Tuesday 24 November 2020

கடுங்குளிரைக் கொண்டாடும் கனடா

    கனடா நாட்டில் இரண்டே பருவங்கள். ஒன்று வசந்த காலம்; இன்னொன்று மழைக்காலம். அக்டோபர் தொடங்கி ஏப்ரல் வரையிலும் மழைக்காலம் என்று சொல்லப்பட்டாலும் மழைப்பொழிவைவிட பனிப்பொழிவுதான் அதிகமாக இருக்கும்.

  இன்று காலையில் எழுந்து ஜன்னலில் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தபோது எல்லாம் பனிமயமாக இருந்தது கண்டு வியப்பில் உறைந்துவிட்டேன்! வீட்டுக் கூரைகள் ஆறு அங்குல கனத்திலான வெள்ளித் தகட்டால் வேய்ந்தது போல காட்சியளித்தன! வெளியில் நின்ற கார்கள் வெண்பனிப் போர்வைக்குள் முடங்கிக் கிடந்தன! சிறுவன் ஒருவன் பள்ளிப் பையைச் சுமந்தவாறு பனியில் சதக் புதக் என்று கருமமே கண்ணாக நடந்து சென்றது வேடிக்கையாக இருந்தது! மற்றொருபுறம் சிலர் ஒருவர்மீது ஒருவர் பனித்தூள்களை(Ice flakes) வாரி இறைத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

   இலை உதிர்த்த மரங்கள் ‘இப்ப என்ன பண்ணுவே’ என்று கேட்டவாறு சிலிர்த்து நிற்கின்றன. இலைகளை உதிர்க்க மறுத்த அல்லது மறந்த மரங்கள் பனித்துகள்களைச் சுமந்தபடி பாவமாய் நிற்கின்றன.

   என் மகள் அரைமனதுடன் கொடுத்த அனுமதியின்பேரில் வீட்டிற்கு வெளியே சென்று பத்தடி தூரத்தில் நின்று சில படங்களை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடி வந்துவிட்டேன். எதிரி ஒருவன் என் கையைப் பிடித்து ஊசியால் நச் நச்சென்று குத்துவது போல் உணர்ந்தேன். முகவுறை அணிந்த நான் கையுறை அணியாமல் சென்றது தவறுதானே!

    இந்த மழைக்காலத்தில் இரவு நேர வெப்பநிலை சில சமயங்களில் -40 டிகிரிக்கு இறங்கும். பகல் நேரத்திலும் -2 முதல் -15 டிகிரிவரை இருக்கும். என்றைக்காவது ஒருநாள் பகல்நேர வெப்பநிலை +20 டிகிரி இருக்கும். வீடுகளின் உட்புற வெப்பநிலை எப்போதும் உகந்ததாக இருக்குமாறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் என்ன மாயமோ மந்திரமோ வீட்டில் உள்ள குழாய்களில் இருபத்து நான்கு மணிநேரமும் வெந்நீரும் தண்ணீரும் உறையாமல் வருகிறது.

   இந்த மனதை மயக்கும் மழைக்காலத்தில் இரவு நீண்டதாகவும், பகல் மிகவும் குறுகியதாகவும் இருக்கும். இது நவம்பர் மாதம். மாலையில் இப்போது ஐந்து மணிக்குச் சூரியன் மறைகிறது; காலையில் ஏழு மணிக்கு எழுகிறது. ஒரு கட்டத்தில் பிற்பகல் மூன்று மணிக்கே சூரியன் மறையும்; காலை பத்து மணிவரை விடியாது. குழந்தைகள் பள்ளிக்குப் புறப்படும்போதும் பள்ளிவிட்டு வரும்போதும் எங்கும் இருள் சூழ்ந்தே இருக்கும்.

    இப்போது விழும் பனிக்கும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் விழும் பனிக்கும் வேறுபாடு உண்டு. இப்போது பொழியும் பனியைத் துணிந்து உள்ளங்கையில் வைத்துப் பார்த்தால் உப்புத்தூளைப் போல அல்லது அஸ்கா சர்க்கரையைப் போல இருக்கும். ஆனால் ஜனவரிக்குப் பிறகு பனி தன் இன்னொரு முகத்தைக் காட்டும்.

   விடிய விடிய பொழியும் பனி ஒரு சென்ட்டிமீட்டர் உயரம் முதல் அறுபது சென்ட்டிமீட்டர் உயரம் வரை தரையில் படியும். Ice plows என்று அழைக்கப்படும் முரட்டு இயந்திரங்கள் சாலைகளில் படிந்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியைச் செய்யும். நேற்று இரவு பொழிந்த பனியின் உயரம் நான்கு சென்ட்டிமீட்டர் இருந்தது. ஆனது ஆகட்டும் என்று பனியில் நடந்து செல்லும்போது நம் கணுக்கால்வரை மறைகிறது. பகல்நேரத்தில் வெப்பநிலை மாறும்போது இப் பனித்தூள் கரைந்துவிடும். ஆனால் ஜனவரி மாதத்தில் பொழியும் பனி பனிக்கட்டியாக மாறி பலநாள்கள் உருகாமலே கிடக்குமாம்.

