார்க்க முடியாது ஐயா...

  ReplyDelete
 3. மனித உறவுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் நம் குழந்தைகளை வளர்க்கவில்லை.

  நம் கல்வி முறை மதிப்பெண்கள் பெறமட்டுமே சொல்லிக் கொடுக்கிறது.
  பணி நியமனத்திற்குப் பிறகு முறையான பயிற்சி இல்லை.

  விலை மதிப்பற்ற அன்புக்கு விலைப்பட்டியலை வைத்துவிட்டோம்.//
  உண்மைதான் ஐயா ...மிக அருமையான வரிகள்.

  கீதா: துளசியின் கருத்துடன் ...நான் எழுதிய கதையில் கூட இது போன்ற ஒரு வரியைச் சொல்லியுள்ளேன்...புன்னகையைத் தொலைத்தது பற்றி...

  அப்புறம் ஐயா நீங்கள் அங்கு வேறொன்றும் கவனித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். ஒரு வேளை இணையம் தடைபட்டால் வராமல் இருந்தால் அந்தத் தவறு இணையச் சேவை வழங்கும் நிறுவனத்தின் பிரச்சனையால் என்றால் எத்தனை நாள் வரவில்லையோ (மணி நேரம்) அத்தனைக்கும் பணம் கழித்துக் கொள்ளப்படும். இங்கு? இணையம் பல நாள் வேலை செய்யாது ஆனாலும் நாம் அதற்கான தொகையைக் கட்டிக் கொண்டு இருக்கிறோம்...நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது ஐயா. ஆனால் நம் மக்கள் வேண்டாதவற்றைக் கற்றுப் பழகிக் கொள்கிறார்கள்

  ReplyDelete
 4. தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா

  ReplyDelete
 5. இப்போது மனிதர்களும் எந்திர மயமாகி விட்டார்களோ என்றே நினைக்க வேண்டி இருக்கிறது.

  ReplyDelete
 6. அங்கே மனிதநேயம் வாழ்கிறது. இங்கே மனிதநேயம்.. தேய்கிறது.

  ReplyDelete