Thursday, 16 January 2020

இனிய திருப்பாவையும் எளிய உரையும் பாடல் 26-30நெஞ்சம் நிறைந்த நன்றி
  மார்கழி மாதம். இருபத்து ஒன்பது நாள்கள். ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து திருப்பாவையின் அந்தந்த நாள் பாசுரத்துக்கு உரை எழுதி ஆறு மணிக்குள் அன்பர்களின் புலனத் தளத்தில் பதிவிடுவது அன்றாட திருப்பணியாய் இருந்தது. எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இப்பணியை நிறைவேற்றிட அருள் செய்த இறைவனுக்கு முதல் நன்றி.

    இந்த உரையை ஆறு தவணைகளில் என் வலைத்தளத்திலும் பதிவிட்டேன்.

   இந்தத் திருப்பாவை உரையை ஊன்றிப் படித்து, உற்சாகமூட்டும் வகையில் பின்னூட்டம் அளித்த திண்டுக்கல் தனபாலன், திரு.ப.ஜம்புலிங்கம், கரந்தை ஜெயக்குமார், இலங்கை யாழ்ப்பாணன், திரு.மகேந்திரன், பேராசிரியர் எம்.எஸ்.இலக்குமிநாராயணன், ஆசிரியர் ஆதிநாதன், டொரண்டொ பேராசிரியர் டாக்டர் எஸ்.பசுபதி, டாக்டர் நஞ்சப்பா, மைசூரு ஆ.நா.சந்திரமவுலீஸ்வரன், என் மாமனார் திரு.அய்யங்கார் ரெட்டி, என் சம்பந்தி திரு.ஆர்.சரவணப்பெருமாள், என் சகலை ஆர்.எத்திராஜுலு, என் புதல்வியர் டாக்டர் கோ.அருணா, கோ.புவனா, புலவர் த.ப.சுப்பிரமணியன், ஹைதராபாத் வெங்கடேசன், திருச்சி திருமதி.செல்வ இலக்குமி, பட்டுக்கோட்டை க.மல்லிகா, என் மாணவி மருத்துவர் அஸ்வினி, பெங்களூரு சுகந்தி ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

திருப்பாவை உரையின் நிறைவுப் பகுதி
பாடல் எண்: 26

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
  மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
  பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சனியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே
  சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
  ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்

அருஞ்சொற்பொருள்:
  மேலையார்- முன்னோர்; செய்வனகள்- சடங்குகள்; முரல்வன- ஒலிப்பன; சங்கம்- சங்கு; போய்ப்பாடு- புகழ் பாடுதல்; சால- மிகவும்; விதானம்- மேற்கூரை.
விளக்கவுரை:
   திசை எல்லாம் புகழ் பரப்பும் திருமாலே! எங்கள் மனம் கவர்ந்த மணிவண்ணா! மார்கழி நீராடி மனம் விரும்பும் நோன்பிருக்கப் முன்னோர்களால் பின்பற்றப்பட்ட சடங்குகள் என்னவென்றுதானே கேட்கின்றாய்? சொல்கின்றோம் கேள்.

   உன் கையில் உள்ளதே, உலகத்தை நடுங்கச் செய்யும் ஒலி உண்டாக்கும் பாஞ்சசன்யம் என்னும் வெண்சங்கு, அது போன்ற சங்குகளை துறவியர் ஊதியவாறு முன் செல்வார்கள். ஆயர்பாடிப் பெண்கள் தாளகதியுடன் உன் புகழைப் பாட, அதற்கு இசைவாக இசை வாணர்கள் மிகப்பெரிய பறைகளை முழக்கி, பல்லாண்டு பாடியவாறு பின்தொடர்வார்கள்.

    அதிகாலை நேரம் என்பதால் பெண்கள் சிலர் தம் கைகளில் ஒளிதரும் மங்கல விளக்குகளை ஏந்தி வருவார்கள். மற்றும் சிலர் மார்கழி நோன்பைக் குறிக்கும் கொடியேந்தி கம்பீரமாக நடப்பார்கள். ஆறு, குளங்களை நோக்கி அணிவகுத்துச் செல்லும் பெண்களின் தலைமேல் பனிப்பொழிவு விழாதவாறு பட்டுத் துகில்களைப் பந்தலாகத் தூக்கிப் பிடித்தபடி சிலர் செல்வார்கள்.

