Sunday 12 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 21-25


பாடல் எண்: 21
ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
   மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
   ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
   மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
   போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
 
அருஞ்சொற்பொருள்: ஏற்ற- ஏந்திய; கலம்- பாத்திரம்; மாற்றாதே- இடைவிடாமல்; ஊற்றம்- உறுதி; சுடர்- கதிரவன்; மாற்றார்- பகைவர்; ஆற்றாது- பொறுக்கமுடியாமல்.

விளக்கவுரை:
   கைகளில் ஏந்திய பெரிய பாத்திரங்களில் பொங்கி நுரைத்து வழியுமாறு இடைவிடாமல் பால் பொழியும் வள்ளண்மை கொண்ட பெரும்பசுக்களை உடைய நந்தகோபனின் அருமை மகனே! கார் வண்ணக் கண்ணா! கண்விழித்து எழுக!

   அன்பு மயமான அடியவர்களைக் காக்க வேண்டும் என்னும் உறுதி உடையவனே! பேராற்றல் படைத்த பெரியோனே! உலக உயிர்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் கதிரவன் போன்றவனே! கண் விழித்து எழுக!

   தம் வலிமையெல்லாம் இழந்து, மனம் பொறுக்க முடியாமல் உன் மாளிகை வாசலுக்கு வந்து, உன் திருவடிகளைப் பணிகின்ற உன் பகைவர்களைப் போல நாங்களும் உன்  அழகிலே தோற்றுப்போய் நீயே கதியென்று வந்து நிற்கின்றோம். அது மட்டுமா? உன்னைப் போற்றிப் பாடிப் புகழ்வதை ஒரு பேறாகக் கருதிச் செய்கின்றோம்.

 கூடுதல் விளக்கம்: இந்தப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. வைணவத்தின் தலையாய கோட்பாடு சரணாகதி தத்துவம் ஆகும். அதாவது ஆண்டவனின் அடைக்கலப் பொருளாதல் என்று பொருள். பகைவரும் ஆயர்பாடி பெண்களும் ஒருசேர மாதவனின் மலரடிகளில் அடைக்கலம் புகுவதை  ஆண்டாள் நாச்சியார் பாடியுள்ள பாங்கு பாராட்டத் தக்கதாகும்.
     
பாடல் எண்: 22 
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
   பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட்டிற்கீழே
சங்கம் இருப்பார்போல், வந்து தலைப்பெய்தோம்.
   கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே,
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
  திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்,
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
   எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்:
அம்+கண்+மா+ஞாலம்= அங்கண் மாஞாலம்; அம்- அழகிய; மா- பெரிய; ஞாலம்- உலகம்; அபிமானம்- ஆசை; பங்கம்- குறை; பள்ளிக்கட்டில்- படுக்கை; சங்கம்- கூட்டம்; தலைப்பெய்தோம்- கூடினோம்; கிங்கிணி- சலங்கையின் ஒரு மணி; செய்த- போல; ஆதித்தியன்- சூரியன்; அங்கண்- அம் கண்- அழகிய கண்; சாபம்- பாவம்.

விளக்கவுரை:
   கண்ணுக்கினிய கண்ணா! இந்த அழகான பெரிய உலகில் ஆங்காங்கே ஆட்சி செய்யும் அரசர்கள் எல்லோரும் மண்மீதுள்ள ஆசையினையும், அகம்பாவத்தையும் விட்டுவிட்டு, கூட்டமாக வந்து உன் பள்ளியறைமுன் உன்னைச் சரணடைந்து, உன் அருளை வேண்டி நிற்கிறார்கள். ஆயர்குடிச் சிறுமியர்களாகிய நாங்களும் அவ்வாறே உன்னைச் சரண் அடைந்துள்ளோம். கிங்கிணி எனப்படும் கால் சிலம்பின் மணிபோல பாதி திறந்திருக்கும் தாமரைப் பூ போன்ற சிவந்த உன் கண்களின் அருள் பார்வையில் சிறிதேனும் எம்மீது விழாதா?

    நீ பகைவர்க்குச் சூரியனாகவும், எம் போன்ற எளியவர்க்குத் திங்களாகவும் இருக்கின்றாய். கண்ணா, நீ உன் அழகிய கண்களால் எம்மை நோக்கினால், நாங்கள் முன்னர் செய்த தீவினையால் வந்த பாவங்கள் எல்லாம் தீர்ந்தொழியும். உன் கடைக்கண்ணால் எம்மையும் நோக்குவாய் என்றே காத்திருக்கிறோம்.
    
