Monday 1 June 2015

மாமழை தூற்றுதும்


   மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று மழையைப்  போற்றிப் பாடினார் இளங்கோ அடிகள். இங்கே அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்து மக்கள் மாமழை தூற்றுதும் என்று வசைபாடுகிறார்கள்.


 கடந்த பத்து நாள்களாக மழை கொட்டித் தீர்க்கிறது. இடியும் புயலும் மழையுடன் கூட்டணி வேறு. குளங்கள் எல்லாம் நிரம்பிவிட்டன. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கடந்த 75 ஆண்டுகளில் பெய்யாத மழை பெய்துள்ளது.

  மக்கள் காலை எழுந்ததும் முதலில் தொலைக்காட்சியில் அல்லது செல்பேசியில் தட்ப வெப்ப நிலையை அறிந்து அதற்கேற்றபடி வெளியில் செல்வதைத் தீர்மானிக்கிறார்கள். மூன்று மணிக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கிறார்கள். சரியாக மூன்று மணிக்கு மழை வெளுத்துக் கட்டுகிறது! இத்தனை மணிக்குப் புயல் என்றால் அத்தனை மணிக்குப் புயல் பேயாட்டம் போடுகிறது. நம்மூர் வானிலை நிலைய இயக்குநர் ரமணனை இங்கே பணியிடைப் பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்.

      இன்று கொஞ்சம் மழை விட்டிருந்தது. பாதகமான அறிவிப்பு எதுவும் இல்லை. எனவே மாப்பிள்ளை எங்களை வெளியில் அழைத்துச் சென்றார். இதே டெல்லாஸ் பகுதியில் ஃபீல்டு சாலையில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றார். அறிவியல் மற்றும் இயற்கை பற்றியது. Perot Museum of Nature and Science என்று பெயர். நம் நாட்டில் பெங்களூரில் உள்ள சர் விசுவேசுவரையா அறிவியல் அருங்காட்சியகம் போன்றது.

     இந்த அருங்காட்சியகத்தைப் பார்க்கக் கட்டணம் உண்டு. 2 வயது முதல் 18 வயதுவரை இளையோருக்கான கட்டணம் 15 டாலர். 19 வயது முதல் 64 வயது வரை கட்டணம் 17 டாலர். 65 முதல் முதியோர் இவர்களுக்கு 12 டாலர். 175 அடி உயரமுள்ள கட்டடத்தின் ஐந்து தளங்களுக்கும் நம் விருப்பப்படி படிகள், மின் இழுவைப் படிகள், மின்தூக்கி என  எதில் வேண்டுமானாலும் செல்லலாம்.

      முதல் தளத்தில் டெக்சாஸ் மாநில காடுகளில் வாழ்ந்த, வாழும் விலங்குகளை பதப்படுத்தி நேரில் பார்ப்பதுபோல் காட்சிக்கு வைத்துள்ளனர். அவை குறித்த விவரங்களை எழுதிவைத்துள்ளனர். கணினித் திரையிலும் தொட்டுத் தொட்டு விவரங்களை அறியலாம். டயனோசர் என்னும் ஒரு விலங்கினத்திற்காக ஒரு தளத்தை ஒதுக்கியுள்ளனர். ஒரு பெரிய டயனோசரின் எலும்புக்கூடு. அதை  அண்ணாந்து பார்த்தால் தலையில் உள்ள தொப்பி கீழே விழும்!

      ஐந்தாம் தளத்தில் பறவைகள் மட்டும். எத்தனை விதமான பறவைகள்! சிட்டுக்குருவி முதல் ராட்சச பருந்துகள் வரை! ஒரு திரையில் பறவைகளின் படங்களும் அவற்றுக்குக் கீழே பொத்தான்களும் உள்ளன. பொத்தானை அழுத்தினால் அதற்கு நேர் மேலே உள்ள பறவை எழுப்பும் ஒலியைத் துல்லியமாகக் கேட்கலாம்! இன்னொரு இடத்தில் Build your birds என்று எழுதி அதன் கீழே ஒரு திரை உள்ளது. திரையின் கீழ்ப்பகுதியில் பறவையின் பல பாகங்கள் தெரிகின்றன. அந்தத் தொடுதிரையில் ஒரு பறவையின் படத்தைக் கண நேரத்தில் உருவாக்கலாம். ஒரு சுட்டிப்பையன் சிட்டுக்குருவியின் வால்பகுதியில் மயில் தோகையை இணைத்துப் புதுவகைப் பறவையை உருவாக்கி மகிழ்ந்தான்.

