Saturday, 23 November 2019

நாற்றுகள் சீரழிந்தால் நாடு உருப்படுமா?


    இன்று காலை நாளிதழைப் புரட்டியபோது என் கண்ணில் பட்ட ஒரு செய்தியால் என் மனம் பட்டப் பாடு எனக்குதான் தெரியும். மதிப்பெண் தொழிற்சாலைகளாக பள்ளிகள் மாறிவரும் இன்றைய சூழலில் மன அழுத்தம் காரணமாகப்  பள்ளி மாணவர்கள் போதைப் பொருள், புகைத்தல் என்னும் புதைகுழிகளில் விழுகின்றார்கள்; பாலியல் நெறி பிறழ்வுகளில் ஈடுபடுவோர்  பலராக உள்ளனர்.

     “பதினோராம் வகுப்பில் படிக்கும் என் மகனோடு பாலியல் இன்பம் துய்த்து வரும் அவனது ஆசிரியையின் கிடிக்கிப் பிடியிலிருந்து என் மகனை விடுவித்துத் தாருங்கள்” என சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார் ஒரு பரிதாபத்துக்குரிய தந்தை. தொடர்புடைய இருவரும் குறிப்பிட்ட நாளில் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும் என நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

     இது இப்படி என்றால், குளித்தலைப் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தில் பாசன வாய்க்கால் பக்கம் சென்று காசு கொடுத்துப் போதை ஊசி போட்டுக்கொண்ட செய்தி என்னை உலுக்கிப் போட்டது. 

       இப்படி நாற்றுகள் சீரழிந்தால் வீடு என்னாகும் நாடு என்னாகும் என்று என் மனம் பதறுகிறது. “குழந்தைகள் என்போர் சமுதாயத்தின் நாற்றங்கால்கள். அந்த நாற்றுகள் பழுதுபட்டால் விளைச்சலும் பழுதுபடுமே” என வருந்துவார் தீபம் நா.பார்த்தசாரதி அவர்கள். “கணக்கையும் அறிவியலையும் நடத்துவதை விட்டுவிட்டு நான்காண்டுகளுக்கு ஒழுக்கப்பாடத்தை மட்டும் நடத்தினால் நல்லது” என்று அவர் மேலும் கூறுவார்.

        பள்ளியில் படிக்கும் குழந்தைகள் இப்படி பிஞ்சிலே பழுத்து வெம்பிப் போகலாமா என எண்ணிய வள்ளுவர் கல்லூரியின் தாளாளர் திரு.க.செங்குட்டுவன் அவர்கள் இப்போது ஒரு பயனுள்ளப் பணியைச் செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளுக்கு ஒரு தகுதி வாய்ந்த மனநல ஆலோசகரை அழைத்துச் சென்று அங்கே  படிக்கும் மேனிலை வகுப்பு மாணவ மாணவியர்க்குப் பதின்பருவ வயதில் தடம் மாறாமல் படிப்பில் கவனம் செலுத்தும் வழிமுறைகளைச் சொல்லச் செய்கிறார். அந்த மனநல  ஆலோசகரும்,

சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்னும் குறளை மையமாக வைத்து மாணாக்கச் செல்வங்களுக்கு மனப்பயிற்சி அளிக்கிறார்.

   இத்தகைய உளவியல் சார்ந்த வழிகாட்டுதல் வகுப்புகளுக்கு இப்போது நல்ல வரவேற்பு இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

எப்படித் தெரியும் என்று யோசிக்கிறீர்களா?

அந்த மனநல ஆலோசகரே நான்தான்.
நேருஜி அரசு மேனிலைப்பள்ளி, இடையக்கோடடை மனநல ஆலோசகரும் தலைமையாசிரியரும்

               

10 comments:

 1. இக்காலகட்டத்திற்குத் தேவையான ஆலோசனை ஐயா. சமுதாயம் தடம் மாறிப்போய்க் கொண்டிருக்கிறது வேதனையைத் தருகிறது.
  தமிழ் விக்கிபீடியா நவம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

  ReplyDelete
 2. குழந்தைகளே நாட்டின் முதுகெலும்பு
  குழந்தைகளைப் பேணுவோம்
  நாட்டைக் காப்போம்

  ReplyDelete
 3. இது எல்லாம் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணத்தையும், இட ஒதுக்கீட்டையும் கொண்டு பணியில் அமர்த்துவதன் விளைவே. தனியார் மய கல்வி வியாபாரமும் முக்கிய காரணம் ஐயா.

  ReplyDelete
 4. அரசுப் பள்ளிகளுக்கு ஒரு தகுதி வாய்ந்த மனநல ஆலோசகரை அழைத்துச் சென்று அங்கே  படிக்கும் மேனிலை வகுப்பு மாணவ மாணவியர்க்குப் பதின்பருவ வயதில் தடம் மாறாமல் படிப்பில் கவனம் செலுத்தும் வழிமுறைகளைச் சொல்லச் செய்கிறார்.//

  அருமை.

  ReplyDelete
 5. இப்போதெல்லாம் ஒழுக்க கேள்வி போதிக்கப் படுவதில்லை. பாடசாலைகளில் பணம் சம்பாதிப்பதற்கு வேண்டிய கல்வி முறையாக இப்போது மாறிவிட்டது அதனாலேயே பிள்ளைகள் தடம் மாறுகின்றார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள் எனக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளலாம் அதனால் ஒழுக்க கல்வி கற்கின்ற போது அவர்கள் மனதை நாம் சீர்படுத்தலாம்

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நல்ல முயற்சி, மேலை நாடுகள் போல முழுதும் கெடு முன்பே, காப்பது நலம்.

  ReplyDelete
 8. Great idea !!! Hats off to the school Principal !!!

  ReplyDelete