பாடல் எண்: 23
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
  சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
  மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
  கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
  காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

அருஞ்சொற்பொருள்: மாரி- மழை; முழைஞ்சு- குகை; மன்னி- நிலையாக; அறிவுற்று- விழித்தெழுந்து; வேரி- பிடரி; எப்பாடும்- எல்லா பக்கமும்; பேர்ந்து-சோம்பல் முறித்து; மூரி- கம்பீரமாக; பூவைப் பூ- காயாம் பூ; கோயில்- மாளிகை; இங்ஙனே- இங்கே; போந்து- வந்து; கோப்பு- அழகு; சீரிய- அழகான.

விளக்கவுரை:
   மனத்துக்கு இனிய மாதவா! மழைக்காலத்தில், மலைக்குகையில் உறங்கிக் கிடந்த அழகிய சிங்கம் ஒன்று, உறங்கி எழுந்த அக்கணத்தில் அனல் கக்கும் விழிகளால் சுற்றும் முற்றும் பார்த்தவாறு, சோம்பல் முறித்து, அடர்ந்த பிடரி மயிர் சிலிர்க்கப் பீடு நடை போட்டுக் குகையை விட்டுக் கம்பீரமாக வெளியில் வருவதைப் போல, நீ அரிமா நோக்குடன் அணிநடை போடும் அழகே அழகு!
  
   உன் திருமாளிகையின் அத்தாணி மண்டபத்திற்கு எழுந்தருளும் காயாம்பூ நிற கண்ணா! அங்கே அழகுற அமைந்திருக்கும் அரியணையில் அமர்ந்து, எம்மைக் கனிவுடன் நோக்கி, எங்கள் குறைகளைக் கேட்டு, அவற்றை ஆராய்ந்து, ஆற்றாது நிற்கும் எமக்கு அருள் செய்வாயாக.

கூடுதல் விளக்கம்: ஒரு சிங்கம் கம்பீரமாக நடந்து வருவதைக் கண்ணனின் நடைக்கு ஒப்பிடுகிறார் ஆண்டாள். முதல் பாடலில் கண்ணனை யசோதை இளஞ்சிங்கம் எனக் குறிப்பிட்டதை இங்கே நினைவு கூரலாம்.

   இதற்குமுன் அமைந்த பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்பும் காட்சிகளே இடம்பெற்றன. இப்பாடலில்,முதல் முதலாக, ஆயர்பாடிப் பெண்களின் அன்பான வேண்டுகோளை ஏற்றுப் பஞ்சணையை விட்டுப் பரந்தாமன் எழுந்துவரும் காட்சியைப் பாங்குடன் விவரிக்கிறார் அண்ணலைப் பாடிய ஆண்டாள் நாச்சியார்.

   இப் பாடலுக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு. இதுவரை கிருஷ்ணன்  கிடந்த காட்சியைப் பாடிய ஆண்டாள் இப் பாடலில் அவன் நடந்த காட்சியை நயமுடன் விளக்குகிறார்.     

பாடல் எண்: 24
அன்று இவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
   சென்றங்கு தென் இலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி !
   கன்று குணிலாய் எறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி !
   வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
   இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!

  அருஞ்சொற்பொருள்: செற்றாய்- அழித்தாய்; திறல்- வலிமை; பொன்ற- அழிய; சகடம்- வண்டி; குணில்- குறுந்தடி, கவண்கல்; கழல்- கால்; ஏத்தி- போற்றி; பறை- விரும்பிய பொருள்.
 விளக்கவுரை:
    ஆழி மழைக் கண்ணா! அன்று நீ வாமனனாக வந்து, பேருருவம் எடுத்து உலகத்தை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்.

   இராமனாகப் பிறந்து, இலங்கை சென்று, இராவணனை வென்று, சீதையை மீட்டாய் அன்று அந்த அறப்போரில் நீ காட்டிய போர்த் திறமையைப் போற்றுகிறோம்.

   முன்னொரு சமயம் கம்சனின் சூழ்ச்சியால் உன்னை அழிப்பதற்காக வண்டி வடிவில் வந்த சகடாசுரனை ஒரே உதையில் ஒழியுமாறு செய்தாய். அந்த வீரதீர செயலால் அழியாப் புகழ் பெற்ற உன்னைப் போற்றுகிறோம்.