    அறிவியல் அரங்கில், நம்மூர் பத்தாம் வகுப்பு மாணவன் செய்யும் அறிவியல் சோதனைகளை ஐந்து வயது வாண்டுகள் செய்து மகிழ்கின்றன. ரோபோக்களை இரண்டு வயது குழந்தை இயக்குகிறது! சூரிய குடும்பம் பற்றிய அரங்கு பிரமிக்க வைக்கிறது.. மூன்றாம் இடத்தில் சுக்கிரன், எட்டாம் இடத்தில் சனி என்று மட்டுமே கிரக நிலையை அறிந்தவர்கள் இங்கே வந்தால் எட்டுக்கிரகங்கள்(நவக்கிரகங்கள் அல்ல) பற்றிய முழு  விவரங்களையும் செயல்முறைக் காட்சிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். சம எடையுள்ள எட்டு இரும்பு குண்டுகளை எட்டு கோள்கள்கள் பெயர் எழுதப்பட்ட மேடையின் மீது வரிசையாக உள்ளன. சந்திரன் மீதுள்ள குண்டை நம் சுண்டு விரலால் தூக்க முடிகிறது. ஏன் எனில் நிலவில் ஈர்ப்புவிசை மிகவும் குறைவு. நெப்டியூன் கோளின்மேல் உள்ள குண்டை என்னால் தூக்கவே முடியவில்லை., ஈர்ப்பு விசை பூமியைவிட அதிகம்.

   அடுத்து, நிலநடுக்கம், எரிமலை போன்ற பேரிடர் பற்றிய அரங்கில் நுழைகிறோம். காற்றைக் காணமுடியுமா? இந்த அரங்கில் காணமுடியும். சுழல்காற்று எப்படி உருவாகிறது என்பதைக் காட்டுகிறார்கள். இருபது அடி உயரத்துக்கு மேலே சிறிய அளவில் வெண்புகை உருவாகி மெல்ல சுழலத் தொடங்கி, பெரிய தூண் வடிவில் வளர்ந்து தரையைத் தொட்டு, அசுர வேகத்தில் சுழல்கிறது. இத்தகைய சுழல்காற்றில் சிக்கும் கார், சிறிய வீடு போன்றவை பத்து தென்னைமரம் உயரத்திற்குச் சென்றுவிடுமாம்!


       அடுத்து மூளைப் பிரிவு. ஹெல்மெட் போன்ற ஒன்றில் தலையைப் பொருத்தி நம் எண்ண அலைகளைத் திரையில் பார்க்கலாம். அலைகளுக்கு ஏற்ப ஓர் இறகுபந்து உயர்வதும் தாழ்வதுமாகவும் இயங்குகிறது. உன்னைத் தீர்த்துக் கட்டுகிறேன் பார் என்று நினைத்தால் அலை வேகம் அதிகரிக்கிறது. வாழ்க வளமுடன் என்று நினைக்கையில் எண்ண அலை மெல்ல இறங்கி அமைதிகொள்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை எழுத்து வடிவில் அச்சிட்டுக் கொடுக்கும் இயந்திரம் ஒன்று  விரைவில் வந்துவிடும் என நினைக்கிறேன்.

    நிலநடுக்கத்தை உணர்வதற்கு ஒரு மேடை உள்ளது. ஒரு பத்து பேர் அதன் மீது எறி நின்றதும் வெவ்வேறு ரிக்டர் அளவுகளில் அந்த மேடை நடுங்குகிறது. காலடியில் தரை அதிர்வது, கால்கள் தரையில் பாவாமல் போவது, கீழே விழாமல் இருக்க கைப்பிடிக் கம்பிகளைப் பிடித்துக் கொள்வது- இவற்றை உணரத்தான் முடியும்., உங்களுக்கு உணர்த்த முடியாது.

  இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிப்பொருள்களை அவ்வப்போது மாற்றுவார்கள்ளாம்., மேம்படுத்துவார்களாம். அதனால் எப்பொழுதும் கூட்டம் நிரம்பி வழியுமாம்.

    எல்லாவற்றையும் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு வாசகம் கண்ணில்பட்டது. இதுவரை அறிவியல் துறையில் 25 நோபல் பரிசாளர்களை உருவாக்கிய மாநிலம் டெக்சாஸ் என்று அதில் பெருமையோடு குறிப்பிட்டிருந்தார்கள்.

    அவர்களிடத்தில் இளம் வயதிலேயே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கியது ஓர் ஆசிரியராகவும் இருக்கலாம்., அல்லது இந்த அருங்காட்சியகமாகவும் இருக்கலாம்.

       

6 comments:

  1. Quite interesting. We did not go to this museum in our earlier visits. thamilp poo vil varum katturaikalaye neengal Americal 60 Naatkal ena oru puthagathai
    veliyidalaam. Vidathu Malai Peithalu verikkumbothu suthippaarthirukkireethal...

    ReplyDelete
  2. there are some spelling mistakesin the Comments i made . As a Teacher ,you have the opportunity to correct in America also !!!

    ReplyDelete
  3. Article is very interesting. Thanks for sharing.

    ReplyDelete
  4. இந்தக் கட்டுரையின் வாயிலாக டெக்ஸாஸ் அருங்கட்சியகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். தங்களின் பயண அனுபவங்களை கண் முன் காட்டியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. இந்தக் கட்டுரையின் வாயிலாக டெக்ஸாஸ் அருங்கட்சியகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். தங்களின் பயண அனுபவங்களை கண் முன் காட்டியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  6. தங்களின் பயண அனுபவங்களை கண் முன் காட்டியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete