Saturday 27 October 2018

எழுச்சிமிகு விழாவில் எட்டு நூல்கள் வெளியீடு

   24.10.2018 புதன் கிழமை, முழுமதி நன்னாள், மாலை ஆறு மணி அளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ் மணிமொழியனார் அரங்கிற்கு நூல் ஆர்வலர்கள் வரிசைகட்டி வந்தார்கள்.

   ஒரு நூலா, இரு நூலா, எட்டு நூல்கள் வெளியீடு என்பதால்  சிறப்பு விருந்தினர், சிறப்பு அழைப்பாளர்கள், நூலின் முதற்படி பெறும் சீர்மிகு பெருமக்கள் ஆகியோரால் விழாமேடை நிரம்பி வழிந்தது. அரங்கு நிறைந்த ஆர்வலர்களின் விழிகள் மேடையை நோக்கிக் குவிந்திருந்தன.

பட்டுக்குஞ்சத்துடன் அணிவகுத்த எட்டு நூல்களாவன:
               நூல்
       நூலாசிரியர்
 பேராசிரியர் இரா.மோகன்
தமிழ் உலா
 இரா.மோகன், நிர்மலா மோகன்
பன்முக நோக்கில் சிலப்பதிகாரம்
 புதுகை மு.தருமராசன்
சமுதாயச் சளரம்
 பேராசிரியர் பானுமதி தருமராசன்
வரலாறு படைத்த வைர மங்கையர்
 கவிஞர் கே.ஜி.இராஜேந்திர பாபு
முயற்சியுடையார் வளர்ச்சியடைவார்
 முனைவர் அ.கோவிந்தராஜூ
கண்டேன் கனடா
 கவிஞர் இரா.இரவி
கவிச்சுவை
 முனைவர் லி.ஜன்னத்
சாலை இளந்திரையன் படைப்புலகம்

   மேடையில் தோன்றியோர் சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் வினையாற்றும் விற்பன்னர்கள் என்பதால் அவர்தம் உரைகள் அனைத்தும் சோர்வு தட்டாமல் சுவைபட அமைந்தன. மூன்று மணிநேர விழா முப்பது நிமிடங்களில் முடிந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.
    
    வானதி பதிப்பகத்தின் உரிமையாளர் மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன்  அவர்கள்  நூலாசிரியர்கள் அனைவரையும் வாழ்த்தியதோடு நில்லாமல், பொன்னாடை அணிவித்துக் கண்ணைக் கவரும் தங்க நிறத்தில் அமைந்த அழகிய பேனாவையும் பரிசாக வழங்கினார்.

   இந்த விழாவை முன்னின்று நடத்திய பேராசிரியர் இரா.மோகன் அவர்களுடைய உரை இல்லை என்பது ஒரு குறையே.

   மலர் மாலையில் மலர்களை இணைக்கும் நூலைப்போல் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் வினைமுடித்த வெற்றிப் பெருமிதம் தோன்ற அவர் மிடுக்காக மேடையில் அமர்ந்திருந்த காட்சியை நான் மிகவும் இரசித்தேன்.

     வெளியிடப்பட்ட எட்டு நூல்களில் என்னுடைய நூலும் ஒன்று. “கண்டேன் கனடா” என்னும் அந்நூலுக்கான நூல் மதிப்புரையைத் தலைமைக் குற்றவியல் நீதிபதி இல.செ.சத்தியமூர்த்தி அவர்கள் மிகச்சிறப்பாக வழங்கினார். மறுநாள் வெளியான நாளேடுகள் சில அவரது உரையை அப்படியே சிந்தாமல் சிதறாமல் வெளியிட்டன.
நீதிபதி இல.செ.சத்தியமூர்த்தி அவர்கள்
 "கண்டேன் கனடா" நூல் குறித்துப் பேசுகிறார்.


     எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் தம் உரையில், “மோகன் இங்கே நடத்தியது ஒரு நூல் வேள்வியாகும்” என்று குறிப்பிட்டது மிகவும் பொருத்தமே.
அருள் தந்தை சி.மணிவளன்  "கண்டேன் கனடா"நூலை வெளியிட
திரு.பெ.ஜெயராம் பெற்றுக் கொள்கிறார்.


