Monday 19 June 2023

கடையில் கிடைக்காத காஞ்சிபுரம் இட்லி

  இதுவரை பல நூல்களுக்கு நூல் மதிப்புரை எழுதியுள்ளேன். பல திரைப் படங்களுக்கு விமர்சனம் எழுதியுள்ளேன். ஆனால் இப்போது என் மனைவி சுட்ட புதுமையான  புதுவகையான இட்லிக்கு விமர்சனம் ஒன்றை எழுதுகிறேன்.

   பொதுவாகவே உணவு உண்ணும்போது நான் ரசித்து ருசித்து உண்பேன். “ஆற்றுக்குள்ளே இறங்கி ஹரிரா என்றாலும் சோற்றுக்குள்ளே இருக்குதடா சொக்கலிங்கம்” என்று நம் முன்னோர் சொன்னதை முழுவதுமாக நம்புபவன் நான்.

    உறவினர், நண்பர் வீட்டில் சாப்பிடும்போது உணவின் சுவை குறித்துப் பேசுவேன்; பாராட்டுவேன்; மதிப்பெண் தருவேன். அடிப்படையில் நான் ஓர் ஆசிரியனாயிற்றே!

   வீட்டிலும் அப்படித்தான். சுவைத்துச் சாப்பிட்டவுடன் என் மதிப்பீட்டைத் துணைவியாரிடம் சொல்வேன். மதிப்பெண்ணும் போடுவேன். மதிப்பெண் குறைந்தால் அதை எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டாள். சுவையான வாத விவாதம் தொடரும். ஆனால் ஒருபோதும் அந்த விவாதம் சண்டையில் முடியாது.

        திருமணமாகி முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று முற்றிலும் மாறுபட்ட, சுவையான  இட்லியைச் சுட்டு அசத்திவிட்டாள். இருவகை சட்னியுடன் சுவைத்து உண்டேன். மூக்கைப் பிடிக்க உண்டேன். கண்பட்டுவிடும் என்பதால் எத்தனை இட்லி உண்டேன் என்பதை இங்கே வெளியிட முடியாது.

  இட்லி எப்படி இருக்கிறது என்று கேட்டாள். “இந்த இட்லியைச் செய்து கொடுப்பதற்காகவே அடுத்தப் பிறவியிலும் நீ என் மனைவியாக வரக்கடவாய்” என்று சொல்லிப் பாராட்டினேன். அப்புறம் என்ன இராமனுடன் தொடர்புபடுத்தி எனக்கு ஒரு விருது கொடுத்தாள்.

 என் மனைவி செய்த இட்லி இலவம் பஞ்சில் செய்த இட்லிபோல அவ்வளவு மெதுவாக இருந்தது. காஞ்சிபுரம் இட்லி என்பது அதன் பெயராம். இட்லியின் மேற்பரப்பில் சீரகம் பதிந்து அழகாகக் காணப்பட்டது. இஞ்சிச் சுவையுடன், மிளகு காரத்துடன் மிகவும் சுவையாக இருந்தது. நெய்யில் வறுபட்ட முந்திரிப் பருப்புத் துணுக்குகள் வாய்க்கு வாய் தட்டுப்பட்டுக் கூடுதல் சுவை சேர்த்தது. 


   வலைப்பூ வாசகர்களுக்காக. காஞ்சிபுரம் இட்லி செய்யும் முறையைக் கேட்டேன். உடனே முன்வந்து ஆர்வமுடன் செய்யும் முறையைச் சொன்னாள்.

   “இட்லி அரிசி, பச்சரிசி, வெள்ளை உளுத்தம்பருப்பு இவை மூன்றையும் சம அளவில் எடுத்து, ஒரு தேக்கரண்டி  வெந்தயம் சேர்த்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளுங்கள். மறக்காமல் சரியான அளவில் உப்பைப் போடுங்கள். எட்டு மணி நேரம் அப்படியே வைத்திருந்தால் மாவு நன்கு பொங்கிவரும்.

   வாணலியை அடுப்பில் வைத்து, கொஞ்சம் நெய், நல்லெண்ணெய் இரண்டும் சேர்த்து ஊற்றுங்கள். அதில் இஞ்சித் துருவல், உடைத்த மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, உடைத்த முந்திரிப் பருப்பு, பொடியாக நறுக்கப்பட்ட கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை ஆகியவற்றைப் போட்டு வறுத்து, அரைத்த மாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும்.