   உலகிலே ஊழிப் பெருவெள்ளம் உருவானபோது உன் உடலைக் குறுக்கி ஒரு சிறு குழந்தையைப் போல ஆல் இலைமேல் படுத்து ஆனந்தமாய் உறங்கியவனே! எங்கள் நோன்புக்குத் தேவையான சங்கு, பறைகள், விளக்குகள், கொடிகள், பட்டுத்துகில்கள்  ஆகியவற்றைக் கொடுத்தருள வேண்டுகிறோம்.

பாடல் எண்: 27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்-
  பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
  சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
  ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
  கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

அருஞ்சொற்பொருள்: பறை- விரும்பிய பொருள்; சம்மானம்- பரிசில்; சூடகம்- முன்கை அணிகலன்(bracelet); தோள்வளை- பின்கை அணிகலன், தோடு- தொங்கட்டான், ஜிமிக்கி; வங்கி; செவிப்பூ- கம்மல்; பாடகம்-கொலுசு.

விளக்கவுரை:
   உன்னை வணங்காதவர்க்கும் நன்மை செய்து அவர்களை அன்பினால் வெல்லும் கோவிந்தா! ஊரார் புகழ்ந்து பேசும்படி சில பரிசில்களை உன்னிடம் கேட்கின்றோம்.

  கை மணிக்கட்டில் அணியும் சூடகம் என்னும் அணிகலனையும், தோளுக்குச் சற்று கீழே கையில் அணியும் தோள்வளைகளையும், காதுகளில் அணியும் தோடுகளையும், செவிப்பூ எனப்படும் கம்மல்களையும் எமக்குத் தருக.  மேலும், பாதங்களுக்கு அழகு சேர்க்கும் பாதகடகம் என்னும் அணிகலனையும் அளிப்பாயாக. இன்னும் இவை போன்ற பற்பல அழகிய அணிகலன்களையும் அளிக்க வேண்டுகிறோம். எங்களுக்குப் பட்டாடைகள் மிகவும் பிடிக்கும் என்று உனக்குத் தெரியுமே; அவற்றையும் தருக.

  இந்த ஆடை ஆபரணங்களை எல்லாம் நாங்கள் ஆர்வமுடன் அணிவோம். அதன் பிறகு, இதுவரை நெய்யும் பாலும் சேர்க்காமல் இருந்த நாங்கள், மார்கழி நோன்பின் நிறைவைக் கொண்டாடும் வகையில், இனி எல்லோரும் சேர்ந்து பால்சோறு மறையுமாறு அதில் நெய்யை ஊற்றி ஊற்றி உண்போம். உண்ணும்போது அந்த நெய் எங்கள் முழங்கை வழியே வழியும். இப்படி கூடிக் கொண்டாடி, எங்கள் உள்ளம் குளிர மார்கழி நோன்பை நிறைவு செய்ய அருள்வாயாக.

பாடல் எண்: 28 
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
    
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
    
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
    
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
    
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்:
  கறவைகள்- பசு, எருமைகள்; கானம்- காடு; பறை- விரும்பிய பொருள்.

விளக்கவுரை:
   குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! பசு, எருமைகள் பின்னாலே சென்று, மேய்ச்சல் காட்டில் அவற்றை மேய விடுவோம்; பிறகு நாங்கள் எல்லோரும் கூடி அமர்ந்து, அவரவர் கொண்டு வந்திருந்த பால் சோற்றைப் பகிர்ந்துண்போம்.

   உண்மையில் நாங்கள் பெரிய புண்ணியம் செய்தவர்கள். அதனால்தான் நீ மாடு மேய்க்கும் தொழிலைத் தவிர வேறு எந்தத் தொழிலிலும் அறிவில்லாத எங்கள் ஆயர் குலத்தில் வந்து பிறந்தாய். உன்னுடன் நாங்கள் உறவு கொண்டாடி, கூடிப்பழகாவிடில் எங்களுக்குப் பொழுது போகாது. இந்தப் புனித உறவை நீக்கிட உன்னாலும் இயலாது; எங்களாலும் இயலாது.

   நாங்கள் எல்லோரும் அறியாப் பிள்ளைகள். அதனால்தான் உன் பெருமை அறியாமல் உன்னைப் பெயர் சொல்லி அழைத்தோம். அதற்காக எங்களிடம் கோபம் கொள்ளாதே. மாறாக, எங்கள் வேண்டுகோளை ஏற்று நாங்கள் விரும்பியவற்றை அருள்வாயாக.

