Wednesday 14 April 2021

ஒளிக்கீற்று ஒன்று தெரிகிறது

     வலைப்பூ வாசகர் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் மற்றும் தொல்காப்பியர் திருநாள் வாழ்த்துகள். நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு நல்ல செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    சித்திரைத் தொடக்கமே நல்லதுதான். புதிய நம்பிக்கைகளின் விதைகள் அன்றைக்குத்தானே விதைக்கப்படுகின்றன? “கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கித் தவிக்கும் எங்களுக்கு என்ன நல்ல செய்தி சொல்லப் போகிறீர்கள்?” என்று நீங்கள் கேட்பது என் செவிகளில் விழுகிறது.

     பெருந்தொற்றினால் ஏற்படும் இறப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்துவிட்டது என்பதே அந்த நல்ல செய்தி.

   கனடா நாட்டில் உள்ள வேன்கூவர்  நகரில் SaNOtize என்னும் பெயரில் அமைந்துள்ள மருத்துவ ஆய்வுக் கழகம் ஒரு புதிய மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. டாக்டர் ஸ்டீஃபன் வின்செஸ்டர் என்பாரது தலைமையில் அமைந்துள்ள ஆய்வுக்குழு பல்லாயிரக்கணக்கான பேர்களுக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு இம் மருந்தைக் கொடுத்து, ஆய்வு நடத்தி, பெரும் வெற்றி கண்டுள்ளது.

  கொரோனா புதுப்புது வடிவங்களில் புறப்படும் இங்கிலாந்தில் இம் மருந்தைக் கொடுத்து ஆய்வு நடத்தியுள்ளனர். அந்த ஆய்வில் தொண்ணூறு விழுக்காடு வெற்றி கிடைத்துள்ளது.

   நோயாளி தன் மூக்கின் வழியே தானே உறிஞ்சிக்கொள்ளும் வகையில் இம் மருந்துக் குப்பி வடிவமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நுரையீரலில் பல்கிப் பெருகுவதை இருபத்து நான்கு மணிநேரத்தில் கட்டுப்படுத்துகிறது. நாற்பத்தெட்டு மணி நேரத்தில் தொற்றை முழுமையாக அழித்து நோயாளியைக் காலனின் கைப்பிடியிலிருந்து மீட்டு வருகிறது.

   மருந்தை மூக்கில் உறிஞ்சியவுடன் நைட்ரிக் ஆக்ஸைடு என்னும் வாயு உருவாகி நுரையீரலுக்குள் புகுந்து தீநுண்மியின் கோட்டையைச் சுற்றி நின்று முற்றுகையிடுகிறது; பின்னர் தாக்கி அழித்துவிடுகிறது.

     இப்போதைக்கு இம்மருந்து NONS (Nitric Oxide Nasal Spray)என அழைக்கப்படுகிறது. இனிமேல்தான் வணிகப்பெயர் சூட்டப்படும். இந்த மருந்து அவசரப் பயன்பாட்டுக்கு உகந்தது என கனடா நாட்டரசு விரைவில் அறிவிக்க உள்ளது.

     இனி நம் நாட்டு மருத்துவ வல்லுநர்கள் இது குறித்து அலசி ஆராய்ந்து அரசுக்குத் தெரிவித்தால், இந்த மருந்து பெருமளவில் இறக்குமதி செய்யப்படும்.

   காத்திருப்போம். அதுவரை முகக்கவசம் உயிர்க்கவசம் என்பதை உணர்ந்து எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்து செல்வோம்.

முனைவர் அ.கோவிந்தராஜூ, அமெரிக்காவிலிருந்து.

  

8 comments:

  1. நல்லதொரு செய்தி ஐயா... தீநுண்மி அழியட்டும்...

    ReplyDelete
  2. அண்ணா வணக்கம். இந்த NONS மருந்து எவ்வளவு தூரத்திற்கு பயனுள்ளதாயிருக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

    ஆனால் இந்த மருந்து செயல்படும் விதம் பற்றிய தங்களது சொல்லாடல் உச்சத்தின் உச்சம்.

    "மருந்தை மூக்கில் உறிஞ்சியவுடன் நைட்ரிக் ஆக்ஸைடு என்னும் வாயு உருவாகி நுரையீரலுக்குள் புகுந்து தீநுண்மியின் கோட்டையைச் சுற்றி நின்று முற்றுகையிடுகிறது; பின்னர் தாக்கி அழித்துவிடுகிறது."

    அருமையிலும் அருமை!

    ReplyDelete
  3. நல்லதொரு செய்தி. தீநுண்மியின் தாக்கம் உலகை விட்டு விரைவில் ஒழியட்டும்.

    ReplyDelete
  4. A blessing for mankind. God's grace.

    ReplyDelete
  5. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  6. நல்ல செய்தி தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. நல்ல செய்தி இதனை பலர் அறியும்படி மேடையில் உரைத்தேன்.
    தீ நுண்மி விரைவில் உலகைவிட்டு ஒழிந்து நன்மை பெருகட்டும்

    ReplyDelete
  8. பழைய இயல்பு நிலைக்குத் திரும்பும் நாள் விரைவில் வரட்டும்.

    ReplyDelete