Saturday 28 November 2020

கட்டுரைக்கும் கண்ணில்லை

   காதலுக்குதான் கண்ணில்லை என்பார்கள். ஆனால் கட்டுரைக்கும் கண்ணில்லை என்பது இப்போது தெரிய வருகிறது. ஆம். தினமணியில் இம்மாதம் இருபதாம் நாள் வெளிவந்த “மநுவுக்கு ஏன் இந்த எதிர் மனு?’ என்னும் கட்டுரைக்குக் கண்ணில்லை என்பதற்கு அக் கட்டுரையால் எழுந்த எதிர்வினைகளே சான்று.

    எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாய் அக் கட்டுரையால் தினமணியைச் சாடுவோரையும் காணமுடிகிறது. நானும் தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதியவன் என்ற முறையில் இந்தச் சிக்கலைப் பார்க்கிறேன்.

   பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘திருவள்ளுவர் வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில் நான் எழுதிய கட்டுரை ஒரு பொதுத் தேர்தல் சமயத்தில் தினமணியில் நடுப்பக்கத்தில் வெளிவந்தது. அது எந்த எதிர்வினைக்கும் உள்ளாகவில்லை; மாறாக வாசகர்கள் பாராட்டி எழுதியிருந்தனர். அதைத் தினமணிக்கு அனுப்புமுன் பல கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களிடம் காட்டிக் கருத்தினைக் கேட்டுச் சில திருத்தங்களைச் செய்து அனுப்பினேன். அதனால் என் தலை தப்பித்தது. தொடர்ந்து என் கட்டுரைகள் பல வெளிவந்தன. அவற்றைத் தொகுத்து வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது.(பார்க்க: வா நம் வசப்படும்- மணிக் கட்டுரைகள், வானதி பதிப்பகம், சென்னை)

   இந்தியக் குடிமகனுக்கு எதையும் சொல்லும் கருத்துச் சுதந்திரம் உள்ளது என்பது உண்மை. ஆனால் எப்படிச் சொல்ல வேண்டும் என்னும் நயத்தக்க நாகரிகம் சொல்வோருக்கு இருத்தல் வேண்டும்.

 பொதுவாக எந்த இதழுக்கு யார் படைப்பை அனுப்பினாலும் அந்தப் படைப்புக்குப் படைத்தவரே பொறுப்பேற்க வேண்டும் என்பதை இதழ்களின் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் கோட்பாட்டைப் படித்துப் பார்த்தால் புரியும். அதற்காகச் சிக்கல் வரும்போது இதழ்கள் ஒதுங்கிக் கொள்ளவும் கூடாது. தங்கள் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரைக்காக(தினமணி 8.1.2018) எதிர்வினை எழுந்தபோது தினமணி தன் நிலைப்பாட்டை அப்போது தெரிவித்தது. இப்போதும் அப்படியொரு நிலைப்பாட்டை தினமணி தெரிவித்ததா என்பதை இப்போது கனடாவில் வசிக்கும் என்னால் தெரிந்துகொள்ள இயலவில்லை.

    இது ஒருபுறம் இருக்க, சிக்கலுக்குள்ளான கட்டுரைக்கு வருவோம். இன்று உலக அளவில் ஏற்கப்பட்ட ஒரு நீதிநூலாகிய திருக்குறளைத் தடைசெய்ய வேண்டும் என்னும் தொனியில் வரிகளை அமைத்திருப்பது யாரும் வரவேற்கத் தக்கதாய் இல்லை. ஒரு வாதத்திற்கே என்று கட்டுரையாளர் சொன்னாலும் அது சரியன்று. ஒரு தீக்குச்சியைக் கொளுத்திக் குடிசை வீட்டின்மீது போட்டுவிட்டு, ‘சும்மா விளையாட்டுக்காகப் போட்டேன்” என்று சொல்வதைப் போலத்தான் இது உள்ளது.

    திருவள்ளுவருக்கும் கட்டுரையாளருக்கும் என்ன வரப்புத் தகராறு? வஞ்சப் புகழ்ச்சியாக வஞ்சம் தீர்த்துக்கொண்டார். “மற்றவருடைய தாயைப் பழிக்காமலேயே நம்முடைய தாயைப் பாராட்டலாம்” என்பார் மு.வரதராசனார். இதை நம்மூர் அரசியல்வாதிகள் ஒரு சிலர் புரிந்துகொள்ளாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் எனப் பேசுவதும், கட்டுரையாளர் மநுவை உயர்த்தி வள்ளுவரை ஒருபடித் தாழ்த்துவதுபோல் எழுதுவதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

   புல்லறிவாண்மை என்னும் அதிகாரத்தில் அமைந்த ஒரு குறள் என் நினைவில் தோன்றுகிறது. உலகத்தார் உண்டு என ஏற்றுக்கொண்டதை ஒருவர் இல்லை என மறுத்தால் அவரை மனிதராகவே ஏற்றுக்கொள்ளக் கூடாது; மாறாக அவரை ஒரு பேயாகக் கருத வேண்டும் என்பது குறள்கருத்து.

   உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

   அலகையா வைக்கப் படும்   குறள் 850 

நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்குமே. 


    நிறைவாக ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்பார் முத்துக்கூத்தன்.

  திருக்குறளும் அப்படித்தான். அதன் தடையற்ற நெடும்பயணம் என்றும் தொடரும். உலகிற்கு ஒளியூட்டும். 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கனடாவிலிருந்து.

 

 

 

 

   

3 comments:

  1. "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...." என்று சொன்ன வள்ளுவனை இந்த வருணாசிரம சனாதனவாதிகள் உயர்த்திப் பேசியிருந்தால் தான் வியப்பு. பிறப்பால் மனிதர்களை பிளவுபடுத்தி, அதனால் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்திய கூட்டம் தானே...! இவர்களிடம் இதைவிட வேறென்ன சமத்துவத்தை எதிர்பார்த்திட முடியும்.

    இந்திய நடுவண் அரசு "இசைஞானி இளயராஜா"வுக்கு "பத்ம விபூஷன்" விருது வழங்கி கௌரவப் படுத்திய பொழுது "ஒரு தலித்துக்கு விருது" கிடைத்ததாய் செய்தி வெளியிட்டவர்கள் தான் இந்த தினமணியும் இந்தியன் எக்ஸ்பிரஸும்.

    ReplyDelete
  2. கேவலமான மநுவுக்கு ஒரு குறள் :

    // சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை //

    ReplyDelete