கண்டேன் கனடா நூலின் முதற்படியைப் பெற்றுக்கொண்ட
 திரு.பெ.ஜெயராம் அவர்களுக்குப் பேராசிரியர் பொன்னாடை போர்த்துகிறார்

"கண்டேன் கனடா" நூலாசிரியர் இனியன் அவர்களுக்குப்
பேராசிரியர் இரா.மோகன் பொன்னாடை போர்த்துகிறார்

முனைவர் திருப்பூர் கிருஷ்ணன்

எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்
நூலாசிரியர்களுடன் வானதியார்
 
சிறப்பு விருந்தினராகத் தியாகராஜர் பொறியியல் கல்லூரிச் செயலர்
திரு.கருமுத்து க.ஹரி தியாகராசன்

9 comments:

  1. இனிய விழாப் பதிவு. உங்களின் நூல் வெளியானதறிந்து மகிழ்ச்சி. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. வணக்கம்.
    அருமையான வரலாற்று நிகழ்வு. உங்களது எழுத்துப் பணியின் இன்னொரு படிக்கல் “கண்டேன் கனடா”. எட்டு நூல்கள் வெளியீடு நிகழ்வைக் காணும் வாய்ப்பையும், சிறந்த அறிஞர்களின் கருத்துக்களைச் செவிநுகர்கனிகளைச் சுவைக்கும் வாய்ப்பையும் இழந்திருக்கிறேன் எனக் கூறலாம். அந்த அளவிற்கு அற்புதமான அறிஞர் பெருமக்களை நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவும், சொற்பொழிவாற்றவும் அழைத்த பெருமைமிகு தகைசால் பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்களையே சாரும். அய்யா அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
    வழக்கமாக பேராசிரியர் முனைவர் இரா.மோகன் அவர்களது உரையைக் கேட்க வாசகர்கள் கூடுவர். ஆனால், நூல் வெளியீட்டு விழாவில் அறிஞர்களைப் பேச வைத்து அழகு பார்த்துள்ளார். முனைவர் திருப்பூர் கிருஷ்ணன், எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன்,தியாகராஜர் பொறியியல் கல்லூரிச் செயலர் கருமுத்து க.ஹரி தியாகராசன் மற்றும் நீதிபதி இல.செ.சத்தியமூர்த்தி ஆகியோரின் சொல் விளையாட்டில் அரங்கும் அரங்கிலிருந்த அறிவார்ந்தவர்களும் மகிழ்ந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. நூல்களின் பெருமையை உலகறியச் செய்த பதிப்புத் திலகம் மதிப்புறு முனைவர் வானதி இராமநாதன் அவர்களின் பதிப்பக வெளியீடாக எட்டு நூல்கள் வெளிவந்தது இன்னும் சிறப்பு.
    மகிழ்வுடன் வாழ்த்துக்கள்.
    வாழ்க! வளர்க! வெல்க!
    Dr.R.LAKSHMANASINGH
    Professor
    Govt. Arts College (Autonomous)
    Karur - 639 005

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி ஐயா... பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. தங்களின் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள் அறிந்து மகிழ்ந்தேன் ஐயா
    வாழ்த்துகள்

    ReplyDelete
  5. கண்டேன் கனடா என்ற தலைப்பில் தங்கள் நூலும் மற்ற ஏழு நூல்களுடன் சேர்த்து வெளியிடப்பட்ட செய்தியைப் பதிவாக்கி அளித்துள்ளமைக்கு நன்றி. இந்நூல்களை வானதி புத்தக நிலையம் வெளியிட்டது மிகவும் பொருத்தமானதே. அடுத்த பதிவில் நூல் பற்றிய Bibliography தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அண்ணா! முன் கூட்டியே தெரிந்திருந்தால் விழாவில் கலந்து கொண்டு நல்ல தமிழ் அமுது பருகியிருக்கலாம் என்கிற எண்ணம் வருகிறது.

    ReplyDelete
  7. இனிய விழாப் பதிவு. கண்டேன் கனடா என்னும் தங்கள் நூல் வெளியானதறிந்து மகிழ்ச்சி. விரைவில் நூலைச் சுவைக்க ஆவல்.

    ReplyDelete
  8. சிறப்பான நிகழ்வு...

    கட்டுரையில் நூல் , நூலாசிரியர் இடம் மாறி உள்ளது.... சிறு திருத்தம்.

    ReplyDelete
  9. விழாவை பற்றிய பதிவு அருமை ஐயா. படங்களும்.

    தங்களுக்கு எங்கள் இருவரின் மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுகள்.

    துளசிதரன், கீதா

    ReplyDelete