பாடல் எண்: 29
சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்
    
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
    
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
    
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
    
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்: சிற்றஞ்சிறுகாலை- பொழுது புலவதற்கு மிகவும் முன்னால்; குற்றேவல்- பணிவிடைகள்; இற்றை- இன்று; பறை- விரும்பியது; எற்றைக்கும்- எப்போதும்; உற்றோம்- உறவு உடையோம்; ஆட்செய்வோம்- பணிவிடைகள் செய்வோம்; காமங்கள்- பற்றுகள்.

விளக்கவுரை:
   வழக்கமாக நாங்கள் அதிகாலைப் பொழுதில் எழுவோம். இன்று அதற்கும் சற்று முன்னதாகவே எழுந்து வந்து பொன்தாமரை போன்ற திருவடிகளைப் போற்றிப் பாடுவது எதற்காக என்றுதானே கேட்கின்றாய்? கோவிந்தா! சொல்கிறோம் கேள்.

   பசுக்களை மேய்த்து எளிமையாக வாழ்க்கை நடத்தும் ஆயர்குலத்தில் பிறந்த நீ, உனக்குப் பணிவிடைகள் செய்யும் பெரும் பேற்றினை எமக்குத் தரவேண்டும் என உன்னிடம் வேண்டுவதற்காகவே முன்னதாக எழுந்து வந்தோம். மீண்டும் சொல்கிறோம் இந்த அரிய வாய்ப்பினை எங்களுக்கு வழங்காமல் இருந்துவிடாதே.

   வழக்கம்போல் எதையாவது கேட்டுப் பெறவேண்டும் என்னும் நோக்கத்தில் வந்தோம் என்று எண்ணாதே. அதுவன்று எங்கள் நோக்கம். நாங்கள் எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும், அத்தனைப் பிறவிகளிலும் உன்னோடு உறவு பாராட்டி, உரிமையுடன் நெருங்கி நின்று, உன் திருவடிகளைத் தொழுது, உனக்குத் தொண்டுகள் செய்யும் பேற்றினை உன்னிடம் வேண்ண்டிப் பெறுவதே எங்கள் நோக்கம் ஆகும். உன்னைத் தவிர வேறு எவற்றிலும் பற்று வைக்கமாட்டோம். எனவே இப்போதே எங்களை ஆட்கொண்டு அருள்வாயாக.  

பாடல் எண்: 30

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
    
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
    
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
    
இங்கு இப்பரிசு ரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
    
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

அருஞ்சொற்பொருள்; வங்கம்- அலை; ஆற்றை- வரலாற்றை; அணிபுதுவை- அழகிய ஸ்ரீவில்லிப்புத்தூர்; தண்தெரியல்- குளிர்ந்த மாலை; மால்வரை- திருவேங்கடமலை. 

விளக்கவுரை:
   முழுநிலா போன்ற அழகிய முகம் உடையவரும், அழகிய அணிகலன்களை அணிந்தவருமான ஆயர்பாடிப் பெண்கள், அன்று அலைகள் பொங்கும் பாற்கடலைக் கடைந்த மாதவனை, கேசவனை வணங்கி, வாயாரப் பாடி, மார்கழி நீராடி நோன்பிருந்து விரும்பியதைப் பெற்றார்கள்.

   அந்த வரலாற்றை ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாழ்ந்த குளிர்ந்த மலர்மாலை அணிந்த பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள், சங்கத் தமிழில் முப்பது பாடல்களில் படைத்து அளித்துள்ளார். அவற்றை ஒன்றுவிடாமல் பொருளுணர்ந்து படிப்போர், அப்படியே மற்றவருக்குச் சொல்வோர், சொல்வதைக் கேட்போர் அனைவரும், நான்கு திருவேங்கட மலைகளுக்கு இணையான  தோள்களும், அழகிய அன்புதவழும் கண்கள்சேர் திருமுகமும் உடைய  திருமாலின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து இன்பம் அடைவார்கள்.
       
     இந்த அளவில் அடியேன் எழுதிய திருப்பாவை உரை நிறைவுற்றது. .

2 comments:

  1. அருமை ஐயா...

    இனிய உழவர் தின வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. அருமையான விளக்கவுரை
    பாராட்டுகள்

    ReplyDelete