Saturday 29 July 2023

நயவுரை நம்பியிடம் நாலடியார் படும் பாடு

    சில பேர் எழுதிய நூல்களை வாங்க நேர்ந்தாலும் அவற்றைப் படித்தல் கூடாது என்னும் முடிவுக்கு இப்போது நான் வந்துள்ளேன். படித்தால் அவர்மீது வைத்துள்ள மதிப்புச் சரிந்து விடுமோ என்னும் தயக்கம்தான் அதற்குக் காரணம்.


  டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் என்பவர் அனைவரும் அறிந்த அரசியல்வாதி. அவர் ஓர் இலக்கியவாதியும் கூட. நிறைய நூல்களுக்கு உரை எழுதி நயவுரை நம்பி என்னும் பட்டம் கூட வாங்கியுள்ளார். அதை மிகுந்த அடக்கத்துடன் தன் பெயருக்கு முன் போட்டுக்கொள்கிறார்.

   ‘நயவுரை நம்பி’ என்னும் அடைமொழிக்கேற்ப அவரது உரை அமைய வில்லையே என்பதுதான் என் வருத்தம். . யானைக்கும் அடி சறுக்கியதோ?

 கரூர் புத்தகத் திருவிழாவில் நாலடியார் என்னும் தலைப்பிட்ட நூலை வாங்கினேன். அது நயவுரை நம்பியின் நூல். இவரே நாலடியாரின் நூலாசிரியர் என்பது போல் முன்னட்டையின் வடிவமைப்பு  உள்ளது. இன்னும் இருநூறு ஆண்டுகள் சென்றால் நாலடியாரை எழுதியவர்கள் சமண முனிவர்கள் என்பது போய் நயவுரை நம்பி என்பார் எழுதியது  என்னும் குறிப்பு தமிழ்ப் பாடத் திட்டத்தில் இருக்கும்! அட்டையில் நாலடியார் உரை என இருந்திருக்க வேண்டும். இல்லையே.

  இது போகட்டும்.

269 ஆவது பாடலுக்கு இவர் எழுதியுள்ள உரையைப் படித்து அதிர்ந்து போனேன். அதிர்ச்சியில் சற்றே உறைந்து போனேன். பாடல் இது:

பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட

மின்னொளிர் வானம் கடலுள்ளும் கான்றுகுக்கும்

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து.   (நாலடியார்:269)

 

இப் பாடலுக்கு என்ன பொருள்? 

 வயலில் வளர்ந்து நிற்கும் செந்நெல் பயிர்கள் கதிர் வாங்கும் நிலையில் உள்ளன. அப்போது ஒரு மழை பெய்தால் கரு முற்றி நெல்லாகும்; மழை பெய்யாவிட்டால் பதர் ஆகும். வானம் மின்னுகிறது; மேகங்கள் சூழ்கின்றன. ஆனால் வாடிய நெல்லுக்குப் பெய்யாமல் கடலில் கொட்டித் தீர்க்கிறது. அப்படித்தான் அறிவிலாதார் செய்யும் கொடையும் அமையும். வறியார்க்குக் கொடுக்காமல் தன் விளம்பரத்துக்காக வளமுடையார்க்கே வழங்குவர்.

 

இப்போது நயவுரை நம்பியின் உரையைப் பார்ப்போம். 

  தங்கத்தின் நிறத்தைப் போல நிறம் கொண்டது நெற்கதிர்கள். அவை வயல்வெளிகளில் காற்றுகளில் ஆடிக் கொண்டிருக்கிறது. வானத்தில் மின்னலோடு கூடிய மேகம் கடலில் உள்ள நீரை எடுத்து வந்து வயல் வெளியில் மழையாகக் கொடுக்கின்றது. அந்த மேகத்தைப் போல் விளங்காமல் கெட்டறிவு உடையவர்கள் மேன்மையுடைய செல்வத்தை தாங்கள் மட்டும் அனுபவித்து பிறருக்கு இரக்கம் காட்ட மறுக்கிறார்கள். 

இப் பத்தியில்  ஆறு பிழைகள் பலவகையாய் உள்ளன. போனால் போகிறது என விட்டாலும் கருத்துப் பிழையன்றோ நம் கழுத்தை நெரிக்கின்றது. 

நூலின் பெரும்பகுதி இந்த அழகில்தான் உள்ளது. மூலப் பாடல்களில் உள்ள பிழைகளுக்கும் பஞ்சமில்லை. 

சில கார் கம்பெனிகள் உற்பத்திக் குறைபாடுள்ள கார்களைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும். அதுபோல் நயவுரை நம்பியும் இந்த நாலடியார் உரை நூலைத் திரும்பப் பெற வேண்டும் என்பது என் அன்பான வேண்டுகோள்.

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, கரூர்.

4 comments:

  1. தங்களது பொதுநல ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  2. இலக்கியவாதி அல்ல அரசியல்வாதிதான் என்று காட்டி விட்டாரோ.

    ReplyDelete
  3. ஏற்கனவே பல பெருமக்கள் உரை எழுதிய நூல்.. எதை நம்பி இந்த உரையை வாங்கினீர்கள்.. ஒருவகையில் எல்லாம் நனமைக்கே… நல்ல விழிப்புணர்வு பதிவு

    ReplyDelete