Tuesday 5 November 2019

கானுயிர் காக்கும் கால்நடை மருத்துவர்


 ஜெயமோகன் எழுதியுள்ள ‘யானை டாக்டர் என்னும் புகழ்பெற்ற சிறுகதையைப் பல ஆண்டுகளுக்கு முன் படித்தேன். அது கற்பனைக் கதையன்று. டாக்டர் கே என்றும் யானை டாக்டர் என்றும் அறியப்படும் கால்நடை மருத்துவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பற்றிய உண்மைக் கதை. கதைக் களமும் உண்மையே. முதுமலைக் காடுதான் அது. இதுவரை அந்தக் கதையைப் படிக்காதவர்கள் இனியாவது படிக்க வேண்டும். இப்படியும் ஒரு மனிதர் இருப்பாரா என எண்ணத் தோன்றும்.

    ஜெயமோகன் குறிப்பிட்ட யானை டாக்டர்  2002ஆம் ஆண்டில் மறைந்து விட்டார் என்றாலும் அவரைப் போலவே கானுயிர்களிடம் கருணை காட்டும் இன்னொரு யானை டாக்டர் உள்ளார் என்று ஒரு செவிவழிச் செய்தி என்னை எட்டியது. அந்தக் கணத்திலிருந்து அந்த விலங்கு நேய மருத்துவர் குறித்த எனது தேடல் தொடங்கியது. லிங்க்டின் வலைதளத்தில் அவரே பதிவிட்டிருந்த தகவல்கள் கிடைத்தன.

     சேலம் அருகிலுள்ள இடைப்பாடி அரசு மேனிலைப்பள்ளியில் படித்த ஓர் எளிய கிராமத்துச் சிறுவன் அசோகன்,  தன் முயற்சியில் பகுதிநேரப் பணியால் ஈட்டிய பணத்தில் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்து மருத்துவர் அசோகன் ஆனது தனிக்கதை.

   இறுதித் தேர்வு முடிந்த கையோடு அரசுப்பணியில் சேர்ந்த டாக்டர் அசோகன் பல மாவட்டங்களில் பல்வேறு பதவிகளைத் திறம்பட வகித்து மேலதிகாரிகளின் பாராட்டுச் சான்றுகளைப் பெற்ற இவர் இப்போது  சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கானுயிர் மருத்துவராகப் (Wild life Veterinarian) பணிபுரிகிறார்.
Dr.K.Asokan (photo courtesy:Google)
   தண்ணீர் தேடி வந்த கழுதைப்புலி(Hyenas) ஒன்றை கிராமத்து மக்கள் அடித்து நொறுக்கினர். செய்தி அறிந்த வனத்துறை ஊழியர் டாக்டர் அசோகனை அழைத்துக்கொண்டு நிகழிடத்துக்கு விரைந்தார். முதலுதவிக்குப்பின் அதை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். கோமா நிலைக்குச் சென்று விட்ட அவ் விலங்கிற்கு அவசர அறுவைச் சிகிச்சையை மணிக்கணக்கில்  மேற்கொண்டார். உணவும் மருந்தும் ட்ரிப் மூலம் கொடுக்கப்பட்டது. தீவிர கண்காணிப்பில் இருந்த கழுதைப்புலி ஏழாம் நாள் எதுவும் நடக்காததுபோல் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தது. டாக்டர் அசோகன் வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தார். இந்திய அளவில் கோமா நிலைக்குச் சென்ற ஒரு விலங்கை உயிர்பெற்று உலவச் செய்த முதல் மருத்துவர் என்று வரலாறு பதிவு செய்தது. 28.1.2019 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேடு இது குறித்த விரிவான செய்தியை வெளியிட்டது.

   கிராமத்தினர் அமைத்த மின்வேலியால் தாக்குண்ட மூன்று காட்டு யானைகளைக் காப்பாற்றியதும் இவர்தான். ஓர் ஆட்கொல்லி யானையைப் பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. சுருண்டு விழுந்த யானையின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகளை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி அதை முற்றிலும் குணப்படுத்தி வாழ்நாள் முழுதும் கடுங்காவலில் இருக்கச் செய்தார். இது குறித்த செய்தி 28.10.19 நாளிட்ட காலைக்கதிரில் விரிவாகக் காணப்பட்டது.

    கிராமத்தினர் வைத்த நஞ்சிட்ட ஆட்டை விழுங்கி அவதிப்பட்ட ஒரு மலைப்பாம்புக்கு உரிய சிகிச்சையளித்து அதன் உயிரைக் காப்பாற்றினார் டாக்டர் அசோகன்.

   நீலகிரியில் பணியாற்றியபோது கூட்டம் கூட்டமாய் மான்கள் இறந்தன. இறந்த மானை உடற்கூராய்வு செய்தபோது அதன் வயிற்றில் கிலோ கணக்கில் பாலித்தின் பைகள் இருந்ததைக் கண்டு அதிர்ந்துபோன டாக்டர் அசோகன் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்குக் கொண்டுசென்றார். உடனடியாக பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதித்தார் மாவட்ட ஆட்சியர்.

   டாக்டர் அசோகன் எந்த ஊரில் பணியாற்ற நேர்ந்தாலும் ஆங்காங்கே உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கானுயிர்கள், வீட்டு விலங்குகள், பறவைகள்  குறித்த விழிப்புணர்வு உரை நிகழ்த்துவதையும் விரிவாக்கப் பணியாகச் செய்து வந்துள்ளார்.

        ஆனாலும் இதுவரை அரசோ தொண்டு நிறுவனங்களோ இவரது செயற்கரிய செயல்களை அங்கீகரித்து விருது வழங்கியதாகத் தெரியவில்லை.

  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கானுயிர் காக்கும் பணியினைக் கருத்துடன் ஒரு வேள்வி போலச் செய்து வரும் அரசு ஊழியர் டாக்டர் கே.அசோகன் அவர்களை  வள்ளுவர் சொல்வதுபோல் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும். எல்லா உயிரும் என்பதில் நானும் இருக்கிறேன்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

  
  

7 comments:

  1. மனிதரில் தெய்வம்... டாக்டர் கே.அசோகன் அவர்களுக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    ReplyDelete
    Replies
    1. எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோன்

      Delete
  2. அரிய மனிதர். அந்த எல்லா உயிரும் என்பதில் என்னையும் சேர்த்துக்கொள்கிறேன் ஐயா.

    ReplyDelete
  3. கானக விலங்குகளின் நாயகன் வாழ்க

    ReplyDelete
  4. மருத்துவர் கே.அசோகன் அவர்களது அன்பு நிறைந்த பணியைப் பதிவு செய்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள். அவருக்குப் பணிவான வணக்கம்.

    ReplyDelete
  5. நல்லதொரு பதிவு ஐயா.

    கான்விலங்கு காத்திடும் மருத்துவர் அரிய அருமையான மருத்துவர். வாழ்க! பாராட்டுகள். //எல்லா உயிரும் கைகூப்பித் தொழும். எல்லா உயிரும் என்பதில் நானும் இருக்கிறேன்.//

    நாங்களும்!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  6. எனது நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோன்

    ReplyDelete