    உன்னைக் கொல்வதற்காகப் பசுங்கன்றின் வடிவில் வத்சாசுரனும், விளாங்கனி வடிவில் கபித்தாசுரனும் வந்தபோது உன் திருவடியால் கன்றை உதைக்க, அது விளாங்கனியைச் சிதைக்க, அந்த அசுரர்கள் இருவரும் ஒருசேர ஒழிந்தார்கள். அவர்களை உதைத்து அழித்த உன்  வலிமை வாய்ந்த கால்களைப் போற்றுகிறோம்.

   இந்திரனின் கோபத்தால் இடைவிடாது பெருமழை பெய்தபோது, கோவர்த்தன மலையைப் பெயர்த்தெடுத்துக் குடையாகப் பிடித்து எங்களையும் எங்கள் பசுக் கூட்டங்களையும் காத்தாய்! உனது காத்தருளும் பண்பைப் போற்றுகிறோம்.

   பகைவர்களை வென்று வெற்றி வாகை சூடும் உன் கை வேலினைப் போற்றுகிறோம்.

   உனது அடியார்களைக் காக்கும் உயரிய செயலைப் போற்றி, நாங்கள் விரும்பியது கிடைக்க, அதாவது நல்ல பண்பு நலன் கொண்ட கணவர் கிடைக்க உன்னைத் தொழுது நிற்கிறோம். சற்றே மனம் இரங்கி எமக்கு அருள் புரிவாயாக.

கூடுதல் விளக்கம்: இப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. போற்றி போற்றி என முடியும் ஒரே பாடல் இதுவாகும். ஒவ்வொரு வரியின் முடிவிலும் போற்றி என்னும் சொல் அமைய இயைபுத் தொடையழகுடன் இறைவனைப் போற்றிப் பாடும் மரபு சைவத்திலும் உண்டு. மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் அமைந்துள்ள போற்றித் திரு அகவல் இங்கே குறிப்பிடத் தகுந்தது.
  
பாடல் எண்: 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
  ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித் தான் தீங்கு நினைந்த
  கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
  அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

அருஞ்சொற்பொருள்:   
  தரிக்கிலான்- பொறுத்துக் கொள்ளாதான்; கருத்து- நோக்கம்; பிழைப்பித்த- பொய்க்கச் செய்த; கஞ்சன்- கம்சன்; அருத்தித்து- விரும்பி; பறை- விரும்பிய பொருள், அருள்; சேவகம்- தொண்டு.

விளக்கவுரை:
   எங்கள் நெஞ்சில் நீங்காது நிற்கும் நெடுமாலே! தேவகிக்கு மகனாய்ப் பிறந்து, அன்று இரவே கம்சனமிடமிருந்து தப்பிக்க வேண்டி, யசோதையின் வளர்ப்பு மகனாக மறைந்து வளர்ந்தாய். அதை அறிந்துகொண்ட கம்சன் நீ உயிருடன் இருப்பதைப் பொறுக்க முடியாமல் உன்னை அழிக்க முனைந்தான். ஆனால் நீயோ அவனுடைய நோக்கம் பொய்த்துப் போகுமாறு அவனது வயிற்றில் அச்சம் என்னும் நெருப்பாக நின்றாய்.

    இப்படி செயற்கரிய செய்த உன்னை, ஆயர்பாடிச் சிறுமியராகிய நாங்கள் பெருவிருப்பம் கொண்டு, போற்றிப் பாட வந்துள்ளோம். நாங்கள் விரும்பியதைத் தந்தருள்வாய் ஆகில், வருத்தம் நீங்கி, இலக்குமிக்கு ஒப்பான உன் செல்வத்தையும், உன் அடியார்க்கு நீ எளியனாய் வந்து காலத்தில் செய்யும் தொண்டினையும் போற்றிப் பாடுவோம்.

கூடுதல் விளக்கம்: இப் பாடலில் சேவகம் என்னும் சொல்லைக் கையாள்கிறார் ஆண்டாள் நாச்சியார். அதாவது முன்னொரு சமயம் பேய்மழை பெய்தபோது,  கண்ணன் கோவர்த்தன குன்றைக் குடையாகப் பிடித்து ஆயர்பாடிப் பெண்களையும் பசுக்கூட்டங்களையும் காத்ததை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
-முனைவர் அ.கோவிந்தராஜூ,
கரூர்.
   

2 comments:

  1. கூடுதல் விளக்கத்துடன் அருமை ஐயா...

    ReplyDelete
  2. பாடலின் அடிகளை பொருளோடு பகிர்ந்த விதம் அருமை ஐயா. நன்றி.

    ReplyDelete