  இந்த பனிப்பொழிவை எதிர்கொள்ள பல முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இதற்கான சிறப்பு உடைகளை அணிய வேண்டும். நிலவுக்குப் போகும் மனிதரைப்போல உடை அணிந்து நடக்கின்றார்கள். நடப்பது ஆணா பெண்ணா என வேறுபாடு தெரியாது. இந்த ஆடைகளின்  விற்பனை இப்போது சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. பனியில் நடக்கப் பனி ஷூக்கள் வாங்கவேண்டும். நாம் எப்போதும் அணியும் ஷூக்களை, செருப்புகளைப் போட்டுக்கொண்டு நடந்தால் வழுக்கி விழ வேண்டியிருக்கும். நம் கால்களுக்கான ஷூக்களை மாற்றினால் மட்டும் போதாது கார்களுக்கான டயர்களையும் மாற்றியாக வேண்டும். வழக்கமான டயர்களுடன் வாகனங்களை ஓட்டினால் பிரேக் போட்டாலும், கார்கள் வழுக்கியபடி சாலையில் நடனமாடத் தொடங்கிவிடும்.

  இங்கே மழைக் காலத்தில் ஐஸ் ஹாக்கி விளையாட்டு தொடங்கிவிடும். மக்கள் ஏரிகளில் ஆறுகளில் ஐஸ் ஸ்கேட்டிங் செல்வதும் உண்டு. நீர் நிலைகளில் உள்ள நீர் முழுவதும் பனிக்கட்டியாக மாறிவிடும்!

   நயாகரா அருவியைப் பார்க்க வேண்டுமே! நீர் விழுகின்ற கோலத்தில் அப்படியே உறைந்து நிற்கும்! அருகில் சென்று பார்க்க ஆண்டவனுக்குக் கூட அனுமதி இல்லை!












    ஓட்டாவா அருகில் கிபெக் என்றொரு நகரம் இருக்கிறது. அங்கே உள்ள ஐஸ் ஹோட்டல் ஒன்று சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்கிறது. இந்த ஹோட்டலின் உட்புறச் சுவர்களில் பனிக்கட்டிச் சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அங்கே உள்ள மேசை, இருக்கைகள் எல்லாமே பனிக் கட்டிகளால் ஆனவை. அங்கே இரவில் தங்கவும் செய்யலாம். ஆனால் படுக்கையும் பனிக் கட்டியால் ஆனது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்!

   அடுத்தமுறை நீங்கள் இங்கே வரும்போது இந்த ஐஸ் ஹோட்டலில் ஓர் இரவு தங்கிச் செல்லலாம். ஒருவர் பெற்ற துன்பம் இன்னொருவரும் பெற வேண்டாமா?

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.



16 comments:

  1. கனடாவை விட
    கட்டுரை அழகு
    ஆண்டவனுக்கு
    கிடைக்காத அனுமதி
    தங்கள் எழுத்தால்
    எங்களுக்குக் கிடைத்திருக்கிறது

    ReplyDelete
  2. கட்டுரை மிகவும் அருமை ஐயா. மிக்க நன்றி. தங்கள் கட்டுரையைப் படிக்கும் போது நக்கீரரின் நெடுநல் வாடை கூதிர் கால வருணனை நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
  3. பனியும் பனி (பணி ) சார்ந்த இடமும்

    ReplyDelete
  4. Very sharp photos! Felt like we are in Canada! Enjoyed reading your write up ! Best wishes.

    ReplyDelete
  5. நீங்கள் கண்ட காட்சியை பகிர்ந்த விதம் சான்டலின் கதை படித்தது போன்ற உணர்வு தோன்றியது.
    மகிழ்ச்சி.

    ReplyDelete
  6. படங்கள் மனதையும் கண்ணையும் கவர்கின்றன. விவரணத்தை ரசித்தோம் ஐயா. அங்கெல்லாம் பனி விழும் சமயங்களில் நிறைய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பார்கள். பனி சுழ் சாலைகளில் சில இடங்களில் கொஞ்சம் ஏற்றம் இருக்கும் பகுதிகளில் எல்லாம் கார் சக்கரங்களில் பல்சக்கரம் போன்ற சங்கிலி இணைத்து ஓட்டுவார்கள்.

    கீதா

    ReplyDelete
  7. அருமை
    படங்களைப் பார்க்கும்போதே
    உடம்பு சில்லிடுகிறது

    ReplyDelete
  8. காணொளியுடன் கூடிய பாடல் மிகவும் பொருத்தமான பாடல்!! அருமையான பாடல். காணொளியும் அருமையாக இருக்கிறது ஐயா.

    கீதா

    ReplyDelete
  9. முருகையன்.தி24 November 2020 at 17:46

    ராமாயணத்தில் அனுமன் சொன்னான் "கண்டேன் சீதையை" என்று. அதுபோல நான் சொல்கிறேன் "கண்டேன் கனடாவை தங்கள் காணொலி வழியே" என்று.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  10. கட்டுரை அருமை சார், அப்படியே நான் கனடாவில் உள்ளது போல் இருந்தது. என் இளைய மகனிடம் சொல்லி படங்களை காண்பித்த போது அவன் நம்பவில்லை. மேடம் போட்டோ காண்பித்து உண்மை என்று கூறினேன். வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  11. மிக அருமை நேரில் பார்ப்பது போல் உணர வைத்தீர்கள் படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து வியந்தேன்
    கட்டுரையின் கடைசி வரிகளுமே

    ReplyDelete
  12. ஆகா...! முகநூலிலும் ரசித்தேன் ஐயா...

    ReplyDelete
  13. கண்முன்னே கனடா!
    கட்டுரையில் காணடா!!

    என்கின்றீர்களா ஐயா 😀
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. புகைப்படங்களைப் பார்த்தபோது சிவந்த மண் பாடலுக்கான சில காட்சிகள் நினைவிற்கு வந்தன. உங்களின் எழுத்தும் அனுபவமும் எங்களை சிலிர்க்கவைத்துவிட்டன.

    ReplyDelete