  பிறகு ஒரே அளவான கிண்ணங்களில் அல்லது தம்ளர்களில் ஒரே அளவில் மாவை ஊற்றி, நீருடன் கூடிய இட்லிப் பானையில் வைத்து மூடியை இறுக மூடி பதினைந்து நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும். தேங்காய் சட்னி, தக்காளிச் சட்னி, கடலைக்காய் சட்னியுடன் சேர்த்துண்ண மிகவும் சுவையாக இருக்கும்.”

  காஞ்சிபுரம் இட்லி உண்டால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பொய்யைச் சொல்லி உங்கள் சுட்டிக் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

  என்ன நாளை உங்கள் வீட்டிலும் காஞ்சிபுரம் இட்லிதானே?

குறிப்பு: இட்லியை நம் நாட்டினர் கண்டுபிடிக்கவில்லை. இது இந்தோனேஷியாவின் பாரம்பரிய உணவாகும்.  இராஜேந்திர சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்தோனேஷியா நாட்டின் அண்டை நாடான கடாரம் (இப்போது மலேஷியாவில் உள்ள ஓர் ஊர்)   மீது படை எடுத்து வாகை சூடி வந்தபோது இந்தோனேஷியாவின் சமையலர் ஒருவரை அழைத்துவந்து இட்லியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியதாய் ஒரு செய்தி உண்டு.

  

   

 

8 comments:

  1. கடாரம் இன்றைய மலேசியாவில் அல்லவா உள்ளது?

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அ.கோவிந்தராஜூ20 June 2023 at 10:34

      நீங்கள் சொல்வது சரிதான். இட்லி உண்ட மயக்கத்தில் நேர்ந்த பிழை.

      Delete
  2. ஆஹா காஞ்சிபுரம் இட்லி!! மிக நன்றாக இருக்கிறது.

    நம் வீட்டில் தொன்றுதொட்டு - ஹாஹாஹாஹா - அடிக்கடி செய்யபடும் . இறைவனுக்குப் பிரசாதமாக காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் செய்யப்படும் இட்லி. குடலை இட்லி என்றும் சொல்வதுண்டு. நீளமான குடலை - மூங்கில் குடலை - குழாய் - இப்போது பதப்படுத்தப்பட்ட தாமரை இலை யை, வாழை இலையை அப்படி நீளமாகக் குழல் போன்றும் வருகிறது - வல்லபாச்சாரியார் எனும் பக்தர் வரதராஜப் பெருமாள் கோயிலில் இறைவனுக்கு மூங்கில் குடலை/குழாயில் இந்த இட்லியைச் செய்து பிரசாதமாகப் படைத்தாராம். அப்படி காஞ்சிபுரம் இட்லி எனப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு.

    கோயிலில் இஞ்சிக்குப் பதில் சுக்குப் பொடி, (நானும் வீட்டில் சுக்குப் பொடி பயன்படுத்துவதுண்டு அது இல்லை என்றால் இஞ்சி) கோயில்களில் புழுங்கலரிசியை பிரசாதங்களில் பயன்படுத்துவதில்லை. அவங்க பச்சரிசி உளுந்து என்றுதான் செய்வது வழக்கம்.
    ஆனால் வீட்டில் நான் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்றுதான் செய்வது இரு அரிசியும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அ.கோவிந்தராஜூ20 June 2023 at 10:37

      உங்கள் பின்னூட்டம் என் கட்டுரைக்குக் கூடுதல் மதிப்பைச் சேர்த்துள்ளது. மிக்க நன்றி.

      Delete
  3. அருமை ஐயா. நாங்களும் வீட்டில் செய்து பார்க்கிறோம்.

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் நாக்கில் எச்சில் ஊற வைக்கும் எழுத்துக்கோர்வை. மனைவியை திட்டுகிறீர்கள் என தெரியாமலே பாராட்டுகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். சிவபார்கவி. திருச்சி.

    ReplyDelete
  5. எனக்கும் ஆசை வந்து விட்டது ஐயா

    ReplyDelete