Friday 8 July 2016

அட பெருமாளே!

   இது தலையங்கத்தின் தலைப்பு. (பார்க்க 15.1.2015 தேதியிட்ட தினமணி.) பேராசிரியர் பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவல் தொடர்பாக எழுந்த சர்ச்சையை விரிவாக அலசியது அந்தத் தலையங்கம். நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன போதிலும் யாரும் அந்த  நாவல் குறித்து வாய் திறக்கவில்லை.


   அந்த நாவலை அனிருத்தன் வாசுதேவன் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் ஒரு ஆராய்ச்சி மாணவர். அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் மானுடவியல் துறையில் பிஎச்.டி பட்டப் படிப்பைத் தொடர்கின்றார். One part woman என்னும் தலைப்பில் பென்குயின்ஸ் நிறுவனம் நூலை வெளியிட்டதும் வேண்டாத வினை விசுவரூபம் எடுத்தது. இந்த மொழிபெயர்ப்பைப் படித்த ஒரு பிரகஸ்பதி நாவலில் இடம்பெற்ற ஒரு விஷயத்தை ஊதி பெரிதுபடுத்த திருச்செங்கோடு வாசிகள் போராட்டத்தில் குதித்தனர்.

     நீண்ட காலமாக குழந்தைப் பேறு வாய்க்காத பெண்கள், கணவனின் ஒப்புதலுடன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வர் கோவில் வளாகத்தில், ஓர் இரவில் யார் எனத் தெரியாத ஓர் இளைஞனுடன்  “கண்மூடி” சேர்ந்து கருவுறுகிற, சாமி தந்த பிள்ளையாக பார்க்கிற, சமூக அங்கீகாரம் பெற்றப் பழங்கால  வழக்கத்தை அந்த நாவலில் பெருமாள் முருகன் பதிவு செய்துள்ளார். பெண்கள் வெகுண்டெழுந்து பெருமாள் முருகனை ஓட ஓட விரட்டியதற்கு இதுதான் காரணம். ஊர்ப் பஞ்சாயத்தைக் கூட்டி வலுக்கட்டாயமாக மன்னிப்புக் கேட்கச் செய்தனர். இதற்கு அரசு அதிகாரிகளும் காவல் துறையினரும் உடந்தை.

    எழுத்தாளன் பெருமாள் முருகன் இறந்துவிட்டான் என்று ஒருவரியில் சொல்லிவிட்டு, மாற்றல் பெற்றுக்  கொண்டு சென்னைக் கல்லூரிக்குச் சென்றுவிட்டார். எழுதுவதைத் தலைமுழுகி விட்டார்.

   மேலே குறிப்பிட்ட தலையங்கக் கட்டுரையை, “இப்படி ஒரு பிரச்சனை வெளி மாநிலத்திலோ வெளி நாட்டிலோ எழுந்திருந்தால் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக உலகமே திரண்டு எழுந்திருக்கும். தமிழனாகப் பிறந்தது பெருமாள் முருகனின் தவறு” என்று முடித்திருந்தார் தினமணி பதிப்பாசிரியர்.

  அதைத் தொடர்ந்து தினமணி ஆசிரியருக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன்.(பார்க்க தினமணி 15.1.2015) நான் எழுதிய அந்தக் கடிதம் இதுதான்:

     “அட, பெருமாளே!” தலையங்கம் படித்தேன். இந்தத் தலையங்கம் கருத்துச் சுதந்திரத்தைக் காக்கும் கேடயம் ஆகும். கருத்துச் சுதந்திரம் முடக்கப்பட்டால் யாரும் எழுத மாட்டார்கள். மொழிவளம் குன்றும். ஒரு கருத்தைக் கொள்ளுவதற்கும், தள்ளுவதற்கும் உரிய சுதந்திரம் நம்மிடம் இருக்கும்போது ஓர் எழுத்தாளனை எழுதவிடாமல் தடுப்பது அறிவுடைய செயல் ஆகாது.” இக் கடிதம் வெளியானதும் எனக்கு ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்தது தனிக் கதை.

    நாவலைத்  தடை செய்ய வேண்டி வழக்குத் தொடரப்பட்டது. ஓராண்டுக்கு மேலாக நடந்த வழக்கு இப்போது முடிவுக்கு வந்து, சென்னை உயர்நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. நேற்று பெருமாள் முருகனைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன்.

    சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  மேதகு சஞ்சய் கிஷான் கெளல், மேதகு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் சாரம் இதுதான்.

   “Let the author be resurrected to what he is best at: Write...The author should not be under fear... the choice to read is always with the reader. If you do not like a book, throw it away....yet, the right to write is unhindered.”

“எழுத்தாளர் பெருமாள் முருகன் மீண்டும் உயிர்த்தெழுந்து எந்த அச்சுறுத்தலுமின்றி எழுதட்டும். உங்களுக்கு ஒரு நூல் பிடிக்காவிட்டால் அதை வாசிக்க வேண்டாம். எழுத்தாளனின் எழுதும் உரிமைக்குத் தடை போடாதீர்கள். எனவே மாதொரு பாகன் நாவலுக்குத் தடை விதிக்க முடியாது.” என்பது மேதகு நீதிபதிகள் இருவரும் ஒருமித்தக் குரலில் வழங்கிய தீர்ப்பு. 

 எல்லோரும் இத் தீர்ப்பை வரவேற்றுப் பேசும் நேரத்தில் அறிவு ஜீவி எனப் போற்றப்படும் எஸ்.குருமூர்த்தி அவர்கள் இத் தீர்ப்பைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்.(பார்க்க:The New Indian Express dated 8.7.16)

அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
Prof.Perumal Murugan



   

3 comments:

  1. வரலாற்றில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்ற ஒரு நிகழ்வினைப் பதிவிடும் உரிமை எழுதுபவருக்கு இருக்கிறது. அது தொடர்பாக விவாதித்து மாற்று கருத்து இருப்பின் தெரிவித்தால் அதுவே ஆரோக்கியமான நிலை.

    ReplyDelete
  2. வரவேற்றிப்குரிய தீர்ப்பு ஐயா

    ReplyDelete
  3. "பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயப்படுத்துமானால்கூட அதற்குத் தடைஇருக்கக்கூடாது" - காந்தி http://goo.gl/dN64sW

    ReplyDelete